Categories
ATM சட்டம் banking common voice disabled news rights

வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?

31 ஜூலை, 2020
graphic ரவிக்குமார்
ரவிக்குமார்
இப்போதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ஏடிஎம் வசதி கிடைக்கவில்லை என்ற ஒரு பார்வையற்றவரின் கதறலுக்குத் தீர்வுகிடைத்திருக்கிறது. மீண்டும் இன்னொரு குரல்; இந்தமுறை இந்தியன் வங்கியின் வாடிக்கையாளரிடமிருந்து. பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகள் பணியாற்றி, ஓய்வுபெற்ற ஆசிரியரான திரு. ரவிக்குமார் அவர்கள், உடல் மற்றும் பார்வைக்குறைபாடு எனஇரண்டு வகையான ஊனங்களால் பாதிக்கப்பட்டவர். தான் வங்கிக்குப் பணம் எடுக்க செல்வதற்கே தனக்கு இன்னொருவரின் துணை தேவைப்படும் நிலையில், வங்கியின் அலுவல் பொழுதுகள் தன்னை அழைத்துச் செல்கிற தன் மகன் மற்றும் மகள் போன்ற்ஓரின் அலுவல் பொழுதுகளாகவும் இருப்பதால், தன்னால் நினைத்த நாளில் தன்னுடைய நிதித் தேவைக்காக வங்கி சென்று பணம் எடுக்க இயலவில்லை என்கிறார். அதற்காக அவர் கணக்கு வைத்திருக்கிற பூவிருந்தவல்லி இந்தியன் வங்கிக் கிளையை அணுகி ஏடிஎம் கேட்டிருக்கிறார். அரசு விதிகள் மற்றும் சுற்றறிக்கைகள், ஏற்கனவே ஏடிஎம் பெற்ற தன்னைப்போன்றவர்களின் விவரங்கள் குறித்தெல்லாம் எடுத்துச் சொல்லியும், அவருக்குத் தொடர்ந்து ஏடிஎம் மறுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே தன்னைப் போன்ற பல பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று அவர் சொல்ல, “முன்ன உள்ளவுங்க தப்பு செஞ்சா அதை நாங்களும் செய்யனுமா?” என்று கேட்டிருக்கிறார் பூவிருந்தவல்லி இந்தியன் வங்கியின் மேலாளர்.
graphic இந்தியன் வங்கி லோகோ
பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் வழங்குவதே தவறு என்று உங்களுக்குச் சொன்னது யார்? ஒரு உடல்க்குறைபாடுடைய அதிலும் குறிப்பாகப் பார்வைக்குறைபாடுடையவர்களுக்கு நீங்கள் செய்கிற மறுப்பின் வழியே, ஏடிஎம் வசதியின் முழுப் பலனையும் பார்வையற்றவர்களாகிய நாங்கள் அனுபவிக்கத் தகுதியற்றவர்கள் என்று சொல்லவருகிறீர்களா? “ஏடிஎம்மில் பணம் எடுப்பதில் உங்களுக்கு ஆபத்துகள் நேரிடும், அதனால் நீங்கள் பொருளாதார இழப்பைச் சந்திக்க வேண்டிவரும்” என்பதுதான் உங்களின் அக்கறையான பதில் என்றால், உங்களிடம் எடிஎம் வசதி பெற்று பயன்படுத்திவருகிற பிற பார்வையுள்ள வாடிக்கையாளர்களுக்கு இந்த ஆபத்துகளெல்லாம் ஏற்பட வாய்ப்புகளே இல்லையா? எங்களின் பொருளாதார நலனில் தாங்கள் அக்கறைகொண்டிருப்பதுபோல பெரும்பாலும் உங்களின் பதில்கள் இருப்பதால்  கேட்கிறேன், எங்களுக்கு நாங்கள் விரும்பும் நேரத்தில், ஒரு ஃபோன் செய்த மாத்திரத்தில், எங்களின் வீடு தேடி வந்து நாங்கள் கேட்ட தொகையைத் தந்துவிட்டுப் போகிற உன்னதத் திட்டம் ஏதேனும் உங்கள் வங்கி சார்பில் செயல்படுத்திவருகிறீர்களா?
உங்களை நிர்வகிக்கிற ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியாவின் சுற்றறிக்கைகள் உங்களுக்கு வழங்கப்படவில்லையா? அல்லது அதையெல்லாம் பின்பற்றத் தேவையில்லை எனத் திரைமறைவில் ஏதேனும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளனவா? உங்களிடம் ஏடிஎம் கேட்டு மன்றாடிக்கொண்டிருப்பவர், முப்பது ஆண்டுகள் ஆங்கிலப் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி, பல முன்மாதிரிப் பார்வையற்ற மாணவர்களை உருவாக்கியவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? கைரேகை இடுகிறார் என்பதாலேயே ஒரு பார்வையற்றவருக்கு எதுவும் தெரியாது என்று முடிவுக்கு வந்துவிடுவீர்களா?
கணக்கு ஆரம்பித்த கையோடு, உங்களின் வங்கிக் கட்டடத்திற்கே வராமல், இருந்த இடத்திலிருந்து எங்களால் எங்களின் கணக்கை நிர்வகிக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிற இந்த நவீன காலத்திலும், உங்களிடம் ஏடிஎம் கேட்டு கெஞ்சிக்கொண்டே இருப்பது குறித்து, உங்களுக்கு வேண்டுமானால் உறுத்தல் இல்லாமல் இருக்கலாம். பார்வையற்றோராகிய எங்களுக்கு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.
தொடர்புடைய அந்த ஆசிரியர் எங்கள் மூத்தவர். நடக்க இயலாத முழுப்பார்வையற்ற அவரை, இந்த கரோனா ஊரடங்கு காலத்திலும் உங்கள் வங்கிக்கு வந்துதான் அவர் பணம் எடுக்க வேண்டும் என்று நீங்கள் நிர்பந்திப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஒன்றும் எங்களுக்கென ஏதேனும் சிறப்பு வசதிகளை ஏற்படுத்திக்கொடுங்கள் என்று கேட்கவில்லை. எல்லோரையும் போலவே, வங்கிகள் வழங்கும் அனைத்து வசதிகளையும் பயன்படுத்த எங்களுக்கு உரிமை இருக்கிறது என்பதைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ஊனத்தின் பெயரால் அதனை மறுப்பது, ஊனமுற்றோருக்கான உரிமைகள் சட்டம் 2016ன்படி குற்றமாகும். எனவே, உரியவர்கள் தலையிட்டு, இந்த பிரச்சனை இவருக்கு மட்டுமல்ல, இனி எந்த ஒரு பார்வையற்றவருக்கும், எந்த ஒரு வங்கியாலும் ஏடிஎம் மறுக்கப்படாத நிலையை உறுதி செய்யுங்கள்.
பொது மக்களே! மனிதநேய ஆர்வலர்களே! அனைத்து அரசு, அரசு சாரா நிறுவன உயர் அதிகாரிகளே! நாங்கள் கருணைத் தளத்திலிருந்து உரிமைத் தளத்திற்கு நகர விரும்புகிறோம். எங்களை இன்னும் கற்காலத்திலேயே வைத்திருக்க விரும்புவது நியாயம்தானா சொல்லுங்கள்.
ப. சரவணமணிகண்டன்
தொடர்புகொள்ள: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

4 replies on “வங்கி மேலாளர்களே! உங்களுக்கு என்னதான் பிரச்சனை?”

கலைச்செல்வி மேடம் போன்று பல்வேறு திறமையானவர்கள் இருக்கும் போது ரவிக்குமார் சார் பிரச்சினையை தீர்ப்பதற்கு பலர் உதவக் கரம் நீட்ட தயாராக இருக்கின்றனர்.

Like

அனைவருக்கும் வணக்கம் நான் ஒரு பார்வையற்றவன் சென்னை பூவிருந்தவல்லி அரசு பார்வையற்றோர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு முடித்து இருக்கிறேன் ரவிக்குமார் ஐயாவிற்கு நடந்த மாதிரிதான் எனக்கும் எனது மாவட்டம் சேலம் மேச்சேரி இந்தியன் வங்கி ஏடிஎம் கேட்டு இருந்தேன் ஆனால் எனக்கு ஏடிஎம் கொடுக்க மறுத்துவிட்டார்கள் நான் இந்தியன் வங்கியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்டபோது பார்வையற்றவர்களுக்கு ஏடிஎம் வழங்கலாம் உங்களுக்கு வழங்காதது ஏன் அப்படி என்று கேட்டார் சொல்லியும் கூட எனக்கு ஏடிஎம் வழங்கவில்லை தயவுசெய்து எனக்கு நீங்கள் செய்வது ஒரு உதவியாக இருக்கும் எனக்கு ஏடிஎம் வாங்கிக் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி

Like

Leave a reply to சவால்முரசு Cancel reply