பார்வையற்றோர் பயிற்சி செய்வதற்கென்று தனிமைதானம் இருந்தால் சிறப்பாக இருக்கும் எனச் சொல்லும் பிரகதீஸ்வர ராஜா, ஒரு தொழில்முறை வீரர். வங்கிப் பணியாளரான இவர், தன்னுடைய இலக்கு, கனவு, ஆன்மா எல்லாமே விளையாட்டுதான், அதற்காக மரணத்தையும் சந்திக்க நேர்ந்தால் மகிழ்ச்சிதான் என அடித்துச் சொல்கிறார்.

“நான் கோவையைச் சேர்ந்தவன். குழந்தைப் பருவத்திலிருந்தே விளையாட்டில் அதீத ஆர்வம் உண்டு. பள்ளியில் ஓட்டப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். கல்லூரி நாட்களில் கபடி, கைப்பந்து, கிரிக்கெட் என ஒன்றன்பின் ஒன்றென மாறிக்கொண்டே இருந்தேன். இறுதியாகத்தான் தடகள வீரராகப் பயிற்சி எடுக்கத் தொடங்கினேன். எனக்கு ஓரளவுக்குப் பார்வை இருந்தபோது, T-12 பிரிவில் விளையாடிக்கொண்டிருந்தேன்.
பெங்களூரு, பஞ்சாப், ஹரியானா என பல தேசியப் போட்டிகளில் பங்கேற்றுள்ளேன். என்னுடைய பார்வை படிப்படியாகக் குறையத் தொடங்கியது. அதன்பிறகு அதாவது கடந்த ஒரு வருஷகாலமாகத்தான் T-11 முற்றிலும் பார்வையற்றோருக்கான பிரிவில் ஓட்டத்தில் பங்கேற்று வருகிறேன். தற்போது நடந்து முடிந்த குஜராத் தேசிய தடகளப் போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் போட்டிகளில் தங்கமும் ரிலே ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்றுள்ளேன்.
படித்ததெல்லாமே உள்ளடங்கிய கல்விமுறை கொண்ட பள்ளிகள். முதலில் எனக்கு கிரவுண்ட் ஃபியர் இருந்தது. பிறகு பட்டப்படிப்பு என காலம் ஓடியது. நிறைய பயிற்சிகள் எடுத்தாலும்கூட எங்கே விளையாடுவது, போட்டிகள் எங்கே நடக்கின்றன போன்ற தகவல்கள் தெரியாமல் அல்லாடியிருக்கிறேன். அப்படிப் பல வாய்ப்புகள் தட்டிப்போக ஏமாந்துபோனேன். கூடவே கரோனா முடக்கம், பயிற்சியின்போது ஏற்பட்ட காயம் என விளையாட்டைக் கைவிடும் முடிவில்தான் இருந்தேன்.
சிறு வயது முதலே ஆர்வம்தான் என்றாலும், ஒரு கட்டத்தில் இதையெல்லாம் கைவிட்டுவிடலாம், செய்த பயிற்சிகள் உடல்நலனுக்கு என நினைத்து திருப்திபட்டுக்கொள்ளலாம் எனத் தோன்றியிருக்கிறது. ஆனால் உரிய நேரத்தில் எனக்குக் கிடைத்த எனது வழிகாட்டிப் பயிற்றுனர் திரு. தங்கபாண்டி அவர்களால் நான் என் எண்ணத்தைமாற்றிக்கொண்டு பயிற்சி செய்யத் தொடங்கிவிட்டேன். இப்போது சர்வதேசப் போட்டிகளிலும் பங்கேற்கலாம் என்ற உந்துதலும் தைரியமும் பிறந்திருக்கிறது.

நான் பெறும் வெற்றிகளில் என்னுடைய வழிகாட்டித் துணையாளரான (Guide Runner) தங்கபாண்டி அவர்களின் பங்கு இன்றியமையாதது. நான் ஜெனிசிஸ் ஸ்போர்ட்ஸ் ஃபவுண்டேஷனில் பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தேன். அது எல்லோருக்குமான பொதுப் பயிற்சி மையம். அந்த மையத்தின் தலைமைக் கோச் திரு. வைரவநாதன் அறிவுறுத்த மையத்தில் இருந்த 15 பயிற்றுநர்களில் திரு. தங்கபாண்டி அவர்கள் என்னுடைய வழிகாட்டித் துணையாளராக இருக்க முன்வந்தார்.
களத்தில் எனக்குப் பயிற்சிகள் தருவதோடு மட்டுமல்லாமல், மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டு தொடர்பான நிறைய காணொளிகளை அவர் பார்ப்பார். ஜப்பானில் நடந்த போட்டிகள், பாரா ஒலிம்பிக்ஸ் என அவர் நிறைய ரெஃபரன்ஸ் எடுத்து, அதை எனக்கு விளக்கிப் பயிற்றுவிப்பார். ஒரு பார்வையற்றவருக்கான வழிகாட்டித் துணையாளர் (Guide Runner) என்பவர், வெறும் உடல்சார் பயிற்சிகளை மட்டும் கற்றுக்கொடுப்பவராக இருக்க முடியாது. இருவருக்குமிடையே புரிதல் அடிப்படையிலான ஒரு ஒத்திசைவு நிச்சயம் வேண்டும்.” என்றார் விரிவாக.

வீரர் பிரகதீஸ்வர ராஜா அவர்களோடான உரையாடலைக் கேட்க
கிரிக்கெட், கபடி, கைப்பந்து போன்ற குழு விளையாட்டுகள் என்றால், மாவட்டம் வட்டம் என பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் தேடாமலே தங்களுக்குள் திரண்டுகொள்வார்கள். ஆனால், தடகளப் போட்டிகள் அப்படியல்ல, தமிழகம் முழுக்க ஆங்காங்கே சிதறிப் பரவியிருக்கும் பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களை எப்படி எவ்வாறு ஒரு குடையின்கீழ் கொண்டுவருவது? இந்தக் கேள்விக்கு விடையாகத் தோன்றிய அமைப்புதான் டாப்ஸா (Tamilnadu Blind Sports Association).
பார்வை மாற்றுத்திறனாளிகளைப் பொருத்தவரைவிளையாட்டு என்பது, வெறும் உடல் நலனுக்காகவோ, ஊக்கம் பெறவோ, பொழுதுபோக்காகவோ மட்டும் விளையாடப்படுவது அல்ல. அவைகளைப் பயில்வதன் மூலம், பொதுத்தள வீரர்களைப் போலவே நாமும் ஊதியம், உரிய பணி வாய்ப்பு எனப் பல்வேறு அனுகூலங்களை அடையலாம் என்ற கால மாற்றத்திற்கு முகம் கொடுப்பதில் டாப்ஸா போன்ற அமைப்புகள் முன்நிற்கின்றன.
மதுரையில் இயங்கிவரும் இந்தியப் பார்வையற்றோர் ஐக்கியப் பள்ளிக்கு (I.A.B) என்எஸ்எஸ் பயிற்சிக்காக வந்த ஆசிரியர் திரு. சரவணராம் அவர்களுக்கும், அந்தப் பள்ளியில் பணியாற்றிக்கொண்டிருந்த பார்வை மாற்றுத்திறனாளியான வெங்கலமூர்த்திக்கும் இடையேயான உரையாடலில் பிறந்ததுதான் டாப்ஸா எனச் சொல்லும் அதன் செயற்குழு உறுப்பினர் திரு. பாலகிருஷ்ணன், குறுகிய காலத்தில் டாப்ஸா மேற்கொண்ட பல்வேறு பணிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

“ஐயா சரவணராம் கொடுத்த பயிற்சியால் பள்ளியின் சார்பில் பல பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் டெல்லி போன்ற பல்வேறு இடங்களுக்குச் சென்று விளையாடிப் பரிசுகள் பெற்றுவந்தார்கள். தமிழகத்தில் இவர்களைப் போல பல்வேறு பார்வை மாற்றுத்திறனாளி வீரர்கள் இருப்பார்கள், அவர்களையும் ஒருங்கிணைத்துப் பயிற்சி வழங்கலாமே என்ற நோக்கத்தோடு டாப்ஸாவைத் தொடங்கினோம். சங்கம் தொடங்கப்பட்ட 2018 ஆம் ஆண்டுமுதல் இன்றுவரை பல்வேறு செயல்பாடுகளைத் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகிறோம்.
*மாநிலம் தழுவிய கபடிப் போட்டிகள்
*பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான கால்பந்து விளையாட்டுப் பயிற்சி முகாம்
*கரோனா காலத்தில் இணைய வழியில் நடத்தப்பட்ட யோகா போட்டிகள்
*பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான ஜூடோ போட்டிகள் மற்றும் பயிற்சிகள்
*கடந்த 2020, 2021, 2022, 2023, 2024 எனத் தொடர்ந்து ஐந்து வருடங்கள் பார்வை மாற்றுத்திறனாளித் தடகள வீரர்களைத் தெரிவு செய்து பயிற்சிகள் வழங்கி, அவர்களை தேசியப் போட்டிகளுக்கு அனுப்புதல் எனத் தொடர்ச்சியாக இயங்கி வருகிறோம்.

பார்வை மாற்றுத்திறனாளி வீரர்களை அடையாளம் காணுதல், அவர்களுக்குப் பயிற்சி கொடுத்தல் போன்ற பணிகளுக்கு அப்பால், விளையாட்டின் வழியே அவர்களும் உதவித்தொகைகள், பணி வாய்ப்புகள் பெறுவதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதிலும் உழைத்துவருகிறோம்.
இதுபோன்ற நடவடிக்கைகளில் நிதி ஆதாரம் என்பது முக்கியப் பங்கு வகிக்கிறது. தற்பொது நடந்து முடிந்த இந்தப் போட்டியையே எடுத்துக்கொள்ளுங்கள்! சிறந்த வீர வீராங்கனைகளைத் தேர்ந்தெடுத்து, பயிற்சியளித்து குஜராத்திற்கு அவர்களை அழைத்துச் சென்றது, வீரர்கள் போட்டிக்கு சென்று திரும்புவதற்கான போக்குவரத்துச் செலவு, உணவுக்கான செலவு என ஒரு பெருந்தொகை தேவையாக இருந்தது.
அதனை வழங்கி பேருதவி புரிந்த திருப்பத்தூர் டிஎஸ்பி செல்வகுமார் அவர்களுக்கும், காமாட்சி டிஎஸ்பி ரயில்வே அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.” என்றார் பெருமிதமாக.
டாப்ஸா குறித்த திரு. பாலகிருஷ்ணனின் உரயைக் கேட்க
பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுகள் எப்படி வடிவமைக்கப்படுகின்றன, களத்தில் வீரர்கள் சந்திக்கும் சவால்கள் எத்தகையவை போன்ற பல்வேறு விடயங்களை விரிவாக விளக்குகிறார் திரு. பொன். சக்திவேல் நிறைவுப் பகுதியில்.
***வீரர்களை நேர்காணல் செய்த திரு. பொன். சக்திவேல் மற்றும் திரு. M. பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
