கவிதை: எனை மறந்தது ஏனோ?

கவிதை: எனை மறந்தது ஏனோ?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஆறு புள்ளிகள்
ஆறு புள்ளிகள்

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

எட்டிப் பிடிக்க வானம் உண்டு; – வாழ்வில்

இன்னும் செல்ல தூரம் உண்டு;

அதற்குள் என்னை மறந்தது ஏனோ?

சுட்டு விரலால் தொட்டுப் படிப்பாய், – அந்த

சுகத்தை எனக்கு வாரிக் கொடுப்பாய்

இன்று என்னை மறந்தது ஏனோ?

உன் சுட்டுவிரல் எங்கே? – என்

சுகம் பறி போனது எங்கே?

வாடித் தவிக்கிறேன் நான் இங்கே.

உன் அறிவுப் பசியைத் தீர்த்த நான்

இன்று கரையான் பசிக்கு இரையாகிறேன்.

என்னை மறந்தது ஏனோ?

உன் காதல் ரகசியத்தை

மற்றவர் அறியாமல் கடத்தினேன்!

உன் காதலரைத் தவிர

யாருக்கும் புரியாத வண்ணம்

அதில் சுருக்கெழுத்தைப் புகுத்தினேன்.

இன்று என்னை மறந்தது ஏனோ?

உன் சொற்கள் முழுமையடைய

நான் என்றும் முழுமை அடையாமலேயே இருந்தேன்.

உன் அகவிழியை முதன்முதலில்

நானல்லவா திறந்தேன்;

இன்று உன் வாழ்வில் இருந்து

நான் ஏன் மறைந்தேன்?

இணையவெளி புத்தகங்கள்

இமயம்போல் குவிந்திருக்க

என்னை மறந்தாயோ?

நானின்றி உன் தாய்மொழியைக்கூட நீ அறிந்தாயோ?

என்ன சொல்லி விளக்குவேன்

உன்னிடம் என் பெருமையை?

என்னை உனக்குத் கற்றுக்கொடுத்த உன்

ஆசானிடம் கேட்டுப்பார்

அவர் கூறுவார் என் அருமையை.

இனியாவது திருந்திவிடு,

உன் செவிகளுக்கு ஓய்வு கொடு;

நான் முழுவதுமாக அறியும் முன்

என்னை நீ தேடி எடு;

முன்பின் அவருக்கு என்

சிறப்பினைக் கடத்தி விடு.

ஒப்புக்கொள்கிறேன் இணையம் என்பது

ஒரு அற்புதப் புரவி!!

ஆனால் நானே என்றும் உன்

முதன்மை ஆற்றல் கருவி.

இத்தனை அறிந்தும் – நீ

எனை மறந்தது ஏனோ?

***கவிஞர் ச. சந்தோஷ்குமார்

முதுகலைப் பட்டதாரி

தொடர்புக்கு: Smsanthosh7198@gmail.com

ஜனவரி 6, லூயி பிரெயில் அவர்களின் நினைவுதினம்.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *