

பார்வை மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் உலக பிரெயில் தினத்தைக் கொண்டாடும் வகையில் கர்நாடக மாநில அரசு எதிர்வரும் ஜனவரி 4 அன்று அவர்களுக்கு சிறப்புத் தற்செயல் விடுப்பு வழங்கியிருக்கிறது. மாற்றுத்திறனாளிகள் என்ற பொதுமைப்படுத்தல் யுகத்தில் வெளியாகியிருக்கும் மகிழ்ச்சியான இந்தச் செய்தி குறித்து இணையத்தில் தேடினேன். சிக்கிய சில தகவல்கள் மேலும் வியப்பைத் தந்தன.
முதல் செய்தி, இதுபோன்ற ஒரு சிறப்புத் தற்செயல் விடுப்பை ஏற்கனவே டெல்லி அரசும் வழங்கியிருக்கிறது. இதையும் விஞ்சக்கூடிய மற்றொரு செய்தி என்னவென்றால், பஞ்சாப் மாநில அரசு ஒராண்டில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு ஐந்து சிறப்புத் தற்செயல் விடுப்புகளை வழங்குகிறது. டிசம்பர் 3 அகில உலக மாற்றுத்திறனாளிகள் தினம் மற்றும் ஜனவரி 4 உலக பிரெயில் தினம் ஆகிய இரண்டுக்கும் தலா ஒரு தற்செயல் விடுப்பு. இவை தவிர, பல்வேறு பயிலரங்குகள், சிறப்புக் கூடுகைகளில் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பங்கேற்க வழி செய்யும் வகையில் கூடுதலாக மூன்று தற்செயல் விடுப்புகளை பஞ்சாப் அரசு வழங்கியுள்ளது. இந்த மூன்று தற்செயல் விடுப்புகளை ஒரு மாற்றுத்திறனாளி அரசு ஊழியர் ஓர் ஆண்டில் அவர் வசதிக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம் என்பது கவனிக்க வேண்டிய ஒரு முக்கிய அம்சம்.
அரசின் சிந்தனை தொடங்கி, அன்றாடச் செய்தி ஊடகங்கள் வரை, மாற்றுத்திறனாளிகள் என்ற சொல் புழக்கத்தில் இருக்கிறது. ஊனமுற்றோர் என்ற எதிர்மறைச் சொல்லுக்கு ஈடாகப் பயன்படுத்தப்படும் இந்தச் சொல் குறித்து நமக்கு எந்த ஒரு விமர்சனமும் இல்லை. ஆனால், எல்லாவற்றையும் மாற்றுத்திறனாளிகள் எனப் பொதுமைப்படுத்தி, ஒவ்வொரு மாற்றுத்திறனாளிக்கும் அவர் சவால் சார்ந்து இருக்கிற அடிப்படை உள்ளார்ந்த தேவைகள் புறந்தள்ளப்படுவது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
மாற்றுத்திறனாளிகளையே எடுத்துக்கொள்ளுங்கள். கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள் (physically disabled) இயக்கம் சார் தேவைகளைச் சார்ந்திருப்பவர்கள். பார்வை, கேட்கும் திறன் பாதிக்கப்பட்டவர்கள் (sensory disabled) புலன் சார் தேவைகளைக் கொண்டவர்களாக இருக்கிறார்கள்.
அப்படியிருக்க, இங்கே என்ன நடக்கிறது? அரசின் திட்ட அமலாக்கங்கள் எல்லோருக்கும் பொதுவான ஒன்றையே பரிந்துரைக்கிறது. ராம்ப் வசதி போன்ற சில உள்கட்டமைப்புகளில் கவனம் செலுத்தி, எல்லாப் பொதுப்பள்ளிக் கட்டடங்களையும் மேம்படுத்தினாலே இயக்கம் சார் குறையுடைய மாற்றுத்திறனாளிக் குழந்தைகளை அந்தப் பள்ளிகளில் எளிமையாகப் பொருத்திவிடலாம். அதேவேளை, புலன்சார் குறையுடைய பார்வையற்றோர், செவித்திறன் அற்றோருக்கு ஒரு கட்டம் வரையிலும் தனித்த கவனத்தைக் கோருக்இற சிறப்புக்கல்வி அவசியம். ஆனால், இங்கே உள்ளடங்கிய கல்வி என்ற பெயரில் அவர்களின் உள்ளம் அடக்கப்படுவதைத் தவிர வேறு என்ன நடக்கிறது?
அரசின் திட்டங்கள்தான் அப்படியென்றால், பெரும்பாலான செய்தி ஊடகங்கள் மாற்றுத்திறனாளி என்ற சொல்லைத் தங்கள் ஊடகத்துக்கான கவன ஈர்ப்பாகவே பயன்படுத்தி வருகின்றன. “தேர்வில் வெற்றிபெற்ற மாற்றுத்திறனாளி, முன் விரோதத்தில் கொலை செய்யப்பட்ட மாற்றுத்திறனாளி” என செய்திகள் எதுவானாலும் அவர் எவ்வகை மாற்றுத்திறனாளி எனச் சொல்லியாக வேண்டும் என்கிற அடிப்படைப் புரிதலே ஊடகங்களிடம் இருக்காது. கொலையோ, கலையோ வாழ்வின் ஒவ்வொரு தருணத்தையும் எதிர்கொள்வதில் வெவ்வேறு உடல்க்குறையுடையோருக்கு வெவ்வேறு சவால்கள் இருக்கின்றன, அவை பேசப்பட்டால்தான் அத்தகைய சவால்களை எதிர்கொள்வதில் அவர்களின் தேவையறிந்து செயலாற்ற முடியும் என்ற நுட்பமான சிந்தனை எவருக்கும் இல்லை. அட! பொதுச்சமூகத்தை சொல்லி என்ன செய்ய. நம் மாற்றுத்திறனாளி நல விரும்பிகள், சேவகர்கள், நலன் பேணும் நாயகர்கள், தன்னார்வத் தளகர்த்தகர்கள் என எவருக்குத்தான் இருக்கிறது இந்தப் புரிதல்?
கல்விச் சீர்திருத்தங்கள் குறித்துப் புத்தகம் புத்தகமாக எழுதித் தள்ளுபவர்கள், மேடைகள்தோறும் முழங்கிடும் பொதுச்சமூக அந்தஸ்தில் முன் நிற்கும் கல்வியாளர்களில் ஒருவராவது இத்தகைய பொதுமைப்படுத்தல் குறித்தோ, கல்வி என்ற பெயரில் ஒற்றைக் கூரையின் கீழ் அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும் அடைத்துவைக்கிற உள்ளடங்கிய கல்விமுறை குறித்தோ பேசுவார்களா? மாட்டார்கள். அப்புறம் என்ன அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, கடையனுக்கும் கடைத்தேற்றம்?
இப்படியெல்லாம் ஆதங்கப்பட்டு ஆயிரம் முறை எழுதியாயிற்று. எழுதிப் பேசி, இயங்கிடும் மனம் சோர்ந்திருக்கும் வேளையில் வெளியாகியிருக்கும் கர்நாடக அரசின் இந்த அரசாணை ஓர் மயிலிறகு. அரசாணை கன்னடத்தில் இருந்தாலும், அதில் ஒரு பெயர் மட்டும் கொஞ்சம் புரிந்தது. அது கநாடக பார்வையற்றோர் ஃபெடரேஷன். அப்படியானால், ஃபெடரேஷன் வலியுறுத்தலில் அந்த அரசாணை வெளிவந்திருக்கும் என நாம் புரிந்துகொள்ளலாம்.
அண்டை மாநிலத்தில், “ஜனவரி 4, உலக பிரெயில் தினத்தைக் கொண்டாட எங்களுக்கு சிறப்பு விடுப்பு வேண்டும் எனக் கேட்கிறார்கள். இங்கிருக்கும் சில பிரதிநிதிகளோ, “பிரெயிலுக்கே விடுப்பு கொடுத்துவிடலாமா” எனப் பேசித் திரிகிறார்கள். அவலம்! அவலம்! பேரவலம்!
***ப. சரவணமணிகண்டன்
கர்நாடக அரசின் அரசாணையைப் படிக்க:
முக்கிய இணைப்புகள்:
https://www.uniindia.com/news/north/administration-punjab-divyangjan/3234336.html
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
