தேசிய அளவில் குஜராத்தில் நடைபெற்ற பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கிடையேயான தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழக வீரர்கள் 10 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 14 பதக்கங்களுடன் தமிழகம் திரும்பியிருக்கிறார்கள்.
தொழில்முறைப் பயிற்சியோ, மிகப்பெரும் பொருளாதாரப் பின்புலமோ அற்றவர்களின் மன உறுதிக்கும் உத்வேகத்துக்கும் கிடைத்திருக்கிற பரிசு இது எனச் சொல்லலாம். இன்றைக்கும்கூட ‘கடமையைச் செய் பலனை எதிர்பாராதே’ என்ற வாசகத்தை வேறு எவரையும்விட மிகக் கச்சிதமாகப் பின்பற்றப் பழக்கப்பட்டுப்போனவர்கள் பார்வை மாற்றுத்திறனாளி தடகள விளையாட்டு வீரர்கள். எவரும் பாராட்டவே போவதில்லை என்று உறுதியாகத் தெரிந்தும் விளையாட்டின்மீது இவர்களுக்கு இருக்கிற பெருங்காதலே இவர்களை இத்தகைய சாதனைகளுக்கு உந்தித் தள்ளுகிறது.
எங்களுக்கென ஒரு மைதானம் வேண்டும்


கல்லக்குறிச்சியைச் சேர்ந்த முழுப் பார்வையற்றவரான சங்கீதா, ஆரணியில் உள்ள பார்வையற்றோருக்கான அரசு உதவிபெறும் சிறப்புப்பள்ளியில் படித்தார். தற்போது இளங்கலைக் கல்வியியல் பயின்றுவரும் இவர், முழுப் பார்வையற்றவர்களுக்கான F-11 பிரிவில் ஈட்டி எறிதலில் வெள்ளியும், வட்டெறிதலில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார்.
“ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதை நான் எதிர்பார்க்கல. நான்படிச்ச பள்ளியிலேயே நிறைய போட்டிகள்ல கலந்துட்டு பரிசெல்லாம் வாங்கிருக்கேன். எனக்கு ரன்னிங்ல கலந்துக்க ஆசைதான். ஆனா மைதானத்தில நாம ஷூ போட்டுட்டுதான் ஓடணும்கிற மாதிரி சில விதிகள் இருக்கு. அதனால நான் ஃபீல்ட் ஈவண்டையே தேர்ந்தெடுத்தேன்.
இதுலகூட ஈட்டி எறிதல் எனக்கு பரிட்சயமான போட்டியே கிடையாது. டாப்ஸா (Tamilnadu Blind Sports Association TABSA) நடத்திய செலெக்ஷனப்போதான் பயிற்சி எடுத்தேன்.” என்கிறார் திடமாக.
“எங்களுக்குன்னுசிறப்பு விடுதியெல்லாம்கூட நாங்க கேட்கல. ஆனா பெரிய பெரிய நகரங்கள்ல நாங்க பயன்படுத்த வசதியா, அதற்கான உபகரணங்களோட ஒரு மைதானமும் இருந்தா இன்னும் நாங்க சிறப்பா விளையாட வாய்ப்பு ஏற்படும்” எனச் சொன்னவரின் குரலில் அவ்வளவு பூரிப்பு.
வீரர் சங்கீதாவோடான உரையாடலைக் கேட்க



நடைபெற்ற போட்டியில் 60 விழுக்காடு பார்வைத்திறனுடையோருக்கான T-13 பிரிவில் பங்கேற்ற தூத்துக்குடியைச் சேர்ந்த பார்த்திபனின் கதையும் கிட்டத்தட்ட இதேதான். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை பொதுப்பள்ளியில் படித்த இவர், ஒன்பது முதல் பன்னிரண்டாம் வகுப்புவரை பாளையங்கோட்டையிலுள்ள அரசு உதவிபெறும் பார்வையற்றோருக்கான சிறப்புப் பள்ளியில் பயின்றுள்ளார்.
400 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தங்கம் வென்றுள்ள இவர், இதற்கென சிறப்பான பயிற்சிகள் எதையும் மேற்கொள்ளவில்லை என்கிறார். போட்டிக்கு முந்தைய வெறும் ஐந்து நாட்கள் மட்டும் கபடி வீரர்களான தன் நண்பர்களோடு மைதானம் சென்று பயிற்சிகள் எடுத்திருக்கிறார்.
வீரர் பார்த்திபனோடான உரையாடலைக் கேட்க
ஒத்துழைக்காத தட்பவெப்பம்

கோவையைச் சேர்ந்த சுரேஷுக்குச் சிறுவயது முதலாகவே விளையாட்டில் அதீத ஆர்வம். விறகு சுல்லிகள் வலக்கண்ணைக் குத்த அந்தக் கண்ணின் பார்வை மொத்தமாகப் பறிபோனது. பள்ளிப் படிப்பை விளையாட்டு விடுதியுடன்கூடிய ஒரு தனியார் பள்ளியில் நிறைவு செய்த சுரேஷ், இளங்கலை உடற்கல்வியியல் மற்றும் சுகாதார அறிவியல் (B.Sc Physical and Health Education)படித்தார். எஞ்சிய ஒரு கண் பார்வையை வைத்துக்கொண்டு, பார்வையுள்ளவர்களோடு இணைந்து தேசிய அளவில் கைப்பந்து போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
“குஜராத் போட்டிகள்லதான் நான் பார்வையற்றவர்களோட முதன்முறையாக் கலந்துக்கிட்டேன். ஒரு புது அனுபவமா இருந்துச்சு. எல்லோரும் என்கிட்ட எப்படிப் பழகுவாங்கணு யோசிச்சேன். ஆனா ஃபீல்டுல நான் இறங்கினதும் அவ்லோ என்கரேஜ் பண்ணுனாங்க.” என்றார் மகிழ்ச்சியாக.
பார்வையற்றோருக்கான T-13 பிரிவில் பங்கேற்ற சுரேஷ், 400 மீட்டர் ஓட்டத்தில் தங்கமும், நீளம் தாண்டுதலில் வெண்கலமும் வென்றிருக்கிறார். நிலவிய தட்பவெப்பம் காரணமாக நீளம் தாண்டுதலில் தங்கம் வெல்ல இயலாதது குறித்த வருத்தம் அதிகம் தென்படுகிறது அவரது பேச்சில்.
வீரர் சுரேஷோடான உரையாடலைக் கேட்க
நடைபெற்ற போட்டியில் முழுப் பார்வையற்றவர்களுக்கான T-11 பிரிவில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டத்தில் என மூன்று தங்கங்களை தட்டிப் பறித்துள்ள பிரகதீஸ்வர ராஜா, தன்னுடைய இந்த வெற்றி குறித்தும் அதற்கான தயாரிப்புகள் பற்றியும் விரிவாகப் பகிர்ந்துகொண்டார்.
அவரோடான உரையாடல் அடுத்த பகுதியில்.
***வீரர்களை நேர்காணல் செய்த திரு. பொன். சக்திவேல் மற்றும் திரு. M. பாலகிருஷ்ணன் இருவருக்கும் நன்றி.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
