
பல வகையிலும் மனிதர்களாக இருக்கலாம், அதுவே இயற்கை நீதி. ஆனால் பொதுவாக ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை மனிதர்கள் தங்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக இருக்கும் மனிதர்களை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள் என்பது இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தத்துவஞானி மிஷேல் ஃபூக்கோவின் கூற்று.
சமீபத்தில் பாளையங்கோட்டை புனித சேவியர் கல்வியியல் கல்லூரியின் வலையொலியில் (YouTube) அதிகாரப்பூர்வ பக்கத்தில் அந்தக் கல்லூரி மாணவர்களால் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்ட குறும்படமான ‘பரிவின் பிழை’ படத்தைப் பார்க்க நேர்ந்தபோது இது 21ஆம் நூற்றாண்டா அல்லது 12ஆம் நூற்றாண்டா என்ற சந்தேகம் எழுந்தது.
எட்டு நிமிடங்கள் ஓடும் அந்தக் காணொளியில், பார்வை மாற்றுத்திறனாளிக்கு எழுத்தராக (scribe) வரும் பெண்ணை வன்கொடுமை செய்ததற்காக அந்தப் பெண்ணின் அண்ணன் அந்த மாற்றுத்திறனாளி மாணவரைக் கொன்றுவிடுகிறார் என்பதே இந்தக் குறும்படத்தின் ஒருவரி கதைச்சுருக்கம்.
அதாவது, பரிதாபம் காட்டினால் பாலியல் அத்துமீறல் செய்துவிடுவார்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் என்பதே அந்தப் படம் சொல்லும் ஒப்பற்ற கருத்தாகும். மேலும், பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்வில் எழுத்தர்களை வைத்தே தேர்ச்சி பெறுகிறார்கள், சொந்தமாக அறிவு என்று அவர்களுக்குக் கிடையாது என்பதனை வலியுறுத்துவதாக உள்ளது.
எழுத்தர் என்பவர் பார்வை மாற்றுத்திறனாளிக்குத் தேர்வில் அவர் சொல்லும் விடையை எழுதுபவர் மட்டுமே. எழுத்தரின் சொந்த அறிவை அங்கு பயன்படுத்தக் கூடாது என்பதும், மாணவரின் கல்வித் தகுதியிலிருந்து ஒரு படி குறைவான கல்வித் தகுதி பெற்றவர் மட்டுமே எழுத்தராக அனுமதிக்கப்படுகிறார்கள். இத்தகைய எழுத்தரும் வேறு பாடப்பிரிவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும் என்ற சட்ட விதிகள் எல்லாம் குறைந்தபட்சமாக முயற்சி செய்திருந்தாலே தெரிந்திருக்கக்கூடிய தகவல்கள்தான். ஆனால் படம் எடுத்தவர்கள் பார்வை மாற்றுத்திறனாளிகள் பற்றி குறைந்தபட்ச அறிவோ புரிதலோ இல்லாமல் பார்வை மாற்றுத்திறனாளிகள் தேர்வில் எழுத்தர்களை வைத்துத் தேர்ச்சி பெறுகிறார்கள் என்ற முடிவிற்கு அவர்களை வரவைத்தது எது என்று புரியவில்லை. ஏதோ ஒரு இடத்தில்
ஏதோ ஒரு பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தரை வைத்து முறைகேடாகத் தேர்ச்சி பெற்றுத் தேர்வாகி இருக்கலாம். பொதுவாக மாற்றுத்திறனாளிகள் அல்லாதோருக்கு நடக்கும் தேர்வுகளில் 100% தேர்வுகள் முறைகேடு இல்லாமல் நடந்தது என்று எப்படி சொல்ல முடியாதோ, அதே போல் தான் இத்தகைய சில மாற்றுத்திறனாளிகள் செய்யும் முறைகேடுகளையும் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, எங்கேயோ நடக்கும் சில சம்பவங்களை வைத்து எல்லா மாற்றுத்திறனாளிகளும் எழுத்தரை வைத்தே தேர்ச்சி பெற்றார்கள் என்று சொல்வது எப்படி இருக்கிறது என்றால், கடின முயற்சியால் எந்தவித பின்புலமும் இன்றிப் படித்து வேலை பெற்ற பட்டியலினமானவனை இட ஒதுக்கீட்டில் வந்தவன் என்றும், உழைப்பை மட்டுமே நம்பி வெற்றி பெற்ற ஒரு பெண்ணை அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வெற்றி பெற்றார் என்று சொல்வதற்கு நிகரானது தவிர வேறில்லை.
ஒரு மனிதனைக் குற்றம் சொல்லிவிடலாம், அந்த நாக்கிற்கு நான்கு கைதட்டல் கிடைத்துவிடலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவரின் நெஞ்சுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என்று ‘நெஞ்சுக்கு நீதி’ முதல் பாக முன்னுரையில் கலைஞர் எழுதினார். மாற்றுத்திறனாளிகள் பற்றி விரிவாக எழுதப்பட்ட ‘Rethinking Disability in India’ by Anita Ghai புத்தகத்தைப் படித்துப் பாருங்கள், உங்கள் நெஞ்சுக்கான நீதி கிடைக்குமா என்று பார்ப்போம்.
அது நிற்க! பொதுவாக நடத்தப்படுகின்ற தேர்வுகள் எல்லாம் எழுத்துப்பூர்வமான (script written) தேர்வுகளாகவே நடத்தப்படுகிறது. அதற்கான காரணம் இந்தத் தேர்வு முறைகளை உருவாக்கிய அனைவரும் மாற்றுத்திறனாளிகள் இல்லை. எனவே அவர்களுக்கு ஏற்றபடி தேர்வு முறைகளை உருவாக்கிவிட்டார்கள். இதனை ‘Cultural Privilege’ என்று சொல்வார் பேராசிரியர் ராட் மைக்கேக்கோ. இந்தத் தேர்வு முறைகள் ஒரு மாற்றுத்திறனாளியால் உருவாக்கப்பட்டிருக்குமேயானால், தேர்வு முறை எழுத்துப்பூர்வமாக இருந்திருக்காது, அது மாற்றுத்திறனாளிகள் அணுகக்கூடிய தேர்வாக இருந்திருக்கும். ஆக, மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்றபடி தேர்வு இல்லாத காரணத்தினாலேயே எழுத்தரை வைத்துத் தேர்வு எழுதும் நிலை மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளது. அது பரிதாபத்தினாலோ பச்சாபத்தினாலோ அல்லது சலுகையும் அல்ல, அது ஒரு உரிமை (matter of right).
இத்தகைய உரிமையான எழுத்தர்கள் எல்லாம் அவ்வளவு எளிதில் கிடைத்து விடுவதில்லை. தேர்வின் கடைசி நொடி வரை எழுத்தர் வருவாரா இல்லையா என்ற மாற்றுத்திறனாளியின் பதற்றமும், நன்றாகப் படித்து எழுத்தர் கிடைக்காததாலேயே தேர்வைத் தவறவிட்ட மாற்றுத்திறனாளியின் மனப்போராட்டமும், சரியான எழுத்தர் அமையாததால் தேர்வில் தோற்றுப்போன மாற்றுத்திறனாளியின் ஏமாற்றமும் இத்தகைய படம் எடுக்கும் குரூர மனிதர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சித்தாளின் சுமை செங்கலுக்கு எப்படித் தெரியும்?
பாலியல் அத்துமீறல் பற்றி சொல்ல வந்திருக்கும் ஒரு படத்தில் பாலியல் அத்துமீறலை பார்வை மாற்றுத்திறனாளி செய்வதாகக் குறிப்பான கதாபாத்திரம் வைத்ததற்கான காரணம் புரியவில்லை. பட இயக்குனரோ அல்லது படத்தில் சம்பந்தப்பட்ட யாருக்கோ அத்தகைய சம்பவங்கள் நடந்திருக்கலாம். இத்தகைய ஒரு சம்பவத்தை வைத்து மாற்றுத்திறனாளிகள் சமூகமே அப்படித்தான் என்று படம் எடுப்பது மல்லாக்கப் படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல் இருக்கிறது.
ஏதோ ஒரு ஆசிரியர் செய்த பாலியல் அத்துமீறலை வைத்து அந்தக் குறும்படத்தில் மாற்றுத்திறனாளிக்குப் பதிலாக ஒரு பேராசிரியரைப் போட்டிருந்தால் அதற்கான ஆசிரியர்களின் பதில் என்னவாக இருக்கும் என்பதை அந்தப் படத்தில் நடித்த ஆசிரியர்களிடமே நாம் விட்டுவிடுவோம். உங்கள் வக்கிர புத்தியின் கற்பனையில் உள்ள மாற்றுத்திறனாளிகள் வேண்டுமானால் பாலியல் அத்துமீறல் செய்பவராக இருக்கலாம். ஆனால் நடைமுறையில் கடின முயற்சியால் படித்து அரசு வேலைக்குச் சென்று தன் குடும்பம் முழுவதையும் காப்பாற்றுகிறார்கள் என்பதே உண்மை.
கொட்டும் மழையில், வீசும் புயலில் சரளை கற்கள் பெயர்ந்து விழும் மலை உச்சியை நோக்கிப் பயணித்து அந்த மலை உச்சியில் அகல் விளக்கை ஏற்றுவது போல் தினம் தினம் போராட்டங்கள் நிறைந்த வாழ்க்கையே மாற்றுத்திறனாளியின் வாழ்க்கை. அத்தகைய போராட்டங்களுக்கு மத்தியில் இத்தகைய குறும்படங்கள் பொது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் மாற்றுத்திறனாளிகளை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை நினைத்துப் பார்த்தாலே பதறுகிறது. உள்ளபடியே சமூக அக்கறையும் குறைந்தபட்ச அறிவு கூட இல்லாமல் எடுக்கும் இத்தகைய படைப்பின் பிழையின் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதை குருவி தலையில் பனங்காய் வைப்பதற்கு முன்பாக கல்லூரி நிர்வாகங்கள் உணர்ந்து செயல்பட வேண்டும். காரணம், ‘Art is not for art’s sake, it is for social shake’.
தென்னிந்தியாவின் ஆக்ஸ்போர்ட் என்று சொல்லப்பட்ட ஒரு கல்லூரியில், கால்டுவெல் தமிழ் செய்த மண்ணில் இருந்து, ஜி.யு. போப் பயணித்த பகுதியில் இருந்து இத்தகைய அவதூறுகள் வருவது வேதனையின் உச்சம். முறைப்படி கல்வி கற்ற பின்னும் சக மனிதனை மனிதனாகப் பார்க்க முடியாத இத்தகைய பாவிகளின் உள்ளத்தில் இனியாவது கிறிஸ்து பிறக்கட்டும்.
***கௌதம் சு.
வழக்கறிஞர்,
இந்திய உச்ச நீதிமன்றம், புதுடெல்லி.
தொடர்புக்கு: Gowtham211298@gmail.com
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
