
2021 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்தியுள்ளது திராவிட முன்னேற்றக்கழகம். அதன் முக்கிய நடவடிக்கையாக, நேற்று திமுக பொதுச்செயலாள்ளர் திரு. துரைமுருகன் எட்டுபேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினை அறிவித்தார்.
அந்தக் குழுவில், முன்னால் நடுவண் அமைச்சர் திரு. ஆ. ராசா, தற்போதைய மாநிலங்களவை உறுப்பினர்களான திரு. டி.ஆர். பாலு, திருமதி. கனிமொழி, திருச்சி சிவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இவர்களோடு, அந்தியூர் செல்வராஜ், டிகேஎஸ் இளங்கோவன், திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் மற்றும் பேராசிரியர் ராமசாமி ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.
இவர்கள் தங்களுக்குள் ஆலோசனை நடத்தி, பிறகு பல்வேறு தரப்பினரிடமும் கருத்துகளைப் பெற்று திமுகவின் தேர்தல் அறிக்கையினை வடிவமைப்பார்கள் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினை திமுக அமைத்துவிட்ட நிலையில், இன்னும் ஒரு வாரத்திலோ, அல்லது சில நாட்களிலோ ஆளும் கட்சியான அதிமுக தேர்தல் அறிக்கை குழு தொடர்பான தனது அறிவிப்பையும் வெளியிடக்கூடும். அதுபோலவே, பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், கம்னியூஸ்ட் கட்சிகளும் தேர்தல் அறிக்கை தயாரிப்பதில் மும்முரமாகச் செயல்படத் தொடங்கிவிடுவார்கள்.
தேர்தல் அறிக்கை என்பது, பல்வேறு விடயங்களில் தங்கள் கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் கொள்கைகள், தங்களின் எதிர்கால திட்டமிடல்கள் போன்றவற்றை மக்களிடம் எடுத்துச் சொல்லும் சாசனமாகக் கட்சிகள் கருதுகின்றன. ஆளும் மற்றும் ஆளத் துடிக்கும் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை நிறைவேற்று வாக்குறுதிகளாகவே மக்கள் கருதுவார்கள்.
எனவே, இந்த வாய்ப்பினை விளிம்புநிலைச் சமூகங்களில் ஒன்றான மாற்றுத்திறனாளி சமூகம் நன்கு பயன்படுத்திக்கொள்வது அவசியம். கட்சிகளைப்போலவே, நமக்குள்ளும் அமைப்புகள் பல என்றபோதிலும், அரசியல் தீர்வுகளுக்காய் நாம் ஒருங்கிணைவது காலத்தின் தேவையாக உள்ளது.
நமக்குள் பல அமைப்புகள், அந்த அமைப்புகளுக்கும் பல்வேறு கட்சிசார் அல்லது வெகுஜன இயக்கசார் பின்னணிகள் என்றபோதும், அதையெல்லாம் கொஞ்சம் ஓரம் வைத்துவிட்டு, அரசு கூட்டுகிற அனைத்துக் கட்சி கூட்டத்தைப்போல, முதலில் நமது அமைப்புகள் அமர்ந்து பேச வேண்டும். இந்தத் தேர்தலில் கட்சிகளிடம் நாம் திரளாக வலியுறுத்த வேண்டிய முக்கியமான விடயங்களை முடிவு செய்ய வேண்டும். பிறகு, ஒவ்வொரு கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவைச் சந்தித்து, நமது கோரிக்கைகளை அழுத்தமாக முன்வைப்பதன் மூலமாக நமது கோரிக்கைகளில் சிலவற்றையேனும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறச் செய்யலாம். அப்படி இடம்பெறும் கோரிக்கைகள் நிறைவேறும் சாத்தியத்தை அதிகம் கொண்டிருக்கின்றன. எனவே தொடங்குவோம் நமது தேர்தல் பணிகளையும்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
