தூத்துக்குடியைச் சேர்ந்த அந்தப் பார்வையற்ற சிறுவனின் மொத்த ஆர்வமும் கிரிக்கெட் மேல்தான் இருந்தது. பதின் பருவம் தொடங்கி தான் படித்த பாளையங்கோட்டை பார்வையற்றோருக்கான சிறப்புப்பள்ளியில் கிரிக்கெட் ஆடத் தொடங்கினார் மகாராஜா.
தூத்துக்குடி மாவட்டம், K. துரைசாமிபுரம், எப்போதும் வென்றான் கிராமத்தைச் சேர்ந்தவர் மகாராஜா. முழுப் பார்வையற்றவரான இவர், பார்வையற்றோருக்கான இந்தியக் கிரிக்கெட் அணியில் B-1 வீரராக அங்கம் வகிக்கிறார்.
இடக்கை மட்டையாளர் மற்றும் பந்து வீச்சாளரான இவர், கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பெர்மிங்காமில் நடைபெற்ற பார்வையற்றோருக்கான உலக விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றார்.
பார்வையற்றோருக்கான சர்வதேச விளையாட்டுச் சங்கம் International Blind Sports Association IBSA) நடத்திய இந்தப் போட்டியில் இவர் அங்கம் வகித்த இந்தியப் பார்வையற்றோர் கிரிக்கெட் அணி, வெள்ளிப் பதக்கம் வென்றது. அதனைத் தொடர்ந்து கிரிக்கெட் விளையாட்டைக் கவனப்படுத்தும் முகாம் இந்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்றது. அந்த இரண்டு மாதகால நிகழ்வில் பங்கேற்க மகாராஜாவுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்நிலையில், அமெரிக்கா சென்றுவர தனக்கு நிதியுதவி வழங்குமாறு இவர் எழுப்பிய கோரிக்கையினை ஏற்று, மாண்புமிகு தமிழ்நாடு துணைமுதல்வரும் அப்போதைய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சருமான திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், மகாராஜாவுக்குத் தேவையான ரூ. 1,20,000 வழங்கினார்.

எல்லாவற்றிற்கும் மகுடம் வைத்தாற்போல், தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், இன்று மகாராஜாவுக்கு தமிழ்நாடு உப்பு நிறுவனத்தில் தொழிலாளர் நல அலுவலருக்கான பணி நியமன ஆணை வழங்கிச் சிறப்பித்துள்ளார். இதன்மூலம், விளையாட்டுப் பிரிவில் பணிநியமனம் பெறும் மாநிலத்தின் முதல் பார்வையற்றவர் என்ற பெருமைக்குச் சொந்தக்காரர் ஆனார் மகாராஜா. மேலும், இந்தப் பணியிடமானது பிரிவு 2ன் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வறுமைச் சூழலைக் குடும்பப் பின்னணியாகக்கொண்ட மகாராஜாவின் தந்தை மூன்றாண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திவிட்டார். குடும்பத்தின் ஒற்றை வருவாய் ஆதாரமாய்த் திகழ வேண்டிய நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்ட இந்த 25 வயது இளைஞனுக்குக் கைகொடுத்திருக்கிறது அவரது தொடர்ச்சியான உழைப்பும் சிறு வயதுமுதல் அவர் தூக்கிச் சுமந்த கிரிக்கெட் கனவும்.
பார்வையற்றோருக்குக் கல்வி ஒன்றே கைகொடுக்கும். விளையாட்டெல்லாம் வேலையற்றவர்களின் வேலை என நம்பியவர்களின் கணக்கைப் பொய்யாக்கி, விளையாட்டும் வேலை வாய்ப்பைப் பெற்றுத்தரும் என்ற நம்பிக்கையை விதைத்திரு்க்கிறது தமிழ்நாடு அரசு. இந்தச் செயலுக்காய் அரசுக்கும் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒட்டுமொத்தப் பார்வையற்றோரின் சார்பில் நெஞ்சார்ந்த நன்றிகள்.
இது மிகப் பெரிய வரலாற்றுத் தருணம். கணினிப் பயிற்சி, போட்டித்தேர்வு வகுப்புகள் போல விளையாட்டு என்கிற இன்னொரு வாசலும் நமக்காக அகள விரிந்திருக்கிறது. தன் அயராத உழைப்பால் ஒட்டுமொத்தப் பார்வையற்ற சமூகத்துக்குமான ஓர் புதிய பாதையைத் திறந்துவிட்டிருக்கும் தம்பி மகாராஜாவுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகளும் நன்றிகளும் பாராட்டுகளும்.
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
