மகிழ்ச்சியைத் தருகிறது மாணவர்ப்பேரவை என்கிற அறிவிப்பு

மகிழ்ச்சியைத் தருகிறது மாணவர்ப்பேரவை என்கிற அறிவிப்பு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

செய்தியைத் தாங்கிய நாளிதழின் பக்கம்

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்த்உறை, பள்ளிகளில் மாணவர்ப்பேரவை அமைக்கப்படும் என ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வரவேற்கப்பட வேண்டிய இந்த அறிவிப்பு, இன்றைய கல்விச்சூழலை மாணவர்களை நோக்கியதாக மேலும் கொண்டுசெல்ல தொடக்கமாக அமையும் என்பது உண்மை.

தமிழகத்தை வளர்ச்சிப்பாதைக்கு இட்டுச் சென்றிருக்கிற திராவிட அரசியலின் ஊற்றுமுகமாகத் திகழ்ந்தவை கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் அறிவுசார் உரையாடல்கள், விவாதங்களை ஏற்படுத்திய அன்றைய மாணவர்ப்பேரவைகளே என்பதை எவரும் மறுக்க முடியாது. மறைந்த பேராசிரியர் அன்பழகன், நாவளர் நெடுஞ்செழியன் போன்றோர் அத்தகைய பேரவைகளிலிருந்து கிளைத்தெழுந்த திராவிடப் பெருவிருட்சங்கள்.

பொதுவாகவே, தான் பயிலும் பள்ளிநலன் குறித்தான ஒருங்கிணைக்கப்படாத சிந்தனைகள் மாணவர்களின் மனதின் ஆழத்தில் படிந்திருக்கும்.  பள்ளிச்சாலையில் தான் காணும் பல சிக்கல்களுக்கான மாற்றங்களை அவர்கள் கனவுகண்டுகொண்டே இருப்பார்கள். ஆனால், அந்த மாற்றத்தைச் செயல்படுத்தும் அளவுக்கு நமது கல்விச்சூழலில் அவர்கள் அதிகாரம் கொண்டவர்கள் இல்லை என்பது அவர்களுக்கான பெருந்தடை.

சான்றாக, சிறப்புப் பள்ளிக்கு வரும் உயர் அலுவலர்களானாலும், நன்கொடையாளர்களானாலும் மாணவர்களின் உணவு தவிர்த்த பிற தேவையை பெரும்பாலும் தலைமை ஆசிரியர்களிடமே கேட்பார்கள். நேரடிப் பயனாளர்களான நாம் அப்போது கண்டுகொள்ளப்படுவதே இல்லை என்கிற ஏக்கம் மாணவர்கள் மனதில் மெல்ல எழுந்து மறையும் என்பதை சிறப்புப் பள்ளிகளில் பயின்ற மாணவனாக நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன்.

பெரும்பாலான சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களின் பங்களிப்பு என்பது பிற மாணவர்களைக் கட்டுப்படுத்தும் மாணவர் தலைவர், இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பு என்பதாகச் சுருங்கிக்கிடக்கிறது. விடுதியில் பொது ஒழுங்கைப் பேணவும், புகார்கள் வாசிக்கவும் மட்டுமே பல நேரங்களில் மாணவர்கள் நிர்வாகத்தால் ஒன்றுகூட்டப்படுகிறார்கள். எனவேதான் உள்ளுக்குள் உறைகிற ஏக்கம் குமுறலாக மாறி, கொந்தளிப்பு மிக்க போராட்டங்களை அவர்கள் கையிலெடுக்க வழிவகுத்துவிடுகிறது.

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகள் வரலாற்றில், 1974ல் பூவிருந்தவல்லிப் பள்ளியில் நடந்த மாணவர் போராட்டம் தொடங்கி, கடந்த 2014ல் தங்கள் பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் எனத் தஞ்சைப் பள்ளி மாணவர்கள் மேற்கொண்ட போராட்டங்கள்வரை அத்தனைக்கும்  ஊற்றுக்கண்களாக அமைந்தவை  பள்ளிநலனுக்கு எதிராக அதிகார மட்டம் கொண்டிருந்த நெடுநாளைய அலட்சியங்களே. இன்றும் அலட்சியங்கள் தொடர்கதைதான் என்றாலும், அதிகார மட்டத்தோடு மாணவர்கள் உரையாட இந்த மாணவர்ப்பேரவை பயன்படும் என்பது நற்செய்தி.

பேரவையில் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மட்டுமின்றி, அந்தப் பள்ளியின் முன்னால் மாணவர்களும் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்பது கூடுதல் நற்செய்தி. ஏனெனில், பள்ளி அடைய வேண்டிய மாற்றங்களைப் பற்றிய பல வண்ணக்கனவுகள் பள்ளிக்குள்ளே பயில்கிற மாணவர்களிடம் கொட்டிக்கிடக்கும். ஆனால், அவற்றை செயலாக்கம் பெறச் செய்கிற உகந்த நடைமுறைசார் பார்வைகளும், நன்கு திட்டமிடப்பட்ட ஆலோசனைகளையும் கொடுக்கவல்லவர்கள் அப்பள்ளியில் பயின்று முதிர்ச்சியடைந்திருக்கிற முன்னால் மாணவர்களே.

பார்வைத்திறன் குறையுடைய அரசு சிறப்புப் பள்ளிகளைப் பொருத்தவரை, கடலூர், சேலம், சிவகங்கை, தஞ்சை, கோவை மற்றும் திருச்சி பெண்கள் பள்ளி எனப் பெரும்பாலான பள்ளிகளில் பயின்ற முன்னால் மாணவர்கள் இணைந்து அந்தந்த பள்ளிகளில் முன்னால் மாணவர்கள் ஒன்றுகூடல்களை விழாக்களாக நடத்தினார்கள் என்பது நாம் அறிந்ததே. அந்த விழாக்களின் வாயிலாக அவர்கள் அரசுக்கும் தங்கள் பள்ளி நலன் சார்ந்து பல கோரிக்கைகளையும் வைத்தார்கள்.

சேலம் பள்ளி முன்னால் மாணவர்கள் தங்கள் பள்ளியை நடுநிலையிலிருந்து உயர்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்திட வேண்டும் என இன்றுவரை பல அதிகாரிகளைச் சந்தித்து மனுகொடுத்தபடியே இருக்கிறார்கள். பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடைய அரசு மேல்நிலைப்பள்ளி முன்னால் மாணவர் சங்கம் என்ற அமைப்பின்கீழ், சிறப்புப் பள்ளிகளில் மாணவர்களிடையே பல்வேறு போட்டிகளை நடத்துவது, அவ்வப்போது கூடி சிறப்புப் பள்ளிகள் தொடர்பான பல கோரிக்கைகளைத் தீர்மானங்களாக அரசிடம் முன்வைப்பது என சிறப்புப் பள்ளிகளால் பயனடைந்த முன்னால் மாணவர்கள் பலர் தங்கள் பள்ளிகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்காய் தங்களால் ஆன முயற்சிகளை திரைமறைவில் மேற்கொண்டபடியே இருக்கிறார்கள்.

இத்தகைய சூழலில், அரசின் அதிகாரப்பூர்வமான இந்த அறிவிப்பானது, இன்றளவிலும் தனது சொந்தத் துறை அதிகாரிகளாலேயே அதிகம் கண்டுகொள்ளப்படாத சிறப்புப் பள்ளிகளின் நலன்குறித்த கோரிக்கைகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருப்பதில் மகிழ்கிறது மனம்.

***ப. சரவணமணிகண்டன்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *