Categories
இதழிலிருந்து கல்வி

வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை

மாணவர்களிடமிருந்து எழும் மன உலைச்சல் என்ற வார்த்தை வெறும் படிப்போடு மட்டும் தொடர்புடயது அல்ல. அது அவர்களுக்கும் அவர்களின் வீடு, சுற்றுப்புறம், குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணிகளோடு தொடர்புகொண்டது.

12th time-table
பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகால அட்டவணை

பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகால அட்டவணை வெளியாகிவிட்டது. மே மாதம் மூன்றாம் தேதிக்கு இன்னும் அறுபது நாட்களே எஞ்சியிருக்கின்றன. என்ன செய்யப் போகிறார்கள் பள்ளி திறக்கப்படாமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்கள்? கேள்விக்கு எவரிடமும் விடையில்லை.

பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணை எண் 31ன் படி மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு வரத்தேவையில்லை. பிறகு அவர்கள் எப்படித்தான் படிக்கஇறார்கள்? இணையவழிக் கல்வி அவர்களுக்கு எவ்வாறு வழங்கப்படுகிறது? கேள்விகளோடு சில சிறப்புப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடம் பேசினோம்.

“இணையவழிக் கல்வி என்பது வாட்ஸ் ஆப் வழியாகப் பாடம் நடத்துவது. அல்லது கூட்டழைப்பு (conference call) மூலம் மாணவர்களை அழைத்துப் பாடம் நடத்துவது. ஆனால் இதெல்லாம் பேருக்குத்தான். உதாரணமாக ஒரு வகுப்பில் 15 மாணவர்கள் இருந்தாலும் எல்லா மாணவர்களும் கூட்டழைப்பில் பங்கேற்பதில்லை. சில ஆர்வமுள்ள மாணவர்களே பங்கேற்கிறார்கள்.

சில மாணவர்களிடம்செல்பேசியே கிடையாது. வாட்ஸ் ஆப் பொருத்தவரை பெரும்பாலும் பாடத்திற்கான கேள்வி பதில்கள் ஒலிப்பதிவு செய்து ஆசிரியர்களால் பகிரப்படும். மிகச்சில மாணவர்களே அவற்றைக் கேட்கிறார்கள். அப்போதும்கூட அவற்றை அவர்கள் உள்வாங்குகிறார்களா என்பது சந்தேகமே. காரணம், பாட அறிமுகம் ஏதும் இல்லாமல் வெறும் கேள்வி பதிலாகப் படிப்பது மாணவர்களுக்குப் பெரும் சவாலாக அமைகிறது. பல மாணவர்கள் திறன்பேசிகள் வைத்திருந்தாலும் அவற்றை அவர்கள் ரீசார்ஜ் செய்திருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு வறுமைச் சூழல் பின்னணியைக்கொண்டவர்கள்.” என்கிறார்கள் சிறப்புப் பள்ளியில் பயிலும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்களுக்குக் கற்பிக்கும் சில ஆசிரியர்கள்.

என்ன சொல்கிறார்கள் மாணவர்கள்?

பதிலி எழுத்தர் துணைகொண்டு தேர்வெழுதும் மாணவர்கள்
பதிலி எழுத்தர் துணையுடன் தேர்வெழுதும் பார்வைத்திறன் குறையுடைய மாணவர்கள்

“உண்மைல எங்களுக்கு பயமாவும் பதட்டமாவும் இருக்கு. டைம் டேபில் அறிவிச்ச பிறகு அந்த பயம் இன்னும் அதிகமாகிடுச்சு. வெறும் வாட்ஸ் ஆப் ஆடியோக்களால் எங்களுக்குப் பாடமே புரிவதில்லை. குறிப்பாக, தமிழ், ஆங்கில மனப்பாட பாட்டுகள்,இலக்கணப் பகுதிகள்  சுத்தமாக ஏறுவதில்லை. சில ஆசிரியர்கள் கான்ஃபிரன்ஸ் கால் மூலமா தினமும் வகுப்பெடுக்கிறாங்க. ஆனா அதெல்லாம் மாணவர்களோட இறைச்சலுக்கும் இடைஞ்சலுக்கும் இடையேதான் நடக்குத்உ. சில பையன்களோட குறும்புச் சேட்டைகளை ஆசிரியர்களால கண்டுபிடிக்கவே முடியுறதில்ல. அதனால உண்மையிலேயே படிக்கணுமுனு ஆர்வம் காட்டுற எங்களுக்கு ரொம்பத் தொந்தரவா இருக்கு. உடனடியா ஸ்கூல் திறந்தா மட்டும்தான் நாங்க கொஞ்சமாவது படிச்சுத் தேர்வெழுத முடியும். ஸ்கூல் எப்போ திறக்கும்உனு எங்க தலைமை ஆசிரியர்கள், வகுப்பாசிரியர்கள் என யாருக்குமே தெரியல. ரொம்ப மன உலைச்சலாத்தான் இருக்கு.” என்கிறார் ஓர் அரசு சிறப்புப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் ஒரு பார்வைத்திறன் குறையுடைய மாணவர்.

மாணவர்களிடமிருந்து எழும் மன உலைச்சல் என்ற வார்த்தை வெறும் படிப்போடு மட்டும் தொடர்புடயது அல்ல. அது அவர்களுக்கும் அவர்களின் வீடு, சுற்றுப்புறம், குடும்பத்தின் பொருளாதாரப் பின்னணிகளோடு தொடர்புகொண்டது. பெற்றோர் தினக்கூலிகளாக அன்றாடம் வேலைக்குச் செல்லவேண்டியிருக்கிறது. அதனால், பல மாணவர்கள் பெரும்பாலும் வீட்டில் தனியாகத்தான் இருக்கிறார்கள். சில குறைப்பார்வை மாணவர்கள் குடும்ப வருமானத்தைக் கருதி, கொத்தனார் உள்ளிட்ட வேலைகளுக்கும் சென்றுவருகிறார்கள். தன் வயது ஒத்த அக்கம் பக்கத்துப் பையன்கள் பிள்ளைகளெல்லாம் அன்றாடம் பள்ளிக்குச் சென்றுவருவது அவர்களுக்குள் ஓர் இனம் புரியாத தவிப்பை ஏற்படுத்திவிடுகிறது.

சிறப்புப் பள்ளிகளை நிர்வகிக்கும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையோ அரசின் ஆணை 31ஐ காரணமாகச் சொல்லி தன் கட்டுப்பாட்டில் இருக்கிற பள்ளி விடுதிகளில்  மாணவர் வருகையை அனுமதிக்கவில்லை. எனினும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்குகிற சில அரசு உதவிபெறும் சிறப்புப் பள்ளிகள் மாணவர்களை விடுதிக்கு வரவைத்து பாடங்களை நடத்திவருகின்றனர். அதாவது ஒத்த வகுப்புப் படிக்கும் தன்னைப் போன்ற பார்வைத்திறன் குறையுடைய தனது நண்பர்களும்கூட இப்போது பள்ளிக்குச் சென்று படிக்கிறார்கள் என்பது அரசு சிறப்புப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மேலும் தாழ்வுணர்ச்சியைத் தருவதாக உள்ளது. பள்ளி திறக்கப்படுமா என மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களைக் கேட்கிறார்கள், ஆசிரியர்கள் தங்கள் தலைமை ஆசிரியர்களை, தலைமை ஆசிரியர்கள் தங்களின் உயர் அலுவலர்களை என தொடரும் இந்தக் கேள்விக்கண்ணி பதிலின்றி ஒரு கட்டத்தில் அறுபட்டுவிடுகிறது.

தீர்வுதான் என்ன?

அரசுப் பொதுத்தேர்வை எதிர்நோக்கும் சிறப்புப் பள்ளி மாணவர்களின் விடையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள்ள் துரிதமாகச் செயல்பட்டு இதற்கு தீர்வுகாண வேண்டும். குறைந்தபட்சம் 12ஆம் வகுப்பு மாணவர்களையாவது பள்ளியின் விடுதிகளில் உடனடியாக அனுமதிக்க வேண்டும். 10 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயமாகவே கைவிடப்பட்டு, குறைக்கப்பட்டுள்ள பாடத்திட்டங்களின் அவசியமான கற்க வேண்டிய பகுதிகளை மட்டும் மாணவர்களுக்கு இணைய வழியில் கற்பித்து,அவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் கற்றல் அடைவுகளை  சிறு சிறு மதிப்பீட்டு முறைகளின் மூலம் ஆசிரியர்கள் சோதித்தறிய வேண்டும். அதைவிடுத்து, மாணவர்களை இறுதிவரை பொதுத்தேர்வு குறித்த பயத்தோடும், பதட்டத்தோடும் வைத்திருப்பது, அவர்களின் உளவியலை வெகுவாக பாதிக்கவே செய்உம். எனவே, வேண்டும் அவசியமான அவசரகால நடவடிக்கை.

***

ஆசிரியர்க்குழு

தொடர்புக்கு: mail@savaalmurasu.com

தொடர்புடைய பதிவுகள்:

ஓர் அடிமை ஊழியனின் கோரிக்கை


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

4 replies on “வேண்டும் ஓர் அவசரகால நடவடிக்கை”

பாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்து's avatarபாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்துsays:

அவசரம் அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். பல விசயத்தில் இந்த அலச்சயம் நம் துறையில் பார்க்கலாம்

Like

பாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்து's avatarபாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்துsays:

அவசரம் அதிகாரிகள் புரிந்துகொள்ள வேண்டும். பல விசயத்தில் இந்த அலச்சயம் நம் துறையில் பார்க்கலாம்

Like

Leave a reply to பாஸ்கர் புதுக்கோட்டை யிலிருந்து Cancel reply