கவிதை: பேசும் கண்ணாடி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஸ்மார்ட் விஷன் கண்ணாடி அணிந்த நபரின் புகைப்படம்ஸ்
பேசும் கண்ணாடி அணிந்த நபர்

கண்ணாடி பேசுகிறது என்றார்கள்,

உண்மையில்

கண்ணாடி ஒன்றும் செய்யவில்லை.

அதன்

கவ்விகள்தான் எல்லாமும் செய்கின்றன.

வலப்பக்கம் இருப்பது

பேசுகிறது,

புத்தகம் வாசிக்கிறது,

தமிழே எனக்கெல்லாம்

ததிங்கினத்தோம்

அது 73 மொழிகளில்

அசத்துகிறது.

இடப்பக்கம் இருப்பது

பார்க்கிறது,

படம் எடுக்கிறது

என்னவெல்லாம் அறிந்தேன் என

தன் வலது பாரிச தம்பிக்கு

தப்பாமலும் தவறாமலும்

ஒன்றுவிடாமலும்,

ஒருவரும் அறியாமலும்

ஒப்பித்துக் கொண்டே இருக்கிறது.

இருவரும் சேர்ந்தே

இயக்கம் கொள்கிறார்கள்.

நம்மிடம்

என்னவெல்லாம் சொல்லலாம்

எப்படிச் சொல்லலாம் என

முடிவும் செய்கிறார்கள்.

ஆனாலும் நீங்கள் கேட்காமல்,

“அடேய் தம்பி!” என

அணுகாமல்

வலப்பக்கக் கதை சொல்லியின்

வாய்க்கடியில் இருக்கிற

முடுக்கவும் முடங்குவதற்குமான

வடுவைச் சீண்டாமல்

ஒன்றும் நடக்காது

உதவியும் கிடைக்காது.

இடப்பக்கக் கண்ணனின்

முன்னே கை கொண்டுபோய்

அவன் கண்களைக் குத்திவிடாதீர்கள்.

அவன் உடம்பைத் தொடுங்கள்,

காயம் இருக்கிறது பாருங்கள்,

ஐந்து காயங்கள்.

புள்ளி எழுத்தைப் பார்த்ததுமே

பூரிக்கிறதா மனம்?

சிலிர்க்கிறதல்லவா சிந்தை?

கண்ணனின் காயங்களைக்

கை வைத்துப் பார்த்ததில்

எனக்கும் கொஞ்சம்

அதிகமாகவே சிலிர்க்கிறது.

பட்ட காயங்கள் ஐந்தென்பதால்,

ஒருவகையில் இந்தக் கண்ணனும்,

உலகை மீட்க வந்த இயேசுவும்

ஒன்றுதானோ?

மெய்யான ஒளிதானே

இருவர்க்கும் இலக்கு.

இப்படி ஏதேதோ

இறகு முலைத்த எண்ணங்கள்

உள்ளுக்குள் உதிக்கிறது,

உடனே உதிர்கிறது.

முதல் காயம் தொட்டேன்,

முதல் ஒலி

மற்றும் ஒளி.

சுற்றியிருக்கும் பொருட்கள்,

சூழ இருக்கும் நபர்கள்

எல்லாம் சொல்கிறது.

கண்ணாடிக் கதவு இருப்பதையும்,

கைகோர்த்து இருவர் நிற்பதையும்

காட்சிப்படுத்துகிறது.

இனி எப்படி நிகழும்?

என்னுடைய குமாஸ்தா

எனக்கு முன்னால் அமர்ந்து

கால்மேல் கால் போட்டுக்கொள்வதும்,

குக்கூ படத்தின் அந்தப்

பாதி பன் காட்சியும்.

ஆனாலும் ஒன்று,

உள்ளதை உள்ளவாறு

சொல்லிவிடுவதும் இல்லை அது.

உடனிருப்பவர்களின் சைகை உரையாடலை

கைவிசிக் கொள்கிறார்கள் என

கடக்கவும் கூடும்,

நான் மட்டும்தான் என்ற  துணிச்சலில்

உடனுறை ஜோடிகளின்

தருணம் பார்த்த தாவல்கள் கண்டு

கடித்துச் சண்டையிடுவதாகக்

கதறவும் கூடும்,

அதனால் நண்பா!

வாயில் கைவைத்துச் சிரிக்காதே!

பல் துலக்குகிறாய் என்று

பறைசாற்றிவிடவும் கூடும் அது.

இரண்டாம் காயம்

இணையற்ற ஒலி

மற்றும் ஒளி.

உலகத்தையே உள்ளடக்கிய

ஒப்பற்ற ஒலி

மற்றும் ஒளி.

புத்தகம் படிக்கலாம்,

கோப்புகள் பார்க்கலாம்,

ஓவியம் நுகரலாம்,

குட்டி சுட்டி

கூட அமர்ந்து

பாடங்கள் சொல்லலாம்.

மூன்றாம் காயம்

உங்களை எழுப்பும் ஒலி

மற்றும் ஒளி.

உங்கள் பாதை பண்ணும் ஒலி

மற்றும் ஒளி.

இரண்டு மீட்டரில்

நீங்கள் எதிர்கொள்ளும்

எவரையும் எவற்றையும்

தடையென்றே அது

தடையின்றிச் சொல்கிறது.

உயரமான மேசை,

ஒடுங்கிய நாற்காலி,

உங்களைக் கூட்டிச் செல்லவரும்

உறவுகள், உற்ற நண்பர்கள் என

ஈவு இரக்கமின்றி

எல்லோரும் தடைதான்.

அதிர்ந்து சொல்வதில்லை

அது ஒன்றே நிம்மதி.

நான்காம் காயம்

முகம் காட்டும் ஒலி

மற்றும் ஒளி.

பிறவிச் சாபம்

போக்கிடும் பேரொலி

மற்றும் ஒளி.

எதிர்படும் முகத்தைப்

படம் எடுக்கலாம்,

என்ன பெயர் சூட்டியும்

சேமித்து வைக்கலாம்.

சேமித்த முகங்கள்

செல்லமாய் உங்கள்

பக்கத்தில் வந்தாலும்,

மெல்லமாய் உங்கள்

பாதையைக் கடந்தாலும்,

கள்ளமின்றி உரைக்கும்

காரியதர்சி அது.

நீங்கள் எவருக்கும் எப்படியும்

எந்தப் பெயரும் தரலாம்.

‘என்னில் பாதி’யென்று

மனைவிக்குப் பெயரிடலாம்.

“‘என்னில் பாதி’ சிரிக்கிறது”,

“’என்னில் பாதி’ முறைக்கிறது”,

“’என்னில் பாதி’ முத்தமிடுகிறது” என

கேட்டுக் கிறங்கலாம்.

‘விலை மதிப்பில்லா செல்வம்’ என

உங்கள் குட்டிக்குப் பெயர் தரலாம்.

“’விலை மதிப்பில்லாத செல்வம்’

உங்களோடு விளையாடுகிறது”,

“’விலை மதிப்பில்லாத செல்வம்’

உங்களைவிட்டுப் போகிறது”

“’விலை மதிப்பில்லாத செல்வம்’

வேண்டாம் என்று

உணவை வீணடிக்கிறது”

‘நன்றி’ என்று

உங்கள் நாய்க்குட்டிக்கு

பெயர் சூட்டி சேமியுங்கள்.

“’நன்றி உங்களைக் கண்டுகொள்கிறது”,

“’நன்றி’ உங்கள்

காலடியில் கிடக்கிறது”,

இப்படிச்

சில்லிடல் அன்றாடங்கள்

சிலவேனும் வேண்டாமா?

மேலாளனை

‘முசுடு’ என்றும்,

சக ஊழியனை

‘அசடு’ என்றும்

சேமித்துக்கொள்வது

உங்களின் சித்தம்.

ஆனால் ஒன்று நண்பர்களே!

ஒருபோதும் உங்களின்

பகைவர்களுக்குப் பாம்பென்று

பெயர் கொடுத்துவிடாதீர்கள்.

பொல்லாதது நமது

போற்றுதலுக்குரிய மறதி.

ஐந்தாம் காயம்:

ஒலி மட்டும்

ஒலிக்காக மட்டும்.

பெருஞ்சத்தத் தருணங்களில்

கூட்டிக் கொள்ளலாம்,

பிறர் கேட்க வேண்டாம் என்றால்

குறைத்தும் கொள்ளலாம்.

சரி, கண்ணோட்டம் போதும்,

பின்னூட்டத்திற்கு வாருங்கள் என்று

பிடரிக்குப் பின்னால்

சில பேச்சுகள் கேட்கிறது.

உள்ளது உள்ளபடி

உரத்துச் சொல்வதானால்,

உள்ளதை இன்னதென்று

எடுத்துச் சொல்லாமல்

எல்லாம் தடையென்று

இயம்புவது பெருங்குறை.

இறுதியாக எனக்கு

சொல்ல ஒன்று உண்டு,

போகும் பாதையின்

புடைப்பைத் தடை என்று

தடுமாறாமல் சொல்கிறது இது;

ஆங்காங்கே

பூமியின் மண்டை ஓடு

பிளந்து கிடப்பதற்கு இதனிடம்

பெயர் இல்லை என்பதும்

பெருங்குறை தானே?

இருப்பதை உரைப்பதற்கு

கண்ணாடி, கைபேசி என

ஏராளம் இருக்கும்போது

இன்மையைச்ச் சொல்வதற்கும்

ஏதேனும் வேண்டுமே!

ஏனெனில்,

இந்த நாட்டில்

என் போன்ற பார்வையற்றோர்

அதிகம் அலைக்கழிவது

இன்மையின் மௌனத்தாலன்றி

இருப்பின் அசைவின்மையால் அல்ல.

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *