Categories
நகைச்சுவை Uncategorized

நகைச்சுவை: ஃபண் படுத்தவும், பண்படுத்தவும் மட்டுமே! புண்படுத்த அல்ல

பார்வையற்றவர்களுக்கு பாஸ்மதி ரைசில் பிரியாணி வழங்கினோம் எனப் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்துப் புலகாங்கிதம் அடையும் தொண்டு நிறுவன தொன்னைகளின் உரிமம் உடனே ரத்து செய்யப்படுவதோடு, பார்வையற்றவர்களைக் காட்டிக் காட்டி அவர்கள் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்கள் காப்பகங்களில் சேர்க்கப்படுவார்கள்.

தமிழகக் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் பார்வையற்றோர் நலன் சார்ந்து எந்தெந்த கோரிக்கைகளை இடம்பெறச் செய்யலாம் என அனைத்து சங்கங்களின் பிரதிநிதிகளும் பங்கேற்ற ஓர் கலந்துரையாடலை இணையவழியில் ஒருங்கிணைத்தார்கள் தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தைச் சேர்ந்த தம்பிகள்/தங்கைகள்.

தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கத்தின் லோகோ

நிகழ்ச்சிக்கான நேரலை இணைப்பு:

https://www.youtube.com/@voice_of_tnvi

இன்றைக்கு மாற்றுத்திறனாளிகளின் அரசியல் பங்கேற்பை உறுதிசெய்வதன் முதல்ப்படி என்ற வகையில், உள்ளாட்சி மன்றங்களில் மாற்றுத்திறனாளிகள் நியமனத்தைச் சட்டபூர்வமாக்கியிருக்கிறது இன்றைய ஆளும் அரசு.

தமிழக வரலாற்றின் முதல்முறையா தெரியாது. ஆனால், மாற்றுத்திறனாளிகளுக்கென்று ஒரு கட்சியும் தொடங்கப்பட்டுள்ளது.

யார் கண்டது, இன்றைய தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கமே, நாளை த.பா.இ எனக் கட்சியாகவும் மாறலாம். அப்படி ஒரு பார்வையற்றவர், தான் முதல்வராகப் பொறுப்பேற்றால் என்னவெல்லாம் திட்டங்கள் கொண்டுவருவேன் எனத் தன் தேர்தல் அறிக்கையின் வாயிலாக அறிவித்தால் எப்படியிருக்கும்  என யோசித்ததில் மூளை முணுமுணுத்தவை இவை.

  1. அனைத்து பார்வையற்றவர்களுக்கும் அரசுப்பணி உறுதிசெய்யப்படும். அவர்களுக்குள்ளும், முழுப் பார்வையற்றவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் முழு அல்லது குறைப்பார்வையுடையவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  2. அரசு மற்று்ம் அரசு சாராத அனைத்து அலுவலகங்கள், விற்பனை நிலையங்கள், பொதுப் பயன்பாட்டு இடங்கள் பார்வையற்றவர்கள் எளிதில் அணுகத் தக்கவகையில் வடிவமைக்கப்படும். கூடவே, அனைத்து அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் பார்வையற்றவருக்கு வழிகாட்ட சிறப்புப் பயிற்சி பெற்ற வழிகாட்டிகள் நியமிக்கப்படுவார்கள். அவ்வகைப் பணிகளில் பார்வையற்றவர்கள் தங்கள் ஒரு விழுக்காடு உரிமையைக் கோருவது தடைசெய்யப்படும்.
  3.  குளியல் சோப்போ, குளிரூட்டியோ அனைத்து வணிகப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் அந்தப் பொருட்கள் பற்றிய விவரக் குறிப்புகளை பிரெயிலிலும், இதர அணுகல் வசதிகளிலும் வழங்குவது கட்டாயம். தவறும் நிறுவனங்களின் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவை பார்வையற்றோர் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.
  4.  அனைத்துவகை சிறப்புப் பள்ளிகள், மறுவாழ்வு அலுவலகங்கள், தலைமை அலுவலகங்கள், பார்வையற்றோருக்கான தன்னார்வ அமைப்புகள் கூடுதல் கண்காணிப்புக்கும், கவனத்துக்கும் உள்ளாக்கப்படும். அங்கே பார்வையற்றவர்களுக்கு உணவு வழங்குகிறேன், பிஸ்கட் பாக்கெட் வழங்குகிறேன் என்ற பெயரில், அவர்களின் அனுமதி பெறாமலேயே அவர்களைப் புகைப்படம் எடுப்பவர்களின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றில் நிறுத்த இயலாதபடிக்கு டாக் பேக் ஆன் செய்து அவர்களிடமே ஒப்படைக்கப்படும்.
  5. பார்வையற்றவர்களுக்கு பாஸ்மதி ரைசில் பிரியாணி வழங்கினோம் எனப் புகைப்படத்தை வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸாக வைத்துப் புலகாங்கிதம் அடையும் தொண்டு நிறுவன தொன்னைகளின் உரிமம்  உடனே ரத்து செய்யப்படுவதோடு, பார்வையற்றவர்களைக் காட்டிக் காட்டி அவர்கள் சம்பாதித்த சொத்துகள் அனைத்தும் அரசுடைமையாக்கப்பட்டு, அவர்கள் காப்பகங்களில் சேர்க்கப்படுவார்கள்.
  6.  ஒரு பார்வையற்றவரிடம் சத்தமாகக் கத்திப் பேசுவது, பேசிக்கொண்டிருந்தபடி சொல்லாமலேயே கிளம்பிவிடுவது, தான் வந்திருக்கிறேன் என்பதைப் பார்வையற்றவருக்கு அறிவிக்காமல் மௌனமாகவே இருப்பது, அவருடைய முன்னிலையிலேயே சைகையில் பேசுவது போன்ற செயல்களில் ஈடுபடும்  சக ஊழியர்களின் கண்கள் ஒரு வாரத்துக்கு ப்லைண்ட் ஃபோல்டு கொண்டு கட்டப்பட்டுவிடும். இந்த தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் அன்றாட வழிகாட்டியாக ஒருவார காலத்துக்குப் பார்வையற்ற ஒருவர் செயல்படுவார். மேற்சொன்ன குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் என்றோ, மறுவாழ்வுப் பணியாளர்கள் என்றோ கண்டறியப்பட்டால், உடனடியாக பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு, அவர்களுக்கு பார்வையற்றோர் தொடர்பான ஊதியமில்லாப் பணியிடைப் பயிற்சி ஓராண்டுக்கு வழங்கப்படும். இந்தப் பயிற்சிகாலம் முழுக்க அவர்கள் தங்கள் கண்களைக் கட்டியபடியே பங்கேற்கவேண்டும்.
  7. பார்வையற்றவர்கள் தங்கள் வெண்கோல்களை நீட்டியும், வீசியும், உராய்ந்தும் நிதானமாய் உலவும் வகையில் அவர்களுக்கென்றே பிரத்யேக சாலைகள் அமைக்கப்படும். இதனால்,  இறைச்சலோடு எகிறிக்கொண்டோடும் சைலன்ஸர் இல்லாத பைக்குகள், பக்கத்தில் வந்ததும் பேம் பேம் என்றபடி காதுகிழிக்கும் பேருந்து, பெரிய உந்துக்களின் ஹாரன்கள் என இச்சாலையில் பார்வையற்றவர்களுக்கு எவ்விதத் தொல்லையும் இருக்காது. கூடவே, எங்கோ பராக்கு பார்த்தபடி தொப்பென்று மோதும் தொப்பைகள், என்னமோ ஏதோ என்ற ரீதியில் நிற்கும் எருமைமாடுகள், வேகமாய் விரைகிறேன் என்ற பேர்வழி ஐ வடிவ வெண்கோலை எல் வடிவமாக்கிவிடும் எல்போர்டுகள், “வாங்க சார் நான் கூட்டிப்போறேன்” என வாண்டடாய் வண்டியில் ஏறும் குடிமகன்கள் என எவரையும் எதிர்கொள்ளாமல், “பிறக்கிறப்பவே நான் ப்லைண்டு, பேசுவேன் டா நான் இண்டிபெண்டண்டு”னு  ஏகாந்தமாய் பார்வையற்றவர்கள் அந்தச் சாலையில் பயணிக்கலாம்.
  8. பேருந்து நிறுத்தங்களில் நிற்கும் பார்வையற்றவர்களின் வசதிக்காக, நிறுத்தத்தை நெருங்கும் பேருந்துகளின் எண்களைத் தொலைவில் வரும்போதே அறிவிப்பது, நிலையங்களின் நின்றுகொண்டிருக்கும் பேருந்துகள் தொடர்பான நிமிடாந்திர அறிவிப்புகள் என அனைத்துப் பேருந்து நிறுத்தங்கள் மற்றும் நிலையங்களில் இவ்வசதிகள் ஏற்படுத்தப்படும்.
  9.  ஒரு பார்வையற்றவரை நிறுத்தங்களிளோ நிலையங்களிலோ எதிர்கொள்ளும் பேருந்து நடத்துனராகப்பட்டவர் இறங்கிவந்து, அவர் எங்கு போகவேண்டும் என விசாரித்து உரிய பேருந்துகளில் ஏற்றிவிட வேண்டும். தங்கள் கடமையில் தவறுபவர்கள், அதற்கான விளக்கத்தினை அரசுக்கு அந்தப் பார்வையற்றவரின் முன்னிலையிலேயே பிரெயிலில் எழுதிக்கொடுக்க வேண்டும்.
  10.  தான் இறங்க வேண்டிய நிறுத்தம் வந்தால் யாரிடம் கேட்பது, நடத்துனரும் சொல்லமாட்டாரே என்ற பதட்டத்தோடே தங்கள் முழுப் பயணத்தையும் பார்வையற்றவர்கள் மேற்கொள்ளத் தேவையில்லை. ஜிபிஎஸ் தொழில்நுட்பம் அனைத்துப் பேருந்துகளிலும் நிறுவப்பட்டு, ஒவ்வொரு நிறுத்தத்திற்கும் முன்னதாகவே அறிவிப்பு செய்யும் வசதி அனைத்து நகர மற்றும் புறநகர்ப் பேருந்துகளிலும் ஏற்படுத்தப்படும். அப்படி நிறுவப்படாத பேருந்துகளில், டப்பிங் ஆர்டிஸ்ட் சபிதா, பாடகி ஶ்ரேயா கோஶல் குரலை ஒத்த பயணிகள் தன்னார்வமாய் முன்வந்து இந்தப் பணியை மேற்கொள்ளலாம். அவர்களுக்கான ஊக்கத்தொகை அரசின் சார்பில் அவர் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.
  11.  அனைத்துப் பார்வையற்றவர்களும் மாநிலம் முழுக்க கால் பங்கு கட்டணத்தில், அரசின் அனைத்துவிதமான பேருந்துகளிலும் பயணிக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி பயிலும் மாணவர்களுக்கு பயணக்கட்டணங்கள் முழுவதுமாக விலக்கிக்கொள்ளப்படும். ஒரே மாதிரியான விலையில்லாப் பயணக்கட்டண ஸ்மார்ட் அட்டைகள் அனைத்துப் பார்வையற்றவர்களுக்கும் அரசால் வழங்கப்படும். “நாம் பஸ் பாஸை நீட்டிக்கொண்டிருக்க, நம்மைக் கடந்து சென்ற நடத்துனர் மீண்டும் எப்போது நம் பக்கம் திரும்புவார், முக்கி முனகி அவர் கால் பங்கு பயணச் சீட்டை எப்போது தருவார், டிக்கெட் எடுத்துட்டு பேசுறேனு சொல்லிட்டு கட் பண்ணியிஏ கால் மணிநேரம் ஆச்சே”னுவெல்லாம் பார்வையற்றவர்கள் அங்கலாய்க்கத் தேவையில்லை. பேருந்தில் ஏறியதும், அந்த அட்டையை தன் இருக்கையின் பக்கவாட்டில் பொறுத்தப்பட்டிருக்கும் சிறிய பெட்டிக்குள் நுழைத்து எடுத்தாலே உங்களுக்கான பயணச் சீட்டு உங்கள் கையில் எகிறி குதிக்கும்.
  12.  ஒரு பார்வையற்றவர் நிற்கிறார் என்று தெரிந்தும், அவரைக் கண்டும் காணாமல் வேகமாய்த் தன் பேருந்தை விரட்ட முயலும் ஓட்டுநரின் முன்புறக் கண்ணாடியை பட்டென்று மூடிவிடும்் சென்சார் பொருத்தப்பட்ட ஶட்டர்கள் வசதி அனைத்துப் பேருந்துகளிலும் ஏற்படுத்தப்படும். இந்த சென்சார் வசதி, வெண்கோலோடு நிற்கும் பார்வையற்றவரை தொலைவிலேயே படம் பிடித்துத் தன் நினைவடுக்கில் சேகரித்துக்கொள்வதன் மூலம், இதைச் சாத்தியப்படுத்தும். இந்த வசதியினைப் பெற பார்வையற்றவர்கள் வெண்கோலோடு நின்றிருக்க வேண்டியது அவசியம்.
  13.  பார்வையற்றவரைப் பார்த்ததும் “இந்த பஸ் ஃபுல் ஆயிடுச்சு பின்னால போங்க” எனக் கூசாமல் பொய் சொல்லும் நடத்துநர்களுக்கு, பேருந்தில் எத்தனை இருக்கைகள் காலியாக உள்ளன, ஒற்றை நபர்களாக நிரம்பியிருக்கும் இருக்கைகள் எத்தனை, தன் எஜமானர்களுக்காக இருக்கையை உறுதி செய்து அமர்ந்திருக்கும் கைக்குட்டைகள், கைப்பைகள் பற்றிய கணக்கு வழக்குகளை பேருந்து வழித்தடம், எண் சகிதம் ரமனா பாணியில் நடத்துனர் எண்ண்உக்கு வாட்ஸ் ஆப் வாய்ஸ் மெசேஜ் அனுப்பிடும் பிரத்யேக செயலி ஒன்று அனைத்துப் பார்வையற்றவர்களின் மொபைல் போன்களிலும் நிறுவப்படும். கூடவே, அவர் தொடர்பான புகாரினை அரசுக்கு உடனடி மனுவாக அனுப்பும் வசதியும் செய்யப்பட்டிருக்கும்.
  14.  சாலைகள் கடக்கும் பார்வையற்றவர்களுக்கு உதவிடும் வகையில், பேசும் வசதியுடன் கூடிய தானியங்கி சென்சார் சிக்னல்கள் போக்குவரத்து நெருக்கடியை எதிர்கொள்ளும் அனைத்துச் சாலைகளிலும் ஏற்படுத்தப்படும். சிக்னலை மதிக்காமல் மீறிச் செல்ல முயலும் வாகன ஓட்டிகள் கண்டறியப்பட்டால், அவர்களின் பயணம்பாதியிலேயே நிறுத்தப்பட்டு, அவர்கள் அருகாமைச் சிறப்புப் பள்ளிகளுக்கு அனுப்பப்படுவார்கள். அங்கே அவர்கள் பார்வையற்ற குழந்தைகளுக்கு ஒரு நாள் முழுக்க கதைப்புத்தகங்கள் படித்துக் காட்ட வேண்டும்.
  15.  வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களுக்கும் ஒலிவழிக் காட்சி வர்ணனை (Audio Description) கட்டாயமாக்கப்படும். தவறும் திரைப்பட தயாரிப்பாளர்கள் தங்கள் மொத்தத் திரைக்கதையையும் பிரெயில் புத்தகமாக அச்சடித்து வழங்கிட வேண்டும்.
  16.  திரைப்படங்களில் இடம்பெறும் எல்லாக் கதாநாயகிகளுக்கு ஒற்றைக் குரலை வைத்தே டப்பிங் செய்வது தடைசெய்யப்படும். இவருக்கு இவர்தான் என்று வெவ்வேறு குரல்கள் நிர்ணயம் செய்யப்பட்டு, திரைப்படங்கள் வெளியிடுவது உறுதி செய்யப்படும்.
  17.  திரைப்படங்களில் இடம்பெறும் பார்வையற்ற கதாப்பாத்திரங்களில் பார்வையற்றவர்களை மட்டுமே பயன்படுத்துவது கட்டாயமாக்கப்படும். இது தவிர, முன்னணிக் கதாப்பாத்திரங்களில் பார்வையற்றோரை நடிக்கவைக்கும் திரைப்படங்கள், டப்பிங்் கலைஞராகப் பார்வையற்றவர்களைப் பயன்படுத்திக்கொள்ளும் தயாரிப்பாளர்களின்  படைப்புகளை அரசே விலைகொடுத்து வாங்கி வெளியிடும்.
  18.   தன்னால் அணுக இயலாத தரத்திலிருக்கும் இணையதளங்களை ஒரு பார்வையற்றவர் கண்டறிந்தால், அதனை அந்த நிமிடத்திலேயே அவரே முடக்கும் வகையிலான குறியீடு ஒன்று அவருக்கு அரசால் வழங்கப்படும். இணையத்தைப் பயன்படுத்தும் பார்வையற்றவர்கள் இவற்றை அரசிடம் விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம். இந்தக் குறியீட்டைத் தவறாகப் பயன்படுத்தும் பார்வையற்றவர்களின் காதுகள் ஒரு வாரத்துக்குக் கேளாச்செவியாக்கப்படுவதோடு, கைக் கட்டைவிரல்கள் இரண்டும் அதே காலத்தில் வளையாது நட்டமாக நிற்கும்படி ஏற்பாடு செய்யப்படும்.
  19.  பொது மற்றும் அரசியல் மேடைகளில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான கொச்சைச் சொற்களைப் பேசும் பேச்சாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தண்டனைக்குள்ளாக்கப்படுவார்கள். அவர்களுக்குப் பிரபல ஊடகம் ஒன்றில் நேரலை நிகழ்ச்சி அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும். அந்த நிகழ்ச்சியில் அவர்கள் யாகாவாராயினும் என்ற குறளை நாக்கைப் பிடித்துக்கொண்டு நான்குமுறை ஒப்புவிக்க வேண்டும்.
  20.  மாற்றுத்திறனாளிகள் நலன் என்று பொதுமைப்படுத்தாமல், பார்வையற்றவர்களுக்கான தனி அமைச்சகம் அமைக்கப்படுவதோடு, அவர்கள் அமைச்சரை எளிதில் சந்திக்க ஏதுவாக, அத்துறைக்கான அமைச்சர் ஒருவரும் நியமிக்கப்படுவார்.

இவை மட்டுமல்ல, அந்தந்த மாவட்டங்களில் உலாத்திக் கொண்டிருக்கும் எங்கள் குழுவினர் தரவிருக்கும் மேலும் பல பரிந்துரைகளோடு விரிவானதொரு தேர்தல் அறிக்கை பின்னர் வெளியிடப்படும்.

***ப. சாமானியன்.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.