தன்னம்பிக்கை: இரு கைகளை இழந்த பிறகும் இந்தி ஆசிரியராக உயர்ந்தவர்

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது

நன்றி இந்து தமிழ்த்திசை:

க.ரமேஷ்

graphic ஜீவா
படக்காப்புரிமை இந்து தமிழ்த்திசை

கையில் பொருத்தப்பட்ட மாற்றுத் திறன் உபகரண உதவியுடன் இந்தி பாடம் நடத்தும் ஜீவா.
 graphic ஜீவா

கடலூர்

விபத்து ஒன்றில் 2 கைகளை இழந்தாலும் விடாமுயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் பெண் ஒருவர் இந்தி மொழி ஆசிரியராகி, கல்லூரி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறார்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி போலீஸ் லைன் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் (62). கட்டிடத் தொழிலாளி. இவருக்கு 4 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இதில் மூத்த மகள் ஜீவா (38).
இவர், செவிலியர் பட்டயப் படிப்பு முடித்துவிட்டு, கடந்த 2005-ம் ஆண்டு விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார்.
ஒரு நாள், அவர் இரவுப் பணியில் ஈடுபட்டு இருந்தபோது, மின் தடை ஏற்பட்டதால் ஜெனரேட்டரை இயக்கியுள்ளார். இதில் ஏற்பட்ட விபத்தில் அவரது 2 கைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டன. 3 மாதங்கள் தொடர் சிகிச்சையில் இருந்த ஜீவா, 2 கைகளையும் இழந்த நிலையில் வீடு திரும்பினார்.
பெரிய அளவு வசதி இல்லாவிட்டாலும் எளிய குடும்பமாக அமைதியான முறையில் வாழ்ந்து வந்த செல்வராஜின் குடும்பத்துக்கு அது பேரிடியாக இருந்தது. தொடக்கத்தில் சோர்ந்திருந்தாலும் நாளடைவில் தைரியத்தையும் தன்னம்பிக்கையையும் வளர்த்துக் கொண்ட ஜீவா, தன் வீட்டின் அருகில் உள்ள இந்தி பிரச்சார சபாவில் சேர்ந்து பயின்றிருக்கிறார். அதில் அவருக்கு ஆர்வம் வர, இந்தி மொழிப் பாடத்தில் இளங்கலை (பி.ஏ) வரை பயின்றுள்ளார்.
தொடர்ந்து இந்தி மொழி சார்ந்த அறிவை வளர்த்துக்கொண்டு வரும் ஜீவா, தற்போது கடலூர் நகர்ப் பகுதியில் முக்கியமான ஓர் இந்தி ஆசிரியராக உருவெடுத்துள்ளார். அப்பகுதி மாணவர்களுக்கு இந்தி பயிற்றுவித்து வருகிறார். ஜீவாவின் 2 தங்கைகள், தம்பிக்கு திருமணம் ஆகிவிட்டன. தனது தாய், தந்தையுடன் மற்றும் ஒரு தங்கையுடன் வசித்து வருகிறார்
இதுபற்றி ஜீவாவிடம் கேட்டபோது, “எனது தந்தை சிறுசிறு கட்டிட வேலைகளுக்குச் சென்றுதான் எங்களை படிக்க வைத்தார். வசதி இல்லாவிட்டாலும் நானும் ஒரு சிறிய வேலையில் இருந்தேன். என் வாழ்க்கை மகிழ்ச்சியாகவே போய்க்கொண்டிருந்தது. அப்போது ஏற்பட்ட விபத்தில் எனது 2 கைகளையும் இழந்தேன். ஆனால் நான் நம்பிக்கையை இழக்கவில்லை.
மன தைரியத்துடன் இந்தி பயின்றேன். பாதிக்கப்பட்ட கையில் எழுதிப் பயின்றேன். அது சிரமமாக இருந்ததால், காலால் எழுதத் தொடங்கினேன். யார் உதவியும் இல்லாமல் பி.ஏ. தேர்வு எழுதி வெற்றி பெற்றேன்.
இதைத் தொடர்ந்து கடலூர் கூத்தப்பாக்கத்தில் இலவச டியூஷன் வகுப்புகள் நடத்திவரும் செல்வி மேடத்தின் தொடர்பு கிடைத்தது, அவரின் உதவியால் இப்பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இந்தி வகுப்புகள் எடுக்கிறேன். எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் இருந்தால் எதையும் சாதிக்கலாம்என்றார். ஜீவா, அடுத்தகட்டமாக இந்தியில் முதுகலை (எம்.ஏ) தேர்வுக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

 

வெற்றித்தடாகம்: நமக்கான ஊடகம், – நமக்கு நாமே ஊடகம்

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *