Categories
கட்டுரைகள் Uncategorized

கண்ணீர்: மனதை உலுக்கிய மரணங்கள்!

எப்பொழுதுமே பெரிதாக யாரையும் புகார் சொல்லாத குணம், அனைவருடனும் இணக்கமாகப் பழகும் இணிமையான பண்பு

U. சித்ரா

“சித்ரா டீச்சர் குட் மார்னிங், கலை டீச்சர் என்ன சாப்டீங்க? சித்ரா டீச்சர் எங்கே போறீங்க?” என வாய்க்குவாய் டீச்சர்களின் பெயர்களை அந்த துள்ளலான மழலையின் குரலில் இனி கேட்க முடியாது என நினைக்கும்போது மனம் வலிக்கிறது, வெதும்புகிறது, தேம்புகிறது கனக்கிறது.  2016-ல் ஒன்றாம் வகுப்பில் சேர்ந்தவன் கிருஷ்னதாஸ். மிகவும் மெலிதான உடல், அல்பெனிசத்தால் வெளுத்திருந்த உடல் நிறம், சூரிய ஒளியில் திறக்க இயலாத அந்த சிறிய கண்களுக்குக் கவசமாக அமைந்த கறுப்பு கண்ணாடி, பிரெயில் மற்றும் கணிதப்பலகை அடங்கிய சிறிய நெகிழி பையை பிஞ்சு விரல்களில் கோர்த்து தோள்பட்டையின் பின்புறம் போட்டவாறு நடந்து வரும்பொழுது லிட்டில் ஜான் திரைப்பட கதாநாயகன் லிட்டில் ஜானாக மாறும்போது உள்ள உருவம் நடந்து வருவதுபோல் தோண்றும்.

கிருஷ்ணதாஸ்

எப்பொழுதுமே உற்சாகமான குரல், கலகலப்பான பேச்சு, சுறுசுறுப்பான நடை, அந்த அழகு வாயிலிருந்து உதிரும் ஒவ்வொரு வாக்கியமும் அழகிய சிறு புண்ணகையுடனே முற்றுப்பெறும்.   அவனது உற்சாகத்தையும் சுறுசுறுப்பையும் பார்க்கும்போது இவன் உடலிலா இவ்வளவு பிரச்சனை என நினைக்கத்தோண்றும். இதய அறுவைசிகிச்சை செய்ததாலும் தைராய்டு பிரச்சனையும் இருந்ததால் மாத்திரை மருந்துகளுடன் பயனிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்ட அந்த அழகு மழலையுடன் ஏனோ மாத்திரைகளுக்கு அந்த பயணம் பிடிக்காமல் அவன் ஆயுளை முடித்துவிட்டது போலும். தற்பொழுது ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்த அறிவார்ந்த பிஞ்சு குழந்தையின் மீது இந்த இயற்கைக்கு ஏன் இந்த வெறுப்பு? இல்லை இல்லை அந்த இயற்கை அளவு கடந்த பாசம் கொண்ட காரணத்தினால்தான் தன்னிடம் அழைத்துக்கொண்டதோ? வேறு என்ன செய்ய முடியும் இப்படிச் சொல்லித்தான் நம் மனதை சமாதானம் செய்துகொள்ள வேண்டும்.

எப்பொழுதுமே பெரிதாக யாரையும் புகார் சொல்லாத குணம், அனைவருடனும் இணக்கமாகப் பழகும் இணிமையான பண்பு, ஒவ்வொரு நொடியும் எதார்த்தமாகவும், மகிழ்ச்சியுடனும் கடந்த அவனுடைய மனநிலை, தீவிரமான கிறிஸ்துவ பக்தி என அனைவராலும் கவரப்பட்ட கிருஷ்னதாஸின்  வாழ்க்கை என்னும் அத்யாயம் கடந்த நவம்பர் 16, சனிக்கிழமை காலை எட்டு மணியுடன் நிறைவுபெற்றது. எத்தனை ஆசிரியர்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பெயரை அழைத்து வணக்கம் சொல்லும் அக்குழந்தை, எங்கள் ஒருவரிடமும் சொல்லாமல் விட்டுப் பிரிந்தது ஏனோ? 

பள்ளிப் படிப்பைப் பொறுத்தவரையில் வருடத்திற்கு பத்து நாட்களுக்கு விடுமுறை எடுத்தாலே அதிகம். பள்ளிக்கு வருவதில் நேரம் தவறாமையை ஒருநாளும் தவறியதில்லை. பிரெயிலை விரைவில் கற்றுக்கொண்டவன்.  படிப்பில் அவன் ஆவரேஜ் என்றாலும் குணத்தில் அவன் அவுட்ஸ்டாண்டிங். அவன் எனது வகுப்பில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே படித்திருந்தாலும்கூட  ஒவ்வொருநாளும் ஏதோ ஒரு நேரத்திலாவது அவனைச் சந்தித்துவிடுவேன். அதனால்தான் அவனோடு ஒரு பிணைப்பு.

எட்டாம் வகுப்பில் அவனுக்கு வகுப்பு ஆசிரியராக இருந்தபோது ஏற்பட்ட  நெருக்கம் அதிகம். வீட்டுப்பாடம் எழுதவில்லை, படித்து வரவில்லை அல்லது ஏதேனும் சேட்டை செய்தால் அவனை அழைத்து கிள்ளினால் அவன் சிரிப்பான். நம் கோபத்தையே மாற்றிவிடும் அளவுக்கு அவனது சிரிப்பு இருக்கும்.   

கடந்த மார்ச் மாதம் முதல் வாரத்தில்   ஏற்பட்ட ஒரு மரணம் வெகுவாக என்னைப் பாதித்தது. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வின் முதல் தேர்வை எழுதிவிட்டு தன் வாழ்க்கையின் முடிவை தெரிந்து கொண்டவன்  ஏன் தேர்ந்தும் கொண்டவன் எனவும் சொல்லலாம். உடல்நிலை   சரியில்லாமல் இறந்த கௌதம் சிறந்த படிப்பாளி, நல்ல புத்திசாலி. அந்த மாணவனுடன் அதிக பரிட்சயம் இல்லை என்றாலும், வாழ்க்கையின் இறுதி 2 நாட்கள் அவன் பேசிய வார்த்தைகள், எனக்கு துக்கத்தை ஏற்படுத்தியது. மருத்துவமணையிலிருந்தபோது “டீச்சர் அம்மாவைத் திட்ட வேண்டாம் என சொல்லுங்கள்” எனக் கூறினான். அவ்வார்த்தைகள் இன்னும் என் காதில், ஆழ்மனதில் அசரீரியாக ஒலித்துக்கொண்டிருக்கிறது.

 சமீபத்தில் ஓராண்டுக்குள் இறந்த விக்ணேஷ். பூவிருந்தவல்லி பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தவன்தான். Csgab-ல்  முன்னாள் செயற்குழு உறுப்பினராவார். ஏறக்குறைய 24 அல்லது 25 வயதுதான் இருக்கும். சூமில் அவனுக்கு புகழஞ்சலி நடைபெற்றது. நானும் கலந்துகொண்டேன். இத்தனை சிறிய வயதில் எத்தனை மனிதர்கள் மனதில் இடம் பிடித்திருந்திருக்கிறான் என்று நினைத்தபோது ஆச்சரியமாக இருந்தது. அவனைப் பற்றி பிறர் சொல்லி நான் கேட்டதிலிருந்து கற்றுக் கொண்டது யாதெனில், நம்மால் இயன்ற உதவியைப் பிறருக்கு எப்பொழுதும் செய்ய வே்ண்டும்.    

  ஒரு ஆசிரியராக நம்மிடம் படித்த மாணவர்கள் அல்லது முன்னால் மாணவர்களின் இறப்பைக் கேள்விப்படும்போதெல்லாம் நம் வீட்டிலுள்ள ஒரு சின்னப் பிள்ளையைப் பறிகொடுத்த வேதனை ஏற்படுகிறது.  பெற்ற பிள்ளையை இழந்ததுபோல் மனம் பதைக்கிறது, துடிதுடிக்கிறது. ஆசிரியர் முதல் பெற்றோர் என்பதாலா அல்லது ஒருநாளின் மூன்றில் ஒரு பகுதியை மாணவரோடு செலவிடுவதாலா? பார்வையற்ற மாணவர்களின் ஆசிரியராய், அதிலும் பார்வையற்ற ஆசிரியராய் அவர்களுடனான இணக்கம் அதிகரிக்கிறது. வீட்டில் உள்ளவர்களை விட்டுவிட்டு பள்ளி விடுதியில் தங்கியிருக்கிற அக்குழந்தைக்கு அம்மாவாய், அப்பாவாய் உற்ற தோழனாய் என அவனுடன் தோலோடு தோல் சேர்த்து பயணிக்க வேண்டியிருக்கிறது.

ஏன் இந்த மரணங்கள் எனச் சிந்தித்துப் பார்த்தோமேயானால், வறுமை, புறக்கணிப்பு, அலட்சியம், அறியாமை போன்றவை பதில்களாகக் கிடைக்கும். மேற்கூறிய காரணங்களில் அலட்சியம், புறக்கனிப்பு ஆகியவற்றைச் சரி செய்வது   நம் கைகளில் உள்ளது. ஆனால், வறுமை, அறியாமை ஆகியவற்றைச் சரி  செய்வது அரசாங்கத்தின் கையில் தான் இருக்கிறது….

  ஜனனம் என்று இருந்தால் மரணம் என்பது நிச்சயம் தானே என நினைக்கலாம். ஆனால் நான் கூறிய 3 மரணங்களுமே இளவயது மரணங்கள். வாழ்க்கையை அனுபவிக்கும் வயது, அதைப் புரிந்துகொள்ளத் தொடங்கும் வயது. மகிழ்ச்சியும் குதுகலமும் தழுவ வேண்டிய காலத்தில் மரணமா வந்து தழுவுவது?

தொடர்புக்கு: anbirkiniyaval@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.