Categories
கட்டுரைகள்

ஏனென்றால், உன் பிறந்தநாள்

எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?

சகா: சேதுபாண்டி சார்! பிறந்தநாளுன்னு கூட்டிவந்தீங்க. இங்க வந்து பார்த்தா எல்லாரும் கடுப்பா இருக்காங்க. கேக் வெட்டலையானு கேட்க கேட்க கம்முனு இருக்காங்க. அப்படி யாருக்குத்தான் பிறந்தநாளு? சரி எதிரிக்காவே இருந்தாலும், இந்தநாள்ள அவரை வாழ்த்தி நட்பைப் புதுப்பிச்சுக்கலாமே!

சேதுபாண்டி: சரிதான் வாழ்த்திடுவோம்!

ஜிவோ 20 உனக்குப் பிறந்தநாள்!

ஜிவோ 20 உனக்குப் பிறந்தநாள்!

ஜிவோ 20 நீ எப்படி இருக்க!

பிறந்ததிலிருந்து தூங்கிட்டு இருக்கியே!

சகா: ஓ! அரசாணை 20. எத்தனை வருஷம் ஆச்சு சார்?

சேபா: வெளியாகி இரண்டு வருஷம் ஆச்சு. மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள், 17 ஏப்ரல், 2023 அன்னக்கி சட்டமன்றத்தில, சொன்னாரு.

சகா: என்ன சொன்னாரு?

சேபா: பணிவாய்ப்பில மாற்றுத்திறனாளிகளுக்கான 4 விழுக்காடு இட ஒதுக்கீட்ட முறையாக் கணக்குபண்ணி, சிறப்பு ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளை எடுத்துப் பணிநியமனம் வழங்கப்படுமுன்னு சொன்னாரு. சொன்னது மட்டுமில்ல, அதே வருஷம் ஜூலை 24 அன்னக்கி, ஜிவோ 20ஐ வெளியிட்டது அரசு.

ஜிவோவப் படிச்சதும் எங்களுக்கெல்லாம் தலைகாலு புரியல. செம்ம ஜிவோனு கொண்டாடித் தீர்த்துட்டோம்.

சகா: அப்படி என்ன சார் இருக்கு அதுல?

சேபா: அரசுத்துறைல இருக்கிற A, B, C, D இந்த நாளு தொகுதிகள்ள வேலை செய்யுற மொத்தப் பணியாளர்களைக் கணக்குபண்ணி, அதில மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்குறதுக்கு வசதியா, எல்லாப் பணியிடங்களையும் திரட்டி, சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி, ஒரு வருஷத்துக்குள்ள அந்தப் பணியிடங்களை நிரப்புறதுக்கான நடவடிக்கைகள எல்லா அரசுத்துறைகளும் எடுக்கணும். இதுதான் ஜிவோல சொல்லியிருக்கிறது.

சகா: ஆனா இங்க ஒன்னும் நடக்கல.

சேபா: ஆமா.

சகா: நாமலும் என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு கேட்கல?

சேபா: அது எப்படி சகா கேட்காம இருப்போம். அரசுவேலை நம்ம வாழ்வாதாரம் ஆச்சே!

போராடும் பார்வையற்றவர்கள்

ஜிவோ 20 வெளியாகி ஆறுமாசம் ஆச்சு. ஒரு நடவடிக்கையும் இல்லைனு சொல்லிப் போன வருஷம், பிப்பரவரி மாசம்,12ஆம் தேதிலருந்து சிஎஸ்ஜிஏபி 16 நாட்கள் போராட்டம் நடத்துனாங்களே! ஜிவோ 20ஐ உடனடியா அமல்ப்படுத்துங்கங்கிறதுதானே அவுங்க வச்ச முதல் கோரிக்கையே!

சகா: ஆமாமா, எனக்கும் நல்லா ஞாபகம் இருக்கு. அதைக் கேட்டதுக்குத்தான் “தம்பிங்க இப்போவே அப்பாயிண்ட்மண்ட் ஆர்டரைக் கொண்டுவாங்க, நாங்க உண்ணாவிரதத்தை முடிச்சுக்கிறோமுன்னு சொல்றாங்க”னு மீடியா முன்னாடி போராட்டத்தைக் கூசாம கிண்டல் பண்ணினாங்களே  ஒரு அமைச்சர் அம்மா.

சேபா: என்ன பண்ணுறது, நாம போராடுனாலே, அமைச்சர்ல இருந்து அதிகாரிங்க, ஏன் நம்மலோட சக நண்பர்களே “இவுங்களுக்கு வேற வேலையே இல்லையா”னு கிண்டல்தான் பண்ணுறாங்க. கூப்பிட்டு வேல கொடுத்தா வேணாமுனா சொல்லிறுவாங்க?

சகா: எப்போவும் அது அப்படித்தான் சார். ‘எல்லாருக்கும் என்ன நடக்குமோ, அது எனக்கும் நடக்காமலா போயிரும்ங்கிற மிதப்பு. அதைவிடுங்க. போராட்டத்தப்ப ஜிவோ 20 பற்றி அதிகாரிங்க ஏதாச்சும் சொன்னாங்களா?

சேபா: சொல்றது என்ன, ஒரு அறிக்கையே கொடுத்தாங்க.

சகா: அந்த அறிக்கையில என்ன இருக்கு?

சேபா: போராட்டம் தொடங்கின அடுத்தநாள், அதாவது பிப்பரவரி 13ஆம் தேதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில ஒரு அறிக்கை கொடுத்தாங்க.

அந்த அறிக்கைல, போன 2023 ஜூலை மாசம், 24ஆம் தேதி இந்த ஜிவோ வெளியாச்சுன்னும், 31ஆம் தேதியே நாங்க எல்லாத் துறைகளுக்கும் இந்த ஜிவோவப் பற்றி ஒரு கடிதம் எழுதிட்டோமுன்னும், 2023 செப்டம்பர் 4 தொடங்கி, 15ஆம் தேதிவரைக்கும் வீடியோ காட்சி வழியா எல்லாத் துறை உயர் அதிகாரிங்களோடவும் மீட்டிங் நடத்தி, இந்த ஜிவோவப் பற்றி எடுத்துச் சொன்னோமுன்னும், 103 துறை அதிகாரிங்க எங்ககிட்டைலாம் ஒண்ணுமே இல்லைனு வெற்றறிக்கை அனுப்பிட்டாங்கன்னும், அறிக்கையே அனுப்பாத 53 துறைகளுக்கு அதே வருஷம் அக்டோபர் 25, அப்புறம் டிசம்பர் மாசம் 22ஆம் தேதி நேரிலேயே கடிதம் கொடுத்ததாவும் சொல்லிருக்காங்க.

முக்கியமா அந்த அறிக்கைல என்ன சொல்லிருக்காங்கன்னா, 63 துறைகளிலருந்து வந்த கடிதங்கள்படி, தொகுதி ஏல 11, பீல 600, சீல 860, டீல 539னு மொத்தம் 2010 பணியிடங்களைக் கண்டுபிடிச்சிருக்கிறதாவும் சொல்லப்பட்டிருக்கு.

இந்த அறிக்கைய வச்சுக்கிட்டுதான், போராட்டக்களத்துக்கு வந்த அமைச்சர் அம்மா, மீடியா முன்னாடி ஜூலை மாசத்துக்குள்ள நடவடிக்கை எடுப்போமுனு உத்தரவாதம் கொடுத்தாங்க. அடுத்த ஜூலையே முடியப்போகுது ஒன்னும் நடக்கல.

சகா: ஜிவோவ அமல்ப்படுத்தி, சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தினா 2010 மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வேல கிடைக்கும். அப்படித்தான சார்?

சேபா: அப்படித்தான். ஆனா, 2010தானா?

சகா: அதுல என்ன சந்தேகம்?

சேபா: சந்தேகமில்ல சகா. உண்மையத்தான் சொல்றேன். இந்தப் பிரச்சனை இன்னிக்கி நேத்து தொடங்கினது இல்ல.

சகா: அப்புறம்?

சேபா: இதப் பற்றி நாம முழுசா தெரிஞ்சுக்கணுமுனா ஒரு நாற்பது நாற்பத்தஞ்சு வருஷம் பின்னால போகணும்.

சகா: ஓ! நாற்பத்தஞ்சு வருஷப் பஞ்சாயத்தா இது. சொல்லுங்க சொல்லுங்க.

சேபா: சிஎஸ்ஜிஏபி, பார்வையற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கம் தொடங்கின 1980ல இருந்தே பார்வையற்றோருக்கான பணிவாய்ப்பத் தொடர்ந்து அரசாங்கத்திட்ட போராடிக் கேட்டுட்டேதான் இருக்காங்க. அவுங்களோட தொடர் போராட்டத்தினால, 1981ஆம் வருஷம் ஆகஸ்ட் மாசம் 14ஆம் தேதி, சமூகநலத்துறைகிட்ட இருந்து அரசாணை 602 வெளிவந்துச்சு.

அந்த அரசாணை மூலமா, அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள், வாரியங்கள், அப்புறம் பஞ்சாயத்து, முனிசிபல், கார்ப்பிரேஷன்லாம் சொல்றோமே அந்த உள்ளாட்சி அமைப்புகள், அரசோட நிதி உதவியை வாங்கிக்கிற நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் இது எல்லாத்திலையும் இருக்கிற வேலை வாய்ப்பில ஊனமுற்றோருக்கு 3 விழுக்காடும், அதுல பார்வையற்றோருக்கு ஒரு விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கணுமுனு உத்தரவு போட்டாங்க.

சகா: இதுதான் தொடக்கப்புள்ளி?

சேபா: ஆமா. இதுல என்ன விஷேஷமுனா, இந்த ஜிவோ வெளியாகி 15 வருஷத்துக்கு அப்புறமாத்தான், நாட்டிலயே முதல்முதலா 1995ல ஊனமுற்றோருக்கான சட்டம் PWD Act 1995 வெளியாச்சு. அதில இருக்கிற சட்டப் பிரிவு 33 இந்த இட ஒதுக்கீடு பற்றிப் பேசுது.

அப்புறம் ஒரு 20 21 வருஷத்தில அந்தச் சட்டத்த திருத்தி, ஒரு சட்டம் கொண்டுவந்தாங்க. அதுதான் இப்போ நடைமுறைல இருக்கிற மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் 2016 RPD Act 2016.

இந்த சட்டத்தோட பிரிவு 34 அரசுப்பணில ஊனமுற்றோருக்கு 3 இல்ல, 4 விழுக்காடு இட ஒதுக்கீடு கொடுக்கணுமுனு சொல்லுது.

சகா: கொஞ்சம் அதிகமாக்கிட்டாங்க?

சேபா: அப்படிலாம் சொல்லிட முடியாது சகா. 95 சட்டம் ஊனமுற்றவங்களை ஏழு வகையா குறிப்பிட்டுச்சு. ஆனா இப்போ நடைமுறைல இருக்கிற 2016 சட்டம் ஊனமுற்றவங்களை 21 வகையாவும்், அதில குறிப்பிடத்தக்க ஊனமுற்றோர், அதாவது பெஞ்ச்மார்க் டிசைபிலிட்டீஸ் கிட்டத்தட்ட 10 வகையாவும்் அடையாளப்படுத்துது.

சகா: பெஞ்ச்மார்க் டிசைபிலிட்டீஸ்! வார்த்த புதுசா இருக்கே?

சேபா: புதுசுதான். ஆனா இதையெல்லாம் ஒவ்வொரு மாற்றுத்திறனாளியும் தெரிஞ்சு வச்சிருக்கணும். அதாவது, சட்டத்தில சொல்லிருக்கிற 21 வகையான மாற்றுத்திறனாளிகள்ல சில வகை மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் கல்வியில 5 விழுக்காடும், வேலைவாய்ப்பில 4 விழுக்காடும் இட ஒதுக்கீடு உண்டுன்னு சட்டம் சொல்லுது.

சகா: எல்லாம் சரியாத்தானே இருக்கு. அப்புறம் என்ன பஞ்சாயத்து?

சேபா: மேலோட்டமாப் பார்த்தா எல்லாம் சரியா இருக்கிற மாதிரித்தான் தெரியும். இந்த இடத்தில் ஒரு விஷயத்த நாம முக்கியமா கவனிக்கணும் சகா. ஒதுக்கீடு மூனா இருந்த காலத்தில இருந்தே அரசோட போக்கு என்னானா மாற்றுத்திறனாளிகளுக்கு அவுங்களுக்குன்னு அடையாளம் காணப்பட்டிருக்கிற பணியிடங்கள்ல இருந்து 3 விழுக்காடு, இப்போ 4 விழுக்காடு கணக்குப் பார்த்துக் கொடுத்தாப் போதும்கிறதுதான்.

ஆனா மொத்தப் பணியிடங்களக் கணக்குப்போட்டு,அதில 3 விழுக்காடு, இப்போ நாளு விழுக்காடு கொடுக்கணுமுனு  மேல சொன்ன ரெண்டு சட்டங்களும் சொல்லுது. அரசு எப்பவுமே இதைப் பற்றிக் கவலப்பட்டதே  கிடையாது. அது மத்திய அரசானாலும் சரி, மாநில அரசானாலும் சரி.

அதனால தேசியப் பார்வையற்றோர் இணையம், என்எஃப்பி இட ஒதுக்கீடு சம்பந்தமா உச்சநீதிமன்றத்தில ஒரு வழக்குப் போட்டாங்க. அந்த வழக்கோட தீர்ப்பு 2013ஆம் வருஷம் அக்டோபர் 8ஆம் தேதி வெளியாச்சு.

அந்த தீர்ப்பு என்னானா, அரசாங்கம் எப்போ வேலை வாய்ப்பு தொடர்பா அறிவிப்பு வெளியிட்டாலும், அந்த அறிவிப்பில இருக்கிற மொத்தப் பணியிடங்களையும் கணக்குப் போட்டு, அதில இருந்துதான் மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டக் கணக்கு பண்ணணும். ஒரு குறிப்பிட்ட வேலைக்கு ஒரு மாற்றுத்திறனாளி தகுதி உடையவரா இருந்தும், அவரால அந்த வேலையைச் செய்ய முடியாதுன்னு அரசு நினைச்சா, அவருக்கு அந்த துறையிலேயே அடையாளம் காணப்பட்ட பணியிடத்தக் கொடுக்கணும்.

சென்னை உயர்நீதிமன்றமும் வேறொரு வழக்கில இதையே உறுதிப்படுத்தி, 2013, டிசம்பர் 19ஆம் தேதி ஒரு இடைக்கால தீர்ப்பும் கொடுத்தாங்க.

சகா: எல்லாம் புரியுது. ஆனா இந்தப் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள்னா என்ன சார்?

சேபா: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னால, காலங்காலமா அரசாங்கம் எத்தனையோ அறிவிப்பு மூலமா எவ்வளவோ வேலைகளைப் போட்டிருக்காங்க. அப்போலாம் நமக்கு ம்மொத்தப் பணியிடத்தக் கணக்குப் பண்ணலை இல்லையா? அதனால, அந்தப் பழைய பணியிடங்களையெல்லாம் மொத்தமாக் கணக்குப் பண்ணி, கொடுக்கத் தவறின பணியிடங்கள் எத்தனைனு கண்டுபிடிச்சா அதுக்குப் பேருதான் பின்னடைவுக் காலிப்பணியிடங்கள் பேக்லாக் வேக்கன்சீஸ்.

சகா: கணக்குப் பண்ணணும், கணக்குப் பண்ணணுமுனு சொல்றீங்களே! எப்போலேருந்து கணக்குப் பண்ணனும்?

சேபா: சட்டப்படி, முதல் சட்டம் வந்த 1995லேருந்துதான் கணக்குப் பண்ணிருக்கணும். அப்போ 3 விழுக்காடு, 2016குப் பிறகு புதுச் சட்டம் வந்துட்டதால 4 விழுக்காடு.

சகா: கணக்குப் பண்ணிக் கொடுத்தாங்களா?

சேபா: எங்க கொடுத்தாங்க? நீதிமன்றத் தீர்ப்ப நடைமுறைப்படுத்தச் சொல்லி, சிஎஸ்ஜிஏபி 2013, 15, 18லேலாம் போராட்டம் நடத்துனாங்க. அதுக்கு அப்புறம் அந்த தீர்ப்புகள நடைமுறைப்படுத்துறதாச் சொல்லி, அரசாணை 260, 21, 107, 108னு பல அரசாணைகள் வந்துச்சு.

அந்த அரசாணைகள நடைமுறைப்படுத்துங்கன்னு சொல்றதுக்கே பல போராட்டங்கள் நடத்த வேண்டியிருக்கு.

சகா: இப்போகூட தமிழ்நாடு பார்வையற்றோர் இயக்கம் சிறப்பு ஆட்சேர்ப்பு நடத்தச் சொல்லிப் போராடப்போறாங்களாமே?

சேபா: ஆமாமா சகா. நிச்சயமா அந்தத் தம்பி தங்கைங்களுக்கு நாம மனசார வாழ்த்துச் சொல்லணும். கண்டிப்பா உங்க போராட்டம் வெற்றிபெறும் தம்பிங்களா!

சகா: சார்! அப்படியே போய்ட்டா எப்படி? கேக்கு?

சேபா; ஜிவோ 20 மூலமா சிறப்பு ஆட்சேர்ப்பு தேர்வு நடத்தி, எ்ல்லோரும் வேலைக்குப் போகட்டும், பிரியாணியே வாங்கித் தாறேன்.

சகா: என்னமோ அல்வா கொடுக்காம இருந்தா சரி.

சேபா: நீங்க என்னச் சொல்லலைல?

சகா: நிச்சயமா இல்ல சார்.

***அரசாணை எண் 20 குறித்த திரு. சேதுபாண்டி அவர்களின் கட்டுரையைப் படிக்க:

அரசாணை 20ஐ படிக்க மற்றும் பதிவிறக்க:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.