Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் Uncategorized

கவிதை: அதிகாரத்தின் கனிவான கவனத்திற்கு

நன்றி அறிவிப்பு:
தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம்:
“பொறியின்மை யார்க்கும் பழியன்று”
நாள்: 24 ஆகஸ்ட் 2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு.

மீட்டிங் இணைப்பு:
https://us06web.zoom.us/j/81472698712?pwd=RUp9ShfeuqC1dwzNvTj5Cu5THtiSIG.1

Meeting ID: 814 7269 8712
Passcode: 202324

 இரவெல்லாம் விடாது

இறங்குகின்றன மழைத்தாரைகள்.

விடிந்தால் போராட்டம் என்ற திடுக்கிடலில்

விழித்துக்கொள்கிறேன் நான்.

ஊரெல்லாம் கழுவிக் கொண்டிருக்கும்

ஒப்பற்ற மழையால்

உள்ளுக்குள் நிறைகின்றன

ஒருநூறு கவலைகளும்

ஒன்றிரண்டு கவிதைகளும்.

மின்சாரக் கம்பியில் பற்றிய

தீத்தெறிப்பைப்போலவும்

அரங்கிலிருந்து அணியணியாய்

வெளியேறும் பாதுகைகளின்

உராய்வுகளைப் போலவும்

தரையில் சரசரக்கின்றன தாரைகள்.

மின்விசிறி அணைத்துவிட்டு,

ஜன்னலோரம் அமர்ந்து

மழைப்பேச்சு கேட்கத் தொடங்குகிறேன்.

இத்தோடு நின்றுவிடட்டும் என

எல்லாத் தெய்வங்களையும் வேண்டியாயிற்று.

அத்தனையையும் மாநாட்டுப் பந்தலுக்குள்

அதிகாரம் சரிகட்டிவிட்டதால்,

பொற்பல்லக்குச் சகிதம் பல் இளித்துப்

பொழிந்தபடியே இருக்கின்றன

புண்ணிய அருளை அவைகள்.

ஊர் தூங்கிக்கிடக்கிறது,

உடன்பட்ட தோழர்களுள் ஒருவன்

ஆள்வோரைப் போலவே,

ஆழ்ந்த உறக்கத்தில்

கரம் சிரம் நீட்டி என்

காலிப் படுக்கையதை

களவாடத் தொடங்கிவிட்டான்.

மேலும் இருவர்

குறட்டையால் இரவோடு

அரட்டையடித்துக்கொண்டிருக்கிறார்கள்;

கண்விழித்துக் கிடப்பதென்னவோ நானும்

கடைசி நேரத்தில் வாங்கிய

காவல்த்துறையின் அனுமதிக் கடிதமும்தான்.

வானிலைச் செய்திகள்

வரிசைகட்டி வந்து

வருத்தமுறச் செய்வதால்,

தொலைக்காட்சியை, செல்பேசியைத்

தொடுவதை நிறுத்திவிட்டேன்.

தூரத்தில் கேட்கும் இரயிலோசைகள்

திக்கெட்டிலும் இருந்து

சுமந்துவரும் நம்பிக்கைகளை

சுக்குநூறு ஆக்கிவிட்டது மழை.

வருவோர் போவோர்

பார்வையில் விழுந்து

பற்றிக்கொள்ள வேண்டும்

போராட்டக் கனல் என்று

பத்துக்கு இருபது அளவில்

பதாகைக்குச் சொல்லியிருந்தோம்.

படுக்கை விரிப்பாய்

பயன்படுத்திக்கொள்ளுங்கள் எனப்

பரிகசிக்கிறது

பருவம் தப்பிப் பொழியும்

பாழாய்ப்போன மழை.

புத்தம் புதிதாய்,

எழுச்சி எழுந்தெரிகிற

இசைப் பாட்டாய்,

எத்தனையோ முழக்கங்களை

எண்ணி அடுக்கியிருந்தோம்;

அத்தனையையும் கரைத்துண்ண்டு

அதிகாரத்தின் கெக்கலிப்பை வரவேற்று,

நீர்க்கம்பளம் விரிக்கிறது

நின்றாடும் மழை.

இனி,

நெடுஞ்சாலைகளோடு நீர்மூழ்கி,

நிமிடாந்திர வருணனைகள் தரவிருப்பதால்,

களத்துக்கு விரைவது கடினம் என

நகரத்து ஊடகர்கள்

நாசுக்கு காட்டிவிடுவார்கள்,

அதிகாரிகள் ஆசுவாசம் கொள்வார்கள்,

மழையோடு சேர்ந்துகொண்டு,

மாற்றாரும் தூவுவார்கள்

அறிவுரைப் பொழிவுகளை.

போராடும் நாளை எண்ணி,

எத்தனையெத்தனை நீள் பயணங்கள்,

எத்தனையெத்தனை உதவிக் கோரல்கள்,

எத்தனையெத்தனை சாலை கடப்புகள்,

நான்கில் ஒருபங்கு

கட்டணப் பயணச் சீட்டுக்காய்,

நடத்துநரோடு எத்தனை போர்கள்,

நடைபாதைச் சருக்கல்கள்,

முன் நெற்றிப் புடைப்புகள்,

ஊன்றுகோல் கணிப்புக்குத் தவறி,

உருண்டெழுந்த பள்ளங்கள்,

இத்தனை கடந்தும்

உரிமைக் கோரிக்கை வென்றெடுக்க

உணர்வோடு கரம் கோர்த்த

ஒப்பார்க் கூட்டத்தின் முன்

ஒத்திவைப்பு தீர்மானம் வாசிக்க

ஒத்திகை பார்க்கத் தொடங்குகிறது மனம்.

எனது

அமைதி இழந்த மனம் குறித்து,

அலட்டிக்கொள்ளவே இல்லை

அடாது பெய்யும் மழையும்,

ஆழ்ந்துறங்கும் நண்பர்களும்.

எண்ணக் கொசுக்கள்

ரீங்கரித்து,

ரத்தம் கேட்கும் இந்த

தனிமை இரவின்

நிசப்தம் கிழித்துக்கொண்டிருக்கும்

நீர்த்தாரைகள் எதுவும்

நெருங்க முடியாத என் உள்ளறையை

நிதானமாய் ஆட்கொள்கிறாள் அவள்.

துவண்ட என் முகத்துக்கு

தூரியென மடிகிடத்தி,

விரல் பரப்பித்

தலைகோதி,

முகம் குனிந்து,

பிரித்தும் பிரியாத இதழ்களா்ல்

பெருக்குகிறாள் குரல்ச்சுடர்.

“அடுத்தமுறை பார்த்துக்கலாம் விடுடா”

இருவருக்கும் இந்தச் சொல் தருணம்

எழுபதோ எண்பதோ தெரியாது;

எது நடந்தாலும்,

என்ன முயன்றாலும்

உரிமைத் தாகம்  ஒருபோதும்

கருணைப் பொழிவால் தணியாது.

***ப. சரவணமணிகண்டன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.