பேருந்து ஏறுகிற அவசரம்
எனது கை கால்களைவிட
கூடுதலாய் எனது ஸ்டிக்கிற்குத்
தட் தட்
தட் தட்
தட் தட்
தட் தட்
ஆதி தாளத்தில் எனது ஸ்டிக்
இன்றைக்கும் பக்கத்துவீட்டு மோட்டரின் சத்தம்
ஆறுகட்டயாகிப் போனதில்
லாவகமாய் சுருதி பயிற்சி செய்துகொண்டே
பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்.
ஸ்டிக்கை மடக்கி
பைக்குள் வைத்து
பக்கத்தில் இருப்பவர்
ஆணா பெண்ணா என்று தியானித்து
பாலினம் உணர்ந்தேன்.

“அண்ணா அஞ்சு சி வந்தா சொல்லுங்க”
“அதுக்கென்னப்பா சொல்றேன்
உங்களப் பேருந்து ஏத்தி அனுப்பிவிட்டுட்டுத்தா போவேன்
பக்கத்துல மாடு ஒன்னு நிக்கிது
பாத்து நில்லுங்க” என்றார்
நான் பார்வையற்றவன் என்பதை உணர்ந்தவராக.
தனிமையை நிரப்ப
அவ்வப்போது இடையிடையே
ஒவ்வொரு வாகனச் சத்தத்திற்கும்
“அண்ணா பேருந்தா?
அஞ்சு சி யா?”
அவ்வப்போது பதில் வந்தது
சிறு இடைவெளிக்குப் பின்
ஒரு சத்தம் வந்து நின்றது.
நேரம் கடந்துகொண்டிருப்பதை உணர்ந்த நான்
“அண்ணா இது எங்க போற பேருந்து?
அஞ்சு சி யா?”
‘மா…மா…மா’
“ஏறு ஏறு
உள்ள தள்ளிப்போ தள்ளிப்போ
போலா ரை ரை” என்றபடி
நடத்துநரின் விசில் சத்தம்.
சூழலை தியானித்தேன்
எதையெதையோ யோசித்து
திரும்பவும் கேட்டேன்
“அண்ணா இது எங்க போற பேருந்து?
அஞ்சு சி யா?”
‘மா…மா…மா’
“ஏறு ஏறு
உள்ள தள்ளிப்போ தள்ளிப்போ
போலா ரை ரை” என்றபடி
நடத்துநரின் விசில் சத்தம்.
‘மா…மா…மா
மா…மா…மா
மா…மா…மா’
மாட்டின் சத்தம் மட்டும்
அதிகரித்துக் கொண்டே போனது.
மீண்டும் கேட்டேன்
இந்தமுறை
“அஞ்சு சி மா… அஞ்சு சி மா… அஞ்சு சி மா”
பதில் சொல்லி நகர்ந்தது
அந்த மாடு.
***கவிஞர்: ஜிகுனா சுந்தர்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
