48ஆவது புத்தகக் கண்காட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கென்றே ஓர் அரங்கு ஏற்படுத்தப்பட்டிருப்பதாகத் தொலைக்காட்சி செய்தி பார்த்தேன். இப்படி ஒரு அரங்கு ஏற்படுத்தப்பட்டிருப்பது இந்தியாவிலேயே இதுதான் முதன்முறை என்றார்கள். இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாகப் போய், இந்தியப் புத்தகக் கண்காட்சிகளில் முதன்முறையாக என்ற இடத்துக்கு வந்துவிட்டார்கள் ஊடகர்கள் என்று நினைத்தப்ஓது, ஜூனியர்விகடன் மிகச் சரியான முறையில் இந்த முயற்சியை ஆவணப்படுத்தியிருக்கிறார்கள்.
ஜூனியர் விகடன் செய்தி:
* இந்த ஆண்டு, ‘பாரதி அறக்கட்டளை’ என்ற அமைப்பின் சார்பில், பார்வைச் சவால் மாற்றுத் திறனாளிகளுக்கென ஓர் அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது. மாநிலக் கல்லூரியில் பணியாற்றும் பார்வைச் சவால் கொண்ட பேராசிரியர்கள் கே.குமார், மு.ரமேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில் அமைக்கப்பட்ட இந்த அரங்கில், பிரெய்லி நூல்கள் தவிர்த்து, பார்வைச் சவால் மாற்றுத்திறனாளிகள் எழுதிய நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. வாசகர்கள் அணுகுதலுக்கு ஏற்றவாறு, அரங்கில் நுழைந்தவுடனேயே முதலாவதாக இந்த அரங்கு அமைக்கப்பட்டிருக்கிறது நல் முயற்சி.
நமக்குத்தான் தெரியுமே இது இந்தியாவின் முதல் முயற்சி அல்ல, இதற்கு முன்னால் சில ஆண்டுகளுக்கு முன்பே இந்தியப் பார்வையற்றோர் சங்கம் (I.A.B.) இதுபோன்ற ஒரு அரங்கை புத்தகக் கண்காட்சியில் நிறுவி, அதில் தங்கள் பிரெயில் அச்சகத்தில் அச்சிடப்பட்ட பல பிரெயில் புத்தகங்களையும், பார்வையற்றோர் தொடர்பான பிரத்யேகக் கற்றல் உபகரணங்களையும் காட்சிப்படுத்தியிருந்தார்கள்.
சமீப ஆண்டுகளில் கடந்த ஆண்டுவரைகூட கர்ணவித்யா அறக்கட்டளை இந்தப் பணியைச் சிறப்பாக முன்னெடுத்து வந்தார்கள். இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தின் முயற்சிகளில் ஒரு படி மேலேபோய், பார்வையற்ற எழுத்தாளர்களைப் பொதுச்சமூகத்துக்கு அறிமுகம் செய்யும் வகையில் தங்கள் அரங்கை வடிவமைத்து, சில பொதுத்தள எழுத்தாளர்களை அழைத்து கருத்தரங்கெல்லாம்கூட நடத்தியது கர்ணவித்யா அறக்கட்டளை.
மேடுறுத்தப்பட்ட வரைபடங்களைத் தாங்கிய பிரெயில் புத்தகங்களோடு, நவீன காலத்தின் அதி முக்கியத் தேவையான மின்புத்தகங்கள் குறித்தும் அரங்கைப் பார்வையிட வரும் பொதுமக்கள், எழுத்தாளர்கள், பதிப்பாளர்களுக்கு வகுப்பெடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தது கர்ணவித்யாவின் கடந்த ஆண்டு அரங்கு. “சரி இந்த ஆண்டு அவர்கள் இல்லை என்றால் யார்தான் நம்மைப் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள்?” என மனம் அங்கலாய்த்தபடி இருக்க, வாட்ஸ் ஆப் வழி வந்து சேர்ந்தது மேலே நான் குறிப்பிட்ட அந்தத் தொலைக்காட்சி செய்தி. செய்தியில் சில தகவல் பிழைகள் இருந்தாலும், அதன் உள்ளடக்கத்தில் ஒலித்த குரல் இந்த ஆண்டு சென்னைப் புத்தகக் கண்காட்சியிலும் நம் தரப்பைப் பொதுச்சமூகத்திடம் வலுவாக முன்வைக்க ஓர் ஆள் கிளம்பிவிட்டார் என்ற உற்சாகமான செய்தியைத் தாங்கியிருந்தது. அந்தக் குரலுக்குச் சொந்தக்காரர் மாநிலக்கல்லூரியின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. குமார் அவர்கள்.

பாரதி அறக்கட்டளை அரங்கு எண் 102, 9ஆவது நுழைவாயில். அரங்கில் நுழைந்ததும் இன்குரலோடு வரவேற்றார் பேராசிரியர் திரு. சரவணன் அவர்கள். ஒரு தேநீரின் மூலம் தனது கைகுலுக்கலை உறுதி செய்தார் அரங்காளர்களில் ஒருவரான பவித்ரா. திரு. சரவணன் அவர்களோடு இதுவரை தொடுகை வாசகர் வட்டம் வாட்ஸ் ஆப் குழு வழியாக மட்டுமே உரையாடியிருந்தாலும், நெடுநாள் பழகிய நண்பனைப்போல இருந்தது அவரது வரவேற்பு அணுகுமுறை. நாம் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் நிதானமாகப் பதில் சொன்னது மட்டுமல்ல, “சார் ரெஸ்ட் ரூம் போகணுமா வாங்க” என்ற வாஞ்சைக் கேள்வி, மொழி தெரியாத் தீவில் சிக்கிக்கொண்ட ஒருவனிடம் “நீங்க தமிழா” எனக் கேட்டதுபோல் அவ்வளவு குளிர்ச்சியாக இருந்தது.
இந்த முயற்சியை முன்னெடுத்திருக்கும் பேராசிரியர் திரு. குமார் அவர்களோடு பேசினோம். தன் நண்பர்கள் இருவரோடு இணைந்து பாரதி அறக்கட்டளை என்ற பெயரில் ஓர் அமைப்பைத் தொடங்கியவர், பாரதி இல்லம் என்ற பெயரில் சென்னை ஆதம்பாக்கத்தில் பார்வையற்ற பெண்களுக்கான விடுதி ஒன்றையும் நடத்திவரும்செய்தியைப் பகர்ந்தார்.
தற்போது அமைக்கப்பட்டிருக்கும் பாரதி அறக்கட்டளை புத்தக அரங்கில், பேராசிரியரும் எழுத்தாளருமான மு. ரமேஷ் அவர்கள் எழுதிய தமிழ் இலக்கியம் சார்ந்த பல புத்தகங்கள், மூத்த எழுத்தாளர் ஐயா சுகுமாறன் அவர்களின் சில புத்தகங்களும் என 12 பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர்கள் எழுதிய புத்தகங்களை விற்பனைக்கு வைத்திருப்பதாகச் சொன்னார். கூடவே, செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தால் பிரெயிலில் வெளியிடப்பட்டுள்ள தமிழ்ச் செவ்வியல் பிரெயில் புத்தகங்கள், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தோடு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
இலக்கியம் போன்ற பொதுப் பொருண்மைகளில் இருக்கும் புத்தகங்களை விடுத்து, நாமோ பார்வையற்றவர்கள் பார்வையின்மை குறித்து எழுதிய புத்தகங்களை வாங்குவதிலேயே ஆர்வமாக இருந்தோம். அப்படியென்றால், சரவணன் அவர்கள் எழுதிய ‘எங்கே எனது ஒளி’ சிறுகதைத் தொகுப்பு, தேனி வெங்கடேஷ் படைப்பில் வெளிவந்துள்ள ‘இருள் என்பது குறைந்த வெளிச்சமே’ கவிதைத் தொகுப்பு மற்றும் மு. ரமேஷ் அவர்கள் வெளியிட்டுள்ள ‘வேடிக்கை பார்க்கும் இருள்’ என்கிற நூல்கள் இருக்கின்றன என அரங்காளர்களில் ஒருவரான அபிராமி எங்களுக்கு விளக்கினார்.

மூன்று புத்தகங்களையும் வாங்கிக்கொண்ட எங்கள் கையில், கல்லூரி அளவிலான டிஆர்பி தேர்வர்களுக்காக ஐயா குமார் அவர்கள் எழுதிப் பதிப்பித்திருக்கிற நூல் ஒன்றைத் தந்தார்கள் தொட்டுப் பார்த்தோம். ஆயிரம் பக்கங்கள் தாண்டுகிற முரட்டுப் புத்தகம். இதுபோல 13 தொகுதிகள் வேறு இருக்கிறதாம்! மலைப்பாகத்தான் இருந்தது.

“அரங்குக்கு இதுவரை எழுத்தாளர் பெருமாள் முருகன், கவிஞர் மனுஷ்யபுத்திரன் என பல ஆளுமைகள் வந்து சென்றிருக்கிறார்கள்” என அரங்காளர்களில் ஒருவரான முதுகலை மாணவர் மணிகண்டன் சொல்லக் கேட்டுப் பூரித்தது மனம்.
அமைக்கப்பட்டிருக்கிற 950 அரங்குகளில் பார்வை மாற்றுத்திறனாளிகளால் பார்வை மாற்றுத்திறனாளி எழுத்தாளர்களுக்கென்றே ஓர் அரங்கு. அது அவர்களின் நூல்களை ஆவணப்படுத்தும்; விற்பனை செய்யும் என்கிற புரட்சிகர சிந்தனைக்கு சபாஷ். போற்றுதலுக்குரிய இதனை முன்னெடுத்திருப்பதன் மூலம், ஐயா குமார் அவர்கள் ஒரு புதிய வரலாற்றைத் தொடங்கிவைத்திருக்கிறார்.

“நாங்கள் அணுகத் தக்க வகையில் உங்கள் புத்தகங்களும் இல்லை, புத்தக காட்சி சாலைகளும் இல்லை” என வெளியேஇருந்துகொண்டு எத்தனை நாளைக்குத்தான் குமுறுவது? சம வாய்ப்பை உறுதி செய்ய முதலில் சமமாய் பங்கேற்போம்” என்கிற அவரின் உள்ளக்கிடக்கைக்கும் ஓராயிரம் நன்றிகள். அரங்கை அமைத்ததோடு தனியே ஒதுங்கி அல்லது ஓரங்கட்டப்பட்டு முடங்கிவிடாமல், அதைப் பொது ஊடகங்களில் வெறும் செய்தியாக அல்ல, முதன்மைச் செய்தியாக இடம்பெறச் செய்திரு்ப்பதும் கூடுதல் சிறப்பு.
இத்தகைய வரலாற்று முயற்சிக்கு நாம் சொல்லும் நன்றி என்பது, அணியணியாய் அரங்கைப் பார்வையிட்டு, ஆதரவு நல்குதல்மட்டுமே.
புத்தகக் காட்சி சாலையின் முதன்மை வாயிலில் அமைந்திருக்கும் பாரதி அறக்கட்டளை அரங்கு எண் 102 நமக்கு விடுக்கும் ஓர் அழுத்தமான அழைப்பு இதுதான், “திறந்தது புதிய வாசல், திக்கெட்டிலுமிருந்து வாரீர்!”.
***ப. சரவணமணிகண்டன்
முக்கிய இணைப்புகள்:
Book Fair: பார்வை சவால் மாற்றுத்திறனாளிகளுக்கென தனி கடை, நூல் கொடை; கவனிக்க வைக்கும் பாரதி டிரஸ்ட்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
