‘பரிவின் பிழை’ என்ற தலைப்பில், பாளையங்கோட்டையிலுள்ள செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரி ஒரு குறும்படத்தை வெளியிட்டுள்ளது.

U. டேனிஷ் (U. Danish) என்ற மாணவ ஆசிரியர், கவனிக்க, மாணவ ஆசிரியர் இயக்கியிருக்கும் இக்குறும்படத்தில் இளங்கலைக் கல்வியியல் முதலாம் ஆண்டு பயிலும் சில மாணவ ஆசிரியர்கள் நடித்திருக்கிறார்கள். இரண்டு இணைப் பேராஆஆஆசிரியர்கள் அந்த உன்னதக் கலைப் படைப்பில் கௌரவ வேடத்தில் தோன்றி, தங்கள் திறமையை உலகுக்கு வெளிக்காட்டியிருக்கிறார்கள்.
எட்டு நிமிடங்கள் ஓடும் அந்த ஒப்பற்ற குறும்படத்தின் கதைச்சுருக்கம் இதுதான்.
ஒரு பார்வையற்ற மாணவருக்குத் தேர்வெழுதும் பதிலி எழுத்தராய்ச் (scribe) சென்ற ஒரு பெண்ணிடம் அந்தப் பார்வையற்ற மாணவர் தவறாய் நடந்துகொள்கிறாராம்.
எப்படி என்றா கேட்கிறீர்கள்? கவிதை எழுதச் சொல்லி, ஒரு வினா இடம்பெற்றிருக்கிறதாம். அதற்கு அந்த மாணவன் ஒரு காதல்க்கவிதையைச் சொல்லி, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துவிடுகிறாராம். அதனால் கோபமுற்ற அந்தப் பெண்ணின் அண்ணன், அந்தப் பார்வையற்ற மாணவரைத் தேடிச் சென்று கொலை செய்துவிடுகிறாராம். “சட்டத்தை நீங்களே கையில் எடுத்தால் எப்படி?” என காவல்த்துறை கேட்க, “தவறுகள் குறையணுமுனா தண்டனைகள் கடுமையாகணும்” என என்றோ அண்ணன் முருகதாஸ் ரமனாவுக்காக எழுதிய வசனத்தை, பயிற்சி வகுப்புகளில் ஒருத்தன் ஒப்படைவு (assignment) எழுத, அதை ஒட்டுமொத்த வகுப்பே வாங்கி காப்பியடிக்குமே! அந்த வழக்கத்தின் நீட்சியோ என்னவோ நம் இயக்குநரும் அதே வசனத்தை இறுதிக் காட்சியாக வைத்துவிட்டார்.
மாறுபட்ட சிந்தனை, புதிய கதை உத்தி என்று பூச்சுற்ற வேண்டுமா? கதையில் ஒரு மாற்றுத்திறனாளிப் பாத்திரத்தைப் புகுத்து. அதுவும் பார்வையற்றவராக இருந்தால், நடிக்கக் கூடுதல் வாய்ப்பு கிடைக்கும். அபாரத் திறமை என்று ஆயிரம் லைக்குகள் முதுகு சொரிய வேண்டாமா?
வெறும் பார்வையற்றவனாக மட்டும் காட்டினால் என்ன சுவாரசியம் இருக்கும்? கதாப்பாத்திரத்தைக் குரூரமாகச் சித்தரிப்போம். நம் மனதின் வக்கிரங்களையெல்லாம் அவன்மீது இறக்குவோம். “கண்ணு தெரியாதவனத் தப்பா சித்தரிச்சா யாரு கேட்பா?” என்ற அசாத்திய திமிர், அபார நெஞ்சழுத்தம்.
கதைதான் இப்படியென்றால், வைத்திருக்கும் காட்சிகள் அடடே! உண்மை, உண்மையைத் தவிர வேறொன்றும் இல்லை என்கிற ரகம். “உனக்குத் தெரியுமா? இல்ல நானே எழுதிடுறேன்” என்று பதிலி எழுத்தராய் வந்த பெண் பரிவு காட்டுகிறாராம். பயிற்சி வகுப்புகளில் தங்களுக்கான பாடக்குறிப்புகளின் (lesson plans) ஒரு வரியைக்கூட சொந்தமாக எழுதத் துப்பின்றி, சுற்றுக்குவரும் ஏடுகளை அப்படியே ஒற்றியெடுப்பவர்களின் ஓரங்க நாடகம் அருமையோ அருமை. அதிலும் ஆறுமாதம் அறையெடுத்து யோசித்த கவிதை அபாரம் இயக்குநரே. எங்கள் பார்வையற்றவர்களிடம் கேட்டிருந்தாலே இதைவிட சுவையான கவிதைகளை உங்களுக்கு வழங்கியிருப்பார்கள். இதில் தவறுகள் குறைய தண்டனைகள் கடுமையாகணுமாம். வெட்கங்கெட்ட சாத்தான் வேதம் ஓதுன கதையாட்டம் என்ன கொடுமை சார் இது.
ஒப்பற்ற நோக்கத்தையும் உயர்வான செய்தியையும் தாங்கிய இந்தக் குறும்படத்தை வெளியிட்டுப் பெரும் சமுதாயப் புரட்சி செய்திருக்கிறார்கள் பாளையங்கோட்டை, செயின்ட் சேவியர் கல்வியியல் கல்லூரி நிறுவனத்தினர்.
ஒரு நல்ல படைப்பு என்பது, சமூகத்துக்குப் புதிய, ஆக்கபூர்வமான ஒன்றைக் கற்பிப்பதாக அமைய வேண்டும். ஆனால், இங்கே நமது எதிர்கால ஆசிரியர்கள் தங்கள் கலைப் படைப்பின் வழியே என்ன கற்பிக்க முயன்றிருக்கிறார்கள் தெரியுமா?
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு, கல்வி ஒன்று மட்டுமே தாங்கள் இழந்த வெளிச்சத்தை ஈடுசெய்யும் ஒற்றை நிவாரணம் என்ற எண்ணத்தோடு கற்று முன்னேறத் துடிக்கும் ஏராளமான பார்வையற்றவர்களை இந்தச் சமூகத்தின் முன்னால் தவறாகச் சித்தரிக்க முயன்றிருக்கிறார்கள். விளிம்பினும் விளிம்புநிலைச் சமூகமான (Invisible Minorities) மாற்றுத்திறனாளிகளை இழிவு செய்து, அவர்களின் உத்வேகத்தையும், பொதுச்சமூகம் அவர்களுக்கு வழங்கிவருகிற மேலான ஒத்துழைப்பையும் இல்லாமல் செய்துவிடுவதில் அக்கறைகாட்டியிருக்கிறார்கள்.
சபாஷ்! ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கப் போகிறவர்கள், பல்வேறு பொருளாதார மற்றும் சமூகப் பின்னணிகளிலிருந்து தங்களிடம் வந்துசேரும் மாணவர்களை நல்ல குடிமகன்களாய் வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பையும் கடமையையும் ஆற்றவிருக்கிற எதிர்கால ஆசிரியர்களின் சிந்தனைகள் எப்படித் தரைதட்டிப் போயிருக்கிறது என்பதற்கு இந்்தக் குறும்படமே ஒரு சான்று.
இதில் ‘பரிவின் பிழை’ எனத் தலைப்பு வேறு. மாணவ ஆசிரியர்களே! இது பரிவின் பிழையல்ல, உங்கள் பார்வையின் பிழை. அதனால்தான் குறும்படம் என்ற பெயரில் வெளியிடப்பட்ட வெறும்படத்துக்கு “சூப்பர் மாப்லே, வாவ் டைரக்டர் சார்” என ஆண் பெண் பேதமின்றி வரிசைகட்டி வாழ்த்துகள், வாரி வழங்கப்பட்ட லைக்குகள். சுமார் 2000 பேருக்கும் அதிகமாய்ச் சென்று சேர்ந்திருக்கிற இந்தக் காணொளியின் வீச்சும் விளைவும் என்னவாக இருக்கும் என்று யோசித்தாலே இதயம் கனக்கிறது.
சமூகப் புரிதலே இல்லாத ஒரு முட்டாள்த்தனமான முயற்சியை ஆதரித்து, பரிசிலனையே இன்றி, அதை வெளியிடுவதிலும் அக்கறை காட்டியிருப்பது ஆக்ஸ்போர்டு தரத்துக்கு உயர்த்திச் சொல்லப்படும் ஒரு கல்வியியல் நிறுவனம் என்பதுதான் வேதனையின் உச்சம்.
ஒடுக்கப்பட்டோருக்கும், ஊனமுற்றோருக்கும் கல்வி தந்து, அவர்களையும் ஒரு மனிதர்களாய் மாற்றிய பல மிஷனரிகள் வாழ்ந்த மண்ணில், அவர்களின் வழித்தோன்றல்களாய் தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்திக்கொள்வோர் ஆற்றியிருக்கும் கலைச்சேவை அந்தக்கர்த்தருக்கே அடுக்காது.
மத்திய மாநில அரசுகள் நடத்தும் பல்வேறு போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிப்பு சார்ந்த தேர்வுகளில் ஒரு பார்வையற்றவருக்கு அவ்வளவு எளிதாகவெல்லாம் பதிலி எழுத்தர்கள் கிடைத்துவிடுவதில்லை. வருவதாகச் சொன்னவர்கள் வரும்வரை, தேர்வுப் பதட்டத்தோடு இந்தக் கூடுதல் பதட்டத்தையும் ஒரு பார்வையற்றவர் சுமக்க வேண்டும். கடைசி நேரத்தில் கைவிரித்த கதைகளும் ஏராளம் உண்டு. இவ்வளவு சவால்களுக்கு நடுவே, தேர்வெழுத்இ, வெற்றிபெற்று, ஒரு பணியில் அமர்ந்து, பொதுச்சமூகத்தின் அங்கீகாரத்தையும் அரவணைப்பையும் பெறப் போராடும் ஆயிரம் பார்வையற்றவர்களில் நல்வாய்ப்பு ஐவருக்கு அமைந்தாலே அது அதிகம்தான்.
சூழல் இப்படியிருக்க, இது போன்ற காணொளிகள் பொதுச்சமூகத்தின் ஒரே ஒரு நபரின் மனப்போக்கில் எதிர்மறைத் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அது பார்வையற்ற சமூகத்துக்கு எத்தகைய இழப்பை உண்டுபண்ணும் என்பதை இவர்கள் அறியமாட்டார்கள். இவர்கள்தான் மாணவ ஆசிரியர்கள் ஆயிற்றே!
“தாழ்த்தப்பட்டவன் அப்படித்தான், கண் தெரியாதவன் இப்படித்தான்” என விளிம்புநிலைச் சமூகங்கள் குறித்து ஏற்கனவே பொதுச்சமூகத்திடம் புரையோடிப்போயிருக்கிற பொதுபுத்திகள் குறித்தோ, கற்பிதங்கள் குறித்தோ இவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய பேராஆஆசிரியர்களே இவர்கள் அரங்கேற்றிய கூத்தில் அட்டென்டன்ஸ் போட்டிருக்கிறார்கள் என்றால், என்ன சொல்வது? யாரை நோவது? !
ஐயா மாணவ ஆஆஆஆசிரியர்களே! எண்ணற்ற சவால்கள் நிறைந்த பார்வையற்றவர்களின் வாழ்வியல்தான், உங்கள் கலையரிப்புக்குச் சொரிந்துகொள்ளச் சுகமாய் இருக்கிறதோ? அப்படியென்றால், உங்கள் முதுகிலிருந்து ஆரம்பியுங்கள், அது இன்னும் கூடுதல் சுகமாய் இருக்கும்.
குற்றம் செய்தவரைத் தாங்களே கொலை செய்து, அதற்கொரு நியாயமும் கற்பிக்கிற மாணவ ஆசிரியர்களுக்கு வேண்டுமானால் சட்டத்தின் மீது நம்பிக்கையில்லாமல் இருக்கலாம். எங்களுக்கு அது ஒன்றுதான் ஆறுதலும் அடைக்கலமும். எனவே, அது கல்வியியல் கல்லூரிதான் என்றால், அங்கே கற்பவர்களும் கற்பிப்பவர்களும் உளச்சான்றும், உய்த்துணரும் அறிவாண்மையும் கொண்டவர்கள்தான் என்றால், பார்வையற்றவர்களை ஆழ்ந்த வேதனைக்கும், மனத்தாங்கலுக்கும் ஆழ்த்தியிருக்கிற யூட்டூப் வலைதளக் காணொளியை நீக்கிவிட்டு, பொறுப்பற்ற தங்களின் செயலுக்கு வருத்தம் தெரிவிப்பார்கள் என்று நம்புவோம்.
***ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
