செய்தி உலா

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
30 ஜூன், 2020

graphic shekar nayak
ஷேகர் நாயக்
இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணியின் முன்னால் கேப்டன் ஷேகர் நாயக்கிற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உதவ முன்வந்துள்ளது. கர்நாடகாவைச் சேர்ந்த ஷேகர் நாயக் இந்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ வென்றவர். ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் கரோனா ஊரடங்கால் தன் வேலயை இழக்க நேர்ந்தது. இந்நிலையில், தனது மனைவியின் நகைகளை வங்கியில் ஒரு லட்சம் ரூபாய்க்கு அடமானம் வைத்த்இருக்கிறார். ஷேகர் நாயக்கின் கஷ்டத்தை அறிந்த இந்திய கிரிக்கெட் சங்கம், அவருக்கு உதவ முன்வந்திருக்கிறது. அத்தோடு, 57 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்களுக்கும் உதவவிருப்பதாக சங்கத்தின் தலைவர் அஷோக் மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.
‘காலத்தினாற் செய்த நன்றி’
graphic கௌஷிக் ஆச்சாரியா
கௌஷிக் ஆச்சாரியா
கர்நாடக மாநிலத்தில் தற்போது பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு நடைபெற்றுவருகிறது.  தேர்வினை எதிர்கொண்ட கௌஷிக் ஆச்சாரியா என்ற கைகள் இழந்த மாற்றுத்திறனாளி மாணவன், கால் விரல்களைக்கொண்டு தேர்வினை எழுதியுள்ளான். மாணவனின் இந்த முயற்சியைப் புகைப்படத்துடன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள கர்நாடகக் கல்வியமைச்சர் சுரேஷ்குமார், மாணவனை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தற்போது மாணவன் கௌஷிக்தான் கர்நாடகாவின் வைரல் டாப்பிக்.
‘தலைவிதி, அதைக் காலால் மிதி’
graphic ஒலிப்புத்தகம் கேட்கும் பார்வையற்ற மாணவன்
கண்தானம், உடல்தானம் போல, கேரளாவில் பள்ளிக்குழந்தைகளிடம் குரல்தானம் என்ற பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கேரள ஃபெடரேஷன் ஆஃப் தி ப்லைண்ட் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் இணைந்து, ஒரு மாவட்டத்திற்கு ஐந்து பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து, பார்வையற்ற மாணவர்களுக்கான பாடப்புத்தகங்களை ஒலிவடிவில் கொண்டுவர முயன்றுவருகின்றன. இதற்காக ‘குரல்தானம் மகாதானம்’ என்ற முழக்கத்தின் வாயிலாகப் பள்ளிக்குழந்தைகளிடம் விழிப்புணர்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, பார்வையற்ற மாணவர்கள் உடன் பயிலும் தங்கள் நண்பர்களின் குரலிலேயே பாடங்களைக் கேட்டு மகிழ்வார்கள்.
‘குரல்கொடுப்பான் தோழன்’
graphic போராட்டம்
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் டாராடாக் தனது மாவட்ட நிர்வாகிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அந்தச் சுற்றறிக்கையில், “ஊரடங்கு காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிகள் குடும்்பங்களுக்கு மாதம் ஒன்றிற்கு ரூ. 5000 வழங்க வேண்டும், நூறுநாள் வேலைத்திட்டத்தில் நான்கு மணிநேர பணியுடன் கூடிய ஊதியத்தை மாற்றுத்திறனாளிகளுக்கு மறுக்காமல் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்” போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, எதிர்வரும் ஜூலை 7ஆம் தேதிமுதல் காலவரையற்ற போராட்டத்திற்குத் தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
‘வாழ்க்கையே போர்க்களம்’
graphic சர்க்கர நாற்காலி டென்னிஸ் வீரர்கள்
இந்த ஆண்டு நடைபெறவிருக்கும் யூஎஸ் ஓப்பன் டென்னிஸ் போட்டிகளில் சக்கர நாற்காலி வீரர்களுக்கான பந்தயம் இடம்பெறாது என்கிற தனது முடிவிலிருந்து அஸ்டா (usta) எனப்படும் யூஎஸ் டென்னிஸ் சங்கம் பின்வாங்கியிருக்கிறது. பல முன்னணி வீரர்களின் தொடர் வலியுறுத்தல்களைக் கவனத்துடன் பரிசீளித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் தெரிவித்துள்ளது. எனவே,எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9ஆம் தேதிமுதல் 13ஆம் தேதிவரை நியூயார்க்கில் சக்கர நாற்காலி டென்னிஸ் வீரர்களுக்கிடையே போட்டி நடைபெறுவது உறுதியாகியுள்ளது.
‘உரிமைச் சக்கரம்’

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *