வழிகாட்டல் பயிலரங்கு: – ஆணையர் அனுமதி

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கம் லோகோ

பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு சிறப்புப் பள்ளிகளில் உயர்நிலை மற்றும் மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 2018 19 ஆம் ஆண்டிற்கான வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு நடத்திட அனுமதித்து மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார்.

பார்வையற்றோருக்கான முறையான கல்வியை மேம்படுத்தல் என்கிற உயரிய நோக்கத்தை முதன்மையானதாகக்கொண்டு செயல்படும் ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் ஆக்கபூர்வ முயற்சிகளில் ஒன்று, அரசு சிறப்புப் பள்ளி மாணவர்களுக்கான எதிர்கால கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு. கடந்த 2017 18 கல்வியாண்டில் அன்றைய மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர் திரு. அருண் ராய் அவர்களின் அனுமதியோடு, எதிர்கால கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகர்தல் பயிலரங்கு, பூவிருந்தவல்லி, தஞ்சை மற்றும் திருச்சி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளிகளில் நடத்தப்பட்டது.

இந்தப் பயிலரங்கில், சட்டம், இந்தியக் குடிமைப்பணி, வங்கிப்பணி, தகவல் தொழில்நுட்பத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைசார் வல்லுநர்கள் கலந்துகொண்டு, மாணவர்களுக்குத் தொடர்புடைய துறைகளில் இருக்கிற பணிவாய்ப்புகள், அதற்கு மாணவர்கள் மேற்கொள்ள வேண்டிய முன் தயாரிப்புகள்  குறித்து ஆக்கப்பூர்வமான ஆலோசனை வழங்கினர். வல்லுநர்களில் பெரும்பாலோர் பார்வையற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பான இத்தகைய முன்னெடுப்பை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்திட வேண்டும் என சிறப்புப் பள்ளி மாணவர்களும் வேண்டுகோள் விடுத்தனர். இதையடுத்து, 2018 19 ஆம் ஆண்டிற்கான கல்வி வழிகாட்டல் மற்றும் அறிவுரைப் பகிர்தல் பயிலரங்கை நடத்திட அனுமதிக்குமாறு கடந்த அக்டோபர் மாதம் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையர் திருமதி. மகேஸ்வரி அவர்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

சங்கத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டு, தற்போது பயிலரங்கு நடத்த ஆணையர் அவர்கள் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார். எனவே எதிர்வரும் ஜனவரி மாதம் இந்தப் பயிலரங்கை நடத்துவது என ஹெலன் கெல்லர் மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

முந்தையது 

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *