
இளமை காலத்தில் கோயில் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். கடவுள் இல்லாமல் நான் இல்லை. என்னைப் படைத்தது கடவுள் தான் என்ற நம்பிக்கையும் இருந்தது.
கோயிலுக்கு அம்மா போறப்ப என்ன விட்டுட்டு போனா கண்ணீர் வரும். ஆனால் இப்போது கோயிலைக் கண்டாலே வெறுப்பாக வருகிறது. ஏழு வருஷத்துக்கு முன்னாடி கோயில் திருவிழா கொண்டாட்டமா இருக்கும்.
சரி நான் ஏன் கோயிலையும் கடவுளையும் வெறுக்க வேண்டும்?
முதலில் என்னைக் கூட்டிப் போவதற்கு அலுப்புப் படுவார்கள்.
“இந்தப் பையன இழுத்துட்டுப் போயி என்ன பண்றது?” என்ற கேள்வியே என் உடன் வருபவரின் முதல் கேள்வியாக இருக்கும். அப்போது நானே அழுதுகொண்டிருப்பேன். என்னுடைய கண்ணீரை என் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
“கூட்டத்திலே கூட்டிப் போனா இந்தப் பையனை எப்படி கண்டுபிடிக்கிறது?” இப்படிப்பட்ட வார்த்தையைக் கேட்டால் என் கண்கள் கலங்கிக்கொண்டே இருக்கும்.
மனிதன் எப்போது கோயிலைத் தேடிப் போகிறான்?
துன்பம் வரும்போது கோயிலுக்கு ஆறுதலைத் தேடிப் போகிறான். எனக்கு அழுகை வரும்போது நான் யாரைத் தேடிப் போவது?
கோயிலுக்குப் போகும்போது கொண்டாட்டத்தில் நிறைய நேரம் செலவிட முயற்சிப்பேன். பத்து நிமிடம் சாமி கும்பிட்டு நூறு ரூபாய் செலவு பண்ணணும், இதுதான் என்னுடைய கொண்டாட்டம். ஆனால் இந்தக் கொண்டாட்டத்தை யாரும் அனுமதிப்பதில்லை.
அதேசமயம் வெண்கல வடிவிலான கடவுள் சிலைகளைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்குள் ஏற்படும் ஆனந்தத்தை விவரிக்க முடியவில்லை.
கோயிலுக்கு மாலைபோட்டுப் போக ஆசைதான். ஆனால் அதற்கான விரதங்களை என்னால் கடைபிடிக்க முடியாது என்பதை ஒப்புக்கொள்கிறேன்.
2016 June 9 அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.
என்னுடைய சித்தப்பாவுக்கு திருமணம். பக்கத்து ஊரில் உள்ள கோயிலில்தான் தாலி கட்ட வேண்டும்.
அப்போது நான் கோயிலுக்குப் போக விரும்பினேன்.
தாலி கட்ட வேண்டிய என்னுடைய சித்தப்பா என்னை கோயிலுக்கு போக அனுமதிக்கவில்லை.
அவரின் வார்த்தைகள் இவைதான், “வந்து என்ன பண்ணப் போறான்? தாலி கட்டுவதை இவனால் பார்க்க முடியாது. வீட்டுக்குள்ளே இருக்கட்டுமே அரைமணி நேரம் எப்படி கூட்டிக்கிட்டு அலைகிறது?”
வழக்கம்போல சித்தப்பாவின் வார்த்தைகளைக் கேட்ட நான் கண்ணீர் வடிக்கத் தொடங்கினேன். உன்னை படைத்த கடவுளிடம்தான் போய்க் கேட்க வேண்டும் என்று என் அம்மாவும் கலங்கினார்.
ஒருமுறை சமயபுரம் கோயிலுக்குச் சென்றிருந்தேன். கோயில் உண்டியலில் பணம் போட விரும்பினேன். ஆனால் கோயில் பூசாரி என்னை உண்டியல் போட அனுமதிக்கவில்லை. தானே போட்டுக்கொள்கிறேன் என்று காசை வாங்கிக்கொண்டார். இப்படிப்பட்ட நிகழ்வுகள் என்னை எரிச்சல் அடையச் செய்தன.
ஒருமுறை மகமாயி கோயிலுக்குச் சென்றிருந்தேன். சாமி கும்பிட்ட பிறகு திருநீர் பூசவேண்டும்.
கோயில் படி ஏறி பலரும் திருநீரை வாங்கி பூசிக்கொண்டனர்.
நானும் கோயில் வாசல் படி ஏறி திருநீறு பூச விரும்பினேன். கோயில் பூசாரி திருநீரை தூக்கி எறிந்தார். என்னை கோயிலுக்குள் அனுமதிக்கவில்லை.
இந்தத் தீண்டாமையை நான் யாரிடம் சொல்லி அழுவது?
‘தீண்டாமை ஒரு பாவச்செயல்’ என்று பாடப்புத்தகங்களில் படிக்கிறோம். இந்த வாசகத்தை ஏன் கோயில் நுழைவாயிலில் எழுதிவைக்கக் கூடாது என்ற கேள்வியும் என் மனதில் தோன்றியது.
இப்படிப்பட்ட கசப்பான நிகழ்வுகள் கோயிலையும் கடவுளையும் வெறுக்கக் காரணமாக அமைந்துவிட்டன.
என்னுடைய பார்வையில் நம் பெற்றோரைக் கோயிலாகவும் கடவுளாக வணங்க வேண்டும்.
தன்னம்பிக்கையை வளர்த்துக்கொண்டால் கடவுள் நம்பிக்கை என்பது அவசியமற்றது. ஒரு மனிதனுக்கு துன்பம் வரும்பொழுது சக மனிதன் உதவி செய்தால் அங்கும் கடவுளையும் கோயிலையும் காணமுடியும் என்பது என்னுடைய கருத்து.
இந்தக் கட்டுரையில் என் கருத்தை முன்வைத்துள்ளேன். என் கருத்து யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் பொருத்துக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
***
செ. வெங்கடேஷ்
பார்வை மாற்றுத்திறனாளியான இவர், லயோலா கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயின்று வருகிறார்.
தொடர்புக்கு: tamilvalavan730@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.

One reply on ““எங்கே கோயில்? யார் கடவுள்?” ஒரு பார்வை மாற்றுத்திறனாளியின் ஆதங்கப் பதிவு”
Theendamai Oru Pava Seyal !
ithu kandippaga porikkappada vendum makkalin manathil!
LikeLike