மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
graphic மு.க. ஸ்டாலின்
மு.க. ஸ்டாலின்

முதல்வர் அவர்களின் தலைமையில் இன்று (6.ஜூலை.2021) மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், விவாதிக்கப்பட்ட கருத்துகள் குறித்து, தமிழக அரசு செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

செய்தி வெளியீடு எண் : 387

செய்தி வெளியீடு

“ காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை உடனடியாக வழங்க வேண்டும் ”

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆய்வுக்கூட்டத்தில் அறிவுரை .

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று ( 6.7.2021 ) தலைமைச் செயலகத்தில் , மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 2010 ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்விற்காக, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை என்ற தனித்துறை உருவாக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களை எவ்விதத் தாமதமுமின்றி வழங்கிட அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்துச் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார். நலத்திட்டங்கள், உபகரணங்கள் பெற விண்ணப்பித்து காத்திருப்போர் பட்டியலில் உள்ள தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உடனடியாக அவ்வுதவிகளை வழங்கிடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திட தேவையான நடவடிக்கைகளை அரசுத் துறைகள் முனைப்புடன் செயல்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் 4 சதவிகித இட ஒதுக்கீடும், உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் மற்றும் 20 நபர்களுக்கு மேல் பணிபுரியும் தனியார் நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்புகள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யுமாறு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான நலவாரியம், மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைச் சீரிய முறையில் செயல்படுத்துவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார் .

அரசுப் பேருந்துகளில் மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணச் சலுகை, வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் பராமரிப்பு உதவித்தொகை ஆகியவை எவ்வித தொய்வும் இல்லாமல் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.

மேலும் , மாற்றுத்திறனாளிகளுக்கு ஒருங்கிணைத்தல், அணுகுதல் வாய்ப்புகளை வழங்கிட உலக வங்கி நிதி உதவியின் கீழ் சுமார் ரூ. 1702 கோடி மதிப்பிலான மாற்றுத்திறனாளிகளுக்கான திட்டத்தைத் தமிழ்நாட்டில் விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இந்த ஆய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உபகரணங்கள் முறையாக வழங்கப்படுவதையும், அரசுக் கட்டடங்களை மாற்றுத்திறனாளிகள் அணுகுவதற்கு எளிமையாக இருக்கும் விதமாக அமைக்க வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கேட்டுக்கொண்டார்.

முன்னதாக இந்த ஆய்வுக் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள், நிதி ஒதுக்கீடு ஆகியன குறித்த விவரங்களைத் துறையின் செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மற்றும் இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப., நிதித்துறைக் கூடுதல் தலைமைச்செயலாளர் திரு. ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளர் திரு. ஆர். லால்வேனா, இ.ஆ.ப., மாற்றுத்திறனாளிகள் நல இயக்குநர் திரு. ஜானி டாம் வர்கீஸ், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை -9

தமிழக அரசின் செய்திக் குறிப்பைப் படிக்க மற்றும் பதிவிறக்க

தொடர்புடைய பதிவுகள்

புதிய அரசு தந்த புதிய நம்பிக்கைகள்

“அதிகாரிகள் எங்கள் குரல்கள் அல்ல; அன்பிற்குரிய முதல்வர் அவர்களே! எங்களிடம் பேசுங்கள்”

மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்

முதல்வருக்கு மாற்றுத்திறனாளிகளின் வாழ்த்துகள், மாற்றுத்திறனாளிகள் நலன் பேணும் அமைச்சருக்கு எங்களின் வேண்டுகோள்கள்

பகிர

2 thoughts on “மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *