நிகழ்வு: பெருமிதங்களோடு தொடர்கிறது பேரவையின் பயணம்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
graphic zoom
12 மே 2020 அன்று, மாலை 3.30 மணிக்கு பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் இரண்டாவது இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது.
சமூகப் பொருளாதாரப் பண்பாட்டுத் தளங்களில் பெண்கள் என்ற தலைப்பின்கீழ் நெறியாளர் சகிதம் நான்கு பெண்கள் எழுபது பங்கேற்பாளர்களோடு மேற்கொண்ட இணக்கமான உரையாடலில், இதுவரை சிந்திக்காத புதிய கோணங்களும், பல எளிய புரிதல்களும் இதயத்தைக் கிளறின.
graphic வெண்ணிலா
வெண்ணிலா

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் படிப்பை மேற்கொண்டுவரும் வெண்ணிலா அவர்கள், கல்வி மற்றும் வேலைவாய்ப்புத் தளங்களில் பார்வையற்ற பெண்களின் நிலைகுறித்துப் பேசினார். பார்வையற்ற பெண்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தும் அவை பெற்றோரால் மறுக்கப்படுவதே கள எதார்த்தம் என்பதைச் சுட்டியதோடு, தான் நெல்லை மாவட்டத்தின் ஓர் எளிய பின்னணிகொண்ட குடும்்பத்திலிருந்து ஒற்றைப் பெண்ணாகப் புறப்பட்டு,  டெல்லி சென்ற துணிச்சல் பற்றி சிலாகித்தார்.

விடுதி வாழ்வின் தாக்கங்கள்:
graphic கிருஷ்ணவேனி
கிருஷ்ணவேனி

தன்னம்பிக்கை பொதிந்ததேயானாலும், பாடலோடு தொடங்கியதால், எங்கே தமிழாசிரியர் உரையாடும் கருத்தரங்கை ஒருவழிப் பேச்சுமேடையாக மாற்றிவிடுவாரோ என்ற பதட்டம் பங்கேற்பாளர்களைப் பற்றிக்கொள்ள, ஆசிரியர் கிருஷ்ணவேனியின் பேச்சிலோ, அத்தனை நிதானம், அழகுநிறை இயல்பு. குடும்பம், குழந்தை வளர்ப்பு மற்றும் பண்பாட்டுத் தளங்களில் பார்வையற்ற பெண்களின் நிலை குறித்து  தான் சொல்ல வந்த கருத்துகள் அத்தனைக்கும் சான்றுகள் தந்து நிறுவியபோது, தங்கள் குடும்பத்தின் சக மனுஷியே அரங்கில் பேசுவதாகப்பட்டது பார்வையாளர்களுக்கு.

பார்வையற்ற பெண்கள் தங்கள் கல்வியால், பொருளாதாரத்தில் எத்தனை உயரங்களைத் தொட்டாலும், இன்னமும் அவர்கள் பெற்றோரால், உடன்பிறந்தோரால் கட்டுப்படுத்தப்படுவதை தனக்கே உரிய நடையில் சான்றுகளோடு பகிர்ந்தார் கிருஷ்ணவேனி. கல்வி நிமித்தமாக விடுதிகளிலேயே தங்கிவிடுவதால், வீடு மற்றும் குடும்ப நடைமுறைகள், சடங்கு சம்பிரதாயங்கள் போன்றவை குறித்த தெளிவு அவர்களிடம் குறைந்தே காணப்படுவதையும் சுட்டிக்காட்டினார். மேலும், குடும்பம் சார்ந்த மரபார்ந்த எளிய வழக்கங்களில் முழுப்பார்வையற்ற பெண்கள் இடர்படுவதைத் தனது அனுபவத்தின் வாயிலாகவே விளக்கியதில் நெஞ்சம் நெகிழ்ந்துபோனது.
ஒத்துழைப்பு நல்குவதில் பார்வையற்ற ஆண்கள் பலே, பலே:
graphic சித்ரா உபகாரம்
சித்ரா உபகாரம்

பிறப்பால் தான் ஒரு பார்வைக்குறைபாடுடையவள் என்றாலும், அதனை உணர்வதற்குத் தனக்கு இருபது ஆண்டுகள் பிடித்ததையும், சாதாரணப் பள்ளியில் ஒரு சாதாரண மாணவியாக ஆயுள் காப்பீடு படிப்பை முடித்து, அந்தத் துறையில் பணி மறுக்கப்பட்டபோதுதான், தனது பார்வைக்குறைபாடு பிரச்சனையின் ஆழத்தை உணர்ந்ததாகத் தன் வரலாறு சொல்லியபடியே,  சமூகப்பணியில் பார்வையற்ற பெண்களின் பங்கு குறித்துப் பேசத் தொடங்கினார் ஹெலன்கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் தலைவர் சித்ரா உபகாரம்.

ஆசிரியர்ப்பணி கிடைத்த பிறகே தான் பார்வையற்றோர் தொடர்பான சமூகப்பணிகளில் அதிகம் ஈடுபடத் தொடங்கியதாகவும், தனது பணிகளில் ஆக்கபூர்வமான, அனுசரனையான ஒத்துழைப்பை பார்வையற்ற ஆண்கள் வழங்குவதாகவும் தனக்கே உரித்தான பாந்தமும் சாந்தமும் நிறைந்த குரலில் சொல்லிச் சிலிர்த்தார் சித்ரா.
பார்வையற்ற பெண்கள் பாலியல் சீண்டலை எதிர்கொள்ள நேர்கையில், அதைத் தவிர்த்துவிடவோ, கடந்துவிடவோ முயற்சிக்காமல், அதனை நேரடியாக எதிர்த்து நிற்றல் அவசியம் என்பதை வலியுறுத்திப் பேசினார். அவதூறுகளுக்கும் விமர்சனங்களுக்கும் இடையேயான வேறுபாட்டைக் கண்டறிதல், தனது சமூக நோக்கத்தைத் தெளிவாக வரையறுத்துக்கொள்வதோடு, அதனைத் தன்னைச் சார்ந்த பெற்றோர், கணவன் என அனைவருக்கும் உணர்த்துவதும் சமூகப்பணியாற்ற விரும்பும் பெண்கள் செய்ய வேண்டிய முதன்மையான வேலை என அவரின் சுட்டல்கள் அனைத்துமே சமூகப்பணியில் ஈடுபடும் பெண்களுக்கான சுருக்கமான வழிகாட்டு நெறிமுறைகளாக அமைந்தன.
எமோஷ்னல் அப்யூசிவ் என்கிற புதிய புரிதல்:
graphic முத்துச்செல்வி
முத்துச்செல்வி

 கருத்தரங்கை நெறிப்படுத்தி, இடையிடையே சட்டம் மற்றும் சமூகம் சார்ந்து ஒரு பார்வையற்ற பெண்ணாகத் தனது கருத்துகளை அவ்வப்போது வழங்கி, உரையாடல் தடம் மாறாமல் பார்த்துக்கொண்டார் அலகாபாத் வங்கி கிளை மேலாளரும், அகில இந்திய பார்வையற்றோர் சம்மேளனத்தின் துணைத்தலைவருமான முத்துச்செல்வி அவர்கள். தொடக்கம் முதல் இறுதிவரை, இவரின் தொய்வடையாக் குரல்தொனிக்கு தோற்று நேர்நின்றன நெட்வொர்க் துண்டிப்புகள். பார்வையற்ற பெண்கள்தான் என்றில்லை, திருமணம் தொடர்பான பார்வையற்ற ஆண்களின் புரிதல்களும் மேம்பட்டதாக இல்லை என அவர் சொன்னபோது, எங்களிடமும் தற்காப்புக் கருத்தாயுதங்கள் தயார்நிலையில் இருக்கின்றன என அவர் சொல்லாமல் சொன்னதுபோலவே இருந்தது.

உடல்ரீதியான துன்புறுத்தல்கள் உலக அளவில் பெண்களுக்கான பிரச்சனை என்றால், இந்தியப் பெண்கள் அதிலும் குறிப்பாகப் பார்வையற்ற பெண்கள் மன ரீதீயிலான துன்புறுத்தல்களுக்கு (emotional abusive) ஆளாகின்றனர். சோகம் என்னவெனில், இப்படித் தாங்கள் மனரீதியாகத் துன்புறுத்தப்படுவது குறித்தான தெளிவு, படித்து நல்ல நிலையில் உள்ள பார்வையற்ற பெண்களிடம்கூட காணப்படவில்லை என்று அவர் கூறிய கருத்து, பார்வையற்ற சமூகத்தின் ஆழ்ந்த பரிசீலனைக்கு உட்பட்டது.
சுமார் 70க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், டெல்லி உள்ளிட்ட நாட்டின் வடபகுதி, அமெரிக்கா, இலங்கை என இலக்கின் எல்லைகள் விரிந்ததை வெற்றிகரமான முதல்கூட்டத்தின் நல்ல பின்விளைவுகள் எனக்கருதலாம். வழக்கம் போலல்லாமல், முறையாகக் கையாளப்பட்ட தொழில்நுட்பம், அதிகம் குறுக்கீடற்ற கேள்வி நேரம் மற்றும் வெறும் நன்றி நவிலலாக அல்லாமல், தொகுப்புரையாக திரு. மகேந்திரன் அவர்கள் நிகழ்த்திய நன்றி உரை ஆகியவை இந்தமுறை இடம்பெற்ற சிறப்பம்சங்கள்.
தெளிவாக வரையறுக்கப்படும் பேசுபொருட்கள், அதற்கெனத் தெரிந்து அமர்த்தப்படும் கருத்தாளர்கள் , கருத்தரங்கை இடையூறின்றி நடத்திச் செல்லும்  தொழில்நுட்பத் தோழர்கள் போன்ற பெருமிதங்களோடு தொடர்கிறது பேரவையின் பயணம்.
வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *