
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகளில் கடந்த மூன்றாண்டுகளாக மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை. இதனால், தற்போது ஆயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி மாணவர்கள் உயர்கல்்வியில் இணையவழிக் கற்றலில் ஈடுபட இயலாத பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் 23 அரசு சிறப்புப் பள்ளிகள் இயங்கிவருகின்றன. அவற்றுள், மூன்று மேல்நிலைப்பள்ளிகள் (பூவிருந்தவல்லி, திருச்சி, தஞ்சாவூர்) பார்வையற்றோருக்கானவையாகவும், இரண்டு மேல்நிலைப்பள்ளிகள் (தர்மபுரி, தஞ்சை)செவித்திறன் குறையுடைய மாணவர்களுக்காகவும் என ஐந்து மேல்நிலைப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் மேல்நிலைக் கல்வி முடித்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகளிலிருந்து உயர்கல்விக்குச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த மூன்று கல்வி ஆண்டுகளாக சிறப்புப் பள்ளிகளில் மேல்நிலைக்கல்வி பயிலும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் வழங்கப்படும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்படவில்லை எனக் குமுறுகிறார்கள் மாணவர்கள். இது குறித்து அரசு சிறப்புப் பள்ளிகளில் பயின்று தற்போது கல்லூரிகளில் இரண்டாம் ஆண்டில் படித்துவரும் சில பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களிடம் பேசினோம்.
“மூனு வருஷமாவே எங்களுக்கு இலவச லேப்டாப்ஸ் கொடுக்கல. ஸ்கூல்ல கேட்டா, சரியான பதில் இல்ல. சில மாணவர்கள் ஒன்னாச் சேர்ந்து கமிஷ்னர் ஆ்ஃப்ஈஸ்லையும் (மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரகம்) போய் கேட்டுப் பாத்துட்டோம். சரியான பதில் இல்ல. போன வருஷம்தான் கரோனா வந்துச்சு. ஆனா அதுக்கு முன்னால ரெண்டு வருஷமாவே எங்களுக்கு லேப்டாப்ஸ் கொடுக்கல. இதைக் கேட்டா இப்போ கரோனானு காரணம் சொல்றாங்க.” என்கிறார்கள் ஆதங்கமும் ஏமாற்றமுமாக.
சிறப்புப் பள்ளிகளில் பயிலும் பெரும்பாலான மாணவர்கள் வறுமைச் சூழலிலிருந்து வருபவர்கள். அவர்களுக்குச் சொந்தமாக ஒரு மொபைல் வாங்குவதே பெரும்பாடு என்ற நிலையில், அரசு வழங்கும் விலையில்லா மடிக்கணினிகள் கிடைத்துவிட்டால், அதைக்கொண்டு கல்லூரிகளில் நடத்தப்படும் இணைய வகுப்புகளில் சிறப்பாகப் பங்கேற்கலாம் என்று நினைத்தவர்களின் எண்ணம் ஈடேறவில்லை. “இப்போ எங்களுக்கு ஆன்லைன்லதான் வகுப்புகள் நடக்குது. இலவச லேப்டாப்ஸ் கோடுக்காததால அப்பா அம்மாகிட்ட அடம் பிடிச்சு சிலர் ஸ்மார்ட் ஃபோன் வாங்கிருக்கோம். ஆனா எல்லா மாணவர்களுக்கும் இது சாத்தியமில்ல. ஏன்னா எங்களோட பல நண்பர்கள் ரொம்பவே ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவுங்க.
என்னதான் ஸ்மார்ட் ஃபோன் வைச்சு க்லாஸ் அட்டெண்ட் பண்ணினாலும், நடத்துன பாடத்தைத் திரும்பப் படிக்க, பாடத்துல இருக்கிற முக்கிய பாயிண்ட்ஸை குறிப்பெடுக்க, பாடம் சம்பந்தமான பிற தகல்வல்களை நெட்ல தேடிப் படிக்கனு எல்லாத்துக்கும் ஸ்மார்ட் ஃபோனைக் காட்டிலும் பார்வையற்ற எங்களுக்கு லேப்டாப்ஸ்தான் அக்சசபிலா இருக்கும். முதல்வர் கவனத்துக்கு இந்த விஷயம் போனாதான் இதுக்கு ஒரு விடிவு கிடைக்குமுனு நாங்க உறுதியா நம்புறோம்” என்கிறார்கள் பரிதாபமாக.
மாணவர்களின் இந்தக் குற்றச்சாட்டு குறித்து சில சிறப்புப் பள்ளி ஆசிரியர்களிடம் பேசினோம். பெயரை வெளியிட வேண்டாம் என்ற நிபந்தனையுடன் பேச முன்வந்தார்கள்.
அரை வயிற்றுச் சாப்பாடு அதுவும் ஒருவேளை
“மாணவர்களின் லேப்டாப் கோரிக்கைதான் என்றில்லை. சிறப்புப் பள்ளிகள் தொடர்பான எந்த ஒரு கோரிக்கையும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உயர் அதிகாரிகளால் அரசின் கவனத்திற்குக் கொண்டுசெல்லப்படுவதே இல்லை. சமீபத்தில் நடந்த மாண்புமிகு முதல்வர் அவர்களின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆய்வுக் கூட்டத்தில்கூட சிறப்புப் பள்ளிகள் தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் இல்லை. இதிலிருந்தே சிறப்புப் பள்ளிகளின் மீது துறையின் உயர் அலுவலர்களுக்கு இருக்கும் அக்கறை தெளிவாகிறது.” என்கிறார்கள் கோபமாக.
“கரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டிலிருந்து சிறப்புப் பள்ளி மாணவர்கள் அனைவருமே தங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் வீட்டிலேயே இருக்கிறார்கள். மிகுந்த பொருளாதார நெருக்கடிகளைக்கொண்ட மாணவர்களின் குடும்பத்தில் இவர்கள் பெரும் சுமையாகவே கருதப்படுகிறார்கள் என்பதுதான் களத்தில் காணும் உண்மை. விடுதியில் தங்கிப் படிக்கும் மாணவர்களின் உணவுச் செலவுக்காக மாதாந்திரத்தொகையாக அரசு ரூ. 900 வழங்குகிறது. மாணவர்கள் தற்போது விடுதியில் இல்லாததால், அந்தத் தொகை செலவழிக்கப்படாமல் அரசுக்கே திரும்ப அனுப்பப்பட்டு வருகிறது. பள்ளிக்கல்வித்துறையின் கட்டுப்ப்ஆட்டில் இயங்கும் பள்ளிகளில் மாணவர்களுக்கான சத்துணவுப் பொருட்கள் அவர்களுக்கே இலவசமாக வழங்கப்படுவதுபோல, உணவுக்காக அரசு வழங்கும் தொகையினை மாணவர்களிடம் வழங்கினால், அவர்களின் பெற்றோருக்கு அது மிகப்பெரிய உதவியாக இருக்கும் என கடந்த ஆண்டிலிருந்தே சிறப்புப் பள்ளிகள் உதவி இயக்குநரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். எதுவுமே நடக்கவில்லை. பல வீடுகளில் மாணவர்கள் ஒருவேளை சாப்பாடுதான் சாப்பிடுகிறார்கள் என்பதை அறியும்போது வேதனையாக இருக்கிறது.
சில தன்னார்வம் கொண்ட தலைமை ஆசிரியர்கள் மற்றும் பிற ஆசிரியர்களின் ஒருங்கிணைப்பில் அவ்வப்போது நன்கோடையாளர்களின் மூலம் சில உதவிகள் மாணவர்களுக்கு செய்யப்படுகின்றன. மற்றபடி பல ஆண்டுகளாகவே மாணவர்களின் கல்விநலனில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை எந்த ஒரு அக்கறையும் இன்றி மெத்தனமாகவே செயல்பட்டு வருகிறது.
பல ஆண்டுகளாகவே, ஈரோடு செவித்திறன் குறையுடையோருக்கான உயர்நிலைப்பள்ளியை மேல்நிலைப்பள்ளியாகத் தரம் உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை கண்டுகொள்ளப்படாமலேயே கிடப்பில் போடப்பட்டுள்ளது.” என நெடுநாட்களாகத் தங்கள் மனதில் தேக்கிவைத்திருந்த ஆதங்கங்களைக் கொட்டித் தீர்த்தார்கள் சிறப்புப் பள்ளியில் பணியாற்றும் அந்த ஆசிரியர்கள்.
கல்வியும் தொழில்நுட்பமும்தான் மாற்றுத்திறனாளிகளைப் பொதுச்சமூகத்தோடு ஒருங்கிணைத்து அவர்களின் கண்ணியம் மற்றும் சமத்துவம் காப்பதில் முக்கிய காரணிகளாகத் திகழ்கின்றன. அத்தகைய கல்வியைத் தரும் சிறப்புப் பள்ளிகளில் நிலவும் சீர்கேடுகளை மாண்புமிகு முதல்வர் அவர்கள் தலையிட்டுத் தீர்ப்பார் என்பதே அந்தப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், அங்கு பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோருடைய அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.
விடியல் நாயகன்தான் துறையின் அமைச்சர். அதனால், வீண் போகாது விடியும் என்ற நம்பிக்கை.
***
தொகுப்பு: சாமானியன்
தொடர்புக்கு: naansamaniyan@gmail.com
மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கு, ஓர் இறுதி நம்பிக்கைகொண்ட இறைஞ்சல்
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் முதல்வரின் ஆய்வுக்கூட்டம்: பேசப்பட்ட முக்கிய விடயங்கள் எவை?
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
