பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம்

பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஆறு புள்ளிகள்

தமிழக அரசின் புதிய கல்விக்கொள்கை உருவாக்கத்தில் பார்வையற்றோர் கல்வி தொடர்பான அம்சங்கள் குறித்து ஆராய்ந்து, அதுகுறித்த பரிந்துரைகளைத் திரட்டி எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் அரசால் அமைக்கப்பட்டுள்ள

கல்விக்குழுவிடம்

வழங்குவதே பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கத்தின் முதன்மைப்பணி.

கடந்த 31/ஜூலை/2022 அன்று அமைக்கப்பட்ட இக்குழுவிற்குத் தலைமை ஏற்றிருக்கிறார்  பார்வையற்றோர் ஆசிரியர் சங்கத்தின் முன்னால் தலைவர் ஆசிரியர் திரு. பாலாஜி அவர்கள். வரைவுக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. முருகானந்தன் செயல்படுகிறார்.

குழுவில், ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் செல்வி. U. சித்ரா, இணைச்செயலர் திரு. ப. சரவணமணிகண்டன், செயற்குழு உறுப்பினர் திரு. S. பாஸ்கர், விரல்மொழியர் மின்னிதழ் ஆசிரியர் திரு. ரா. பாலகணேசன், பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர்ப் பேரவையின் உறுப்பினர் முனைவர். திரு. ஊ. மகேந்திரன், பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் முன்னால் துணைத்தலைவர் முனைவர் திரு. அரங்கராஜா மற்றும் பார்வையற்றோர் நலவிரும்பிகளில் ஒருவரான திரு. M. பாலகிருஷ்ணன் ஆகியோர் உறுப்பினர்களாகப் பங்காற்றுகிறார்கள்.

பார்வையற்றோர் கல்வி தொடர்பாக அரசுக்குப் பரிந்துரைகள் அனுப்புவதன் முதற்படியாக, பொதுமக்களின் கருத்துகளைத் திரட்டுவது என குழுவால் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி

‘கல்வி உரிமைகளைக் காக்க கரம் கொடுங்கள்’

என்ற தலைப்பிட்ட அறிவிப்பு சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டது.

எதிர்பார்த்தது போல, மிகக் குறைவான பின்னூட்டங்களே வந்துள்ளன என்றாலும், ஒவ்வொன்றும் அரசின் உடனடி கவனத்தைக் கோருபவை. பார்வையற்றோருக்கான சிறப்புக்கல்வியை வலுப்படுத்துவது குறித்தும், உள்ளடங்கிய கல்வி முறையை மேலும் ஒழுங்குபடுத்துவது பற்றியும் முக்கிய ஆலோசனைகளைத் தந்திருக்கிறார்கள் கருத்தாளர்கள்.

குறிப்பாக, தற்போது அரசால் நடத்தப்படும் பார்வைத்திறன் குறையுடையோருக்கான சிறப்புப்பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்ப் பற்றாக்குறை குறித்து கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. திருச்சி மற்றும் தஞ்சைப் பள்ளிகளில் அரசுப்பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் 10,11,12 வகுப்பு மாணவர்களுக்குப் பாடங்களைக் கற்பிக்கும் வகையில் உரிய பாட ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக நியமிக்கப்படவில்லை. மேலும், நூற்றுக்கும் மேற்பட்ட பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள் பயிலும் இந்த இரண்டு பள்ளிகளிலுமே தலா ஐந்து ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றுவதும் அரசின் அவசரகால நடவடிக்கையைக் கோரும் முக்கிய விடயங்களாகும்.

உள்ளடங்கிய கல்வி முறையின் கீழ் பொதுப்பள்ளியில் சேர்ந்து பயிலும் ஒரு பார்வைத்திறன் குறையுடைய குழந்தை, தன் அடிப்படைக் கற்றல் திறன்களில் எதிர்கொள்ளும் தேக்கநிலை குறித்தும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும், குழந்தையின் சிறப்புத் தேவையைக் கருத்தில் கொள்ளாமல், எந்த சிறப்பாசிரியரும் எவ்வித சிறப்புத் தேவைக் குழந்தைக்கும் கற்பிக்கலாம் என்ற நடைமுறை உடனடியாகக் கைவிடப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுவாக எழுந்துள்ளது.

திரட்டப்பட்ட கருத்துகள் குழுவில் விவாதிக்கப்பட்டு, அவற்றை முறையாகத் தொகுத்து, அனைத்துவிதமான கருத்துகளையும் உள்ளடக்கிய ஒரு செறிவான வரைவு அரசுக்குப் பார்வையற்றோர் கல்வி தொடர்பில் பரிந்துரையாக வழங்கப்படவிருக்கிறது. அவை வெறும் பரிந்துரைகளாக மட்டுமல்லாமல், பார்வையற்றோர் கல்வி குறித்த ஒரு வழிகாட்டி சான்றாவணமாக இருக்க வேண்டும் என்பதே குழுவின் மெனக்கெடலாக உள்ளது.

இதுவரை பத்தோடு ஒன்றாக விவாதிக்கப்பட்டு வந்த பார்வையற்றோருக்கான கல்வி என்கிற பொருண்மை முதன்முறையாக தனித்தளம் கண்டிருக்கிறது. சிறியதே என்றாலும், கல்வி உரிமைகளைப் பற்றிப் பேச, விவாதிக்கத் தன்னார்வமாய் ஒரு குழு அமைந்திருப்பது நல்லதொரு தொடக்கம் என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் குழுவில் இணைந்திருக்கும் அனைவருமே தன்னை முன் நிறுத்தாத செயல்பாட்டாளர்கள் என்பது கூடுதல் சாதகம்.

வாழ்த்துகள்! பார்வையற்றோர் கல்வி உரிமைப் பாதுகாப்பு இயக்கம்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *