Categories
தலையங்கம் விளையாட்டு Uncategorized

தலையங்கம்: முட்டுச்சந்தா? முன்னேற்றப் பாதையா?

பார்வையற்றோர் தொடர்பான செய்திகள் மற்றும் கட்டுரைகளுக்கு:
https://thodugai.in

டிசம்பர் 14, 15 மற்றும் 16 தேதிகளில் குஜராத்திலுள்ள நாடியாட் என்னும் இடத்தில் பார்வையற்றோருக்கான இந்திய விளையாட்டு சங்கத்தால் (Indian Blind Sports Association IBSA) தேசிய அளவிலான தடகளப் போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்தப் போட்டிகளில் தமிழ்நாடு பார்வையற்றோர் விளையாட்டு சங்கத்தின் (Tamilnadu Blind Sports Association TABSA) சார்பிலும், தமிழகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் இருபால் வீரர்கள் பங்கேற்று, 10 தங்கம், 2 வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என 14 மெடல்களைத் தமிழகத்துக்காகப் பெற்று ஊர் திரும்பியிருக்கிறார்கள்.

அவர்களின் கைகளில் பதக்கங்கள், அங்கொன்றும் இங்கொன்றுமாகப் பாராட்டுச் செய்திகள், அதுவும் மிகச் சில பார்வையற்றவர்களிடமிருந்து. பிறகு பார்வையற்றவனின் முகநூல்ப்பதிவின் விளைவாய் நக்கீரன், தினகரன் போன்ற செய்தித்தளங்களில் சில பத்திச் செய்திகள். அவ்வளவுதான், இனி அவரவர் வேலையைப் பார்க்கலாம். அடுத்த ஆண்டு அறிவிப்பு வரும். மீண்டும் கூடலாம், ஓடலாம், வென்றால் மூன்றுநாள் பேசலாம்.

இந்த வரலாற்றுத் தருணத்தை அப்படியே பொதுச்சமூக வீரர்களுக்கு நிகழ்ந்ததாய் கற்பனை செய்து பார்ப்போம். என்னவெல்லாம் நடந்திருக்கும்? முன்னணி செய்தி ஊடகங்களின் முகப்புப் பக்கம் இந்த வீரர்களின் வெற்றி முகங்களால் நிறைந்திருக்கும்.

காட்சி ஊடகங்களில் சில நிமிடங்களேனும் கையில் பதக்கங்களோடு தங்கள் வெற்றிக் களிப்பைப் பகிரும் உடனடிச் செய்தியில் அதிரடி காட்டியிருப்பார்கள் வீரர்கள். உடனே அரசின் தரப்பில் பாராட்டும், பெருந்தொகை ஒன்றும் அறிவிப்பாய் வந்திருக்கும். ஆனால், இங்கே வெற்றி பெற்றிருப்பவர்கள் பார்வையற்றவர்கள். “இவுங்களுக்கு கேம்ஸ் எல்லாம் Just for encouragement” அதுக்காகத்தான் என்ற மனநிலையோடு இருக்கிற பெருவாரி சமூகத்திடமிருந்து வேறு எதையும் எ,எதிர்பார்க்க இயலாதுதான்.

[சரி பொதுச்சமூகத்தை விடுங்கள், அது அப்படித்தான். ஆனால், பார்வையற்றவர்கள் நாம்தான் என்ன செய்துவிட்டோம்? பார்வையற்றோரின் நலனையும் உரிமையையும் பேணுவதே தங்கள் ஒற்றை நோக்கமென கற்றைக்குரலில் ஒலிக்கும் முக்கிய அமைப்புகளுக்கு இந்த வெற்றிச் செய்தி சென்று சேரவில்லையா? அல்லது வெற்றிக்கான முன் தயாரிப்பில் தங்களுக்குப் பங்கில்லை என்கிற தார்மீக தயக்கமா?

இங்கே வெற்றி பெற்றிருப்பவர்கள் நம் சகோதரர்கள். ஓடோடிச் சென்று அவர்கள் முதுகில் தட்டிக் கொடுத்து, கைகுலுக்கி நம்மை அறிமுகம் செய்திருக்க வேண்டாமா? “நமக்குள்ளே ஒற்றுமை இல்லை, போராடும் உணர்வு மழுங்கிவிட்டது” எனப் பேசிப் பேசி, புரையோடிப்போன புண்ணையே தடவிவிட்டபடி, தர்க்கித்துக்கொண்டிருப்பவர்கள், இந்த வெற்றியும்கூட போராட்டத்தின் இன்னொரு வடிவம் என்பதை புரிந்துகொள்வதுதான் எப்போது?

போராட்டத்திற்கு ஒற்றுமை வேண்டும் எனப் பேசும் நாம், சில கொண்டாட்டங்களின் வழியே அதைச் சிறுகச் சிறுகக் கட்டமைக்கலாமே! எது நம்மைத் தடுக்கிறது?

காலச் சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. அரசு தன்னுடைய பெருவாரியான பணியிடங்களைக் குத்தகைக்கு விட்டு, ஆட்கள் எடுக்கத் தொடங்கிவிட்டது. அது ஆசிரியர்ப் பணியே ஆனாலும் இனி அன்றாடக்கூலி என்றாகிவிட்ட நிலையில், பார்வையற்றோருக்கான செறிவான பல்துறைக் கற்றல் மற்றும் பயிற்சி வாய்ப்புகளே அவர்களுக்கான பணிவாய்ப்புகளைப் பெற்றுத் தரப்போகிறது.

இத்தகைய நிலையில், நம்முடைய வீரர்கள் பெற்றிருக்கிற வெற்றி என்பது நமக்கான பணிவாய்ப்புகளுக்கு திறந்துவிடப்பட்டிருக்கிற இன்னொரு வாசல். அந்த வாசலை முட்டுச் சந்தாக்குவதும், முயன்று புதிய பாதையைக் கட்டமைத்து, முன்னேற்றப்பாதையாக்குவதும் நமக்கான அமைப்புகளின் கையில்தான் இருக்கிறது. என்ன செய்யப் போகிறோம் நாம்?


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.