Categories
corona kalaignar news relief pension

‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு

14 [செப்டம்பர், 2020

கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட சுமார் 249 குடும்பங்களைத் தத்தெடுத்ததோடு, தன்னுடைய சொந்த சேமிப்பு நான்கறை லட்சத்தையும்        அவர்களுக்காகவே செலவிட்டிருக்கிறார் ஹரிகிருஷ்ணன். கடந்த மார்ச் 24 ஆம் தேதி தொடங்கிய கரோனா ஊரடங்கு, நான்கைந்து கட்டங்களைக் கடந்து, இப்போதும் சில தளர்வுகளுடன் நீடித்து வருகிறது. பெரும்பாலும் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள இந்தக் கட்டத்திலும்கூட ரயில் போக்குவரத்து தொடங்கப்படாததால், ரயில் வணிகம் செய்து வாழும் பெரும்பாலான பார்வையற்றோர் குடும்பங்கள் இன்னமும் துன்பத்தில் உழன்றபடிதான் வாழ்கிறார்கள்.
கரோனா நோய்த்தொற்று பீதியால் தொடுதல், கைப்பற்றி நடத்தல் என எல்லாமே எச்சரிக்கைக்குரியவைகளாக மாறிப்போனதால், தங்களுடைய அன்றாட வாழ்வு எப்போது சாமானிய நிலையை அடையுமோ எனவும் ஏக்கத்தோடே காத்திருக்கிறார்கள் பல பார்வை மாற்றுத்திறனாளிகள்.
இந்நிலையில், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட பார்வையற்றோர் குறித்து “பார்வை மாற்றுத்திறனாளிகளின் வாழ்வை புரட்டிப்போட்ட Corona! – இருள் சூழ் உலகு! | COVID 19” என்ற தலைப்பில்  ஒரு செய்தித் தொகுப்பை வெளியிட்டிருக்கிறது கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி. இதில் பங்கேற்றுப் பேசும் பல பார்வையற்றோரின் சொல்லுணாத் துயரம் நம்மைக் கலங்கடிக்கிறது என்றாலும், இறுதியாகப் பேசும் ஹரிகிருஷ்ணன் நம்மை ஒரு கனம் மூர்ச்சையாக்கிவிடுகிறார். நாமேல்லாம் பெரிதாய் என்ன செய்துவிட்டோம் என்று நம்மையே கிள்ளிப் பார்க்கச் செய்துவிடுகிறார்.
 முதல் கட்ட ஊரடங்கு தொடங்கிய காலத்தில், இல்லம் ஒன்றிற்கு உதவிய ஹரிகிருஷ்ணன், வேறு யாரெல்லாம் இந்த ஊரடங்கினால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்று தேடி, இறுதியாகப் பல பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களைக் கண்டடைகிறார். சுமார் 249 பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களை ஊரடங்கு முடியும்வரை தானே பார்த்துக்கொள்ளப்போவதாக முடிவெடுக்கும் திரு. ஹரி, தன்னுடைய திருமணத்திற்காக சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த சுமார் இரண்டறை லட்சத்தைச் செலவு செய்கிறார். இத்தனைக்கும் அவர் ஒரு மிகப்பெரிய செல்வந்தக் குடும்பத்தைச் செர்ந்தவர் அல்லர். மாறாக, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு சாமானியன். மே மாத இறுதிக்குள் தன்னுடைய சேமிப்பு அத்தனையும் கரைந்துவிடவே, செய்வதறியாது திகைத்த ஹரி, தன் மைத்துனரோடு சேர்ந்து தங்களிடமிருந்த நகைகளை அடகு வைத்து, சுமார் இரண்டு லட்சம் திரட்டி இந்தக் குடும்பங்களுக்கு உதவியிருக்கிறார்கள். இப்போது அதுவும் தீர்ந்துவிட்டதாகக் கூறும் ஹரி, “இப்போ நிறையத் தளர்வுகள் கொடுத்திருக்கு அரசாங்கம். அனேகமா வார 18ஆம் தேதியில இருந்து ரயில் ஓடுமுனு நம்பலாம். இந்தச் சூழ்நிலையில பார்வையற்றவர்கள் தங்களோட வியாபாரத்தைத் தொடங்கக்கூட காசில்லாமத் தவிக்கிறாங்க. நம்மகிட்ட அவுங்க சும்மாவெல்லாம் கேட்கல. கடனாத்தான் கேட்கிறாங்க. அதனால, உங்க பக்கத்தில கர்சிஃப், பர்ஃபி விக்கிற பார்வையற்றவர் இருந்தா, அவர் தொழில் தொடங்க கொஞ்சம் கொடுத்துதவுங்க” என்கிறார் இயல்பாக.
ஒரு தனிமனிதர், சொந்தப் பணம் நான்கறை லட்சம், 249 குடும்பங்கள். சத்தமில்லாமல் இப்படி ஒரு பக்கம் என்றால்,
ஆயிரம் கொடுத்ததையே அளப்பரிய சாதனை என்று தனக்குத்தானே விளம்பரம் செய்து பாயிரம் பாடிக்க்ஒண்டிருக்கிற குளசாமிகள் மறுபக்கம்.
நீங்களே சொல்லுங்கள்! குடும்பங்கள் காப்பவர்தானே குளசாமி?


சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “‘இருள்சூழ் உலகு’, கலங்கடித்துவிட்ட கலைஞர் செய்திகள் செய்தித் தொகுப்பு”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.