Categories
விளையாட்டு Uncategorized

விளையாட்டு: பதக்க ஆவளி, பிறக்கட்டும் புதுவழி! பகுதி (3)

விளையாட்டின் நுட்பம் தெரியும் விதிமுறைகள் முறையாகத் தெரியாது என்பதால் பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளோம்

தொடரின் முந்தைய பகுதிகள்:

விளையாட்டு: பதக்க ஆவளி, பிறக்கட்டும் புதுவழி! பகுதி (2)

விளையாட்டு: பதக்க ஆவளி, பிறக்கட்டும் புதுவழி! பகுதி (1)

இந்தச் சிறு தொடருக்காக வெற்றிபெற்ற வீரர்களோடு உரையாடலாம் என முடிவெடுத்ததும் நாம் அணுகிய நபர்கள் இருவர். ஒருவர், திரு. பாலகிருஷ்ணன்.

பாலகிருஷ்ணன்

வங்கிப் பணியாளரான இவர், கிரிக்கெட் சதுரங்கம் உள்ளிட்ட போட்டிகளில் மாநில மற்றும் தேசிய அளவில் பல பதக்கங்கள் வென்றவர். கைப்பந்து, கால்பந்து விளையாட்டுகளிலும் பங்கேற்றுச் சிறப்பித்து வருபவர். பார்வையற்றோரால் நடத்தப்படும் விரல்மொழியர் மின்னிதழில் பார்வையற்றோர் விளையாட்டு தொடர்பான பல கட்டுரைகளை எழுதியுள்ளார். தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கம் டாப்ஸாவின் செயற்குழு உறுப்பினர்.

இன்னொருவர் திரு. பொன். சக்திவேல். பார்வையற்றவன் எனப் பொதுச்சமூகத்தால் அறியப்படும் இவரும் கிரிக்கெட் கால்பந்து போட்டிகளில் தமிழக அணியில் இடம்பெற்றவர். கைப்பந்து, சதுரங்கம், வட்டெறிதல், குண்டெறிதல் எனத் தமிழக அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்றுப் பதக்கங்கள் வென்றுள்ளார்.

பார்வையற்றோருக்கான விளையாட்டு தொடர்பான செய்திகளை ஆவணப்படுத்துவதை இவர் தனது முக்கியப் பணியாகச் செய்து வருகிறார். மதுரையிலுள்ள பார்வையற்றோருக்கான இந்திய ஐக்கிய அமைப்பால் (I.A.B.) நடத்தப்பட்ட விழிச்சவால் என்னும் மாதாந்திர பிரெயில் இதழில், தொடர்ந்து மூன்றாண்டுகள் ஆட்டக்களம் பகுதியில் பார்வையற்றோருக்கான விளையாட்டு குறித்து எழுதியவர்.

அவருடைய

முகநூல்

மற்றும்

யூட்டூப்

பக்கங்களில் பார்வையற்றோர் விளையாட்டுகள் குறித்த புரிதல்களைப் பொதுச்சமூகத்துக்கும் ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.

பொன். சக்திவேல்

“பார்வையற்றோருக்கான விளையாட்டுகள் என்பவை பார்வையின்மையால் ஏற்படும் இழப்புகளை ஈடு செய்யும் சில தகவமைதல்களைக் கொண்டவை. விளையாட்டின் மூல வடிவத்தில் சிறுசிறு தகவமைவுகளைச் செய்து விளையாடுவோம்.

உதாரணமாக, கிரிக்கெட்டில் பந்து உருண்டு வர வேண்டும். அது சத்தம் கொடுக்கிற பந்தாகவும் இருக்க வேண்டும்.

கைப்பந்தைப் பொருத்தவரை, வலைக்குக் கீழே பந்தடித்தல் என்பது எங்களுக்கான தகவமைவு. அதேபோல மைதானத்தில் வரையப்படும் கோடுகளில் பளிச் என்ற தெளிவான நிறங்களைப் பயன்படுத்துதல், கால்களுக்குத் தட்டுப்படும் வகையில் புலத்தின் (track) கோடுகளை மேடுறுத்திக் காட்டுவது போன்றவை முக்கியம். ஓட்டப் போட்டிகளில் முற்றிலும் பார்வையற்றோருக்கான T-11 பிரிவில் அவர்களுக்கு வழிகாட்டுவதற்கென்றே வழிகாட்டித் துணையாள் (guide runner) ஒருவர் இருக்க வேண்டும். சில போட்டிகளில் குரல் வழிகாட்டல்களுக்கும் அனுமதி உண்டு.” எனப் பார்வையற்றோருக்கான விளையாட்டுகளில் கடைபிடிக்கப்படும் சில தகவமைவுகள் குறித்து விளக்கினார் பொன். சக்திவேல்.

“பார்வையற்றோருக்கான விளையாட்டுகளைப் பொருத்தவரை, அவர்கள் அவர்களின் பார்வையின்மைக்கேற்ப மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுவார்கள். நூறு விழுக்காடு பார்வையற்றவர் என்றால், அவரை B-1 என அழைப்போம். 75% பார்வையிழப்பைக் கொண்டவர்கள் B-2. 60% பார்வையை இழந்தவர்கள் B-3 என வகைப்படுத்தப்படுவார்கள். இந்தப் பிரிவைத்தான் தடகளத்தில் முறையே T-11, T-12, T-13 மற்றும் F-11, F-12, F-13 என்று குறிப்பிடுவார்கள்” என அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய முக்கியத் தகவல் ஒன்றைப் பாலகிருஷ்ணன் பகிர, “ஆமாம், விதிகளை அறிந்து வைத்திருப்பது மிக மிக அவசியம், அது தெரியாமல் பலமுறை கோப்பைகளைப் பதக்கங்களை நழுவவிட்ட  வரலாறெல்லாம் உண்டு” என அவரை ஆமோதித்துப் பேசினார் பொன். சக்திவேல். தொடர்ந்து அவர், பார்வையற்றோர் விளையாட்டு குறித்த கடந்தகாலம், நிகழ்காலம் நம்பிக்கையூட்டக்கூடிய எதிர்காலம் பற்றி விரிவாகப் பேசினார்.

“விளையாட்டுதான் என்றில்லை, எந்த ஒரு விடயத்திலும் பார்வையற்றவர்கள் முதலில் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பு. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் எனப் பார்வையற்றவர்கள் சிதறுண்டு வசிக்கிறார்கள். முன்பெல்லாம் சிறப்புப்பள்ளிகள் கோலோச்சிய காலம். அப்போது பார்வையற்றவர்கள் குழுவாக ஒருங்கிணைவது எளிதாக இருந்தது. இன்றைய உள்ளடங்கிய கல்விச் சூழலில் இது மிகப் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.

அதிலும், ஒரு நகர்ப்புற பார்வையற்றவருக்குக் கிடைக்கும் வாய்ப்பும் வசதிகளும் கிராமப்புறப் பார்வையற்றவருக்குக் கிடை்க்காது. பொதுச்சமூகத்தால் கிராமப்புறங்களில் ஒருங்கிணைக்கப்படும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பார்வையற்றவர் என்பவர் சக பார்வையாளராகக்கூட இருக்க இயலாது என்பதுதான் எதார்த்தம். அத்தகைய தருணங்களில் அவர் தண்ணீர் கேன் பார்த்துக்கொள்பவராக, ஸ்கோர் கார்ட்  மனதில் வைத்துச் சொல்பவராகவே கருதப்படுவார்.

சிறப்புப்பள்ளிகள் வந்தபிறகு நாங்களும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றோம். உற்சாகமாக விளையாடினோம். விளையாட்டின் நுட்பம் தெரியும் விதிமுறைகள் முறையாகத் தெரியாது என்பதால் பல வெற்றி வாய்ப்புகளைத் தவறவிட்டுள்ளோம். வென்றால் காசு கிடைக்காது, பணி வாய்ப்பு கிடையாது என்பதால் விளையாட்டு என்பது எங்களுக்கு இரண்டாம் சவாரிதான். ஆனாலும், பதக்கம் வெல்வதே எங்களுக்கான உச்சபட்ச வெற்றி எனப் பூரித்தோம். சான்றிதழ் எங்களுக்குப் பொரு்ட்டே அல்ல, அது பிரெயில் எழுதுவதற்குக் கிடைத்த ஓர் அழுத்தமான தாள் அவ்வளவுதான்.” என எள்ளல் சுவையுடன் கடந்தகாலத்தை விவரித்த பொன். சக்திவேல் தொடர்ந்தார்.

முதலில் எங்களுக்கென்று தனியாகப் பயிற்சி செய்ய ஒரு மைதானம் இல்லை. நான் சிலாகித்துச் சொன்ன சிறப்புப் பள்ளிகளில்கூட, ஏதாவது புதிய கட்டடம் கட்டத் திட்டமிட்டால் அவர்கள் முதலில் கைவைப்பது அங்கே இருக்கும் மைதானப் பரப்பைத்தான். அத்தோடு பார்வையற்றோரை உரிய புரிதல்களோடு அணுகும் பயிற்றுநர்கள் அதிகம் உருவாக வேண்டும். அப்போதுதான் பிரகதீஸ் போல, சுரேஷைப் போல தொழில்முறைப் போட்டியாளர்கள் எங்கள் தரப்பிலிருந்தும் அதிகம் உருவாகி வருவார்கள்.

அடுத்ததாக நிதிச் சிக்கல். பார்வையற்ற விளையாட்டு வீரர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்கான முறையான பயிற்சி வழங்குதல் போன்ற பணிகளில் ஏராளமான உழைப்பு அவசியம், கூடவே அதற்கான நிதி ஆதாரங்களும் வேண்டும். பார்வையற்றவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஒருங்கு செய்யப்படுகின்றன என்றால், அங்கே பங்கேற்பவர்கள், பார்வையாளர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என அனைத்தும்ஏ பார்வையற்றவர்களாகிய நாங்கள்தான் என்ற நிலையில், எங்களுக்குள்ளேயே தன்னார்வம் கொண்டு  செலவுகளைப் பகிர்ந்து சமாளிக்கிறோம். ஆனாலும் இது  ஒருபோதும் போதுமானதாக இருக்காது. சென்னை போன்ற பெருநகரங்களில் இந்தச் சிக்கல்களுக்கு ஓரளவு தீர்வு கிடைக்கிறது என்றாலும், தென்னகம் சார்ந்த பார்வையற்றோருக்கான விளையாட்டுச் சங்கங்களுக்கு நிதி கிடைப்பது மிகச் சிரமமான விடயமாக உள்ளது.

இப்போது நிலைமைகளில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. நம்பிக்கைக் கீற்றுகள் ஆங்காங்கே தென்படத் தொடங்கியிருக்கின்றன. ஆனாலும்கூட பெற்ற வெற்றியை எப்படிப் பணிவாய்ப்பாக, ஊதியமாக மாற்றுவது என்ற விழிப்புணர்வு வீரர்களிடையே குறைவாக இருக்கிறது. அதற்காகத்தான் டாப்ஸா போன்ற சங்கங்கள் பணியாற்றி வருகிறோம். ஒரு பார்வையுள்ள வீரர் வெற்றி பெற்றால் அவருக்குக் கிடைக்கும் பதக்கமும் பாராட்டும் பரிசுத்தொகையும் பணிவாய்ப்பும் போன்றே வெற்றிபெற்ற பார்வையற்ற வீரருக்கும் கிடைக்க வழிவகை செய்யவே போராடுகிறோம்.

தமிழகத்தின் பார்வையற்ற ஜூடோ வீராங்கணை தற்போது அரசுத்துறையில் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகிறார் என்பதும், பார்வையற்ற கிரிக்கெட் வீரர் மகாராஜா, விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் அரசுப்பணி பெற்றுள்ளார் என்பதும் எங்களுக்கான வெளிச்சப் புள்ளிகள். அத்தோடு, இன்றைய நிலையில், தமிழக விளையாட்டுத்துறை துணைமுதல்வரின் கையில் இருக்கிறது என்பதும் கூடுதல் அனுகூலம்.” என நம்பிக்கை கலந்த சொற்களோடு முடித்தார் பொன். சக்திவேல்.

பாலகிருஷ்ணன் மற்றும் பொன். சக்திவேல் இருவரோடான உரையாடலைக் கேட்க

பட்டப்படிப்பு மட்டுமல்ல, இன்றைய நவீன தொழில்நுட்ப யுகத்தில் பார்வையற்றோருக்கான போட்டிக்களங்களும் வெற்றி வாய்ப்புகளும் மெல்லப் பெருகத் தொடங்கியிருக்கின்றன. ஆனால், அவற்றைப் பார்வையற்றவர்களுக்கு அடையாளம் காட்டி அவர்களை நெறிப்படுத்த வேண்டிய பார்வையற்றோருக்கான கல்விக்களங்கள் சீர்மை கெட்டுச் சின்னாபின்னமாக உருக்குலைந்து போய்க்கொண்டிருக்கின்றன. விளையாட்டில் சாதித்த பார்வையற்ற வீரருக்கு அரசுப்பணி வழங்கியது தமிழக அரசு எனப் பெருமிதம் கொள்வதா, அல்லது அரசால் நடத்தப்படும் சிறப்புப்பள்ளிகளில் 90% உடற்கல்வி ஆசிரியர்ப் பணியிடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படாமல் அப்படியே காலியாக வைக்கப்பட்டுள்ளன என ஆதங்கப்படுவதா தெரியவில்லை.

இத்தகைய சூழலில், பார்வையற்றோருக்காக முன்வந்து அவர்களை ஒவ்வொரு துறையிலும் கைதூக்கிவிட வேண்டியது நம் அனைவரின் கடமை. இந்த நோக்கத்தைத் தீவிரமாகச் செயல்படுத்த வேண்டிய முதன்மைப் பொறுப்பும் கடமையும் கொண்டவர்கள் பார்வையற்றவர்களின் முன்னேற்றத்துக்காகப் போராடும் அமைப்புகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும். அந்த வகையில், பார்வையற்றோருக்கான விளையாட்டுக் களங்களில் அவர்களின்் முன்னேற்றத்துக்காக உழைக்கும் டாப்ஸாவுக்கு தொடுகை சார்பாக ஒரு சல்யூட், வெற்றி பெற்ற வீரர்களுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகளும்.

நிறைந்தது.

***தொகுப்பு மற்றும் எழுத்தாக்கம்: சகா


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.