Categories
ப. சரவணமணிகண்டன் சிறுகதைகள்

கண்ணோட்டம் – சிறுகதை

எப்போதாவது குமரேசன் இப்படிக் கேட்பதுண்டு. ஆனால், சொன்ன சொல் தவறாமல் திருப்பியும் கொடுத்துவிடுவான். நாணயஸ்தன், நல்ல மனசுக்காரன். ஆனால், அவனுக்குத்தான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம். அவன் மனம் அங்கலாய்த்து, அன்றாடத்துக்குத் திரும்பியது.

நேற்றிலிருந்தே அலைபேசி விடாமல் அடித்துக்கொண்டுதான் இருந்தது. சிலவற்றிற்கு பதில் சொல்வதும், சிலவற்றைத் தவறவிடுவதுமாக இருந்தான் அவன்.

இடைவெளி இல்லாத பூரிப்பில் மிதந்து கொண்டிருந்தது மனம். “நன்றி, நன்றி”, “ஆமா ஆமா” “கண்டிப்பா 90% எதிர்பார்த்ததுதான்.” மாறிமாறி இப்படித்தான் வந்த அழைப்புகளுக்குப் பெரும்பாலும் உச்ச ஸ்தாய் சிரிப்புடன் பதில் சொல்லிக்கொண்டிருந்தான்.

“ஏங்க தண்ணீ ரொம்ப நேரமா காயுது.” வழக்கமான வேகத்தடை. மனைவி மல்லிகாவுக்கு நேற்றே விஷயத்தைச் சொல்லிவிட்டான். அவளும் பூரிப்புக்குப் போய் ஆனால் திரும்பிவிட்டாள்.

குளியலின்போது அடிக்கடி செல்பேசி அடித்தது. “மல்லிகா அது யாருன்னு பார்க்கக்கூடாதா?” குளியலறையிலிருந்தே கத்தினான்.

“நான் கிச்சன்ல வேலையா இருக்கேன்.” உரத்து பதில் வந்தது.

குளியல் முடித்த கையோடு விரைந்து தன் அறை நுழைந்தான். இன்னும் அரை மணிநேர அவகாசம்தான் இருக்கிறது. ஒரே அடியாகக் கிளம்பிப் போய், அலுவலகத்தில் கொஞ்சம் ஆசுவாசமாகும் சமயங்களில் பார்த்துக்கொள்ளலாம் என தர்க்கம் சொன்னாலும் தன்னகம் கேட்க மறுக்கிறது.

இரண்டே நிமிடத்தில் யாரென்று பார்த்துவிடலாம். செல்பேசியைக் கையில் எடுத்தான். அது மீண்டும் அலறியது. யாரென்று பார்க்காமலேயே ஒரு தள்ளலில் ஆன்சர் தடத்தில் இரண்டு தட்டு. “வணக்கம்!”

“நல்லாயிருக்கியா இளங்கோ?” அவன் இதை எதிர்பார்க்கவில்லை. தன் பள்ளிகால வகுப்புத் தோழன் குமரேசன். சரி விஷயம் கேள்விப்பட்டு வாழ்த்தத்தான் போன் செய்திருக்கிறான்.

“குமரேசா நல்லாயிருக்கியா?”

“நல்லா இருக்கேன் யா. வேலைக்குக் கிளம்பிட்டிருக்கியோ?” அவனுக்கு விஷயம் தெரிந்ததாகப் படவில்லை. இவனுக்கு குரலில் சுருதி இறங்கிவிட்டது.

“ஆமா”

“கொஞ்சம் உன்கிட்ட பேசணும். எப்போ ஃப்ரியா இருப்ப?”

“சொல்லு குமரேசா என்ன விஷயம்?”

“தப்பா நினைச்சுக்காத. ஒரு 1000 கடனா கிடைக்குமா? அடுத்த மாசம் எப்படியும் தந்திடுறேன். ரொம்பக் கஷ்டமா இருக்கு.”

“நான் ஆட்டோ ஏறிட்டு உன்கிட்ட பேசுறேனே”

“இல்ல வீட்டில …” அவன் முடிப்பதற்குள்,

“நான் பேசுறேன், பேசுறேன்” சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.

எப்போதாவது குமரேசன் இப்படிக் கேட்பதுண்டு. ஆனால், சொன்ன சொல் தவறாமல் திருப்பியும் கொடுத்துவிடுவான். நாணயஸ்தன், நல்ல மனசுக்காரன். ஆனால், அவனுக்குத்தான் கஷ்டத்துக்கு மேல் கஷ்டம். அவன் மனம் அங்கலாய்த்து, அன்றாடத்துக்குத் திரும்பியது.

தலையை நன்றாகத் துவட்டிவிட்டு, எண்ணெய் பாட்டிலைத் திறந்தான். தட்டையான அந்த பாட்டிலின் வாய்ப்பகுதி சற்று அகலமானது என்பதால், மிகமிக நிதானமாகப் பாட்டிலை இடது உள்ளங்கையில் கவிழ்த்தான். கூடவே, உள்ளங்கையில் விழுந்திருக்கிறதா என்பதை பாட்டிலைப் பிடித்திருக்கும் வலக்கையின் ஆட்காட்டி விரல்கொண்டு அவ்வப்போது துழாவிக்கொண்டான். குழிவாக வைத்திருந்த இடது உள்ளங்கையில் சில சொட்டுகள் விழுந்ததும், குனிந்து அந்த பாட்டிலை கவ்விக்கொள்கிறபடி தன் பாதங்களுக்கிடையே வைத்துவிட்டு நிமிர்ந்தான். பொத்தினாற்போல் இரண்டு கைகளையும் உச்சந்தலைக்குக் கொண்டுபோய் விரித்து தலையின் எல்லா இடங்களிலும் தேய்த்தான். இன்னும் சில பகுதிகளில் வரவரப்பு குறையவில்லை. மீண்டும் குனிந்து எண்ணெய் பாட்டிலை எடுத்து, சில துளிகள் விட்டு, அதனை மூடி அலமாரிக்குள் வைத்தான்.

அடுத்து பவுடரைத் தேடினான். “இதுங்க எதையும் எடுத்தா எடுத்த இடத்தில வைக்கிறதில்ல. அதிலையும் இந்தப் பெருசு இருக்கே. ரொம்ப அசால்ட்உ.” தன் மகள் அதிதியைத்தான் மனதுக்குள் திட்டிக்கொண்டான்.

அலமாரிக்குள் இரண்டு கைகளையும் பக்கத்துக்கு ஒன்றாக பரவவிட்டான். முகம் பார்க்கும் கையடக்க கண்ணாடி சகிதம் நின்றுகொண்டிருந்த சில ஒப்பனைக் குப்பிகள் தொப் தொப் என்று விழுந்ததுதான் மிச்சம். பவுடர் அகப்படவில்லை.

“ஏங்க! டைம் ஆச்சு.” சாப்பாட்டு மேசையிலிருந்து வந்த மல்லிகாவின் குரலுக்கு,

“பவுடர் எங்க? காணோம். எங்கேயாவது வச்சிட்டு உயிர எடுக்கவேண்டியது” தொண்டையைக் கிழித்துக்கொண்டு கத்தினான்.

சாப்பாட்டு மேசையிலிருந்து மெல்ல அவன் அறைநுழைந்த அவள் அங்கும் இங்கும் தேடினாள். “நான் பலதடவ சொல்லிருக்கேன். எதையும் எடுத்தா எடுத்த இடத்திலவைங்கணு.” அவன் உரத்துக் கத்திக்கொண்டிருக்க,

அவள் இடைமறித்து பவுடர் டப்பாவைக் கையில் தினித்தாள்.

“எங்க இருந்தது?”

“உங்க டேபில் மேலதான்.”

“அங்க யாரு வச்சா?”

“ஊம்! நீங்கலாத்தான் இருக்கும். வேற யாரும் உங்க பவுடரைத் தொடுறதே இல்ல. எங்களுக்கெல்லாம் இசட் பிடிக்காது. நீங்கதான் எல்லாத்திலையும் வித்யாசமாச்சே!”

இப்படித்தான் அடிக்கடி குடும்பத்தில் பல்பு வாங்கிவிடுகிறான். அதுவும் மல்லிகா பல்பு ரொம்பவே ஸ்பெஷல். அடிவாங்கின மாதிரி இருக்காது என்றாலும், உள்ளுக்குள் போய் அனாயசமாய்த் தன்  வேலையைப் பார்த்துவிடும்.

லுங்கியில் இருந்த அவன் பவுடர் டப்பா மூடியைத் திருகி கொஞ்சமாய்ப் பவுடரை் கொட்டினான். டப்பாவை அலமாரியில் வைத்துவிட்டு, இலேசாகப் பின்னோக்கிச் சாய்வாக நின்றுகொண்டான்.  இரண்டு கைகளையும் குவித்துத் தன் மார்புக்கு அருகே வைத்துத் தேய்த்தான். சிதறிய சில துளிகள் கீழே விழுந்துவிடாதபடி அவன் மார்பு ஏந்தி்க்கொண்டது.

இரு உள்ளங்கைகளில் ஒட்டியிருந்தனவற்றை முகம் முழுக்க பரப்பினான். எங்கேனும் மாவு படிந்திருக்கலாம் என்ற ஐயத்தில் அவனுக்குத் திருப்தி ஏற்படுகிற வரை அவன் மீண்டும் மீண்டும் முகம் முழுக்கக் கைகளால் அழுத்தமாய் வருடிக்கொண்டான்.

இப்போது லுங்கியிலிருந்து அவன் முறையான உடுப்புக்கு மாறினான். சட்டையை உள்ளேவிட்டு இன் செய்துகொண்டான். இடைவாரை மாட்டியபின், அவன் கைகள் இன்செய்த இடத்தை மீண்டும் சுற்றிச் சுற்றி வந்து சுருக்கங்களை அகற்றின. எல்லாம் முடிந்து சாப்பாட்டு மேசையில் அமர்ந்தான்.

அலுவல் உடுப்பில் அவன் அழகும் கம்பீரமும் கூடியிருப்பது வழக்கம்தான் என்றாலும், முடிமுதல் அடிவரை ஒரு பார்வை பாய்ச்சிவிடுவது மல்லிகாவுக்கு வாடிக்கை. எங்கேனும் ஏதேனும் துருத்திக்கொண்டிருந்தால் திருத்துவாளே தவிர, மற்றபடி தன் கனவனின் அழகை நினைத்து அவள் உள்ளூரப் பூரித்துக்கொள்வாள்.

இடப்பக்கம் கோடெடுத்து தலைவாரி, முன்பக்க முடிகளைக் கொஞ்சம் ஏற்றிவிட்டிருப்பதும், அணிந்திருக்கிற அந்தக் கண்ணாடியும் அவன் முகத்துக்குக் கூடுதல் அழகு சேர்த்தது.

“இந்தா  பாருடீ! என் பேரனுக்குக் கண்ணு மட்டும்தான் இல்ல, மத்தபடி அவன் ஆணழகன்டீ… கண்ணு மட்டும் இருந்திரு்ந்தா இன்னியாரம் நீ நானுன்னு போட்டி போட்டு கொத்திட்டுப் போயிருப்பாளுக சீமச் சிரிக்கிங்க.” என ஊரில் செகப்பி கிழவி தன்னிடமே சொன்னதும் அவள் நினைவில் அடிக்கடி வந்துபோகும்.

“உண்மையில் மனுஷன் அழகன்தான். என்ன கோபம்தான் முனுக் முனுக்னு வருது” அவளுக்குள் அப்போதைக்கு ஓடிய சம்பாஷனைகள் அவை.

இட்லியிலிருந்து பறந்துகொண்டிருந்த ஆவி, அவன் முகத்திலும் நாசியிலும் மாறி மாறி மோதியது. தட்டில் பரிமாறப்பட்ட இட்லிகளை மெல்லத் தொட்டுப் பார்த்தான். மல்லிகாவின் மென்மையான உப்பிய கன்னங்கள் நினைவில் எழ, நான்கின் மீதும் படர்ந்த கையை அவன் வெளியே எடுக்கவில்லை.

“சட்டினி”

மல்லிகாவின் குரல் கேட்டு மீண்டான். முதல்வாய் வைத்த கணம்,

“சட்டினில உப்பிருக்கா?” சாப்பாடு எப்படி இருக்கிறது என்பதை வேறு மாதிரி கேட்டாள் மல்லிகா.

“ஊம் சூப்பர். உன் கைப்பக்குவத்த அடிச்சுக்க முடியுமா என்ன? வாயிதான் கொஞ்சம் லபலப” அந்த வாக்கியத்தை மட்டும் முனகிக்கொண்டானா? அவனுக்கே ஐயம்தான்.

“மல்ஸ் நாளைக்கு சாயுங்காலம் ஒரு பாராட்டு விழா இருக்கு. நாம போய்ட்டு வரலாம்.”

“எத்தனை மணிக்கு?”

சாயுங்காலம் ஏழு மணிக்கு?”

“ஏழு மணிக்கா? பசங்க டியூஷன் போய்ட்டு வார நேரம்.”

“பசங்களையும் கூட்டிட்டுத்தான்.”

“அப்போ டிஃபன்?” அது அவளுக்கே உரித்தான கவலை.

“அதெல்லாம் அங்கேயே கொடுத்திடுவாங்க. இன்னக்கிக்கூட ஒரு பாராட்டு நிகழ்ச்சி இருக்கு. ஆஃபீஸ் போய்ட்டு அனுமதி சொல்லிட்டுக் கிளம்பணும்.”

“அப்படினா சாப்பாடு?”

“அதுவும் அங்கேதான்”

“முன்னாலையே சொல்லிருக்கலாம்ல!”

“சுத்தமா மறந்துட்டேன்டீ! சாரி”

“ஐயா ரொம்ப பிஸியாயிட்டீங்க?”

“அப்படிலாம் இல்ல”

“பொதுவாவே நீங்க பிஸிதான். இப்போ விருது வேற வரப்போகுது. கேட்கவே வேணாம். பெரிய எழுத்தாளர் ஆயிட்டீங்க. எங்களையும் ஒரு ஓரமா ஞாபகம் வச்சுக்கங்க ரைட்டரே!” அவள் கொஞ்சமாய்க் குழைந்தாள்.

“சே சே ஞாபகம் வச்சுக்காம. என்ன கொஞ்சம் எழுத்து, இலக்கியக் கூட்டம், வாசக சந்தி்ப்புனு பிஸியாயிடுவேன். உனக்கு என்னப் பார்க்கணுமுனா என் பிஏவுக்கு போன் பண்ணி அப்பாயின்மண்ட் வாங்கிக்கோ. நான் ஃபர்ஸ்ட் பிரிஃபரன்ஸ் கொடுக்கச் சொல்றேன்.” அவன் கன்னத்தில் குழிவிழுந்தபடியே இருந்ந்தது.

“போதும் போதும் ஆட்டோ வந்துருச்சு கிளம்புங்க.” எவ்வளவு உயரப் பறந்தாலும், அதிரடியாய்க் குடைசாய்க்கிற வித்தை தலைவிகளுக்கே வாய்த்த வரம்.

 ஆ்ட்டோ ஹாரன் அவனுக்கும் கேட்டது. தோளில் பையை மாட்டிக்கொண்ட அவனின் வலக்கரம் பற்றி மல்லிகா வெளியே கூட்டிவந்தாள். ஆட்டோவின் மேல்ப்பகுதியில் அவள் அவன் கையை வைத்ததும், அவன் அதன் உயரத்துக்கேற்ப குனிந்து ஏறிக்கொண்டான். இப்போது சாப்பாட்டுப் பையை அவன் கையில் கொடுத்தாள்.

“ஐயாவுக்கு இன்னக்கி என்ன சமையல் கா?” பழனி கேட்டான். 

“எல்லாம் அவருக்குப் பிடிச்ச கீர சாம்பாரும், வாழைக்காய் வறுவலும்.” சிரித்துக்கொண்டே சொன்னாள் மல்லிகா.

“கீர சாம்பாரா? ஐயா தெறிச்சிருவாரே!” பழனியும் சிரித்தான்.

“பழனி இன்னக்கி சமையல் எனக்கில்லப்பா. எங்க ஓஏ ஆறுமுகத்துக்கு.”

“ஏன் ஐயா எங்கேயும் வெளியே போறீங்களா?” ஆட்டோவை முடுக்கியபடி கேட்டான் பழனி.

“ஆமா இன்னக்கி ஒரு பாராட்டுக்கூட்டம், மல்லிகா வாரேன்.” ஆ்ட்டோ மெல்ல நகர்ந்து வேகம் எடுக்கத் தொடங்கியது.

“ஆமாங்கய்யா! ஸ்டேட்டஸ்ல பார்த்தேன். என்ன விருது ஐயா அது?”

“என்னோட ஒரு கதைப் புத்தகத்துக்கு தமிழக அரசோட விருது கிடைச்சிருக்கு.”

“அப்படிப் போடு. ஐயா நம்பலையும் கொஞ்சம் கவனிச்சுக்கோங்க.”

“நாமதான் மாசம் மாசம் குளிக்கிறோமே!”

“அது வழக்கமானது. ஸ்பெஷலா வேண்டாமா?”

“ஓ சிறப்பா, ஸ்பெஷலா?”” அவன் தொடர்ந்து பேசுவதற்குள் அலைபேசி ஒலித்தது.

சக பெண் எழுத்தாளர் சாரதா. எழுத்தாளர் வரிசையில் புலனக் குழுக்களில் அவனைவிடவும் அதிகம் பாராட்டப்படுபவள். “என்ன எழுதுகிறாள். ‘ஓ ஆண் சமூகமே! எங்களை அடிமைப்படுத்திப் பார்ப்பாயா?’ திமிறுவோம், திருப்பியடிப்போம்.

இப்படி எதுகை மோனைப் பிராண்டல்கள். அவ்வளவுதான் அந்த அம்மா. ஆனா நம்ம பயலுக! குரலக் கேட்டுட்டா போதும். ‘சூப்பர் மேடம், வேற லெவல்’னு என்னென்னமோ பேசுவான்.” உள்ளுக்குள் இந்த எண்ணங்களெல்லாம் ஒருசேரக் கும்மியடிக்க, அழைப்பை எடுத்தான்.

“சார் வாழ்த்துகள்”

“நன்றி நன்றி நன்றி மேடம்”

“கலக்கீட்டிங்க. ஒவ்வொரு கதையும் சூப்பர்ல. எனக்கு அப்போவே தெரியும். இது நிச்சயம் விருது வாங்குமுனு.” இடைமரிக்க இயலாதபடி அவள் பேசிக்கொண்டே போனாள்.

“மேடம் அப்புறம் உங்க சர்வீஸெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு? நம்ம சொசைட்டியப் பொருத்தவர ரொம்ப முக்கியமான பணி உங்களோடது.” அவன் திசைமாற்றினான்.

“அப்படிலாம் ஒன்னும் இல்ல சார். ஏதோ நம்பலால முடிஞ்சதைச் செஞ்சுட்டிருக்கோம். வாரவாரம் டெஸ்ட் வைக்கிறது, அதுக்கு கொஸ்டின்ஸ் ரெடி பண்றதுன்னு இதுக்கே நேரம் சரியா இருக்கு. எவ்ளவோ எழுதணுமுனு நினைக்கிறேன். இப்போ நேரமே கிடைக்க மாட்டேங்குது சார்.”

“எழுத்து எப்போ வேணாலும் எழுதிக்கலாம் மேடம். உங்களுக்குத்தான் அது கைவந்த கலையாச்சே. ஆனா இப்போ நீங்க பண்ணிட்டு இருக்கிறதை வேற யாரால பண்ண முடியும்?”

“நன்றி நன்றி சார்.” அவனைப் பேசவிடாமல் அவளே தொடர்ந்தாள். “சார் உங்களுக்கு எங்க அமைப்பு மூலமா ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தலாமுனு இருக்கோம். ஆன்லைன்லதான். உங்களுக்கு எப்போ டைம் இருக்கோ அப்போ வச்சுக்கலாம் சார்.”

“கண்டிப்பா மேடம். நான் கொஞ்சம் யோசிச்சிட்டு எப்போனு சொல்றேனே! இப்பவே பாருங்க, அடுத்தடுத்து ஒரே பாராட்டுக் கூட்டம்தான். நம்ம ஆளுங்கனு இல்ல. நிறைய எங்க ஆஃபீஸ் ஸ்டாஃப்ஸ், அப்புறம் உள்ளூர் இலக்கிய வட்டமுனு ஏகப்பட்ட ஃபோன் கால்ஸ்.”

“ஓ! இருக்காதா பின்ன. எவ்ளோ பெரிய சாதனை இது. வாட்ஸ் ஆப்பத் தொறந்தாலே உங்களப் பத்திதான் ஒரே பேச்சா இருக்கு சார்.”

“ஆமாம் மேடம். அதை வேற ஒன்னொன்னாப் பார்த்து பதில் போடணும். யாரையாவது விட்டுட்டாலும் சங்கடம்.”

“ஓகே ஓகே சார். அப்படினா நான் உங்களுக்கு எப்போ கால் பண்ணட்டும்?”

“நானே கூப்பிடுறேன் மேடம்.”

இருவரும் முடித்தபோது, அலுவலக வாசலில் ஆட்டோ நின்றது.

அன்றைக்கு அலுவலகம் முழுக்க அதே பேச்சு, கைகுலுக்கல்தான். எல்லாம் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் பார்த்த வேலை. அதுவரை சத்தமில்லாமல் விலகிச் சென்றவர்கள், எதிர்பட்டபோது தங்களின் குரல்களைக் கொஞ்சம் தணித்துக்கொண்டவர்கள், அவனிடம் எழுத்தெண்ணிப் பேசியவர்கள்கூட வந்து இப்போது கைகுலுக்கிக்கொண்டார்கள். அது அவனது பெருமிதப் பூரிப்பை மேலும் கூட்டியது. கொஞ்சம் அதிலேயே லயித்திருக்கலாம் என்று பார்த்தால், மீண்டும் அலைபேசி ஒலித்தது. குமரேசன்தான். எடுக்காமல் இருக்க முடியாது. அவன் காலையிலேயே ஏதோ அவசரம் எனச் சொல்லியிருந்தான்.

“சாரி குமரேசா! வீட்டிலருந்து கிளம்பவே லேட்டாயிடுச்சு. அதான் ஆஃப்ஈஸ் வந்து பேசலாமுனு நினைச்சேன். அதுக்குள்ள நீயே கூப்பிட்டுட்ட. ஆமா வொய்ஃபுக்கு என்ன ஆச்சு?”

ரெண்டு நாளா விடாமக் காய்ச்சல் அடிக்குது. நாங்களும் என்னென்னமோ பண்ணிப் பார்த்துட்டோம். காய்ச்சல் மட்டும் நிக்க மாட்டேங்குது. அதான் மதுரைக்குக் கூட்டி போலாமுனு.”

“ஆமா குமரேசா. அதான் நல்லது. அப்படியே வச்சிட்டிருக்கக் கூடாது. இப்போ டெங்கு வேற ரொம்ப வேகமாப் பரவிட்டிருக்காம். அதனால ஒரு டெங்கு டெஸ்ட் எடுத்தும் பார்த்துடு. உனக்கு ஜிபே இருக்கா?”

“இருக்கு இதே நம்பர்தான்.”

“சரி இப்போ ஜிபே அனுப்பிடுறேன்.”

“அடுத்த மாசம் கண்டிப்பா கொடுத்துடுறேன்”

“அத விடு முதல செல்வியப் பாரு.”

“சரி இளங்கோ நான் அப்போ வச்சிடுறேன்.” குமரேசன் அழைப்பைத் துண்டித்தான்.

பாவம் குமரேசன். பள்ளி காலத்தில் தன்னைவிடவும்  நன்றாகப் படிக்கும் பையன். அவன் இடையில் படிப்பை விட்டிருக்கக் கூடாது. தனக்கென்று ஒரு வேலை இல்லை. பிறகு ஏன் திருமணம், குழந்தையெல்லாம். ரொம்ப அவசரப்பட்டுவிட்டான் என்று ஏதேதோ உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருக்க, குமரேசனுக்குப் பணம் அனுப்பும் விஷயமாக அவன் செல்பேசியைத் துழாவினான். அப்போது அந்த வசீகரக் குரல் கேட்டது.

“சார்”

உலகமே தீப்பிடித்து எரிந்தாலும்கூட, தனக்கு வலித்துவிடுமோ எனத் தொண்டைக்குள்ளேயே ஒலியைத் தேக்கி, வடிகட்டி வெளிவிடுகிற லாவகம். அடக்கமா, பணிவா, பவ்வியமா, பாவனையா என்று கேட்டால், அப்படியெல்லாம் இல்லை. காரணம், மதியச் சாப்பாட்டு நேரங்களில் பெண்கள் வரிசையிலிருந்து அவ்வப்போது கிளம்பும் பல உரத்த அஹ்ஹாக்கள், ஆஹஹாக்களுக்கு ஊற்றுமுகம் மோனிஷாதான்.

தன்னிடம் இதுவரை அதிகம் பேசாத குரல் அது. அலுவல் நிமித்தமாக ஏதேனும் கேட்க வேண்டும் என்றால்கூட அவளுக்கென்றே சில இடைத்தரகர்கள் இரு்க்கிறார்கள். அவர்கள் மூலமாகத்தான் பேசுவாள், கேட்பாள். மற்றபடி  சம்பிரதாயமாகக்கூட மோனிஷா அவனிடம் பேசியதில்லை. நிலைமை இப்படியிருக்க, அந்த சாரை உடனே அங்கீகரிக்கத்தான் வேண்டுமா?

இல்லை செல்பேசி துழாவுகிற வாய்ப்பில் “ஒரு நிமிஷம்” என்று சொல்லிக் கொஞ்சமாய்க் காக்கவைக்கலாம்தானே! அப்படித்தான் செய்தான்.

ஒருவழியாகப் பணம் அனுப்பிவிட்டு, “சொல்லுங்க யாரு”.

“சார் நான் மோனிஷா.”

“இருந்துட்டுப் போங்க. அதுக்கு என்ன இப்போ” என்று கலாய்க்கத் தோன்றினாலும், “ஊம் சொல்லுங்க மா” அடக்கியே வாசித்தான்.

“சார் அவார்டெல்லாம் வாங்கியிருக்கீங்கலாமே! நீங்க இவ்லோ பெரிய ரைட்டரா இருப்பீங்கன்னு நான் எக்ஸ்பெட்டே பண்ணல. கங்க்ராஜிலேஷன் சார்” அவள் அவன் கையைப் பற்றினாள்.

இரண்டு ஆண்டுகள் உடன் வேலை பார்ப்பவள் என்றாலும், முதல் அறிமுகம் என்று சொல்லும் அளவுக்குத்தான் இருந்தது அந்தச் சந்திப்பு.

“நன்றி நன்றி” இத்தோடு சுருக்கிக்கொள்ளலாமா, இல்லை கொஞ்சம் உரையாடலை நீடிப்பதா என அவன் ஒரு கணம் யோசிப்பதற்குள்,

“குட் மார்னிங்” கணத்த தொண்டையால் கரைந்துகொண்டே இடைநுழைந்தான் பக்கத்து இருக்கை குமார். அவன் என்ன இந்தப் பக்கம் என சைகை காட்டியிருப்பான் போல. “சாருக்கு கங்க்ராஜிலேஷன் சொல்லலாமுனு வந்தேன். சார் பெரிய ரைட்டருன்னு எனக்குத் தெரியாது.”

“சார் ரைட்டரு மட்டுமில்ல, நல்லாப் பாடுவாரு தெரியுமா?” அவ்வளவுதான் குமார் எல்லாவற்றையும் கையில் எடுத்துக்கொண்டான். அவள் எப்படி இவன் கேபினுக்கு வந்தாள் என்கிற பொறாமையாய்க் கூட இருக்கலாம். பல சமயங்களில் சக ஆண்கள் அப்படித்தான்.

“ஓ! அப்படியா சூப்பர் சார். சரி சார் நான் வாரேன்.” “அப்பாடா எப்படியோ ஒரு சம்பிரதாயத்தை முடித்துவிட்டோம்” என்ற திருப்தியோடு போகிறாள் போல என இளங்கோ நினைத்துக்கொண்டான்.

அடுத்தவேலையாக, உடனே ஒரு அனுமதிக் கடிதத்தைக் கணினியில்  தட்டச்சு செய்து அச்சிட்டுக்கொண்டான்.

“வாங்க இளங்கோ! ஸ்டேட்டஸ் பார்த்தேன். கங்க்ராஜிலேஷன்.” இன்முகத்தோடு வரவேற்றார் அந்தப் பெண் மேலாளர்.

“கொஞ்சம் ரைட்ல வாங்க. அங்கதான் உட்காருங்க.” என தன் இருக்கையில் அமர்ந்துகொண்டே துல்லியமாக வழிகாட்டினார் அவர்.

“காலைல பதினோரு மணிக்கு உள்ளூர் இலக்கிய வட்டம் சார்பா ஒரு பாராட்டுக்கூட்டம் இருக்கு மா. நான் போகணும். அதான் பெர்மிஷன் கேட்கலாமுனு.”

“ஓ! தாராளமா. பெர்மிஷன் எதுக்கு. ஓடியே போட்டுறலாம். இது நம்ம ஆஃபீஸுக்கும் பெருமைதானே” அந்தப் புன்சிரிப்பு காது வழி அவன் உள்ளத்தைக் குளிர்வித்தது.

“ரொம்ப நன்றி மா.”

“நான் உங்க கதையெ்ல்லாம் படிச்சிருக்கேன்.”

“அப்படியா?” என்று உதடு சொன்னதே தவிர, அவன் வியப்படையவில்லை. இப்படித்தான் நிறைய பேர் சொல்லிக் கேட்டுவிட்டான். ஒவ்வொரு முறையும் தன் கதை பிரசுரமாகும்போதெல்லாம் அவன் வாட்ஸ் ஆப் வழி அந்த இணைப்பை அனுப்புவான். அனுப்பிய  கொஞ்ச நேரத்திலேயே ‘சூப்பர், வாவ்’ போன்ற இமோஜிகள் வரும். அவ்வப்போது மேலாளர் அம்மாவிடமிருந்தும் இதுபோன்ற இமோஜிகள் வந்திருக்கின்றன. மற்றபடி யார் உட்கார்ந்து, உள்ளார்ந்து படித்திருக்கப் போகிறார்கள் என்று அவனே உள்ளுக்குள் முடிவு கட்டிக்கொண்டான்.

“நீங்க சொல்லிருக்கிறது சரிதான் இளங்கோ. கடைசியா அந்தப் பையன் திருமணம் செஞ்சுக்கணுமுனு முடிவெடுத்ததுதான் கரெக்ட். வேல கிடைக்கும்னு பார்த்துட்டே இருந்தா இந்த சந்தோஷங்களையெல்லாம் அவன் எப்போதான் அனுபவிக்கிறது? ‘ஆகட்டும் பார்க்கலாம்’ கதையைத்தான் சொல்றேன்.”

அவனுக்கு பிரமிப்பாகிவிட்டது. தன் கதைகளைப் பற்றியோ, அவைகளைப் படிப்பது பற்றியோ இதுவரை தன்னிடம் ஒருமுறைகூடப் பேசியதில்லை. இவ்வளவு கூர்ந்து வாசித்திருக்கிறாரே! என்ற வியப்பு அவனை சில வினாடிகள் பேச்சற்றவனாக்கியது.

அவன் சிறு செறுமலில் தன்னைச் சரிபடுத்திக்கொண்டு, “ஆமாங்க அம்மா. பார்வையற்ற எல்லோருக்கும் கவர்மண்ட் ஜாப் கிடைக்கிறதில்ல.”

“அது எப்படிக் கிடைக்கும் இளங்கோ. நீங்களும் இந்தச் சமூகத்துல ஒரு பார்ட் தானே. பொதுச்சமூகத்துக்கு என்ன நடக்குதோ, அது உங்களுக்கும் நடக்குது. ஆனா, பொதுச்சமூகத்தைவிட பாதிப்பு உங்களுக்கு அதிகம்தான். இது புரியாம நம்ப ஆளுங்க, உனக்கென்னப்பா மாற்றுத்திறனாளி, அரசாங்கம் வேல கொடுத்துடுமுனு ரொம்ப ஈஸியாப் பேசிடுறாங்க இல்ல. இதுவும் உங்க கதையில படிச்சதுதான். ஏன் அதைப் படிக்கிற வரைக்கும் எனக்கே ஒரு ஓரமா அப்படி ஒரு தாட் இருந்துச்சுதான்.”

அவர் பேசப்பேச அவர்மீதான நன்மதிப்பு கூடிக்கொண்டே போனது. மிகுந்த பணிச்சுமைகளுக்கு நடுவிலும் தன்னுடைய கதையை இவ்வளவு கருத்தூன்றிப் படித்திருக்கிறார் தன்னுடைய மேலாளர் என அறிந்தபோது அவனுக்கு உள்ளுக்குள் ஒருவித கம்பீரம் பிறந்தது.

“நிகழ்ச்சி எத்தனை மணிக்கு?”

“பதினோரு  மணிக்கு மா?”

“எப்படிப் போறீங்க?”

லொக்கேஷன் அனுப்பிருக்காங்க. புக் பண்ணிப் போறேன் மா.”

சரி போய்ட்டு வாங்க வாழ்த்துகள்.”

நன்றி மா வாரேன்.”

அறையைவிட்டு வெளியே வந்து ராபிட்டோ புக் செய்தான். அது ஒரு நிமிடம் எனக் காட்டியதால், மெதுவாக அலுவலக வாசலுக்கு வந்தான்.

“என்ன ஆட்டோவா? வேணுமுனா அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்குங்க. நான் பைக்ல கொண்டாந்து விடுறேன்.” குமார் காது கடித்தான்.

“பரவால. ஆட்டோ வந்திடுச்சானு பாருங்க”

“ஐயா வாங்க ஆட்டோ வந்துடுச்சு.” குமார் அழைத்தான்.

பயணவழி முழுக்க மேலாளருடனான அந்த உரையாடலே அவன் மனதை நிறைத்து நெகிழ்த்திக்கொண்டிருந்தது. தன்னுடைய எழுத்துகள் அவரிடத்தில் தன்னைப் பற்றிய புரிதலையும் மதிப்பையும் நிச்சயம் கூட்டியிருக்கிறது என நினைத்தபோது, அவனுக்கு மேலும் சிலிர்த்தது. அதே பூரிப்போடு, கிடைக்கிற இடைவெளியில் வாட்ஸ் ஆப் பார்க்கலாம் என நினைத்தான்.

“சார் இன்னும் எவ்ளோ தூரம்?” அவன் கேட்டான்.

“மூனு நிமிஷத்துல போய்டலாம் சார்” ஆட்டோ டிரைவர் பதில் சொன்னார்.

வாட்ஸ் ஆப் பார்க்கும் எண்ணத்தை ஒத்திப்போட்ட்ஆன்.

“சார் லொக்கேஷன் வந்துட்டோம்.”

“சின்னையா காம்ப்லக்ஸுனு எதுவும் இருக்கா பாருங்க?”

“சின்னையா காம்ப்லக்ஸா? நீங்க போட்ட லொக்கேஷன் இதுதான் சார்.”

“அதாங்க, இங்க ஏதாச்சும் காம்ப்லக்ஸ் இருக்கானு பாருங்க.”

காம்ப்லக்ஸ்லாம் இல்ல       சார். நீங்க போட்ட லொக்கேஷன் இதுதான்”.

இனி அவரை ஒரு அங்குலம்கூட நகர்த்த முடியாது என்று தெரிந்தது.

இளங்கோ நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு போன் செய்தான். “சார் நான் லொக்கேஷன் வந்துட்டேன். ஆனா சின்னையா காம்ப்லக்ஸ் இல்லைனு சொல்றாங்களே?”

“இப்போ நீங்க கரக்டா எங்க இருக்கீங்க?”

“இப்போ, ஆட்டோகார அண்ணா! இங்க என்ன இருக்கு?”

“டீக்கடை இருக்கு. மெடிக்கல் ஷாப் இருக்கு. எதிர்த்தாப்பில ஷர்மிலா சூப்பர் மார்க்கெட் இருக்கு.” சலிப்பாக பதில் வந்தது.

அவன் ஷர்மிலா சூப்பர் மார்கெட் என்று மட்டும் சொன்னான்.

“ஓ ஷர்மிலா சூப்பர் மார்கெட்டா? கொஞ்சம் தாண்டிப் போய்ட்டீங்க சார். நீங்க ஆட்டோக்காரரிட்ட கொடுங்க நான் சொல்றேன்” என்றார் எதிர்முனைக் குரல்.

“சார் போட்ட லொக்கேஷன் இதுதான்.” அவரிடமும் அதே கடுப்பான பதில் சொல்லிக்கொண்டே போனை இளங்கோவிடம் கொடுத்தார் ஆட்டோக்காரர்.

“சார் நீங்க அங்கேயே இறங்கி நில்லுங்க. நான் இப்போ ஆள் அனுப்புறேன்”

“ஓகே சார்” என அழைப்பைத் துண்டித்தான். என்ன கட்டணமோ, அதைவிடக் கூடுதலாகப் பத்து ரூபாய் கொடுப்பதுதான் இளங்கோவின் வழக்கம். ஆனால் இப்போது அவன் மனம் அதற்குத் தயாராக இல்லை. முகம் கொடுத்தே பேசத் தேவையில்லை; சில்லறைப் பஞ்சாயத்துகள் கூட வைத்துக்கொள்ளாமல் தொகையைத் துல்லியமாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அவன் தனக்குள் சவால்விட்டுக்கொண்டான்.

 183 என்றார் ஆட்டோக்காரர்.

ஒவ்வொரு நாள் இரவிலும், உறங்கச் செல்வதற்கு முன்பாக, தனக்கான மறுநாள் ஆடைகளைத் தன் மகளின் உதவியோடு பொருத்தம் பார்த்து எடுத்து வைத்துக்கொள்வதோடு, ரூபாய் நோட்டுகளை  இருநூறு, இருபது என தனித்தனியாக அடுக்கியும், தனக்கு அடையாளமாக வெவ்வேறு விதங்களில் மடக்கியும் வைத்துக்கொள்வதால், 180 சரியாக எடுத்துவிட்டான். இந்த மூன்று ரூபாய் சில்லறை, வேறு வழியே இல்லை, அவசரச்சவால் எல்லாம் தனக்கு ஆகாது. ஆட்டோக்காரரிடம்தான் கேட்டாக வேண்டும். சில்லறைகளைக் காட்டிக் கேட்டு, அவருக்கு செட்டில் செய்து அனுப்பிவைத்தான்.

நிற்கும் நேரத்தில் ஒரு டீ குடித்தால் என்ன எனத் தோன்றியது. வெண்கோலின் பிரி தளர்த்தித் தரையில் ஊன்றி, கண்ணாடி டம்லர்கள் உருளும் சத்தம் நோக்கி நடந்தான்.

யாரோ அவனின் வெண்கோலைப் பற்றி அவனை ஒரு நாற்காலியில் அமர்த்தினார்கள். “என்ன சாப்பிடுறீங்க” அமர்த்தியவர்தான் கேட்டார்.

“டீ”

“வேற ஏதாச்சும்? வடை இருக்கு, சமோசா இருக்கு.”

“இல்ல இல்ல டீ மட்டும் போதும்.”

சூடாக டீ வந்தது. கையில் பக்குவமாகப் பிடித்துக் கொடுத்தார் அந்த வழிகாட்டி.

அவன் ஒரு வாய் உரிஞ்சுவதற்குள் செல்பேசி ஒலித்தது. டம்லரை மேசைமீது வைத்துவிட்டு, போனை எடுத்தான். “சார் ஸ்ரீராம் வந்துட்டாராம். நீங்க எங்க இருக்கீங்க?”

“நான் அந்த இடத்திலேயே  ஒரு டீக்கட இருக்கில்ல அங்கதான் டீ சாப்பிட்டுட்டு இருக்கேன்.”

“சரி சரி அங்கேயே இருங்க. இதோ வந்துட்டார்” எனச் சொல்லி அழைப்பு துண்டிக்கப்பட்டது.

அவன் முழுவதுமாக டீயைக் குடித்துவிட்டு டம்லரை மேசைமேல் வைத்தான். பேண்ட் பைக்குள் மடக்கித் திணித்திருந்த வெண்கோலை பிரித்தான்.

எழுந்து கல்லாப் பெட்டியை நெருங்குகையில், அவனை ஒரு கை பற்றியது.

இளங்கோ சாரா?”

“ஆமா நீங்க?”

“அற்புதம் ஐயா அனுப்புனாரு”

“வாங்க வாங்க ஸ்ரீராம் தானே”

“ஐயா போகலாமா?”

“இதோ ஒரு நிமிஷம். சார் ஒரு டீ” அவன் பத்து ரூபாய் நோட்டை நீட்டினான்.

“காசு கொடுத்துட்டாங்க” டீக்கடைக்காரரிடமிருந்து பதில் வந்தது.

“காசு கொடுத்தாச்சா? ஏங்க ஸ்ரீராம் நீங்க கொடுத்தீங்களா?”

“இல்லங்கய்யா?”

“ஐயா!”

எதிர்ப்புறச் சாலையிலிருந்து ஓர் உரத்த குரல்.

“நான்தான் கொடுத்தேன். இன்னக்கி எங்க அப்பாவோட நினைவுநாள்.” பைக்கை முடுக்கியபடி கடந்து சென்றது அந்தக் குரல்.

“வேற ஏதாச்சும்? வடை இருக்கு, சமோசா இருக்கு.”

எதிரொலிப்புகள் அடங்க வெகு நேரமானது.

***ப. சரவணமணிகண்டன்.

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.