தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்!

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நன்றி விகடன்.com:

ஆட்டிச பாதிப்புக்குள்ளான பையன் பொம்மைகளை அடுக்கும் காட்சி
ஆட்டிச பாதிப்புக்குள்ளான பையன்

ஆட்டிசம்… எப்படி இனம் காண்பது, எந்தெந்த மருந்துகள் குணப்படுத்த உதவும், எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம் அத்தனை கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது இக்கட்டுரை…

தமிழ்நாட்டில் 30 லட்சம் குழந்தைகளுக்கு ஆட்டிசம்…! – குறைபாடு ஏன், அறிகுறிகள், பயிற்சிகள்! #WorldAutismAwarenessDay

ஆட்டிசம் விழிப்புஉணர்வு அவசியம் தேவை… ஏன்?

புதிதாகத் தங்கள் குழந்தைக்கு ஆட்டிசம் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியும் பெற்றோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதனாலேயே ஆட்டிசம் குறித்து நாம் தொடர்ச்சியாக உரையாடிக்கொண்டே இருக்கவேண்டிய தேவையும் இருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் அமெரிக்காவில் `68 குழந்தைகளில் ஒன்று’ என்ற விகிதத்தில் ஆட்டிசநிலைக் குழந்தைகள் இருப்பதாக ஒரு புள்ளிவிவரம் சொன்னது. ஆனால் இப்போது, `45 குழந்தைகளில் ஒரு குழந்தை’ என்ற அளவில் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகச் சொல்கிறது மற்றோர் ஆய்வு. இதை `ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பதைப்போல உலகம் முழுமைக்குமானதாகவே பார்க்க வேண்டும். அமெரிக்காவில் ஆட்டிசக் குறைபாட்டுக்கெல்லாம் புள்ளிவிவரக் கணக்கு இருப்பதால், இது குறித்து அவர்களால் தெளிவாகக் கூற முடிகிறது. நம்நாட்டில் இப்படியான கணக்குகள் எதுவும் இல்லை என்பதால், இங்கே ஆட்டிச பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் சரியான தகவல் கிடைப்பதில்லை. இருந்தாலும், ஆட்டிசநிலைக் குழந்தைகளின் எண்ணிக்கை இங்கேயும் கூடிக்கொண்டிருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும். கடந்த 2017ஆம் ஆண்டு அன்றைய தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஒரு பேட்டியில், `தமிழகத்தில் மட்டும் சுமார் 30 லட்சம் குழந்தைகள் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டிருக்கலாம்’ என்று தெரிவித்திருந்தார். இதில் கவனிக்கவேண்டிய முக்கியமான விஷயம், இந்தக் கணக்கு தோராயமானது என்பதுதான்; இந்தக் கணக்கும் சென்ற ஆண்டு கூறியது. எனவே, ஆட்டிசம் குறித்து, நாம் தொடர்ச்சியாக உரையாடுவதன் மூலம் மட்டுமே இந்தக் குழந்தைகள் விரைவாக அடையாளம் காணப்படுவார்கள். அதன் பிறகு இவர்களுக்கான தொடக்கநிலைப் பயிற்சிகளை உடனே தொடங்கிவிடலாம். இது அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த உதவும்.

ஆட்டிசம் என்றால் என்ன

இது ஒரு நரம்பியல் வளர்ச்சிக் குறைபாடு. இதனால் பாதிக்கப்படும் குழந்தைகள், சமூகத்தில் மற்றவர்களோடு தொடர்புகொள்ளும் திறன் (Communication), கலந்து பழகும் திறன் (Socialization) போன்றவற்றில் பின்தங்கியிருப்பார்கள். இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு பேசும் திறன் இருக்காது. சில குழந்தைகள் பேசினாலும், தெளிவாக, மற்றவர்கள் புரிந்துகொள்ளும்படி பேச மாட்டார்கள். `PDD’, `Asperger’, `Autism’ என இதில் பல வகைகள் இருக்கின்றன. எனவே, இதை `ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் டிஸ்ஆர்டர்’ (Autism Spectrum Disorder – ASD) என்கிறது மருத்தவ உலகம். இந்தக் குறைபாட்டின் தீவிரத்தன்மை ஒவ்வொருவருக்கும் வேறுவேறு மாதிரியாக இருக்கும். எனவே, ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் திறமையும் சரி, சிக்கல்களும் சரி தனித்துவமானவை. 

ஆட்டிசத்தின் அறிகுறிகள் என்னென்ன… எத்தனை வயதில் கண்டுபிடிக்கலாம்

குறைந்தபட்சமாக பத்திலிருந்து பதினெட்டு மாதங்களுக்குள்ளாகவே இந்தக் குறைபாட்டின் அறிகுறிகளைக் கண்டறிய முடியும். ஒரே மாதிரியான செயலை திரும்பத் திரும்பச் செய்வது, பெயர் சொல்லி அழைத்தாலும் திரும்பிப் பார்க்காமலிருப்பது, சுற்றும் பொருள்களின் மீது ஆர்வம், தேவையானவற்றை விரல் சுட்டிக் காட்டாமல், மற்றவரின் கைபிடித்துச் சென்று காட்டுவது, காரணமில்லாமல் அழுவது, சிரிப்பது… என இந்தப் பட்டியல் நீள்கிறது. மற்ற நோய்கள்போல, ஆட்டிசத்தை மருத்துவப் பரிசோதனைகள் மூலம் அறிந்துகொள்ள வழிகளில்லை. பெற்றோர், உறவினர், குழந்தைகள்நல மருத்துவர், ஆசிரியர் போன்றவர்கள்தான் இந்தக் குறைபாட்டைக் கண்டறிந்து சொல்ல வேண்டும். மருத்துவர்களும்கூட பெற்றோரிடம் பல்வேறு கேள்விகளுக்கு பதில் பெற்றும், குழந்தைகளின் செயல்பாட்டை கவனித்தும்தான் ஆட்டிசம் குறைபாடு இருப்பதை உறுதி செய்கிறார்கள்.

எந்தெந்த மருந்துகள் குணப்படுத்த உதவும்

ஆட்டிசம் என்பது குறைபாடுதான், நோயல்ல. எனவே, அந்தக் குறைபாட்டின் தன்மையிலிருந்து மேம்படுத்த மட்டுமே முடியும். மேலும், இது ஏன் ஏற்படுகிறது என்பதை அறிய உலகம் முழுவதும் ஆய்வுகள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன. இந்தக் குறைபாட்டுக்கான காரணத்தைக் கண்டுபிடிக்காத நிலையில், இதனைச் சரிசெய்ய மருத்துகளை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? தொடர்ந்து பயிற்சிகள் கொடுப்பதன் மூலம், ஆட்டிச நிலையிலிருக்கும் ஒரு குழந்தையின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு உதவ முடியும். எப்படி சர்க்கரைநோய் (Diabetes) ஒருவருக்கு வந்துவிட்டால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாதோ அதைப்போலத்தான் ஆட்டிசமும். வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வதன் மூலம் சர்க்கரைநோயைச் சமாளித்து ஆரோக்கியமாக வாழ முடியும். அதைப்போலவே  ஆட்டிச பாதிப்பின் தீவிரத் தன்மையையும், அந்தக் குழந்தையின் திறன்களையும் சரியாகக் கண்டறிந்து, அதற்கேற்ப பயிற்சிகள் அளிப்பதன் மூலம் இவர்களும் மற்ற குழந்தைகளைப்போலவே நிகரான வாழ்வை வாழலாம். மேலைநாடுகளில் ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பலர்  ஐம்பது வயதைக் கடந்தும் இயல்பான வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள்.

எந்த மாதிரியான பயிற்சிகள் தேவை

ஆட்டிசநிலைக் குழந்தைகளின் தீவிரத்தன்மை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும். எனவே, மருத்துவர்கள், நிபுணர்களின் ஆலோசனைக்குப் பின்னர் பயிற்சிகளை (தெரபி- Therapy) முடிவு செய்ய வேண்டும். அன்றாட வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி (Occupational Therapy) பேச்சுப்பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி  வழி கற்பித்தல் ( Social Education) போன்றவை முக்கியமாகத் தேவைப்படும். யோகா, இசை போன்ற மேலதிகப் பயிற்சிகளும் இவர்களுக்கு நல்லது. முக்கியமாக, குழந்தைகளின் பெற்றோர் தெரபிஸ்டுகளிடம் ஆலோசனைப் பெற்று, வீட்டில் செய்யவேண்டிய பயிற்சிகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். வீட்டு வேலைகளிலும் வயதுக்கேற்ப இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிக்க வேண்டும். தினசரி வேலைகளான (Activities for daily living) பல் தேய்த்தல், குளித்தல், கழிவறை சென்று வந்த பின்னர் சுத்தம் செய்துகொள்வது போன்றவற்றையும் சிறு வயதிலேயே இந்தக் குழந்தைகளுக்குப் பயிற்றுவிப்பதன் மூலம் தன்னிச்சையான வாழ்வை வாழச் செய்யலாம்.

தமிழகத்தில் ஆட்டிசம் குழந்தைகள் எங்கெல்லாம் இந்தப் பயிற்சிகளைப் பெறலாம்?

சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை தனியார் பயிற்சி நிலையங்களைத் தேடியே இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் ஓடினார்கள். ஒரு வகுப்புக்கு 300 ரூபாய் தொடங்கி ஆயிரம் ரூபாய் வரை வசூலிப்பவர்களும் இருக்கிறார்கள். (ஒரு வகுப்பு என்பது 45 நிமிடங்கள் முதல் 60 நிமிடங்கள்வரை). பணம் படைத்தவர்களுக்கு வேண்டுமானால் இந்தச் செலவு சாத்தியமானதாக இருக்கலாம். ஆனால் ஏழ்மை நிலையில் இருப்பவர்களுக்கு? 

தற்போது ஆட்டிசம் போன்ற சிறப்பு கவனம் செலுத்தவேண்டிய குழந்தைகளுக்கான எல்லாப் பயிற்சிகளையும் அரசு மருத்துவமனைகளிலேயே பெறமுடியும். ஒவ்வொரு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் இதற்காகத் தனிப்பகுதி அமைக்கப்பட்டிருக்கிறது. இதுகூட தொடர்ச்சியாகப் பல பெற்றோர்கள், சில தொழில்முறை பயிற்சியாளர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்ததன் விளைவால்தான் கிடைத்திருக்கிறது. `இதுபோன்ற பயிற்சி நிலையங்கள் ஊராட்சி, தாலுகா எனப் பல இடங்களுக்கு விரிவாக்கம் செய்யப்பட வேண்டும்’ என்று பெற்றோர்களிடமிருந்து கோரிக்கையும் அரசுக்கு வைக்கப்பட்டிருக்கிறது. அதுவும் விரைவில் நிறைவேற்றப்படும் என்று சில பெற்றோர்கள் நம்புகிறார்கள். ஆட்டிசம், தொட்டால் ஒட்டிக்கொள்ளும் நோய் அல்ல. அச்சமின்றி அவர்களுடன் கை கோத்து, நாம் எல்லோரும் பயணம் செய்ய வேண்டும்.

(கட்டுரையாளர் யெஸ்.பாலபாரதி, `ஆட்டிசம் சில புரிதல்கள்’ என்ற நூலின் ஆசிரியர். ஆட்டிச விழிப்புஉணர்வுச் செயற்பாட்டாளர்)

கட்டுரையாளரின் வலைப்பக்கத்திற்குச் செல்ல

ஆட்டிசம் தொடர்பான அவரது கட்டுரைகளைப் படிக்க

இந்தியாவில் செயல்படும் ஆட்டிசம் பாதிக்கப்பட்டோருக்கான தொண்டுநிறுவனங்கள் பற்றி அறிய இங்கு க்லிக் செய்யுங்கள்.

ஏப்ரல் 2, இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்.

மறு பிரசுரம், முதல் பிரசுரம் ஏப்ரல் 2 2019.

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *