
மேகி மோகன்: தோற்றம்:11.11.1956, மறைவு: 06.01.2025
தமிழகப் பார்வையற்றோரிடையே திசை மற்றும் இயக்கப் பயிற்சிகள் எனச்சொல்லப்படும் orientation and mobility வல்லுநராகப் பணியாற்றிய திருமதி. மேகி மோகன் இன்று காலை 9 மணியளவில் இயற்கை எய்தினார். 1980 முதல் 2005 வரை சென்னை Y.M.C.A உடற்கல்வியியல் கல்லூரியில் பார்வையற்றோருக்கான பயிற்றுநராகப் பணியாற்றியவர், 2005 முதல் பார்வையற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான பல்வேறு நிறுவனங்களில் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.
நடுவண் அரசின் பார்வைத்திறன் குறையுடையோருக்கான அதிகாரமளித்தல் மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (National Institute for Empowerment for Persons with Visual Disabilities NIEPVD) சென்னைக் கிளையில் பல ஆண்டுகள் மொபிலிட்டிப் பயிற்றுநராகத் தனது பங்களிப்பைச் செலுத்தி, பல பார்வைத்திறன் குறையுடையோரை ஆளுமை மிக்கவர்களாக உருவாக்கியிருக்கிறார்.
“நான் இறந்தா என்னோட உடலை நான்கு பார்வையற்றவர்கள்தான் தூக்கிப் போகணும்.
பார்வையில்லாத ஒவ்வொருவரும் ஒரு பவுச் கண்டிப்பா வச்சிருக்கணும். அந்தப் பவுச்சில் கத்தி, காந்தம் போன்ற பொருட்கள் கண்டிப்பா இருக்கணும். இப்போ உங்க கையில இருந்து ஒரு காசு கீழே விழுந்திட்டா அதைத் தேடி எடுக்க காந்தம் உதவும். நீங்க போற வழியில ஏதோ ஒரு பழம் வாங்கிறதா வச்சுக்குவோம். அதை அப்படியே கடிச்சு சாப்பிட்டா எதிரில இருக்கிற மற்றவுங்க உங்களை ஒரு மாதிரிப் பார்ப்பாங்க. கத்தியிருந்தா நீங்க வெட்டி அவுங்களுக்கும் கொடுக்கலாம்.” என அவரோடான பல ஆக்கபூர்வ உரையாடல்கள் குறித்துச் சிலாகிக்கும் அவருடைய மாணவர்கள், ஓரியண்டேஷன் மற்றும் மொபிலிட்டிப் பயிற்சியைப் பார்வையற்றோருக்கான உளவியலோடு இணைத்துக் கற்பிக்க அவரைவிட்டால் தமிழகத்தில் வேறு ஆள் இல்லை என்கிறார்கள்.
“பார்வையற்றவர்களே ஊன்றுகோலைப் பிடிக்க வெட்கப்படும் இன்றைய காலத்திலும்்கூட தன்னுடைய கைப்பையில் எப்போதும் ஒரு ஊன்றுகொல் வைத்திருப்பார். பார்வையின்மை என்பது எவருக்கும் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் என்பதை வலியுறுத்தவே அவர் அவ்வாறு செய்வார். பார்வையற்றோருக்கான அன்றாட வாழ்க்கைத்திறன் பயிற்சியில் பார்வையற்ற பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ஜடை பின்னக் கற்றுக்கொடுப்பார். கேட்டால், “உனக்கும் பெண் பிள்ளை பிறக்கும்தானே” என்பார்.
தன்னுடைய வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டாலும் தான் கற்றறிந்த மொபிலிட்டிப் பயிற்சியைப் பயன்படுத்தி நடமாடுவார். ஒரு கடைக்குச் சென்றால், அந்தக் கடையில் பார்வையற்றோருக்குத் துணைபுரியும் பொருட்கள் அல்லது அணுகுதலுக்கு ஏற்ற பொருட்களையே தேடித்தேடிப் பிடிப்பார்.” என அவர் தொடர்பான நினைவுகளை அவரது மாணவரான தாஸ் நம்மிடம் பகிர்ந்துகொண்டபோது, இப்படிப்பட்ட வல்லுநர் ஒருவரோடான நேர்காணலைத் தவறவிட்ட வருத்தம் நம்மை ஆட்கொண்டது.
பல பார்வையற்றவர்களின் நடமாட்டத்துக்கு உயிரோட்டம் தந்தவரின் ஆன்மாவுக்கு அஞ்சலிகள்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
