தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

கரோனா என்னும் பெருந்தொற்றுக்கு உள்ளாகி நம் பார்வை மாற்றுத்திறனாளிகளில் கிட்டத்தட்ட நாற்பது பேர் உயிரிழந்திருக்கிறார்கள். பலர் தொற்றுகண்டு சிலநாள் அவதிக்குப்பின் மீண்டிருக்கிறார்கள். அப்படி மீண்டவர்களில் ஷண்முகமும் ஒருவர்.

சன்முகம்
சன்முகம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், கலம்பூரைச் செர்ந்த முதுகலைப் பட்டதாரியான ஷண்முகத்தின் அப்பா ஓய்வுபெற்ற தூய்மைப் பணியாளர். அம்மா அரசுத் தொடக்கப்பள்ளி ஒன்றின் இடைநிலை ஆசிரியர். அப்பா, அம்மா இருவருமே கரோனா தொற்றுக்குப் பலியாகிவிட, தான் தொற்றிலிருந்து மீண்டது குறித்தும், தன் வாழ்வின் துயரமும் நம்பிக்கையும் கலந்த அந்த நாட்கள் பற்றியும் நம்மோடு உரையாடினார் ஷண்முகம். அந்த உரையாடலின் முக்கியப் பகுதிகள் இங்கே…

கேள்வி: உங்க மூனு பேர்ல முதல்ல யாருக்குத் தொற்று வந்துச்சு?

பதில்: அப்பாவுக்குத்தான். எங்க பழைய வீட்டுக்கு ஆல்டரேஷன் வேலை நடந்துச்சு. அப்போ அப்பா காலைல போனா சாய்ங்காலம்தான் வீட்டுக்கு வருவாரு. அங்க அக்கம் பக்கம் வீடுகளில உட்கார்ந்து பேசுறது, சாப்பிடுறதுன்னு எப்படியோ அவருக்குத்தான் முதல்்ல தொற்று வந்துச்சு.

கே: அப்பாவுக்கு என்ன அறிகுறி இருந்துச்சு?

ப: அப்பாவுக்கு போன ஏப்ரல் 29 30லாம் சலியா இருந்துச்சு. மே 2 3 வாக்கில அப்பா, அம்மா, எனக்கு மூனு பேருக்குமே காய்ச்சல் அடிச்சது. அதிலும் அம்மாவுக்கு காய்ச்சலோட மூச்சுத்திணறலும் சேர்ந்துக்கிச்சு. எனக்கு லேசான வயிற்றுப்போக்கு இருந்துச்சு. ட்ரிப்ஸ் ஏத்தினதும் எனக்குக் காய்ச்சல் சரியாயிடுச்சு. ஆனா 6,7 தேதில எங்க மூனு பேருக்குமேரொம்ப முடியல. அதுக்கு அப்புறம்தான் ஹாஸ்பிட்டல் போகலாம்னு முடிவு செஞ்சோம்.

கே: முதல்லயே ஏன் போகல?

ப: “எந்த ஹாஸ்பிட்டல்லேயும் பெட் இல்ல, பிரைவேட் ஹாஸ்பிட்டலில பெட் இருக்குன்னு பொய் சொல்லுவாங்க. கிட்டப்போனதுக்கு அப்புறமா இல்லைனு சொல்லிடுவாங்க. அதனால நீங்க வீட்டிலையே இருந்து டிரீட்மெண்ட் எடுங்க. கசாயம் சாப்பிடுங்க”னு சிலர் சொன்னாங்க. அதனால நாங்களும் வீட்டிலையே இருந்துட்டோம். மூச்சுத்திணறல் அதிகமானதும்தான் வேற வழியில்லாமக் கிளம்பிட்டோம்.

ஏழாம் தேதி மத்தியானத்துக்கு மேல அப்பாவால பேச முடியல. வாயில வெறும் காத்துதான் வந்துச்சு. அதனால நானும் அம்மாவும் வேலூர் மெடிக்கல்  போய்ட்டோம். அப்பாவ ஆரணி ஜிஹெச்  கொண்டுபோய், அங்க திருவண்ணாமலை மெடிக்கல் கொண்டுபோக சொல்லிட்டாங்க.

நானும் அம்மாவும் வேலூர் மெடிக்கல்ல பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்கோம். உள்ள சேர்க்கிறதுக்கு முன்னால நரம்பூசி போட்டாங்க. அம்மாவுக்குப் போடப்போனப்போ அம்மா இறந்துட்டாங்க. இறந்துட்டாங்கனு நர்சுங்க பேசிட்டே எனக்கு நரம்பூசி போட்டாங்க. அப்போ எனக்கு என்ன செய்யுறதுனே தெரியல. ஆனா பதட்டப்படக்கூடாதுங்கிறதில உறுதியா இருந்தேன். ஏன்னா எனக்கும் அப்போ ஆக்ஸிஜன் லெவல் 80 82 தான் இருந்துச்சு. குனியவே முடியாது. அவ்லோ மூச்சு வாங்கும்.

இரவு மணி ஒன்றரைக்குத்தான் என்ன உள்ள கூப்பிட்டு ஆக்்ஸிஜன் கொடுத்தாங்க. அதுக்கு அப்புறமா காய்ச்சல் இல்ல. சொல்லப்போனா காய்ச்சல் இதுவரைக்குமே வரல.

கே: ஏன் ஹாஸ்பிட்டல்லருந்து வந்துட்டீங்க?

அம்மாவுக்கு சடங்கு செய்யனுமுனு அடுத்தநாள் காலைல வீட்டுக்கு வந்துட்டேன். அப்போதான் அப்பாவும் இறந்துட்டாருன்னு தெரிஞ்சது. ரொம்பவே உடைஞ்சுட்டேன். முதல்நாள் சாய்ங்காலம் 7 மணிக்கு அம்மாவும், அடுத்தநாள் காலைல மூனு  மணிக்கு அப்பாவும் இறந்துட்டாரு. அப்பாவோட நிலைமை ரொம்பவே சீரியஸ்னு தெரியும்தான். ஆனாலும் ஐசியூவிலயாவது இருப்பாருன்னு நினைச்சேன். அதான் ரொம்ப ஏமாற்றமா இருந்துச்சு.

அண்ணா! நான் 20 வருஷமா ஹாஸ்டலிலேயே தங்கிப் படிச்சவன். எல்கேஜிலருந்து ரெண்டாம் கிலாஸ் வரைக்கும் பர்குர். ரெண்டிலருந்து அஞ்ச்உவரைக்கும் எல்எஃப்சி. அதுக்கு அப்புறமா செயின்ட் லூயிஸ். இப்படி எம்ஏ பிஎட் முடிக்கிறவரைக்கும் ஹாஸ்டல்தான். இப்போ ரெண்டு வருஷமாத்தான் அப்பா அம்மாகூட இருந்து டிஆர்பி எக்சாமுக்குப் படிச்சிட்டிருந்தேன். எப்படியும் வேலை கிடைச்சிடும். அப்பா, அம்மாவை பார்த்துக்கணும்கிற ஆசைதான் நடக்காமலே போயிடுச்சு. “சொல்லும்போது ஷண்முகத்தின் குரல் உடைந்து, நா தழுதழுக்கிறது.

கே: அப்பா அம்மாவுக்கு ஏதாச்சும் இணை நோய்கள் இருந்துச்சா?

ப: ஆமா. அப்பாவுக்கு பிபி ஷுகர் ரெண்டும் இருந்துச்சு. அம்மாவுக்கும் அதேதான், கூடவே டஸ்ட் அலர்ஜியால நுரையீரல் பாதிப்பும் இருந்துச்சு. ரத்தம் உறையாம இருக்க மாத்திரைலாம் எடுத்துக்கிட்டிருந்தாங்க.

கே: எப்பவரைக்கும் வீட்டில இருந்தீங்க?

8ஆம் தேதிலருந்து 12ஆம் தேதிவரைக்கும் வீட்டிலையே  இருந்து டிரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். காலைலையும், சாய்ங்காலமும் வந்து ட்ரிப்ஸ் ஏத்துவாங்க. கொஞ்சம் எனர்ஜி வந்தமாதிரி இருக்கும். ஆனா குனிய முடியாது. கடுமையா மூச்சு வாங்கும். மூச்சுத்திணறல் அதிகமாச்சு. எங்க போறது, என்ன பண்றதுன்னு தெரியல. எங்கயுமே பெட் இல்ல. 

அப்போதான் சிஎஸ்ஜிஏபி ராஜா அண்ணன் நம்ம மாற்றுத்திறனாளிகள் கமிஷ்னருக்கு என் நிலைமைய SMS பண்ணிருக்காரு. அதனால உள்ளூர் காவல்த்துறை உதவியோட நான் திருவண்ணாமலை ஜிஹெச் போனேன். அங்கேயும் எனக்கு லேசுல பெட்கிடைக்கல. ரொம்ப நேரமாவே  நின்னிட்டுதான் இருந்தோம். அப்போ மறுபடியும் ஹெலன்கெல்லர் சங்கத்தோட தலைவர் சித்ரா மேடம் நம்ம கமிஷ்னருக்கு SMS பண்ணிருக்காங்க. கமிஷ்னரும் கலெக்டர்கிட்ட பேசுனதாச் சொன்னாங்க. ஆனா அதுக்கு்ள நாங்க நின்னிட்டிருந்த பெட்ல ஒருத்தர் இறந்துட்டார். உடனே ஓடிப்போய் மாமா அந்த பெட்டை பிடிச்சு என்னைப் படுக்க வச்சார்.

அங்க நிலைமை அப்படித்தான் இருந்துச்சு. எல்லாம் சக்திக்கு மீறின மாதிரி. யாரையும் குறை சொல்ல முடியாது. வார்டு போக வராண்டாவிலும் பெட்கள் போட வேண்டிய நிலைமை. ஆனா, டாய்லட் பாத்ரூமெல்லாம் அவ்வளவு சுத்தமா இருந்துச்சு. பொதுவா அரசு ஹாஸ்பிட்டல்ல அப்படி இருக்காதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். அதனால அது எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருந்துச்சு.

கே: எத்தனை நாள் ஹாஸ்பிட்டல்ல இருந்தீங்க? கவனிப்பெல்லாம் நல்லா இருந்துச்சா??

ப: எட்டுநாள் இருந்தேன். கவனிப்புன்னா ஆக்ஸிஜன் கொடுத்தாங்க. சாப்பாடு நம்மதான் பார்த்துக்கணும். மற்றபடி, டாக்டர் வருவாங்க. நமக்கு தைரியம் சொல்லி கவுன்சிலிங்லாம் கொடுப்பாங்க. காலைல ராத்திரி ரெண்டு நேரம் நரம்பூசி போடுறது, ட்ரிப்ஸ் ஏத்துறதெல்லாம் நர்ஸ் பார்த்துக்கிட்டாங்க.

அங்க நான் சேரும்போது என்னோட ஆக்ஸிஜன் லெவல் 75. ஒரே ஒருநாள் மட்டும் ராத்திரி என்னோட ஆக்ஸிஜன் லெவல் ரொம்பவே கீழ போய்ட்டதா சொன்னாங்க. ஆனா எனக்கு எதுவும் தெரியாது. நான் பெட்ல சேர்ந்து மூனு நாள்ல ஒரு ஊசி போட்டாங்க. அதுக்கு அப்புறமா எனக்கு ரொம்ப வேகமாவே குணமாச்சு. அந்த ஊசி போட்டதுக்கு அப்புறம்தான் எனக்கு தாகம் எடுத்துச்சு. அதிகமா யூரின் போச்சு. அதுக்கு அப்புறமா நான் சீக்கிரமாவே ரெக்கவர் ஆயிட்டேன்.

கே: உணவு எல்லாமே நாமதான் பார்த்துக்கணும்னு சொன்னீங்க. ஒரு டோட்டலி ப்லைண்டா  நீங்க எப்படி சமாளிச்சீங்க?

ப: எனக்கு நான் ஹாஸ்பிட்டல்ல இருந்த அந்த எட்டு நாளும் என்னோட சித்தப்பாவும், மாமாவும் மாறிமாறி கூடவே இருந்தாங்க. அவுங்களுக்கு இது மிகப்பெரிய ரிஸ்குன்னு தெரிஞ்சே என்கூட இருந்தாங்க. வீல்சேர்ல என்னை டாய்லெட் கூட்டிட்டுப் போறதிலருந்து எனக்கு ரொம்பவே சப்போர்ட்டா இருந்தது அவுங்க ரெண்டுபேரும்தான்.

திடீர் திடீர்னு அங்க யாராவது ஒரு பேஷண்ட் இறக்கும்போதெல்லாம், கேட்கிற அழுகை சத்தம் எனக்கு ரொம்ப மிரட்சிய கொடுக்கும். அப்போலாம் “நீயாவது அதைக் காதாலதான் கேட்குற. ஆனா நாங்க அவுங்கல நேரடியாப் பார்த்திருக்கோம். அதனால எதை நினைச்சும் பயப்படாத. தைரியமா இரு”னு என்னை ரொம்பவே தேற்றுனது அவுங்கதான்.

கே: நர்ஸ் டாக்டர்ஸ் அணுகுமுறையெல்லாம் எப்படிஇருந்துச்சு?

ப: ரொம்ப நல்லாவே என்னைப் பார்த்துக்கிட்டாங்க. முதல்நாள் மட்டும் உங்களுக்கு பார்வை முழுசா தெரியாதா? இல்ல கொஞ்சமாத் தெரியுமானு கேட்டுக்கிட்டாங்க. நான் முழுசாவே பார்வை இல்லைனதும், என்னை ரொம்பவும் கேர் எடுத்துப் பார்த்துக்கிட்டாங்க.

நானும் அவுங்ககிட்ட, “எனக்கு எது செய்யுறதுனாலும், முதல்ல என்கிட்ட சொல்லிடுங்க. அப்போதான் நான் அதுக்கு ஏத்தமாதிரி தயாராக முடியும்”னு தெளிவா சொல்லிட்டேன். அவுங்களும் நான் சொல்றதைப் புரிஞ்சுக்கிட்டாங்க.

கே: இப்போ எப்படி இருக்கீங்க ஷண்முகம்?

ப: இப்போ ரொம்பவே நல்லா இருக்கேன். அப்போலாம் குனிஞ்சா மூச்சு வாங்கும். இப்போ மாடிப்படி ஏறும்போதுதான் கொஞ்சமா மூச்சு வாங்குது. மற்றபடி ஒன்னும் தொந்தரவு இல்ல.

கே: கிட்டத்தட்ட மரணத்தைப் பார்த்திட்டு திரும்பிருக்கிங்கனுதான் சொல்லணும். முக்கியமா எது உங்களைக் காப்பாத்துனதா நினைக்கிறீங்க?

ப: காண்ஃபிடன்ஸ். அதுதான் ரொம்ப முக்கியமுனு நினைக்கிறேன். என் பக்கத்திலேயே அம்மா இறந்தாங்க. அப்பாவும் இறந்துட்டாரு. ஆனாலும், நான் பிழைச்சிடுவேனு ரொம்பவே நம்பினேன். ஒரு நொடிகூட மனசைத் தளரவிடக்கூடாதுங்கிறதில ரொம்பவே உறுதியா இருந்தேன். என்னோட க்ரிட்டிக்கல் நிலைமைக்கு நான் கொஞ்சம் தளர்ந்திருந்தாலும் முடிவு வேற மாதிரி இருந்திருக்கும்.

அப்புறமா, உங்களுக்கு சலியோ ஜுரமோ எதுவானாலும் உடனே செக் பண்ணிடுங்க. முத்தினதுக்கு அப்புறமாப் போய் பல கஷ்டங்களை அனுபவிக்க வேணாம். ஏன்னா, நம்ம கஷ்டம்கிறது நம்ம ஒருத்தர் கஷ்டம் இல்ல. நம்ம கூட இருக்கிறவுங்களோட கஷ்டம்கிறதையும் புரிஞ்சுக்கணும்.

தன்னம்பிக்கையும் எதார்த்தமும் கலந்து உரையாடிக்கொண்டிருந்த ஷண்முகத்திற்கு இது மறுபிறவி. “கரோனா பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்விச் செலவை அரசே ஏற்கும், அவர்களுக்கு வைப்புத்தொகை வழங்கப்படும்” என அறிவித்திருக்கிறார் தாயுள்ளம் கொண்ட மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள்.

சொல்லுணாத் துயரிலிருந்து மீண்டு, தன் இளமையில் தனக்கான ஒற்றைப் பாதுகாவலர்களான தன் பெற்றோரை இழந்து தனியனாய் நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி ஷண்முகத்திற்கு அவரின் தகுதிக்கேற்ற அரசுப்பணி வழங்கி, அவரின் வாழ்வில் புதிய ஒளி ஏற்றிட வேண்டும் என்ற கோரிக்கையினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களிடம் முன்வைக்கிறோம்.

***

தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

2 thoughts on “தாய் தந்தையை இழந்து நிற்கும் பார்வை மாற்றுத்திறனாளி சன்முகம்: தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வரின் தயை வேண்டுகிறோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *