Categories
seminar Uncategorized

நிகழ்வு: உள் அரங்கும், உள்ள அரங்கும்

உபசரிப்பு என்றால், “வாங்க வாங்க” என்று கைபிட்இத்து, அழைத்துச் செல்வதன் பொருட்டு சுமந்து செல்கிற பாவனையில், “பார்த்து காலை மெதுவா தூக்கி வையுங்க, படி, இன்னொரு படி” என நொடிக்கு நொடி சங்கடப்படுத்துகிற உரையாடல்களோ செய்கைகளோ எவரிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.

மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கு

மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கு என்கிற புதிய முயற்சியில் எனக்கும் அழைப்பு வந்தபோது இரு மனதாகத்தான் இருந்தேன்.

தனிச்சொல்,

பார்வையற்றோருக்கான அறிவே துணை ஆய்வுமையம், அமைப்புசாரா மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நல்வாழ்வுச் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்த அந்த இரண்டு நாள் நிகழ்வு உண்மையில் பயிலரங்கா அல்லது ஒரு கலந்துரையாடல் களமா என்றால், இரண்டும்தான் என்று சொல்ல வேண்டும்.

இரண்டு வாரகாலத்துக்கு முன்பே பார்வையற்றோர் அதிகம் புழங்கும் தொடுகை வாசகர் வட்டம், விரல்மொழியர் போன்ற வாட்ஸ் ஆப் குழுக்களில் இதுபற்றிய அறிவிப்பு இருந்தது. அடுத்த ஒரு வாரத்தில், ஐயா சுகுமாறன் அவர்களும், பேராசிரியர் திரு. ஜவகர் அவர்களும் என்னை அழைத்து, பயிலரங்கில் ஒரு படைப்பாளராக நான் பங்கேற்க வேண்டும் எனக் கேட்டார்கள். “இதெல்லாம் நமக்குக் கொஞ்சம்கூட டேலி ஆகாத மேட்டராச்சே” என உள்ளிருந்து ஒருத்தன் சிரித்தான். அரைமனதோடு “சரி சார் வாறேன்” என்று சொல்லிவிட்டேன்.

பங்கேற்பாளர்களின் போக்குவரத்து மற்றும் பிற வசதிகளை ஒழுங்குபடுத்தும் வகையில், மாற்றுத்திறனாளர் படைப்பாக்கப் பயிலரங்கு என்ற ஒரு வாட்ஸ் ஆப் குழு உருவாக்கப்பட்டு அதில் நானும் இணைக்கப்பட்டிருந்தேன். வேறு மாநிலத்துக்குப் போனவர்கள், நம்மூர் சாதி சனத்தைத் தேடுவதுபோல, இந்தக் குழுவில் நம்முடைய பழக்கப் பரப்பினர் யாரேனும் இருக்கிறார்களா எனத் தேடிப் பார்த்தேன். தங்கை செலின்மேரி அலைபேசி எண் என் காதில் பட்டதும் கொஞ்சம் புத்துணர்வு பிறந்தது.

உடனே அழைத்தேன். அவர் ஜூன் 14 மற்றும் 15 என இரண்டு நாள் தங்கப்போவதாகச் சொன்னார். சரி நாம் ஒருநாள் மட்டும் பங்கேற்றுத் திரும்பலாம் என்று முடிவு செய்தேன். குழுவில், எழுத்தாளர் ஐயா தேனி சீருடையான், மதிப்புமிகு மூத்தவர் ஐயா சுகுமாறன், பேராசிரியர் முருகேசன், பேராசிரியர் ரமேஷ் எனப் படைப்பாளர் வரிசை ஒருபக்கம். தங்கை செலின்மேரி, திரு. வெங்கடேசன், திரு. மகாலிங்கம் திரு. திணேஷ் என செயல்பாட்டாளர்கள் வரிசை மறுபக்கம். இதில் இரண்டாம் வரிசையில் அமர்ந்துகொள்வதே ஆகப்பொருத்தமாய் தோன்றியது எனக்கு.

ஜூலை 13, வெள்ளிக்கிழமை இரவு பாண்டியன் விரைவு ரயில்மூலம் அதிகாலை 4 மணிக்கெல்லாம் திண்டுக்கல் போய்ச்சேர்ந்தேன். திண்டுக்கல் வந்துவிட்டால், அழையுங்கள் என ஓரிரு எண்களைக் குழுவில் பகிர்ந்திருந்தார் பேராசிரியர் ஜவகர் அவர்கள். எனக்கோ இந்த அதிகாலையில் ஏன் தொந்தரவு செய்ய வேண்டும் என்கிற எண்ணம். கொஞ்சநேரத்தைப் பேருந்து நிலையத்தில் கழித்தேன். பிறகு ஒரு தானி பிடித்து காலை 5 மணிக்கு புனித சூசையப்பர் தேவாலயம் அடைந்தேன். அங்கே இரவுக்காவலர் என்னை வரவேற்றார். “சார் நிகழ்ச்சியெல்லாம் காலை 9 மணிக்குத்தான். நீங்க இப்பவே வந்துட்டீங்க” என்றார். எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.

கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு, ஜவகரை அழைத்தேன். “தோழர் அப்பவே கூப்பிட்டிருக்கலாமே! என்ற வினவலோடு நுழைவாயில் வந்து என்னை அழைத்துப்போனார் அவர்.  வளாகத்தில் இருந்த ஒரு படிப்பகத்துக்க்உள் நுழைந்தோம். அங்கே என்னை அருட்தந்தை

திரு. பிலிப் சுதாகர்

வரவேற்றார். எல்லா அருட்தந்தைகள் போல “வாங்க கையைக் கொடுங்க,” எனத் தோள் தட்டித் தன் உபசரிப்புக் கடமையை முடித்துக்கொள்பவர், நிகழ்வு ஏற்பாட்டாளர் என்பதால் கொஞ்சம் கூடுதலாகப் பேசுகிறார் என்றுதான் நினைத்தேன். ஆனால், அவர் அருட்தந்தை மட்டுமல்ல, ஒரு புரட்சியாளர் என்பதையும், அனைவரோடும் மிக சகஜமாகப் பழகக்கூடியவர் என்பதையும் அடுத்தடுத்த உரையாடல்களில் கண்டுகொண்டேன்.

தனிச்சொல்லின் அங்கத்தவர்களான ஆய்வியல் மாணவர்கள் பிரதீப் டெல்லி பல்கலைக்கழகம், ஹரிதா அலிகார்ட் பல்கலைக்கழகம் என ஒவ்வொரு தோழமைகளையும் அழைத்து வந்து அறிமுகம் செய்துவைத்த ஜவகர் அவர்கள், நான் தங்க வேண்டிய அறைக்கு என்னை அழைத்துப்போனார். அறை முதல் மாடியில் இருந்தது. அங்கே எது எது எங்கெங்கே இருக்கிறது என்ற செயல்முறை வழிகாட்டலை சில நிமிடத்தில் முடித்துவிட்டு, என் அறைவிட்டு அகன்றார். விசாலமான தனியறை. இரண்டே இரண்டு படுக்கைகள். வசதியான ஏற்பாடுதான். கூடுதலாக ஒருநாள் இருக்கும்படி வந்திருக்கலாமோ! மனதின் ஒருநொடி அங்கலாய்ப்பு.

சில நிமிடத் தனிமையைப் பயன்படுத்தி, நான் வந்துசேர்ந்த சேதியை வீட்டுக்குச் சொல்லிவிட்டேன். சாயலாம் என்றபோது கதவு தட்டும் சத்தம், திறந்தால் வெளியே தோழர் பிரதீப்புடன் வாலாஜா வெங்கடேசன் அவர்கள். அறைபற்றி ஜவகர் எனக்கு அளித்த செயல்முறை விளக்கத்தை வெங்கடேசனுக்குத் தொடங்க எத்தனித்தார் பிரதீப். “அது ஒண்ணும் பிரச்சனை இல்லைஅதுதான் சார் இருக்காறே நான் தெரிஞ்சுக்கிறேன்” என பிரதீபை அனுப்பிவிட்டார் வெங்கடேசன். கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் இருவரும் சகஜமானோம்.

இந்தப் பயிலரங்கின் மூலம் யார் யாருக்கு என்ன கிடைத்ததோ தெரியாது. எனக்கு வாலாஜா வெங்கடேசன் அவர்களுடன் ஒரு நட்பு கிடைத்தது. தனி வாழ்க்கை, குடும்பம் எனத் தொடங்கி, பட்டதாரிகள் சங்கம், பார்வையற்றோரும் தமிழக அரசியலும் என்பதாக உரையாடல்வழியே ஒருவரை இன்னொருவர் இழுத்துப்போனபடியே இருந்தோம். இத்தோடு அறிமுகப்படலத்தை முடித்துக்கொண்டு, நேரடியாக நிகழ்வுக்கு வந்துவிடுகிறேன்.

முன்பே வந்து தங்கியவர்கள் தவிர, நிகழ்வுக்கு நேரடியாக வந்தவர்களும் சிலர். வந்தவர்களுக்கு உணவளித்து, அவர்களை உபசரித்து, நிகழ்வைத் தொடங்கவே காலை பதினோரு மணியாகிவிட்டது.

உபசரிப்பு என்றால், “வாங்க வாங்க” என்று கைபிட்இத்து, அழைத்துச் செல்வதன் பொருட்டு சுமந்து செல்கிற பாவனையில், “பார்த்து காலை மெதுவா தூக்கி வையுங்க, படி, இன்னொரு படி” என நொடிக்கு நொடி சங்கடப்படுத்துகிற உரையாடல்களோ செய்கைகளோ எவரிடமும் இல்லை. எல்லோரும் இயல்பாகவே இருந்தார்கள்.

படைப்பாளர்கள், பங்கேற்பாளர்கள், தனிச்சொல் சார் நிகழ்வு ஒருங்கிணைப்பாளர்கள் என அனைவரையும் கூட்டிப் பார்த்தால், 20ஐத் தாண்டாத எண்ணிக்கைதான். எனவே, ‘சொல்கிறோம் கேட்டுக்கொள்ளுங்கள்’ என்பதெல்லாம் அங்கே செல்லுபடியாகாது. நிகழ்வு தொடக்கம் முதல், இறுதிவரை உரையாடலும் உரையாடல் நிமித்தமும் என்ற ரீதியில்தான் இருந்தது. எண்ணிக்கை குறைவு மட்டுமல்ல, பங்கேற்பாளர்களாக வந்திருந்தவர்களும் மிகச் சிறந்த படைப்பாளர்கள் என்பதால், அதுதான் அங்கே சாத்தியம். ஆனால், ‘உரையாட வாருங்கள்’ என அழைத்திருந்தால் இந்த எண்ணிக்கையைக்கூட அடைந்திருக்க முடியாது என்பதால், பயிலரங்கு, பயிற்சிப் பட்டறை என்றெல்லாம் பெயர்சூட்ட வேண்டியிருக்கிறது போலும்.

கவிஞர் யவனிகா ஸ்ரீராம் மற்றும் பிலிப் சுதாகர்

வந்திருந்த ஒவ்வொருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். கவிஞர்

யவனிகா ஸ்ரீராம்

ஐயா பழமொழி ராமசாமி

இருவரும் முன்வரிசையில் அமர்ந்திருந்தார்கள். அறிமுக நிகழ்வில் ஐயா தேனி சீருடையான், நான் மற்றும் அருட்தந்தை பிலிப் சுதாகர் பேசினோம்.

தேனி சீருடையான் பேசுகிறார்

நான் என்ன எழுதினேன், ஏன் எழுதுகிறேன் என்ற பொருண்மையைத் தழுவிச் செல்வதாக இருந்தது ஐயா

தேனி சீருடையான்

அவர்களின் பேச்சு. நானோ, ‘ஏன் பார்வையற்றவர்கள் எழுதவேண்டும்?’ என்ற வினாவுக்கு விடையளிப்பதையே என் நோக்கமாகக்கொண்டு பேசினேன். அத்தோடு, பார்வையற்றோருக்கான வாசிப்புத் தளங்கள் தற்போதைய நவீன யுகத்தில் விரிந்திருப்பது பற்றியும் எடுத்துச் சொன்னேன். கூடவே, தன்னுடைய அனைத்துப் படைப்புகளையும் பார்வையற்றோரும் அணுகும் விதமாகத் தொடர்ந்து வழங்கிவரும் ஜெயமோகன் குறித்தும், எல்லாவற்றிற்கும் பொங்கிப் பாய்கிற என்னை என் மனதைச் செழுமைப்படுத்திய எஸ். ராமகிருஷ்ணன், இமயம் போன்றோரின் எழுத்துகள் குறித்தும் சிலாகித்தேன்.

அருட்தந்தை அவர்கள், தங்கள் தமிழ்ப்பண்பாட்டு மையத்தின்  செயல்பாடுகள் குறித்து எடுத்துச் சொன்னார். அந்த மையத்தின் சார்பில் ஆலய வளாகத்தில் ஒரு நூலகம் வைத்திருக்கிறார்கள். அதன்வழியே போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகும் நிறைய இளைஞர்கள் பயன்பெறுகிறார்கள். மேலும், திண்டுக்கல் பகுதியில் ஏராளமான சேவைகளைச் செய்வதிலும் அமைப்பு முன் வரிசையில் நிற்கிறது.

ப. சரவணமணிகண்டன் பேசுகிறார், உடன் பிலிப் சுதாகர், சுகுமாறன், தேனி சீருடையான்

தேனிர் இடைவேளைக்குப் பிறகு கவிஞர் யவனிகா ஸ்ரீராம் அவர்களின் ஒருங்கிணைப்பில் கவிதை பற்றிய உரையாடல் தொடர்ந்தது. அவர் தனது சில கவிதைகளை வாசித்துக் காட்டினார். மாற்றுத்திறனாளர்களும் கவிதைப் பரப்பும் என்ற பொருண்மையில் தொடங்கிய உரையாடல், காலனீய பின்னவீனத்துவம் ஒரு சாமானியனின் வாழ்வில் செலுத்தும் ஆதிக்கம் பற்றியதாக விரிந்தது. கவிதை எழுதுவதில் ஒவ்வொருவருக்கும் இருக்கிற ஆர்வத்தை ஒவ்வொருவராகப் பகிர்ந்துகொண்டோம். இந்த உரையாடலின் வழியே, பார்வையின்மை குறித்தும், பார்வையற்றவர்கள் பற்றியும் தான் கூடுதலாக நிறையத் தெரிந்துகொண்டதாகச் சொல்லிச் சென்றார் கவிஞர்.

உணவு இடைவேளைக்குப் பிறகு பேராசிரியர் திரு. ரமேஷ் மற்றும் பேராசிரியர் திரு. முருகேசன் இருவரும் தங்களை அறிமுகம் செய்துகொண்டார்கள். கூடவே, எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் ஜெயமோகன் இருவரும் செய்வது காயடிப்பு அரசியல் என்ற குண்டைத் தூக்கிப் போட்டார்கள். அன்றாடச் சழக்குகளிலிருந்து பெற்றுக்கொள்ளும் அன்பையும் நிராகரிப்பையும் சிலாகித்துத் திரியும்  என்னைப் போன்ற அரசியல் நீக்கம் செய்யப்பட்ட சாமானியனையும், கோட்பாடுகளாலும், இசங்களாலும் தங்களைக் கூர் தீட்டிக்கொண்ட அறிஞர் பெருமக்களையும்  ஒரு குடையீன்கீழ் அரவணைத்து, பன்மைத்துவத்தை அறிவின் துணைகொண்டு ஆராய முயல்கிறது தனிச்சொல் எனப் புரிந்துகொண்டதால், கத்தியை உறையிலிருந்து எடுக்கவில்லை நான்.

பேராசிரியர் ரமேஷ், பேராசிரியர் முருகேசன், பழமொழி ராமசாமி, வெங்கடேசன், மகாலிங்கம்,

அடுத்ததாக, கவிதை அமர்வு தொடர்ந்தது ஆனால் சிறு மாற்று ஏற்பாட்டுடன். வந்திருந்தவர்களை மூன்று அல்லது நான்குபேர் கொண்ட குழுக்களாகப் பிரித்து, அந்த நாள்வருள் இருவர் பங்கேற்பாளர், ஒருவர் நெறியாளர், மற்றொருவர் உற்றுநோக்காளர் (observer) நிற்க! ஆங்கிலத்தில் அடைப்பிட வேண்டியதன் அவசியம். பின்னடைவு தமிழுக்கா தமிழனுக்கா தெரியவில்லை. விலகல்தான் என்றாலும் விளம்பாமலும் இருக்க முடியவில்லை. சரி விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.

இந்தப் பகுப்புமுறையே சிறப்பாக இருந்தது. காரணம், ஒவ்வொரு குழுவும் ஒரு கொடுக்கப்பட்ட கால அளவில் உரையாடல் நிகழ்த்த வேண்டும். பின்னர் அனைவரும் ஒன்றுகூடுவோம். ஒவ்வொரு குழுவாகத் தங்களுக்குள் விவாதிக்கப்பட்டதைப் பொதுவில் வைக்க வேண்டும். அப்படியான ஏற்பாட்டின்போது, ஒவ்வொரு குழுவுக்குமான தருணங்களில், முதலில் உரையாடல்வழிப் பெற்றுக்கொண்டது குறித்துப் பங்கேற்பாளர் பேசுவார். என்ன உரையாடினோம் என்பதுபற்றி நெறியாளர் நினைவுகூர்வார். மொத்த உரையாடலையும், உரையாடப்பட்ட பொருண்மை குறித்து, இதுவரை தன் அறிவுக்கலத்தில் சேமிக்கப்பட்டிருப்பதையும் இணைத்துத் தொகுத்து, தான் என்ன முடிவுக்கு வருகிறேன் என்பதை அந்த உற்றுநோக்காளர் முத்தாய்ப்பாய் முடிப்பார்.

“கவிதை படைப்பதற்கான வரையறைகள்” என்பதுதான் அமர்வின் பொருண்மை. ஒவ்வொரு குழுவும் தங்கள் அறிக்கையைச் சமர்ப்பித்து முடிக்கயில், அந்தக் குழுவைச் சேர்ந்த பங்கேற்பாளர் ஒருவர் அமர்வின் மூலம் தனக்குள் உதித்த ஒரு கவிதையைச் சொல்ல வேண்டும். அந்தவகையில், ஒவ்வொரு குழுவிலிருந்தும் வெவ்வேறு வண்ணத்தில் கவிதைகள் வந்தன. தங்கை செலின் அழகியல் சார்ந்த ஒரு சிறு கவிதை பாடினார். புகழ்பெற்ற ஆங்கிலக் கவிஞரின் தொனியும் அழகும் இருப்பதாகப் பேராசிரியர் ரமேஷ் சிலாகித்தார். எங்கள் குழுவில் இடம்பெற்றிருந்த ஆய்வு மாணவர் தினேஷும் ஒரு கவிதைசொன்னார்.

“கவிதை படைப்பதற்கான

வரையறை எது என்றுதான்,

உரையாடத் தொடங்கினோம்.

முடிக்கும்போதுதான் தெரிந்தது,

எவ்வித வரையறைக்குள்ளும்

எப்போதும் சிக்காத

எழில்நிறைப் புலம்தான்

கவிதை என்று.”

“முடிச்சு விட்டீங்க போங்க” என எவரெவர் மனதுக்குள் குரல்கள் கேட்டிருக்குமோ தெரியவில்லை.

பாலாஜி மற்றும் செலின்மேரி

முதல்நாள் அமர்வுகள் முடிந்தன. இன்னொரு நாள் தங்கலாம்தான், ஆனால் அதற்கான ஏற்பாட்டுடன் வரவில்லை நான். “எதற்கும் கூடுதலாக ஒரு சட்டை வச்சுக்கங்களேன்” புறப்படும்போது இணையர் சொன்னது நினைவுக்கு வந்து, நடுமண்டையில் குட்டுவதுபோலவே இருந்தது. மிக்க மந்திரமில்லை என்பது தந்தை சொல் மட்டும்தானா?

“அரைமனதுதான் என்றாலும் புறப்படும் முடிவுக்கு வந்துவிட்டேன். “இன்னும் ஒரே ஒருநாள்தான், அன்புக் கோரிக்கை” என அந்தப் பாதியையும் பக்குவமாய் காலி செய்தார் தோழர் ஜவகர். டீ ஷேட் போட்டு அடுத்தநாளைச்  சமாளிப்பது என முடிவுக்கு வந்தவனாய், முகம் கழுவி முடித்து கீழே போனேன்.

படிப்பகத்தில் மூத்தவர்

ஐயா சுகுமாறன்

தலைமையில் ஆன்ற பெருமக்கள் அமர்ந்து ஆய்வுநோக்கில் பார்வையற்றோர் மற்றும் பார்வையின்மை குறித்து உரையாடிக்கொண்டிருந்தார்கள். குட்டி குட்டியாய் தலைப்பிடல்கள், கோட்பாட்டு விளக்கங்கள் எனச் சென்றது உரையாடல். அத்தனயும் மேலையிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவை என்பதால், களப்பொருத்தப்பாட்டில் கன்றிப்போய் இருந்தன. அதனாலேயே ஆய்வு, கோட்பாடு என்றால் எனக்கு எப்போதும் அழற்சிதான். முரணை முடிந்தவரை சுட்டினேன். மூச்சுத் திணறுவதாய் உணர்ந்தபோது, சாப்பிடப் போய்விட்டேன். இயன்றதைச் செய்வதில் எப்போதும் முன்வரிசையில் இருப்பவன் நான்.

இரண்டாம் நாள் அமர்வைச்  சிறுமலை அடிவாரத்தில் ஒருங்கிணைத்திருந்தார்கள். வாகனங்கள் ஏற்பாடு செய்து, எங்களை அழைத்துப் போனார்கள். தேடித்தேடி ஒவ்வொருவரையும் அவர்களின் உடைமைகளோடு வாகனத்தில் ஏற்றுகையில், ஜவகர், பிரதீப், அஜய் சுந்தர், யமுனா, ஹரிதா இன்னும் பெயர் சொல்ல மறந்த தனிச்சொல் அங்கத்தினர் ஒவ்வொருவரின்  அன்பும், அக்கறையும் நிதானமும், நேர்த்தியான ஒருங்கிணைப்பும்  வெளிப்பட்ட வண்ணம் இருந்தன.

வாகனத்தில் ஏறுகிற படலத்துக்குக் கூடுதல் வண்ணமும் வசீகரமும் சேர்த்துக்கொண்டிருந்தது ஒரு குரல். சகோதரி குழந்தை என்றார்கள். எனக்கோ அன்னை என்றே பட்டது.

“இ்ப்போ நாம இவுங்க பண்ணைக்குத்தான் போறோம்” என அருட்தந்தை சுதாகர் எனக்கு அவரை அறிமுகம் செய்து்வைத்தார். “ஆமாம், இப்போ அது திருவள்ளுவர் பண்ணை” என்றார் சகோதரி. வழிநெடுக, வாகனம் எங்கே இருக்கிறது, வளைவுகளில் என்ன இருக்கிறது, எங்கள் உள்ளம் அறிந்து அவர் உரைத்துக்கொண்டே வந்தது வியப்பாக இருந்தது. அத்தனைபேரும் எப்படி இத்தனை புரிதல்களுடன் இருக்கிறார்கள் என்று நான் உள்ளுக்குள் வியந்துகொண்டிருந்தேன். எனது வியப்புக்கு விடையாய் அந்தப் பெயரைச் சொன்னார்கள்.

‘கோவை ஞானி’.

இறந்தும் உயிர்வாழும் கருத்தாளனைத் தொழுதுகொண்டது மனம்.

பண்ணையைச் சுற்றி வந்தோம். நீண்ட நாளைக்குப் பின் ஒரு சுக அனுபவம். ஆங்காங்கு பள்ள மேடுகளில் கால்கள் இடறின என்றாலும், உடன்வந்த தனிச்சொல் தோழர்கள் எவரும் பதறவே இல்லை என்பது மேலும் உத்வேகத்தைத் தந்தது. கூடுதல் இணைப்பாக ஐயா சுகுமாறன் அவர்களோடு ஈழம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்த கருத்துப் பரிமாற்றங்கள். எப்போது உரையாடினாலும் சுவாரசியம் குன்றாமல் தன்னுடைய கோணத்துக்கு நம்மையும் அழைத்துச் செல்வதில் வல்லவர், வாழும் ஞானி என்றுகூடச் சொல்லலாம். வசிப்பிடம் கோவை என்பதும் நமது கருத்துக்கு வலுச் சேர்க்கும் அம்சம்.

சுகுமாறன் மற்றும் மகாலிங்கம்

நிழலோடு காற்றையும் பரப்பிக்கொண்டிருந்த மரத்தடியில் இனிதே சிறுகதை, நாவல், மற்றும் தன் வரலாறு குறித்த உரையாடல்கள் தொடங்கின. நேற்றைய குழுக்கள் களைக்கப்பட்டு, இன்று புதிய குழுக்கள். ஆனால், அதே மாதிரிதான், அதே அணுகுமுறைதான்.

ஒருமணி நேரம் தனித்தனி குழுக்களாய் உரையாடி, மீண்டு, அனைவருமே ஒருமித்த குரலில் சொன்னது பார்வையற்றவர்கள் தன் வரலாற்றுக் குறிப்புகள் எழுதவேண்டும் என்பதைத்தான். மணி பிற்பகல் 2ஐக் கடந்தும் நீண்டுகொண்டிருந்தது உரையாடல்கள் என்றாலும் எவருக்கும் பசியில்லை. இன்னும் இன்னும் பேசலாம் என்பதில் எவருக்கும் மறுப்பில்லை.

அருட்சகோதரி குழந்தை

பயிலரங்கின் இறுதிப் பகுதியில் சகோதரி குழந்தை தன்னைப் பற்றியும், தான் சார்ந்த

Bon secours

அமைப்பின் வரலாறு குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

கிறித்துவம் சார்ந்து இயங்குகிறார்கள் என்றாலும், அவர்களின் மொழியில் எங்குமே அந்த நெடி இல்லை. முன்னெடுக்கும் செயல்பாடுகள் ஒவ்வொன்றுமே அனைவரையும் உள்ளடக்கியதாகவே அமைந்திருக்கிறது என்பதை அவர் உரையின் வழியே அறிந்தோம்.

தகைசான்ற தமிழகத்தின் ஒரு பகுதியில், தங்கள் பண்ணையில் வள்ளுவரின் சிலை நிறுவுவதற்கே வழக்காடு மன்றம்தான் செல்ல வேண்டியிருக்கிறது என்ற செய்தியின் மூலம்,  இந்தியாவைப் பீடித்திருக்கும் வறட்டுத்தன மதவாதத்தின் இன்னொரு முகம் குறித்து அறிந்துகொள்ள முடிந்தது.

மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்திருந்தார்கள். ஆனால், “கண்டிப்பாக வீட்டுக்கு வாருங்கள்” என ஆசிரியர் திண்டுக்கல் முருகன் அவர்களின் அன்பான அழைப்பை ஏற்று, நாங்கள் பண்ணையிலிருந்து விடைபெற்றோம்.

“எவ்ளோ பிரச்சனை இருந்தாலும் இந்தப் பண்ணைக்கு வந்துட்டா மனசு இலகுவாயிரும். சகோதரிக்கு எந்த பேதமும் கிடையாது. திடீருன்னு பழனி போவாங்க. போனவாரம்கூட பக்கத்து கோவில் திருவிழாவில கலந்துக்கிட்டாங்க” என பண்ணையிலிருந்து சில கிலோமீட்டர் தொலைவிலிருந்த முதன்மைச் சாலைக்கு என்னைத் தன் இருசக்கர வாகனத்தில் அழைத்துவந்த மருந்தாளுநர் செந்தில்குமார் பகிர்ந்துகொண்டிருக்க, சில்லென்ற எதிர்காற்று சிகையைக் களைத்தும், செவிகள் துளைத்தும் விளையாடிக்கொண்டிருந்தது.

வாட்ஸ் ஆப் குழுக்கள் வழியாகவே ஐயா திண்டுக்கல் முருகன் அறிமுகம். அன்றுதான் நேரில் சந்தித்தேன். குறைப்பார்வையுடைய மனைவி ஸ்ரீதேவியும் பட்டதாரி ஆசிரியர்.  இரண்டு மகன்கள், பெற்றோர், சகோதரர்கள் குடும்பமென கூட்டுவாழ்க்கை.

அதிகம் அறிமுகமில்லாத ஒரு பார்வையற்றவரின் வீட்டுக்கு முதன்முறையாகச்  செல்கிறேன்  என்றால், அங்கிருக்கும் சூழல் எப்படியோ, யார் யாரெல்லாம் இருக்கிறார்களோ, ஒரு சகஜம் இருக்குமா என்றெல்லாம் மனதில் அலையலையாய் கேள்விகள் வரிசைகட்டி நிற்கும். அதையெல்லாம் முழுதாக நொறுக்கிவிட்டது ஐயா முருகன் அவர்களின் குடும்பம். அனைவரும் மிக இயல்பாக எங்கள் வரவை அங்கீகரித்தார்கள். மாலை நான்கு மணி ஆகிவிட்டது என்றாலும், மலர்ச்சியோடும், புன்னகையோடும் மணமான பிரியாணி பரிமாறினார்கள். குறிப்பாக நடுநிலைப் பள்ளி பயிலும் அவரின் இரண்டு மகன்களும் கைபிடித்து அழைத்துச் செல்வது, முன்பே தெரிந்தவர் போல உரையாடுவது என மிகமிக இயல்பாக நடந்துகொண்டார்கள்.

திருமதி முருகனின் சுவையான தேநீர் சகிதம் கொஞ்சநேரம் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். “நீங்கல்லாம் எப்படியோ பொழச்சுக்கிட்டீங்க, இப்போ உள்ள பசங்கல்லாம் பாவம்டா” குவிந்த உதடுகளுக்குள் இருந்து காற்றை வெளித்தள்ளிப் பேசும் திண்டுக்கல் தொனியும் கனீர்க் குரலுமாக தற்போது பார்வையற்ற சமூகத்தைப் பீடித்திருக்கும் வேலையின்மை குறித்து வருத்தப்பட்டார் முருகன் அவர்களின் அப்பா. தம்பி கணேசன், ஏற்கனவே பார்வையற்றோரோடு இருந்து, உண்டு, உறங்கி, ஒன்றாய்த் திரிந்தவர் என்ற செய்தியை நண்பர் வாலாஜா வெங்கடேசன் மூலம் அறிந்தபோது, இணக்கமும் நெருக்கமும்   இன்னும் அதிகரித்தது. சகோதரர்கள் இருவரும் ரயில்நிலையம் வந்து எங்களை வழியனுப்பிவைத்தார்கள்.

எப்போதும் நினைவில் இனிக்கிற இந்த இரண்டு நாட்கள் பற்றி உடனே எழுதிவிட நினைத்தேன். விரிவாக எழுத வேண்டும் என்பதால் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது தருணம். பயிலரங்கு முடிந்து ஒரு மாதம் கடந்துவிட்ட நிலையில், இப்போது நினைவில் என்ன எஞ்சி நிற்கிறதோ அதையே ஆவணப்படுத்தியுள்ளேன்.

குறிப்புகள் எதுவும் பேணவில்லை என்பதன் தாக்கம், சில விடுபடல்கள், பெயர்மாற்றங்களில் தென்படலாம். ஆனால், உணர்வில் கலந்துவிட்டது எதுவோ அதுவே நிலைக்கும் என்பதால், நிலைத்தவைகளை மட்டும் கட்டுரையில் நிறைத்திருக்கிறேன். விடுபட்டவைகள் பற்றி பங்கேற்றுத் திரும்பிய தோழர்களில் எவரேனும் சுட்டிக் காட்டினால், கூடுதலாய் அகம் மகிழும்.

சரி ஃபைனல் டச்சை இப்படிக் கொடுப்போம். உண்மையில் அந்த இரண்டு நாட்களும்,

நிறையாமல் இருந்தது உள் அரங்கு,

நிறைந்தே இருந்தது உள்ள அரங்கு.

***ப. சரவணமணிகண்டன்

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.