உன்னைப்போல் ஒருவனின் உயர்வான பணி, விகடன் செய்திகளால் குவிகிறது பாராட்டு

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
குழு உறுப்பினர்
நன்றி விகடன்.com: ஓட்டெடுப்பு முதல் உளவியல் ஆலோசனை வரை… விழிச்சவால் கொண்டவர்களுக்காக இயங்கும் டெலிகிராம் குரூப்!
“குழுவிலுள்ள பலரும் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தார்கள். குழுவில் இல்லாத ஒருசிலரும் உதவினார்கள். மொத்தம் 77,000 ரூபாய் கிடைத்தது. சிறியதுதான் என்றாலும், எங்களின் நிலைக்கு இந்தத் தொகை பெரியது”
விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்காக மட்டுமே இயங்கிவருகின்றன இரண்டு வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்கள். இவற்றில் அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிகளில் இருப்போர் முதல் சாமானியர்கள் வரை பலரும் உறுப்பினர்கள். பார்வையற்றவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்துக்காகவும் இந்த இரண்டு குழுக்களும் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றன. இந்தக் குழுவின் சமீபத்திய பாராட்டுக்குரிய முன்னெடுப்பு, நலிந்த நிலையிலுள்ள பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் 77 பேருக்குத் தலா ஆயிரம் ரூபாய் நிதியுதவி செய்தது.
குழு உறுப்பினர்கள்
இந்தக் குழுக்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன. அதுகுறித்துப் பேசுகிறார், வாட்ஸ்அப் குழுவின் முக்கிய நிர்வாகியும், அரசுப் பள்ளி ஆசிரியருமான நாகராஜ்.
“விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் எல்லோரையும் ஒருங்கிணைக்கும் நோக்கத்தில் 2015-ம் ஆண்டு எங்களுக்கான வாட்ஸ்அப் குழுவைத் தொடங்கினோம். குழுவுக்கு `உன்னைப்போல் ஒருவன்’ எனப் பெயரிட்டோம். முதலில் 60 பேர் இருந்தார்கள். பிறகு, நூற்றுக்கணக்கான புதிய உறுப்பினர்கள் குழுவில் இணைந்தார்கள். 256 பேருக்கு மேல் வாட்ஸ்அப் குழுவில் புதிய நபர்களைச் சேர்க்க முடியாது. எனவே, கடந்த ஆண்டு டெலிகிராமில் புதிய குழுவைத் தொடங்கினோம்.டெலிகிராம் குழுவில் இரண்டு லட்சம் பேர் வரை இணையலாம். எங்களுடைய டெலிகிராம் குழுவில் 386 பேரும், வாட்ஸ்அப் குழுவில் 163 பேரும் இருக்கிறார்கள்.
நாகராஜ்
படித்தவர்கள், படிக்காதவர்கள் உட்பட விருப்பமுடைய விழிச்சவால் கொண்ட மாற்றுத்திறனாளிகள் எவர் வேண்டுமானாலும் எங்கள் குழுவில் இணையலாம். சாதாரண தகவல், போட்டோக்களையெல்லாம் வாட்ஸ்அப் குழுவில் பதிவிடுவோம். அவற்றுடன், கூடுதலாக ஓட்டெடுப்பு, கருத்து கேட்பு, விவாதம், விநாடி வினா போட்டிகள் உள்ளிட்ட கூடுதலான பயன்பாடுகளுக்கு டெலிகிராம் உதவுகிறது. பத்து அட்மின்களுடன், இரண்டு குழுக்களையும் பயனுள்ளதாகப் பயன்படுத்திவருகிறோம்.
வாட்ஸ்அப்பில் நீளமான பதிவு ஒன்றில் பல வரிகளைக் கடந்ததும் `ரீட் மோர்’ என்ற ஆப்ஷன் வரும். அது எங்களுக்கு ஒலித்தாலும், அந்த ஆப்ஷன் செல்போனில் எந்த இடத்தில் இருக்கிறது என்பதைக் கைவைத்து க்ளிக் செய்வதில் சற்று சிரமம் இருக்கும். ஆனால், எவ்வளவு நீண்ட பதிவாக இருந்தாலும் டெலிகிராமில் தொடச்சியாக காட்டுவதால் படிப்பதற்குச் சற்று எளிமையாக இருக்கிறது” என்பவர் சற்று இடைவெளி விடுகிறார்.
இதற்குத் தொடர்புடைய செய்திகள்
 விகடன் செய்திகளில் எமது சங்கம்: குவியும் பாராட்டுகளில் நெகிழ்கிறது மனம்
கூடுகையில் தூவப்பட்டது கூட்டமைப்பிற்கான விதை, ஐம்பது பங்கேற்பாளர்களை ஒருங்கிணைத்து அசத்தியது பார்வையற்ற முற்போக்கு சிந்தனையாளர் பேரவை
விழிச்சவால் கொண்டவர்களின் தனித்திறனை வெளிப்படுத்தவும், கருத்துப் பரிமாற்றத்துக்காகவும் இந்த இரண்டு குழுக்களும் ஆக்கபூர்வமாக இயங்கிவருகின்றன. இதில், அரசு மற்றும் தனியார் துறைகளில் கெளரவமான பணிகளில் இருப்போர் முதல் சாமானியர்கள் வரை பலரும் உறுப்பினர்கள்.
இந்த இரண்டு குழுவிலும் பல்துறை சார்ந்த பார்வையற்றவர்களும் இடம்பெற்றுள்ளனர். உளவியல் ஆலோசனை, தன்னம்பிக்கை அளிப்பது எனத் துறை சார்ந்த வல்லுநர்களும் குழுவிலுள்ள மற்ற உறுப்பினர்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் அளிக்கின்றனர்.
கொரோனாவால் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்ட பார்வையற்றவர்களுக்குத் தங்களின் இரண்டு குழுக்களின் மூலம் உதவியது குறித்துப் பேசுபவர், “2015-ம் ஆண்டு சென்னையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது எங்கள் சங்கத்தினர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு எங்கள் வாட்ஸ்அப் குழுவின் மூலம் பணம் திரட்டி உதவினோம். இதுபோன்ற பணிகள் தொடர்ந்து நடைபெறும். தவிர, விழிச்சவால் கொண்டவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து எங்கள் குழுவில் அதிகம் விவாதிப்போம்.
 கொரோனா ஊரடங்கால் தமிழகத்திலுள்ள பார்வையற்றவர்கள் பலரும் வேலையின்றி தவிக்கின்றனர். அதுகுறித்தத் தகவல் கிடைத்தது. குழுவிலுள்ள பலரும் தங்களால் இயன்ற பண உதவியைச் செய்தார்கள். குழுவில் இல்லாத ஒருசிலரும் உதவினார்கள். மொத்தம் 77,000 ரூபாய் கிடைத்தது. சிறியதுதான் என்றாலும், எங்களின் நிலைக்கு இந்தத் தொகை பெரியது. உணவு, மருத்துவத் தேவைகள் உட்பட அத்தியாவசியத் தேவைகளுக்குச் சிரமப்படும் 77 விழிச்சவால் கொண்டவர்களுக்குத் தலா ஆயிரம் ரூபாயை ஆன்லைனில் அனுப்பிவைத்தோம். அது அவர்களுக்கு உதவியாக அமைந்திருக்கிறது” என்பவர், பார்வையற்றவர்களாக இருப்பினும் தங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களைப் பயன்படுத்தும் விதம் குறித்துப் பேசினார்.
“செல்போன் செட்டிங்ஸில் இருக்கும் screen reader – android accessability என்ற பயன்பாட்டின் மூலம், செல்போனை இயக்கினாலே எல்லாப் பயன்பாடுகளும் ஆடியோ வடிவில் ஒலிக்கச் செய்யலாம். தகவல்கள் தமிழில் ஒலிக்க ‘eSpeak NG’ என்ற ஆப் எங்களுக்குப் பெரிதும் உதவுகிறது. இதன்மூலம் வாட்ஸ்அப் உட்பட செல்போனின் அனைத்துப் பயன்பாடுகளையும் தன்னிச்சையாகவே பயன்படுத்த முடிகிறது. வாட்ஸ்அப்பில் போட்டோ வந்திருந்தால், `ஒன் ஜென் போட்டோ’, ‘ஒன் லேடி போட்டோ’ என்று மட்டும்தான் ஒலிக்கும். அந்த போட்டோவில் என்ன உருவம் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள முடியாது. இது எங்களுக்குப் பெரிய சவால்தான்.
 வாட்ஸ்அப்பில் வந்திருக்கும் போட்டோவை, `Kibo’ மற்றும் `Envision AI’ ஆகிய ஆப்கள் மூலமாக செக் செய்து பார்ப்போம். ஒருவேளை அது மீம்ஸாக இருப்பின், அதிலுள்ள வாசகம் மட்டும் ஒலிக்கும். இதே ஆப்களைப் பயன்படுத்தி பி.டி.எஃப் டாக்குமென்டுகளையும் படிப்போம். வங்கிப் பயன்பாடுகள் உட்பட பல்வேறு தேவைகளையும் செல்போனிலேயே தன்னிச்சையாகவே மேற்கொள்வோம்” என்கிறார்.
ஊரடங்கில் மாற்றுத்திறனாளிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து ஆதங்கத்துடன் பேசுபவர், “அன்றாட வாழ்க்கையே எங்களுக்குச் சிரமம்தான். அதைவிட இந்த கொரோனா பாதிப்பால் இயல்பு வாழ்க்கை முடங்கி, வாழ்வாதாரத்துக்கு மாற்றுத்திறனாளிகள் பலரும் இன்னல்களை அதிகளவில் எதிர்கொள்கின்றனர். இந்தச் சூழலில் மாற்றுத்திறனாளிகள் அவசியத் தேவைக்கு தொடர்புகொள்ள அரசு உதவி மைய எண்ணை அறிவித்திருக்கிறது.
 ஆனால், அந்த எண்ணுக்குத் தொடர்புகொண்டால் தமிழ்நாட்டில் தவிக்கும் வெளிமாநில மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும்தான் உதவுகின்றனர். தவிர, இந்தச் சூழலில் மாற்றுத்திறனாளிகளுக்குச் சிறப்பு உதவிகள் எதுவும் அரசினால் செய்யப்படவில்லை. அதனால்தான் எங்களுக்குள் பணம் திரட்டி, சிரமத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகிறோம்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்
சவால்முரசு: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்
பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *