சில பின்னூட்டங்கள், சில விளக்கங்கள்

சில பின்னூட்டங்கள், சில விளக்கங்கள்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

1

ஆட்காட்டி, நாட்காட்டி, அதுபற்றி

மேற்கண்ட கட்டுரையைப் படித்துவிட்டு, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தின் பொறுப்புத் தலைவர் டாக்டர் திரு. அரங்கராஜா அவர்கள், பார்வையற்ற மகளீர் அமைப்பு, அரிமா சங்கத்துடன் இணைந்து இதேபோன்ற ஒரு நாட்காட்டியை நீண்டகாலமாக வெளியிட்டு வருவதாகவும், அதனை சவால்முரசின் கவனத்திற்குக் கொண்டுவருவதாகவும் சவால்முரசு வாட்ஸ் ஆப் குழுமத்தில் குரல்ப்பதிவு வழியாக தெரிவித்திருந்தார். அந்த நாட்காட்டியையும் வாங்கிப் படித்தேன்.

the international association of lions Clubs district 324 M மாவட்ட கவர்னர் அரிமா S.V. மாணிக்கம் மற்றும் மாவட்ட தலைவர் அரிமா திருமதி. பத்மாவதி ஆனந்த் அவர்களின் நன்கொடையில், பார்வையற்ற மகளீர் சங்கம் வினியோகிக்கும் நாட்காட்டி இது.

இரண்டு நாட்காட்டிகளிலுமே தகவல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன. பார்வையற்ற மகளீர் சங்கத்தின் தலைவர் திருமதி. வனஜா அவர்கள், கடந்த 2012 முதல் இந்த நாட்காட்டியை இலவசமாகவே வெளியிடுவதாகத் தெரிவித்தார். ஐஏபி நாட்காட்டியைப் போன்றே அளவில் பெரியதும், ஸ்பைரல் செய்யப்பட்டதுமாக வெளிவருகிறது இந்த நாட்காட்டி. அதேசமயம், ஒவ்வொரு தாளின் ஒருபக்கத்தில் மட்டும் தகவல்கள் அச்சடிக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சம்.

பிரெயிலின் முதல் சவாலே அதன் அளவும் கையடக்கமும்தான். அந்தவகையில் நியூவிஷன் ஃப்ரண்ட்ஸ் கிளப் நாட்காட்டி என்னைக் கவர்கிறது.

***

2

பிரெயிலில் ஓர் அழைப்பிதழ்

பதிவில் நான் அறிந்தவரை முதன்முதலில் திருமண அழைப்பிதழை பிரெயிலில் வெளியிட்டவர்கள் திரு. பாண்டியராஜ் மற்றும் திருமதி. முத்துச்செல்வி பாண்டியராஜ் தம்பதிகள் எனக் குறிப்பிட்டிருந்தேன். ஆனால், அவர்கள் தங்கள் திருமண அழைப்பிதழைப் பார்வையுள்ளோர் மற்றும் பார்வையற்றோர் இருவருமே படிக்கும்வகையில் டூ இன் ஒன் பத்திரிகையாக அச்சிட்டுள்ளனர். இதுகுறித்து விகடன் வெளியிட்ட கட்டுரையைப் படித்த நான், அவர்கள்தான் முதன்முதலாக அழைப்பிதழை பிரெயிலில் வெளியிட்டிருப்பார்கள் என நினைத்துக்கொண்டேன்.

இந்நிலையில், பேராசிரியர் திரு. ரகுராமன் அவர்கள் வாட்ஸ் ஆப் குரல்ப்பதிவு வாயிலாக ஒரு புதிய தகவலைத் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு என்ஏபி (NAB) அமைப்பில் முக்கியப் பொறுப்பு வகிக்கும் திரு. சந்திரசேகர் அவர்கள் கடந்த 2012 ஆம் ஆண்டு நடந்த தன் மகள் வைஷ்னவியின் திருமணத்திற்கான  அழைப்பிதழை பிரெயிலில் வெளியிட்டிருப்பதாக அவர் சொன்னார். திரு. சந்திரசேகர் அவர்களும் தனது குறுஞ்செய்தி மூலம் அதை உறுதிப்படுத்தினார்.

சந்திரசேகர் பார்வையற்றவர்களின் வளர்ச்சிக்கான பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு செயல்படும் பார்வையுள்ளவர். நான் மிகவும் நேசிக்கும், என் எழுத்துப்பணிக்கு எரிபொருளாகவும், மனதின் அன்புநிறை ஆழங்களை என்னில் நானே கிளர்த்திப் பார்த்துக்கொள்ள தன் எழுத்துகளால் என்னைத் தூண்டிய என் பிரியத்திற்குரிய எழுத்தாளர் திரு. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களோடு நல்ல தொடர்பில் இருப்பவர். அந்தத் தொடர்பை பயன்படுத்தி, அவருடைய ஒரு புத்தகத்தை பிரெயிலில் அச்சடித்து, அதை அவரைக்கொண்டே வெளியிடவும் செய்தார்.

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. விரல்மொழியர் மின்னிதழ் தொடங்கப்பட்டு, அது குறித்த ஒரு செய்தி தமிழ் இந்து நாளிதழில் வெளியானபோது, அதைப் படித்துவிட்டு காலை ஏழுமணிக்கெல்லாம் எனக்கு போன் செய்து எங்களது முயற்சியை முதல்நபராக மனம் திறந்து பாராட்டியவர் சந்திரசேகர் அவர்கள்.

பிரெயிலில் திருமண அழைப்பிதழ் என அவர் தொடங்கிவைத்த வரலாற்று முன்னெடுப்பு போற்றுதலுக்கும் பெருமிதத்துக்கும் உரியது.

அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *