ஜனநாயகத் திருவிழா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
தேர்தல் மையிடப்பட்ட விரலின் புகைப்படம்
தேர்தல் மையிடப்பட்ட விரல்

2021 தொடங்கினதிலிருந்தே எப்ப எப்பனு மனசு துடிக்க ஆரம்பிச்சாச்சு. ஆனா எப்பவுமே இருக்கிற சுவாரசியம் இந்தத் தேர்தல்ல மிஸ்ஸிங். காரணம் 24 மணிநேரச் செய்திச் சேனல்கள். நொடிக்கு ஒருமுறை பிரேக்கிங் நியூசுன்னு விட்டா பிரேக்கிங் நியூஸ் போடப்போறோம்னு சொல்றதையே ஒரு பிரேக்கிங் நியூசா போடுவாங்க போல. எப்போ தேர்தல் தேதின்னு சுவாரசியமா எதிர்பார்த்துக் காத்திருக்க, பிப்பரவரி 26 விரும்பாத நாள் அன்னைக்கு தேர்தல அறிவிச்சு ஆல் ப்லைண்ட் சொசைட்டியை அப்செட் ஆக்கிடுச்சு ஆணையம்.

கட்சிகளோட தேர்தல் அறிக்கையாவது நமக்கு சாதகமா வரட்டுமுனு எதிர்பார்ப்போட அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தா கைவிரிச்சது ஒரு கட்சி. சரி அவுங்க சின்னத்ததான் சிம்பாலிக்கா காட்டுறாங்கனு நினைச்சா, மொத்த ஸ்டேட்டே தமிழகத்தின் எதிர்கால வளர்ச்சிக்கான தவிர்க்க முடியாத ஆவணமுனு பாராட்டுன ஐநூறு அம்சங்களில, உறுப்படியான ஐந்துகூட மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்கிறது முதல் ஏமாற்றம். அட அவுங்க பரவால, ஏதோ தட்சனைய ஏத்திக் கொடுக்கிற மாதிரி, உதவித்தொகைய மட்டும் ஏத்தித் தாரோம்னு ஏமாத்திருச்சு குளசாமி கூட்டம். தேர்தல் அறிக்கைனு பார்த்தா, குக்கரோட பதத்துக்கும் பக்குவத்துக்கும்  நாம விசிலடிக்காம இருக்க முடியாது. சங்கம் பார்த்துப் பார்த்து சேர்த்துக் கொடுத்த பதார்த்தத்தை அப்படியே வேகவைச்சு இறக்கிருக்காங்கங்கிறது மணத்திலையும் சுவையிலையும் தெரிஞ்சாலும், அட மெல்லுறதுக்கும், சப்புகொட்டி சொல்லுறதுக்கும் வாய்ச்சிருக்கேனு சந்தோஷப்பட்டுக்கலாம்.

வெண்கோலுடன் நடக்கும் பார்வையற்றவர்
வெண்கோல் பிடித்து நடக்கும்் பார்வையற்றவர்

இந்த வருடத் தேர்தல் பிரச்சாரம் மூலமா யாருக்கு எது கிடைச்சதோ இல்லையோ, இசை ஞானியும், ஆஸ்கர் நாயகனும் அவதரித்த பூமியில் புதுசா ரெண்டு பாடல்கள் கிடைச்சது. பஸ் கிளம்புனதிலிருந்தே பக்கத்துல உட்கார்ந்துட்ட ஒரே பாவத்துக்காக, தன்னோட வீரதீரச் செயலை தான தவப்புகழை நம்மல ஊம் மட்டுமே கொட்டவைச்சுக் கேட்கவைக்கிற சில பெருசுகள் மாதிரி, வெற்றி விடியலுனு ரெண்டு பாட்டும் மாறி மாறி காதுல பூந்ததுல கர்ணன் சாங்கெல்லாம் லயிச்சுக் கேட்க இன்னும் நாளாகும்போல. வீதியில வெள்ளை ஊன்றுகோலோட வேகநடை போட்டிட்டிருக்க, “வெற்றிநடை போடும் தமிழகமே”னு ஊஃபர் உறுமத் தொடங்கினா, எங்கிட்டு வெற்றிநடை போடுறது? இதுக்கெல்லாம் விடியல் எப்பதான் வருமோ? இதுக்கு மேல அரசியல் பேசுறது என்னளவில ஆபத்துதான். எதுக்கு நமக்குப் பொல்லாப்பு. அதனால நேரடியா ஏப்ரல் ஆறுக்கே வந்துடுறேன்.

வேலை சென்னையில, வீடு புதுகையில, வாக்கு காரைக்குடியில. போகலாமா வேணாமாங்கிற யோசனையெல்லாம் வந்து வந்து போனாலும் ஒரே ஒரு வாக்கால ஒரு வேட்பாளர் தோற்றுப்போனதா எப்போதோ அப்பா சொன்ன அந்த இளையான்குடிக்கதை ஞாபகம் வந்தது கிளம்பிட்டேன். கூடவே காரைக்குடியில் எனது வாக்குங்கிறதும் எனக்கான கூடுதல் உந்துதல்ங்கிறதை என் நெருக்கமான நட்பு வட்டம் அறியும்.  தேர்தல் மனநிலையைத் தொடர்ச்சியா தக்கவைச்சிக்கிறதுக்காக காலையில எழுந்ததிலிருந்தே புதியதலைமுறையை ஓடவிட்டேன். நான் கிளம்புறதுக்குள்ளேயே அஜித் வந்துட்டாரு. அப்புறம் என்ன? டான்டட டான்டட டான்.

அதே பிரேக்கிங் நியூஸ் பீஜியத்த பில்டப்பா மாத்தி மனதுக்குள்ள ஓடவிட்டபடியே பஸ் ஏறினேன். பஸ்ல மின்னம்பலம் செய்திகள். மணிக்கூண்டு போகனுமுனு சொன்ன ஒருத்தனுக்கு ஒருமணிநேரமா வழி சொல்லி, எதுத்தாப்பில இருக்கு மணிக்குண்டு போ அப்படினு சொன்ன ஒரு திரைப்பட காமிடி மாதிரி, ஒரு வரி செய்திக்கு வருடக் கணக்கு வரலாறெல்லாம் சொல்லி, அங்கங்க விளம்பரம்னு நம்மல டயர்ட் ஆக்கினாலும், மின்னம்பலம் பழகிடுச்சே என்ன செய்யுறது? ஆனா அந்த காலை ஏழுமணித் தொகுப்புல

தேர்தல் மை பற்றி ஒரு அருமையான கட்டுரை.

படிச்சேன். தெரிஞ்சுக்க வேண்டிய புதிய தகவல்கள்இருந்ததுல மகிழ்ச்சி.

மை மைசூர் புராடக்டாம். என்னோட சோப்பும் மைசூர் சாண்டல்தான். எனக்கு மட்டுமா? மறைந்த நம்ம தலைவருக்கே பிடிச்சது மைசூர் சாண்டலும், மைசூர் பாகும்தானே. அட அவர் கடைசிவரை எதிர்கொண்டது மைசூரிலிருந்து கிளம்பிவந்த அரசியல் முகத்தைத்தானே. இப்படி எசகு பிசகா ஏதேதோ எண்ணங்கள். ஆனால், அந்தக் கட்டுரை வழியா எஞ்சுனதெல்லாம் மையிடும் தருணத்தில் ஆட்காட்டி விரல் உணரும் சில்லிடல் தருணம்தான்.

காரைக்குடியில் மாமா பையன் விக்கியோடு தேவகோட்டை சாலையில் பள்ளிவாசல் நிறுத்தத்தில் இருக்கிற சிறுமலர் ரோமன் கேத்தலிக் (LFRC) பள்ளியில 125A என்கிற என்னோட வாக்குச் சாவடிக்குள் நுழைந்தேன். மாற்றுத்திறனாளிகளுக்கு வரிசையெல்லாம் கிடையாதுனாலும், வந்த உடனே புகுந்துகொள்ள மனமில்லை. அதனால் ஒரு ஐந்து நிமிடங்கள் காத்திருந்தோம். அப்போ வாக்குச் செலுத்திவிட்டு சாய்தளம் வழியா வீல்சேரில் கவனமாக இறங்கிக் கொண்டிருந்தார் யாரோ ஒரு மாற்றுத்திறனாளி சகா.  உள்ளே போனோம். பூத் ஸ்லிப் எனக்கும் வரலைனாலும், தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகளுக்குன்னே பிரத்யேகமா உருவாக்கியிருக்கிற பிடபில்யூடி ஆப்பில் என்னோட வாக்காளர் அடையாள அட்டை எண்ணை முந்தைய நாளே உள்ளிட்டு, வாக்குச்சாவடி எண், பூத் ஸ்லிப் எண் எல்லாம் தெரிஞ்சுக்கிட்டது ரொம்ப உதவியா இருந்துச்சு.

இருவருக்கும் உள்ளங்கையில் சானிட்டைசர் துளியெனத் தெளிச்சாலும், ரெண்டு கையையும் விரல்களைக் கோர்த்துக் கொடுத்துத் தேய்ச்சுப்பார்த்தேன். ஒருகையையே தாண்டல. அடுத்து கையுறைப் பரிதாபங்கள். டிசைன் இதுதானு சொல்லிருந்தா பாலிதின் கவர கையில மாட்டிட்டு வந்திருக்கலாம். சரி அதையும் வாங்கி வலக்கைக்குள் புகுத்தியாச்சு.

இந்தக் கையுறை மாட்டினா பிரெயில் தடவிப் படிக்க முடியுமானு எல்லாப் பார்வையற்றவர்களைப் போல எனக்கும் டவுட் இருக்கத்தான் செய்தது. சரி ஒரு நொடி விஷயத்த ஒருநாள் விவகாரமா ஆக்குவானேனு கடந்துட்டேன். போக அப்படி ஒன்னும் அது தடிப்பான கையுறையும் கிடையாது.

முதல் அலுவலர்கிட்ட வரிசை எண் சொல்லி, ஒரு ஸ்லிப் வாங்கி, அடுத்த அலுவலர் ஆட்காட்டி விரலைச் சில்லிட வச்சப்போ, சாவடியின் முதன்மை அலுவலர் தான் பார்த்துக்கிறதா விக்கியை வெளியே போக சொல்லிட்டாரு.

ஒரு விழிப்புள்ள மாற்றுத்திறனாளியா நான் எப்பவுமே பிரெயில் வேட்பாளர் பட்டியலைக் கேட்டு வாங்கிடுவேன். அதை முழுசும் படிச்சுப் பார்த்துட்டுத்தான் மிஷின்கிட்ட போவேன். இத்தனைக்கும் எனக்கு வேண்டிய வேட்பாளர் எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்னு முன்னமே தெரிந்தாலும் வாக்களிக்கிறப்போ நான் கடைபிடிக்கிற வழக்கம் இது. படிச்சுப் பார்த்தேன்.

பிரெயில் எண்கள் பொறிக்கப்பட்ட ஈவிஎம்
பிரெயில் எழுத்துகள் பொறிக்கப்பட்ட மின்னணு இயந்திரம்

முதன்மை அலுவலர் மிஷின் பக்கமா என்னை நிறுத்த, பள்ளிகொண்டிருக்கிற அந்தப் பதினாறு கண்களுடைய மக்களாட்சி மாளனை மேலிருந்து கீழா இருகை வைத்து அளந்தேன்.

பிறகு என்னோட தேர்வுப் பொத்தானை அழுத்தினேன். என் முகத்துக்கு நேரா ஒரு ப்ரிண்டர் சத்தம். அதுதான் விவிபாட்னு கண்டுகொண்டேன். ஆனா ஒரு நொடி அதிர்ச்சி. நான் அழுத்தியும் பீப் சவுண்ட் வரவே இல்லை. ”சார் சவுண்ட் வரலையே” “வந்திடும் நீங்க வாங்க” முதன்மை அலுவலரின் அழைப்பில் எனக்கு கணப்போழுது ஐயம். இப்போ இருக்கிற அரசியல் சூழலில என்னோட சந்தேகம் நியாயமானதுதான். ஆனா சந்தேகம் அடங்குறதுக்குள்ள பீப் ஒலி கேட்டிடுச்சு. மகிழ்ச்சியில் வெளியேறிட்டேன்.

வீட்டுக்கு வந்தும் தேர்தல் செய்திகளையே தொடர்ந்தேன். நடிகர் விஜய் சைக்கிலில் வந்ததைத் தங்களுக்கான சாதகமான குறியீடாக டுவிட்டிக் கொண்டிருந்தார்கள் திமுக கூட்டணி ஆதரவாளர்கள். கூடவே விஜய் குறியீடாகச் செய்தார், தல அஜித் நேரடியாவே சொல்லிட்டாருன்னு பலரும் டுவிட்டினார்கள். எல்லாமே படங்கள், எமோஜிகள். அப்படி என்னதான் அஜித் சொன்னாருன்னு எவரும் ரொம்ப நேரத்துக்கு சொல்லவே இல்லை. “ஒரு சைக்கில் ஒரு மாஸ்க், தல தளபதி அதிரடி”னு ஒரு ட்விட் படிச்சுக் குழம்பிட்டேன். ஏனா டீட்டெய்லா எதுவும் என்னோட கவனத்துக்கு வரவே இல்ல. அப்புறமாத்தான் தெரிஞ்சது அது கலர் காம்பினேஷன் சம்பந்தப்பட்டதுன்னு. அஜித்தோடது கருப்பு மாஸ்க், சிவப்பு எலாஸ்டிக். விஜய் சைக்கில் நிறமும் கருப்பு சிவப்புன்னு அடுத்த திருப்பத்துக்கு ஆதரவாளர்கள் நகர, எனக்கிருந்த பதட்டமெல்லாம் பிற்பகல் மூன்றரை மணிக்கு சன் டீவியில சர்க்கார் படம் போட்டுறக்கூடாதுங்கிறதுதான்.

உற்சாகம், உள்ளாசம், கொண்டாட்டம், கும்மாளமுனு திருவிழா ஒரு சாமானியனுக்கு அர்த்தப்படுறதுபோல ஒரு மாற்றுத்திறனாளிக்கு அதிலும் பார்வை மாற்றுத்திறனாளிக்கு அர்த்தப்படுறதில்ல. அது அவர்களுடைய சொந்த வீட்டு விஷேஷமானாலும் அப்படித்தான். சடங்குகள், சம்பிரதாயங்கள் எல்லாமே காட்சி சார் வழிமுறைகளோடும் வர்ணனைகளோடும் தொடர்புகொண்டது. முழுப் பங்கேற்பின்மையும், அந்த நாட்களில் போதாமைகள் தருகிற உளச்சோர்வும் திருவிழாக்களின் மீதான வெறுப்பையே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது.  உண்மையில் எனக்கெல்லாம் தேர்தல்தான் திருவிழா. ஏனெனில், அது கருத்தியல் சார் களம். தாராளமான தகவல்கள் போதும்,விவாதித்துத் திழைக்கலாம். அந்தத் திருவிழாவில் நான் தொலைந்து போவதே இல்லை. மாறாக, அரசாங்கத்தால் அதிகம் தேடப்படுகிறேன். அதற்குச் சான்றுதான், வாக்களித்து நான் வெளியேறுகையில், அந்த வாக்குச் சாவடியின் முதன்மை அலுவலர் (proceeding officer) கைகுலுக்கியபடியே என்னிடம் கேட்ட கேள்வி,

“are you satisfied?”

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com

தொடர்புடைய கட்டுரைகள்

கண்ணியமான பங்கேற்றலை உறுதி செய்தமைக்கு நன்றிகளும் வாழ்த்துகளும்

பகிர

6 thoughts on “ஜனநாயகத் திருவிழா

  1. உங்களின் தேர்தல் அனுபவத்தை விட உங்களின் எழுத்து நடையை ரசிக்கிறேன்

  2. உங்களின் தேர்தல் அனுபவத்தை விட உங்களின் எழுத்து நடையை ரசிக்கிறேன்

  3. உங்களின் தேர்தல் அனுபவத்தை விட உங்களின் எழுத்து நடையை ரசிக்கிறேன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *