
ஓடிடி போன்ற இணையவழி வெளியீடுகளைப் பார்வைத்திறன் மற்றும் செவித்திறன் குறையுடைய மாற்றுத்திறனாளிகளும் சம பங்கேற்புடன் அணுகும் வகையில், அவர்களுக்கான அணுகல் வசதிகளைச் செய்திட வேண்டும் என்பதை வலியுறுத்தி, நடுவண் அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமானது அதற்கான
வெளியிட்டுள்ளது.
கடந்த பிப்பரவரி 6ஆம் நாள் வெளியிடப்பட்ட இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கங்களை வழங்குவது இனி கட்டாயமாகிறது.
வழிகாட்டு நெறிமுறைகள் தொடர்பான அம்சங்கள் இங்கு வினாவிடைப் பகுதியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு வினாவினையும் சொடுக்கினால் அதற்கான பதில்கள் திறக்கும்.
- என்னென்ன அணுகல் வசதிகள் இடம்பெறும்?
- Audio Description ஏடி என்றால் என்ன?
- ஒலிவழிக் காட்சி வர்ணனைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் எனவழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
- விருப்பத் திரைவரிகள் (Closed Captions CC) மற்றும் அகற்ற இயலாத் திரைவரிகள் (Open Captions OC) என்றால் என்ன?
- சிசி மற்றும் ஓசி எவ்வாறு அமைய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன?
- இந்தியச் சைகைமொழி (ISL) என்றால் என்ன?
- இந்தியச் சைகைமொழி (ISL) குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
- இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்ப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு?
- இந்த நெறிமுறைகளிலிருந்து எவற்றுக்கெல்லாம் விலக்கு உண்டு?
- இவற்றையெல்லாம் கண்காணிக்க ஏதேனும் குழுக்கள் அமைக்கப்படுமா? குறைகள் என்றால், எங்கே யாரிடம் முறையிடுவது?
- எப்படி அணுகுவது?
என்னென்ன அணுகல் வசதிகள் இடம்பெறும்?
செவித்திறன் குறையுடையோருக்காக விருப்பத் திரைவரிகள் (Closed Captions CC), அகற்ற இயலாத் திரைவரிகள் (Open Captions OC), இந்திய சைகை மொழிபெயர்ப்பு (Indian Sign Language ISL) ஆகியவை இடம்பெறும்.
பார்வைத்திறன் குறையுடையோருக்காக ஒலிவழிக் காட்சி வர்ணனைகள் (Audio Description AD) வழங்கப்படும்.
Audio Description ஏடி என்றால் என்ன?
திரையில் தெரியும் காட்சிகளை நம் பக்கத்திலேயே ஒருவர் அமர்ந்து விவரிப்பது போன்ற ஏற்பாடு இது. காட்சி அமைப்பு, கதாப்பாத்திரங்களின் சைகைகள் மற்றும் செயல்கள், அவர்களின் ஆடை அலங்காரங்கள், காட்சிப் பின்னணி என அனைத்தும் இந்தக் குரல்வழி விவரிப்பில் அடங்கிவிடும்.
ஒலிவழிக் காட்சி வர்ணனைகள் எவ்வாறு இடம்பெற வேண்டும் எனவழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது?
உரையாடல்களற்றுப் பின்னணி இசையோடு நகரும் காட்சிகளின் இடைவெளிகளில், சுருக்கமான அதேவேளை செறிவான, உள்ளடக்கத்தின் கருத்துகளிலிருந்து விளகிச் செல்லாதவகையில் ஒலிவழிக் காட்சி வர்ணனை (Audio Description) அமைதல் வேண்டும்.
தெளிவும், செறிவும் கொண்ட குரல்கள் இடம்பெறுவது அவசியம்.
விருப்பத் திரைவரிகள் (Closed Captions CC) மற்றும் அகற்ற இயலாத் திரைவரிகள் (Open Captions OC) என்றால் என்ன?
திரைவரிகள் என்பவையும் ஒருவகை விவரிப்புதான். ஒலிவழிக்குப் பதிலாக எழுத்துகளின் வழியே திரையில் தெரியும் காட்சிகள் விவரி்க்கப்படும். இவை செவித்திறன் குறையுடைய மற்றும் கேட்பதில் இடர்பாடுடையவர்களுக்கானது.
காட்சிகளின் உரையாடல்களில் இடம்பெறும் வசனங்கள் அப்படியே எழுத்துரு வரிகளாக வரும். பின்னணியில் ஒலிக்கும் இசை, மற்றும் பிற சத்தங்கள் குறித்த தகவல்களும் அவற்றில்் இடம்பெறும்.
இந்தத் திரைவரிகளைத் தேவையெனில் நம்மால் இயக்கிக்கொள்ளவும், விருப்பத்தின் பேரில் நிறுத்திக்கொள்ளவும் முடிந்தால் அவை விருப்பத் திரைவரிகள் (Closed Captions CC). திரையிலேயே உட்பொதிக்கப்பட்ட, நிறுத்தும் வசதியில்லாதவை அகற்ற இயலாத் திரைவரிகள் (Open Captions).
சிசி மற்றும் ஓசி எவ்வாறு அமைய வேண்டும் என வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கின்றன?
உரையாடல்களில் இடம்பெறும் வசனங்களோடு பொருந்திப் போகவேண்டும். மேலும், அவை காட்சிகளில் இடம்பெறும் பின்னணி இசை, மற்றும் இதர சத்தங்களைப் பற்றிய குறிப்புகளையும் வழங்க வேண்டும். இத்தகைய தகவல்கள், காட்சி மற்றும் உரையாடல்களின் சூழல்களையும், அவை கடத்த விழையும் உணர்வுநிலைகளையும் வெளிக்கொணர்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன.
சான்றாக, மணியோசை கேட்கிறது, பின்னணியில் இரயில் சத்தம் ஒலிக்கிறது போன்ற தகவல்கள்.
காட்சிகளில் ஒலிக்கும் வசனங்கள் மற்றும் பின்னணி இசைகளோடு முற்றிலும் ஒத்திசைந்து செல்வதாகத் திரைவரிகள் (CC OC) அமைக்கப்பட வேண்டும். பயனாளர் வாசிக்க இயன்ற அளவிலான வேகத்தில் அவை திரையில் வந்துசெல்ல வேண்டும்.
உள்ளடக்கத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை திரைவரிகள் இடம்பெறுவது அவசியம்.
பிழைகளற்ற சொற்கள் திரைவரிகளில் இடம்பெற வேண்டும். திரையில் என்ன பேசப்படுகிறதோ அவற்றைப் பொருள்மாறாமல் தருவதே முதன்மை நோக்கம். அதேசமயம், உரையாடல்கள் இடம்பெறாத பிற விவரணைகளில் மொழிசார் கூறுகள் கவனத்தில்கொள்ளப்பட வேண்டும்.
திரை வரிகள் திரையில் தெரியும்் காட்சிகளை எவ்வகையிலும் மறைக்கக் கூடாது. வரிகள் ஒன்றின்மேல் ஒன்று ஏறிக்கொள்ளுதல், திரையின் விளிம்பில் காட்சிப்படுத்தப்பட்டு, அவை துண்டாதல் போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும். திரைவரிகள் திரையின் சட்டகத்துக்குள்ளேயே இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
காணொளியைப் புரிந்துகொள்ள அவசியமான இடங்கள் தவிர, பிற இடங்களில் திரைவரிகளை முழுவதுமாகப் பெரிய எழுத்துகளிலோ (Uppercase), முழுவதுமாக சிறிய எழுத்துகளிலோ (Lowercase) வெளியிடுவதைத் தவிர்த்து, , இரண்டும் கலந்த வரிகளாக வெளியிடலாம்.
முக்கியத்துவம் வாய்ந்த காணொளித் தருணங்களைச் சுட்டுகையில் திரைவரிகளை அடிக்கோடிடுவதற்குப் பதிலாக, சாய்வான எழுத்துகளை (Italicised) பயன்படுத்தப் பரிந்துரைக்கப்படுகிறது. மேலும், தெளிவாக, வாசிக்க ஏதுவான வண்ணங்களிலும், உரிய எழுத்துருக்களிலும் திரைவரிகள் அமைதல் வேண்டும்.
இந்தியச் சைகைமொழி (ISL) என்றால் என்ன?
செவித்திறன் குறையுடைய அல்லது கேட்பதில் இடரடையும் மாற்றுத்திறனாளிகள் சைகைகளைப் பயன்படுத்தித் தொடர்புகொள்வதே இந்தியச் சைகைமொழியாகும்.
மேலும் தகவல்களுக்கு:
https://indiansignlanguage.org/indian-sign-language/#content
இந்தியச் சைகைமொழி (ISL) குறித்து வழிகாட்டு நெறிமுறைகளில் என்ன சொல்லப்பட்டுள்ளது?
காணொளியின் மேற்புறமாகவே சைகை மொழிபெயர்ப்பாளரின் படம் உட்படமாகப் பொதிக்கப்பட்டு, துல்லியத்துடன் சைகைகள் வசனங்களோடு ஒத்திசைந்து செல்வது உறுதிசெய்யப்பட வேண்டும்.
சைகை மொழிபெயர்ப்பாளரின் கையசைவுகள் மட்டுமின்றி, முகபாவனைகளும் காட்டப்பட வேண்டும்.
இணையவழிக் காணொளி வெளியீட்டாளர்கள் (Publishers of onlinecurated content) தங்களுடைய இணையதளங்கள், செயலிகளை மாற்றுத்திறனாளிப் பயனாளர்கள் திரைவாசிப்பான் போன்ற தாங்கள் பயன்படுத்தும் துணைக்கருவிகளைக் கொண்டு எளிதில் அணுகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளை அமல்ப்படுத்துவதற்கான கால அளவு எவ்வளவு?
இந்த நெறிமுறைகள் வெளியாகி 36 மாதங்களுக்குள் வெளியீட்டாளர்கள் தங்கள் படைப்புகளை செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறையுடையோர் அணுகும் வண்ணம் வடிவமைக்க வேண்டும்.
குறைந்தபட்சம் ஒவ்வொரு வகைமைக்கும் தலா ஒரு அணுகல் வசதியேனும் அதாவது, செவித்திறன் குறையுடையோருக்கு “CC, OC, ISL” இதில் ஏதேனும் ஒன்றினையும், பார்வைத்திறன் குறையுடையோருக்காக “AD” வசதி வழங்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும்.
இந்த வசதிகள் வழங்கப்படுவது குறித்தான அறிவிப்புகள் மற்றும் தகவல்கள் தங்களுடைய வெளியீடுகளுக்கான முன்னோட்டப் பரப்புரை முயற்சிகளில் (promotional trailers and teasers) இடம்பெறுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், வெளியீட்டாளர்கள் தங்களுடைய அணுகல் முயற்சிகள் குறித்து, மின்னணு தகவல்முறை மற்றும் செய்தி இதழ்கள் வாயிலாகவும் அறிவித்திட வேண்டும்.
அணுகல் தன்மைவசதி செய்யப்பட்ட தங்களுடைய படைப்புகளை எளிதில் கண்டடையும் வண்ணம், அதற்கான உரிய குறியீடுகளுடன் கூடிய தொகுப்புகள் தங்கள் இணையதளத்தின் தேடுபகுதியிலும் (Search interface)இடம்பெற வேண்டும்.
இணைய வெளியீட்டாளர்கள், அணுகல் வசதிகள் கொண்ட படைப்புகள், அதற்கான முயற்சிகளைத் தங்களின் தளங்களிலேயே தொகுப்பதோடு, அவற்றைக் காலாண்டுக்கொருமுறை முன்னேற்ற அறிக்கைகளாகவும் வெளியிட வேண்டும்.
மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் உள்ளடக்கங்கள் தொடர்பாகத் தொடர்ந்து களத்தில் இயங்கிவரும் அமைப்புகளுடன் இணைந்து, வெளியீட்டாளர்கள் தங்களின் முயற்சிகளைச் செம்மைப்படுத்தலாம்.
இந்த நெறிமுறைகளிலிருந்து எவற்றுக்கெல்லாம் விலக்கு உண்டு?
பத்து நிமிடத்துக்கு மிகாத குறுகிய காணொளிகள், சிறிய விளம்பரங்கள், இசைத்தொகுப்புகள் மற்றும் ஒலிவழித் தொடர்கள் (podcasts) ஆகியவற்றுக்கு மேற்சொன்ன விதிமுறைகளிலிருந்து விலக்கு வழங்கப்படுகிறது. அதேசமயம், பத்து நிமிடத்துக்கும் குறைவான குறுகிய காணொளிகள் என்பவை தனித்த ஒரே ஒரு காணொளியையே குறிக்கும். மாறாக, பத்து பத்து நிமிடங்களாக வெளியிடப்படும் தொடர் காணொளிகள் இந்த வரிசையில் அடங்காது.
இவற்றையெல்லாம் கண்காணிக்க ஏதேனும் குழுக்கள் அமைக்கப்படுமா? குறைகள் என்றால், எங்கே யாரிடம் முறையிடுவது?
இந்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணைச் செயலர் பதவிக்கு நிகரான ஒருவரின் தலைமையில் ஒரு கண்காணிப்புக்குழு அமைக்கப்படும்.
இந்தக் குழு, இணைய வெளியீடுகள் மற்றும் அவற்றின் அணுகல் வசதிகள் தொடர்பான கண்காணிப்புகளைச் செய்யும். காலாண்டுக்கு ஒருமுறை கூடி, வழிகாட்டு நெறிமுறைகள் அமலாக்கம் தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் புகார்கள் குறித்த ஆணைகளைத் தொடர்புடைய நிறுவனங்களுக்கு வழங்கும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகளின்படி, குறைதீர் நடவடிக்கைகள் மூன்றடுக்குகள் வாயிலாகச் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- வெளியீட்டாளர்,
- அவர் சார்ந்துள்ள அமைப்பு அல்லது சங்கத்தின் ஒழுங்காற்றுக்குழு
- நடுவண் அரசின் உயர்மட்ட கண்காணிப்புக்குழு.
எப்படி அணுகுவது?
பயனாளர்கள் தாங்கள் எதிர்கொள்ளும் அணுகல் வசதி தொடர்பான புகார்களை முதலில் வெளியீட்டாளருக்கு கடிதம் அல்லது மின்னஞ்சல் வாயிலாக அனுப்பிவைக்க வேண்டும்.
பயனாளரின் புகார் மனு கிடைக்கப்பெற்ற 24 மணி நேரத்துக்குள் வெளியீட்டாளர் புகார் கிடைத்தமைக்கான ஒப்புகையினை புகார்தாரருக்கு வழங்கிட வேண்டும். அத்தோடு, புகார் தொடர்பாக அடுத்த 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு, தான்மேற்கொண்ட நடவடிக்கை குறித்துப் புகார்தாரருக்குத் தெரிவிக்க வேண்டும்.
வெளியீட்டாளரின் பதில் நடவடிக்கை தனக்கு மனநிறைவை அளிக்கவில்லையென்றால், வெளியீட்டாளர் சார்ந்துள்ள அமைப்புக்கு புகார்தாரர் தன்னுடைய மனுவினை அனுப்பலாம். அந்த அமைப்பு அடுத்த 15 நாட்களுக்குள் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு, அதனை அறிவுறுத்தலாகவோ, ஆணையாகவோ வெளியீட்டாளருக்கு வழங்கலாம். தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கை குறித்துப் புகார்தாரருக்கும் அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
இந்த நடவடிக்கையும் தனக்கு மனநிறைவு தரவில்லையென்றால், புகார்தாரர் அமைச்சகத்தின் உயர்மட்ட கண்காணிப்புக்குழுவிடம் தன் மனுவினைச் சமர்ப்பிக்கலாம். ஆனால், எவ்வளவு காலத்துக்குள் கண்காணிப்புக்குழு நடவடிக்கை மேற்கொள்ளும் என எதுவும் வழிகாட்டு நெறிமுறைகளில் குறிப்பிடப்படவில்லை.
வழிகாட்டு நெறிமுறைகள் வாழ்வியல் நெறிமுறைகளாக மாறும் காலத்துக்காய் உழைப்போம்.
***தொகுப்பு: ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
