Categories
இலக்கியம் கவிதைகள் ப. சரவணமணிகண்டன் கவிதைகள் Uncategorized

கவிதை: சொல் மாத்திரை

“நான் என் நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவழிக்க விரும்புகிறேன்” என்கிற எண்ணம் கொண்டவர்களா நீங்கள்? உங்கள் பார்வையைப் பயன்படுத்தி, பார்வையற்றவர்களுக்கு பல்வேறு உதவிகளைச் செ்ய்யலாம். அதுவே விழியறம்.
விழியறம் போற்ற விரும்புவோர் தொடர்புகொள்ளுங்கள்.
9655013030 அல்லது
9789533964

கவிதை: சொல் மாத்திரை

நகரத்தின்் மையத்தில்

புகழோடு வீட்டிருக்கும்

தெய்வத்துக்குச் சமானமான ஒரு

தேர்ந்த மருத்துவராம்.

வாய்நாடி வாய்ப்பச் செய்வோரின்

வரிசையில் முன்னவராம்,

நீட்டியும், முழக்கியும்

நெருக்கமாய் உரையாடி,

சொல் மாத்திரையால் சொஸ்தமாக்கும்

சூச்சுமத்தில் தேர்ந்தவராம்.

மேற்கின் மேற்படிப்பாம்,

மிடுக்கே தனிச்சிறப்பாம்,

தகப்பன் போல் இவரும்

கைராசிக்காரர் தானாம்.

இப்படியெல்லாம்

நட்புகள் நயமுரைக்க,

அக்கம் பக்கம் ஆமோதிக்க,

காய்ச்சல் வந்த ஒருநாளில் – அவரைக்

கண்டுவரப் போனேன்.

வெண்கோல் பிடித்துவிட்டால்

விண்வெளி அளக்கும் அப்பாதான்,  –  ஆனாலும்,

உடன்வர அடம்பிடித்தாள்

ஒன்பது வயதுச் செல்லமகள்.

இரண்டாம் எண் டோக்கன் வாங்கி

மூவரும் உள் நுழைந்தோம்.

வணக்கம் டாக்டர் என்றபடி

மகளின் கைகள் உயரம் போக,

மடக்கிவைத்த வெண்கோல் சகிதம்

மறுகணமே உயர்ந்தது என் கை.

இருக்கை பற்றி அமர்ந்து

உற்றது உரைப்பதற்குள்

மருத்துவரே தந்துவிட்டார் – தன்

மகத்தான சொல் மாத்திரை.

“சொல்லு பாப்பா! இவருக்கு என்ன பண்ணுது?”

***ப. ஒலிமயக்கூத்தன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

One reply on “கவிதை: சொல் மாத்திரை”

விழியறம் போற்ற விரும்புபவர்கள் மிகவும் அருமை புதிய கோணத்தில் சிந்தனை, புதிய புதிய சிந்தனைகள் மென் மேலும் சிறக்கட்டும் 👍👍👍

Like

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.