ப்லு மவுண்டன் எக்ஸ்பிரசில் ராஜாவின் நண்பன் அவனுக்கு ஒரு நல்ல இடத்தைப் பிடித்துக் கொடுத்தான். அது ஜன்னலோரம் ஒற்றை இருக்கை. அவனுக்கு மிகவும் மகிழ்ச்சி. கண்ணாடிக் கதவை அடைத்து விட்டு கண்ணாடியின் மேல் கையை வைத்துத் தலையை அதன்மேல் சாய்த்துக்கொள்வான்.
சாதாரணமாக இப்படிப்பட்ட நேரங்களைத் தவிர, ரயிலில் அவன் படுக்கை முறை வேறானது. செய்தித்தாள் படிப்பவனைப்போல் ஒரு மாலை நேர செய்தித்தாளை வாங்கிக் கொள்வான். ரயிலில், எதிரில் பக்கத்தில் என்று அமர்ந்திருப்பவர்கள் அனைவரும் வாங்கி ஒரு பார்வை பார்த்துவிட்டு அவனிடம் கொடுத்துவிடுவார்கள். இதற்குள் மணி பத்தை தொட்டுவிடும். அந்த செய்தித்தாளை கீழே விரித்து தலைக்கு சூட்கேசை வைத்து படுத்துவிட்டால் தாலாட்டுவது போல் இருக்கும். அந்த சுகத்தில் வரும் தூக்கமே தூக்கம்.
டிசம்பர் விடுமுறையில் வீட்டிற்கு வந்தவன் இப்போதுதான் கல்லூரி திரும்புகிறான். புதிய புதிய அனுபவங்களை தன்னுள் சுமந்தபடி கல்லூரி திரும்புகிறான். சென்னை கல்லூரிகளில் டிசம்பர் மாதத்தைப் பற்றி கொஞ்சம் சொல்லத்தான் வேண்டும்.
நகரில், ஏதேனும் ஒரு கல்லூரியில் மாணவர்கள் தங்கள் கோரிக்கைகளுக்காக போராட்டத்தை தொடங்குவார்கள். அது செய்தித்தாளில் வெளியாகும். மற்ற கல்லூரிகள் ஒவ்வொன்றாக போராட்டத்தை தொடங்கிவிடும். ஆங்கில நாளேடுகள் டிசம்பர் காய்ச்சல் என்று இதற்கு பெயரிட்டு அழைத்து மகிழ்ந்தன. இவன் கல்லூரியும் அப்படித்தான் விடுமுறை விட்டது. ஆனால் இந்த முறை, மாணவர்களுக்கு விடுமுறை மீது அலுப்பு தட்ட வைக்கவோ என்னவோ ஒரு நீண்ட விடுமுறையை அறிவித்து இப்போதுதான் கல்லூரியைத் திறக்கிறார்கள்.
தன் நண்பனுடன் வெளியே சென்று விட்டு வீடு திரும்பியதும், “உனக்கொரு கடிதம் வந்திருக்கு” என்று கூறி, ஒரு அஞ்சல் அட்டையை அக்கா கொடுத்தார். “ஆங்கிலத்துல எழுதி இருக்கிறது. சுமதி படிச்சு காட்டினாள்” என்றார். “நண்பன் விவேகானந்தன் எழுதியிருக்கிறார், அவர் தம்பிக்கு ஏதோ சீட் கிடைத்து விட்டதாம்” என்றார்.
இப்படி இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே ராஜா வருவதை பார்த்துக் கொண்டிருந்த சுமதி, வேகமாக வந்து அந்த கடிதத்தை படித்துக் காட்டினாள். “நான் சொன்ன அர்த்தம் தப்பு தானே” என்றாள். குற்ற உணர்வு குரலில் தென்பட்டது. ராஜா மெல்ல சிரித்தான். “நாங்க கடிதத்தை முடிக்கும் போது ஏதேனும் ஒரு மேற்கோளை எழுதி வைப்போம். விவேகானந்தனின் பொன்மொழியை நண்பன் தந்திருக்கிறான். பெரிய தப்பு எல்லாம் இல்லை. நண்பனின் தம்பிக்கு மருத்துவத்துறையில் படிக்க வாய்ப்பு கிடைச்சிருக்கு” என்று சொல்லி அவள் கவலைக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பினான். ஆனால் அவளோ “என் ஓட்டை இங்கிலீசு தப்புன்னு அப்பவே நினைச்சேன்” என்று கூறிய போது அவள் குரல் தாழ்வு மனப்பான்மையால் கனத்திருப்பதுபோல் அவனுக்கு தோன்றிற்று. அதற்குள் அக்கா இடை மறித்துச் சொன்னார், “அவங்க அம்மா உன்ன பாக்கணும்னு ஆசை படுறாங்க. நீ வந்ததை சொன்னா போதும், தான் வந்து கூட்டிகிட்டு போறேனாங்க. ஒரேட்டு போய் பாரேன்” என்றாள்.
“நான் கூட்டிகிட்டு போறேன்” என்று அழைத்துச் செல்ல தயாரானாள். அவள் வீடு தொலைவில் இல்லை பக்கத்தில் பத்து பன்னிரெண்டு அடி தூரத்தில்தான் இருந்தது. “இவருதாம்மா நீ பார்க்கனும்னு நினைச்ச நபரு. இவர வல போட்டு புடிச்சிட்டு வந்திருக்கேன்” என்றாள் கேளியாக. “வா ராஜா எங்க வீட்டுக்கு வர இவ்வளவு நாளா?” என்று வரவேற்று கதவருகே இருந்த ஸ்டூலில் அமர்த்தினார் சுமதியின் அம்மா. ஸ்டூலோடு ஒட்டியபடி ஒரு நீண்ட மேசை இருந்தது. அதில் கை வைத்த படி அமர்ந்தான் ராஜா.
அந்த வாரத் தொடக்கத்தில் நடந்த ஒரு சிறு சம்பவம் அவனை இணைத்து பெரிதாக பேசப்பட்டது. அது இதுதான். அக்கா கடைக்கு எங்கோ சென்றிருந்தார். ராஜா வீட்டு வாசற்படியில் நின்று எதையோ யோசித்தபடி இருந்தான். அங்கு வந்த கழிப்பறை துப்புறவாளர் “சாமி இல்லங்களா” என்று அக்காவைக் குறித்து கேட்டார். “அவர்கள் வெளியே போயிருக்கிறார்கள். பிறகு வாருங்கள்” என்றான். இத்தகைய மனிதர்களை டொங்கன் என்று அழைப்பதும் , சிறுவர்கள் கூட வயதானவர்களை வா போ என்று அழைப்பதும் பொள்ளாச்சி பகுதியில் வழக்கம்.
எனவே, இதை பார்த்துக் கொண்டிருந்த எதிர் வீட்டு பெண்மணிக்கு ராஜா ஒரு புரட்சிவாதியாக தென்பட்டு அதை அக்காவிடமும் சொல்ல அது, இந்த வீடு வரை பரவி இருந்தது. “டோம்பன வாங்க போங்கன்னு பேசுனியாமாம்” என்றார் சுமதியின் தாயார். “அவங்க மனுசனுங்க தானே” என்றான் ராஜா. நிசம் தான் ஊர் பழக்கம்னு ஒன்னு இருக்குல்ல. அவங்க கீழ் சாதிக்காரங்கதானே”. ராஜா சிரித்தான். “அதை கையிலயும் தலையிலயும் சுமந்துகிட்டு போறவங்க கீழ் சாதின்னா சாகற வரைக்கும் நம்ம வயித்துலயே சுமக்கிற நாம எப்படி மேல் சாதி ஆனோம்”. “இதுக்கு எங்ககிட்ட பதிலே இல்ல” என்ற சுமதி, நீங்க தி.க வா என்றாள். “நான் எதுலயும் இல்ல மனுசன மனுசன்னு பாக்கனும்கிறவங்களோட சேர்ந்து நிக்கிறேன்”. இப்படி காரசாரமா தொடங்கிய விவாதம் கல்லூரி விடுதி சாப்பாடு என்ற வழக்கமான கேள்விகளோடு தொடர்ந்தது.
இரண்டாம் நாள் அவனே அந்த வீட்டிற்குச் சென்றான். “இன்னும் அஞ்சு நிமிசத்துல வரலன்னா வந்து கூட்டிட்டு வரலாம்னு நினைச்சேன்” என்று கூறி அந்த செவ்வக மேசையின் மற்றொரு முனையில் அவனுக்கு எதிரே அமர்ந்தாள். “பாடுவீங்களா” அவள் மெல்ல கேட்டாள். “ஓ பாத்ரூம்ல பாடுவேனே” என்றான் சிரித்தபடி. “பாத்தா பாடுற மனுசன் மாதிரி தெரியுது”. “எப்படி முகத்தில் எழுதி ஒட்டி இருக்குமா” என்று கூறியபடி தன் முகத்தை தடவி பார்த்தான். “ஒரு பாட்டு தான் பாடி காட்டுங்களேன்” என்று கெஞ்சும் குரலில் கேட்டாள்.
அவனுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு திரைப்பட பாடல்களை பாடினான். அதற்குள்ளாகவே அவனுடைய இடது கை விரல் வழக்கம் போல் தன் பணியை தொடங்கி விட்டது. அவன் தன் இடது கையை மேசையின் மீதுதான் வைத்திருந்தான். அவனது முகமாற்றத்தை பார்த்தவள் விரலை கவனித்து விட்டு, “என்ன இந்த விரல்லுலே” அதைச் சுட்டிக்காட்டி கேட்டாள். “எத்தன நாளா இது இருக்கு?”. “யாருக்கு தெரியும் ரொம்ப நாளா இருக்கு” என்றான். அவள் ஓடிப் போய் ஏதோ ஒரு ஆயின்மென்டை எடுத்து வந்து அந்த விரல் மேல் பூசினாள். “ஜில்”என்ற அவளுடைய விரலின் ஸ்பரிசமும் அந்த மருந்தும் சேர்ந்து அவனுக்கு ஒரு பெரும் ஆசுவாசத்தை தந்தது’ அவள் வீட்டிலிருந்த வார பத்திரிக்கைகளையும், தைத்து வைக்கப்பட்டிருந்த தொடர்கதைகளையும் அவனுக்கு வாசித்துக் காட்டினாள்.
அது மூன்றாம் நாள் அவன் தன் வீட்டிலிருந்து அவள் வீட்டை நோக்கி நடக்கும்போதே வாசலில் காத்திருந்தவள் ஓடிவந்து அவன் கைகளைப் பற்றிக்கொண்டாள். “காலைல நேரமே எந்திரிக்கிறதுன்னு ஆச்சு. குளிக்கிறதும் சீக்கிரமா முடிஞ்சிடும். சாப்பிட்டுட்டு நேரமே வரலாமில்ல எவ்ளோ நேரமா உங்க வீட்டு வாசற்படியையே பார்த்துட்டு நிற்கிறது” என்று நீளமாக கேட்டு முடித்தாள். அவன் பதில் எதுவும் சொல்லவில்லை. மனதிற்குள் சிரித்துக்கொண்டான். அதே சமயம், “என்ன இந்த பெண் இவள் பார்த்த இரண்டு மூன்று நாட்களுக்குள் இவ்ளோ அன்பை ஏன் கொட்டுகிறாள். இவளுக்கும் எனக்குமான உறவு ஒரு பூர்வ ஜென்ம பந்தமா?” என்றெல்லாம் நினைத்தான். அவளைப் பற்றிய நினைவு அவன் மனதில் அவளை மிக உயரத்தில் நிறுத்தியது. அவன் மெல்ல பெருமூச்சு விட்டான். வீட்டின் அருகே சென்றவுடன் “என்ன பேச்சயே காணோம்” என்று தன் வலதுகையால் அவன் தலையை மெல்ல தட்டினாள். “ஏன் ராஜா இவ்வளவு நேரம் அந்த புள்ள எவ்ளோ நேரமா அங்கேயே கெடக்குது தெரியுமா, அங்க சாப்பிட நேரமாச்சுன்னா இங்க வந்து சாப்பிட வேண்டியதுதானே?” என்றார் சுமதியின் அம்மா.
வழக்கமான உரையாடல் தொடங்கியது. பேசிக் கொண்டிருந்தவள் திடீரென்று எழுந்து வந்து அவனருகே நின்று அவன் தலையில் பேன் பார்க்கத் தொடங்கினாள். “என் தலை என்ன பேன் காடாவா இருக்கு?”. “புதர்மண்டி கிடக்குற மாதிரி இருக்கு” என்றாள். “ஏற்கனவே எங்க டீச்சர் கண்ணு வச்சாங்க. இப்ப இது வேறயா”. “அத மொதல்ல கேட்டுக்கறேன், டீச்சர் என்ன சொன்னாங்க” என்று ஆவலோடு கேட்டாள். இந்த வகுப்புலயே உன் தலதாய்யா மேடு பள்ளமா இருக்குன்னு சொன்னாங்க” என்றான். கேட்டவள் சிரித்தபடி “உண்மைதான் ரோட்டுல ஸ்பீடு பிரேக் இருக்குமே அது மாதிரி இருக்கு” என்றாள்.
அவள் மூச்சு அவன் மீது படிந்த போது அவனுக்கு மிகவும் கூச்சமாக இருந்தது. இதுவரை எந்தப் பெண்ணும் இவ்வளவு நெருக்கத்தில் அவன் அருகே நின்றதில்லை. இப்போது அவனுக்குத் தோன்றியது; இவள் தன் தாய்மையை வெளிப்படுத்துகிறாளா? என்று. அன்பிற்கு அவன் ஏங்கியது உண்டுதான். ஆனால் தன் மீது படும் ஒரு பெண்ணின் சுடு மூச்சை வெறுமனே கடந்து செல்லும் வயதில் அவன் இல்லையே.
“ஒரு மனுஷனுக்கு ஒரு கண்ணு பத்தாதா நான் வேனும்னா ஒரு கண்ண தந்துர்றேன். ஏம்மா?” என்று அம்மாவை பார்த்தாள். “உனக்கு பிரியம்னா கொடு யாரு வேண்டாம்கறா” என்றார் அம்மா. அவன் தன் வலது கையால், “டம் டம்” என்று மேசையை தட்டினான். கண்ண அப்படியே தோண்டி கொண்டு போய் வெக்கறதுக்கு கண்ணு என்ன சைக்கிள் சக்கரமா? இல்ல வண்டி சக்கரமா?”. அம்மாவும் மகளும் கொல்லென்று சிரித்தார்கள். அவன் தொடர்ந்தான், “கண்ண அப்பறதுக்கு டாக்டர்கள் கண்ணப்பனும் அல்ல. நான் சிவனும் அல்ல. எடுக்கிற கண்ண முழுசா எடுப்பாங்க. ஆனா வெக்கறப்ப அந்த நபருக்கு கண்ணுல எந்த பாகம் மோசமா இருக்கோ அந்த பகுதியத்தான் வேற கண்ணுல இருந்து எடுத்து வைப்பாங்க. இங்க என் கண்ணுல தான் எல்லா பாகமும் சிக்கலாச்சே” என்று மருத்துவ குறிப்பை சொல்லி முடித்தான். இதை கேட்ட சுமதி “அப்படியா” என்று பெருமூச்சு விட்டாள். அதில் அவளுடைய ஏமாற்றம் தெரிந்தது.
மற்றொரு நாள் அவன் வழக்கம் போல் பேசிக் கொண்டிருந்தபோது அம்மா கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்றார். வாசித்துக் காட்ட புத்தகத்தை எடுத்தவள் எதையோ நினைத்தவளாய் அதை மேசையின் மீது வைத்து விட்டு, “வா நடனம் ஆட கத்துத்தரேன்” என்று கூறி அவனை வீட்டின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்றாள். அது திறந்து கிடந்த வாயிலுக்கு நேராக இருக்கலாம். அவன் கையை அவள் இடை மீது வைத்து அவள் கையை அவன் இடுப்பின் மீது வைத்து கால் தப்படி எப்படி வைக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தாள்.
அவன் கிளர்ச்சி அடைவது போல் தோன்றவே மிரண்டு போனான். காலாகாலத்திற்கும் தன் மனதின் குற்றவுணர்விற்கு ஆளாகி விடுவோமோ என்றெண்ணி “எனக்கு நடனம் வராது” என்று கூறிவிட்டு தன் இடத்தில் வந்து அமர்ந்தான்.
மேசையின் மீதிருந்த நாவலை எடுத்து வாசிக்கத் தொடங்கினாள். வாசித்துக் கொண்டிருந்தவள் சட்டென அவன் கன்னத்தில் முத்தமிட்டாள். “ஷேவ் செய்ய மாட்டியா உதடெல்லாம் குத்துது” என்றாள். அவன் என்ன ஜேகே வின் “சில நேரங்களில் சில மனிதர்கள்” நாவலில் வரும் பிரபுவா? “ஷேவ் பன்றதில்லையா” என்ற கங்காவின் கேள்விக்கு, கண்களை சிமிட்டி கன்னத்தை தடவியபடி, “நவ் எ டேஸ் நோ கம்ப்ளைன்ட்ஸ்” என்று கூற. ஒரு சில நிமிடங்களில் யோசித்தபடி உட்கார்ந்திருந்தவன், “வீட்டிற்கு போயிட்டு வரேன்” என்று புறப்பட்டான். அவளும் அவனுடன் வந்து தன் வீட்டு வாயிலில் நின்று அவன் வீட்டிற்குள் போகும் வரை பார்த்துக் கொண்டிருந்தாள். அவன் வீட்டின் முன்புறம் ஒரு சாக்கடை இருக்கவே பயந்தபடி நின்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவன் தன் ஷேவிங் செட்டை எடுத்து சவரம் செய்யத் தொடங்கினான். “எப்பவும் காலைல எந்திரிச்சவுடனே சவரம் பண்ணிக்கிட்டு அப்புறம் தானே குளிக்கவே போவ இன்னைக்கு என்ன ஆச்சு. இந்நேரத்துல செய்யற” என்றார் அக்கா. “காலைல சோம்பலா இருந்துச்சு இப்ப என்னன்னா வேர்த்த ஒடனே முகம் அரிக்குது” என்று கூறி பிரச்சனையை முடித்து வைத்தான்.
அண்மையில் ஏற்படுத்திக் கொண்ட வழக்கப்படி அவன் ஸ்டூலில் கதவோரம் அமர்ந்திருந்தான். முன் வாசலைப் பார்த்தபடி வாசற் படியில் சுமதியின் அம்மா உட்கார்ந்து இருந்தார். அதற்குப் பின்னால் ராஜாவின் காலருகே சுமதியும் சிமெண்ட் தரையில் உட்கார்ந்து இருந்தாள். “அப்பறமா புக் படிப்பீங்களாம் இப்ப ஏதாச்சும் ரெண்டு பாட்டு பாடு ராஜா” என்றார் அம்மா. “அப்பாடா நான் கேட்கனும்னு நினைச்சேன். அம்மாவே கேட்டுட்டாங்க” என்று கூறி குதுகலித்தாள் சுமதி. மேசையில் தாளமிட்டபடி அவன் பாடினான். “ஆண்டவன் ஒருநாள் கடை விரித்தான்”.
அவன் பாடிக் கொண்டிருக்க அவனுடைய காலை எடுத்து தன் மடிமேல் வைத்துக் கொண்டு விரல் நகத்தில் என்னவோ செய்து கொண்டிருந்தாள். பிறகுதான் உணர்ந்தான் அவனுடைய விரல் நகங்களை அவள் வெட்டிக் கொண்டிருக்கிறாள் என்று. “என்ன செய்யற”. “நகம் வெட்டுறேன்” என்றாள் சாவதானமாக. “நெகவெட்டியா கத்தியா”. “ரெண்டும் இல்ல வாயால” என்று அம்மா சொன்னபோது திகைத்தான். “நாங்க வெட்டிக்க மாட்டமா?” “இவ்ளோ நாளா பார்க்கிறேன் வெட்டலயே” “சரி அதுக்குன்னு நகவெட்டி கத்தி ஒண்ணும் கிடைக்கலையாக்கும்” என்றான் சற்று கோவமான குரலில். “அதெல்லாம் எங்கயாவது விரல்லபட்டு காயமாச்சுன்னா” என்றவள், “வாய நல்லா கொப்புளிச்சுட்டா போச்சு” என்று முடித்து வைத்தாள். “அது இப்படித்தான் ராஜா. அது நினைச்சது சரின்னா, அது செஞ்சிடும்” என்றார் அம்மா. தன்னை ஒரு பொம்மையாக நினைத்துக் கொண்டார்களோ என்ற எண்ணம் ஒரு கணம் தோன்றி மறைந்தது. “என்ன புள்ள” என்று தனக்குள்ளேயே முணுமுணுத்துக் கொண்டான்.
அன்று வியாழக்கிழமை வழக்கம்போல் சுமதியின் வீட்டிற்குள் சென்றவன் தான் அமரும் ஸ்டூலில் சென்று அமர்ந்தான். சமையலுக்குக் காய்களை நறுக்கி கொண்டிருந்த சுமதியின் அம்மா அவனை உட்கார சொல்லிவிட்டு கூடை பை போன்றவற்றை தூசு தட்டி எடுத்தவர், “ராஜா உட்காந்திரு நான் சந்தைக்கு போயிட்டு சீக்கிரமா வந்துருரேன். அவள் சமையல் வேலை முடிச்சதும் ரெண்டு பேரும் புக்கு படிப்பீங்களாம்” என்று கூறி கிளம்பினாள்.
சந்தை என்றவுடன் தன் பொள்ளாச்சி சந்தையைப் பற்றி அவன் பெருமையாக நினைத்துக் கொண்டான். “பொள்ளாச்சி சந்தையிலே” என்ற திரைப்பட பாடல் வரி அவன் மனதில் வந்து போயிற்று. சில கிலோமீட்டர் பரப்பளவை கொண்ட மிகப்பெரிய சந்தை. ராஜா மில் ரோடு வழியாகவும் சந்தைப்பேட்டை வாயிலுக்குச் செல்லலாம். நேதாஜி ரோட்டில் கண்டன் ஆசாரி பட்டறைக் கடந்து அந்த சாலை முடியும் இடத்தில் கூட சந்தைப்பேட்டைக்குள் நுழைய ஒரு வாயில் உண்டு. மார்க்கெட் சாலை வழியாகவும் சந்தைப்பேட்டைக்குள்ளே நுழையலாம். அவ்வளவு ஏன் ரயில் நிலையத்திலிருந்து கூட்ஷெட் சாலை வழியாக வந்தால் மெயின் ரோட்டை கடந்து கொஞ்சம் வலது பக்கத்தில் சென்றால் அங்கும் அதற்கு ஒரு வாயில் உண்டு. இப்படி அந்த சந்தையை பற்றி தன் பழைய நினைவுகளை கோத்தெடுத்துப் பார்த்தான்.
“கொஞ்சம் சமையல் வேலை இருக்கு முடிச்சிட்டு புக்கு படிக்கலாம். அரை டம்ளர் காபி குடிக்கலாமா?. பால் இல்ல வரக்காபி தான்” என்றாள். “உனக்கு வைக்கிறதா இருந்தா எனக்கும் கொஞ்சம் கொடு எனக்கு வேண்டி வெக்காதே” “இதுலயும் பிரிச்சு பாக்குற தத்துவமா” என்று கேட்டுவிட்டு ஓடி சென்று இரண்டு டம்ளர் காப்பி உடன் திரும்பினாள். குடித்து முடித்து அவன் டம்ளரையும் எடுத்துக் கொண்டவள், “சீக்கிரம் வேலையை முடிச்சிட்டு வந்தர்றேன்” என்று கூறிவிட்டு சென்றாள். வீட்ல இருந்து அவன் ஆங்கிலம் பிரெயில் இதழ் எதையும் எடுத்து வரவில்லை. கையை கன்னத்தில் முட்டுக் கொடுத்து முழங்கையை மேசையில் ஊன்றிய படி எதையோ யோசித்துக்கொண்டிருந்தான். “சிந்தனை தூக்கத்தை கொண்டு வரும்” என்ற ஆஸ்கர் வைல்டு கூறியது போல அவனுக்கு தூக்கம் மெல்ல தலைதூக்கியது. அவன் எழுந்தான்.
அந்த வீட்டில் அவனுக்கு எல்லாம் அத்துபடி. அது ஒரு செவ்வக வடிவிலான நீண்ட ஒற்றை அறையைக் கொண்ட வீடு. இரு முணைகளிலும் இரட்டைக் கதவுகளைக் கொண்ட இரு வாயில்கள். இரண்டாம் வாயிலை கடந்து வெளியே சென்றால் ஒரு விறகடுப்பு பதிக்கப்பட்ட சின்ன அறை. அது அவர்களுக்கான சமையலறை. அந்த வாயிலிலும் உள்ளே நுழைந்தால் ஒரு செவ்வக வடிவிலான மேசை. அதற்குப் பக்கத்தில் ஒரு மரக்கட்டில். அது அம்மாவுக்கானது போலும்.
கட்டிலில் ஒரு பக்கம் நிறைய தலையணைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் ஒன்றை எடுத்து தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான். உள்ளே வந்தவள் மேலும் ஒரு தலையணையை எடுத்து அவன் காலுக்கு அடியில் வைத்து, காலுக்கு தலையணை வெச்சு தூங்குனா எவ்வளவு சுகமா தூக்கம் வரும் தெரியுமா?” என்று கூறிவிட்டு வெளியே போய்விட்டாள். அவனுக்கு அது சுகமாகவும் இருந்தது அசௌகரியமாகவும் இருந்தது. அவன் வீட்டில் இப்படிப்பட்ட பழக்கங்கள் இல்லை.
உள்ளே வந்தவள் கட்டிலில் அமர்ந்து அவன் வைத்திருந்த தலையணையை அப்புறப்படுத்தி விட்டு அவன் தலையை தன் மடியில் வைத்துக் கொண்டாள். மெல்லிய குரலில் “சுமதி” என்றான். குனிந்து “என்ன” இது அவள். “இப்படி படுத்திருக்கும்போது அரை மயக்கத்துல இருக்கணும் அப்ப நீ குனிஞ்சு பார்த்து அழுவ இல்ல, அந்த சூடான கண்ணீர் முகத்துல விழும் போது ஒரு விதமான சொகம் கிடைக்கும் இல்லையா. அந்த சுகத்துலயே உயிர் போயிட்டா எப்படி இருக்கும்”, என்று அவன் சொல்லி முடிப்பதற்குள்ளாகவே அவன் தலைமுடியை கொத்தாக பிடித்து இழுத்தபடி, “டேய் உனக்கு என்னடா ஆச்சு ஏன்டா இப்படியெல்லாம் பேசற” என்று பலமாக அழத்தொடங்கி விட்டாள். இதுதான் சுமதி. “வாங்க போங்க” என்பாள். “நீ வா போ” என்பாள். உணர்ச்சிவசப்படும்போது “டா” போட்டும் பேசுவாள்.
சட்டென எழுந்து அமர்ந்தவன் கேட்டான். “இப்ப என்ன ஆயிடுச்சு. நெருப்புன்னா உதடு சுடுமா, தேனுனா நாக்கு இனிக்குமா” என்று சாதாரண குரலில் சொன்னான். “மண்ணாங்கட்டி” அழுத படி சொன்னாள். “அந்த மண்ணுக்குள்ள போனாலும் உன்ன மறக்க மாட்டேன் சுமதி” என்று மிருதுவான குரலில் சொன்னான். இதைச் சொல்லும் போது அவன் குரல் லேசாக தழுதழுத்ததாக அவனுக்கு தோன்றியது. அவள் ஒன்றும் பேசவில்லை இன்னமும் மூக்கை உறிஞ்சியபடி அழுது கொண்டிருந்தாள்.
இரண்டு நாட்களாக சுமதியின் வீட்டிற்கு அவனால் செல்ல முடியவில்லை. மூன்றாம் நாள் காலையில் அக்கா சொன்னார், “சொல்ல மறந்துட்டேன் நேத்தே அந்த புள்ள சொன்னா. அவ அம்மாவுக்கு ஏதோ காய்ச்சலாம். ஆஸ்பத்திரியில அட்மிட் பண்ணிருக்காங்களாம் உங்கிட்ட சொல்ல சொன்னா” என்றார். நண்பனுடன் உடனே மருத்துவமனைக்கு சென்றான். காய்ச்சல் சற்று குறைந்திருப்பதாக சொன்னார் அம்மா. “எப்படி தெரிஞ்சது” என்றார். “உங்க மக அக்கா கிட்ட சொல்லியிருக்காங்க. அவங்க எங்கிட்ட இப்பதான் சொன்னாங்க”. அம்மாவிடம் சொல்லிவிட்டு கிளம்பியவனை கையை பிடித்து வெளியே கூட்டி வந்தாள். நண்பன் புகைப்பிடிப்பதற்காக சாலை பக்கம் சென்றிருந்தான். “அம்மா கிட்ட யாரையாவது விட்டுட்டு வீட்டுக்கு வரேன்”. “என்ன இப்ப அவசரம்”. “லீவு முடிஞ்சிட்டா சொல்லாம கொல்லாம போயிருவ இல்ல”. “அம்மாவ விட்டுட்டு வீட்டுக்கு வர வேண்டாம். சொல்லிட்டு தான் போவேன்”. “நிஜமாவா” அவள் கையை அவன் அழுத்தமாக பற்றினான். அந்த அழுத்தம் அவன் இதயத்தில் இருந்த முழு அன்பையும் அவன் கை வழியே இறக்க, அவள் கை வழியே அவளுடைய இதயத்தில் அது சென்று சம்மனமிட்டு அமர்ந்து விட்டது போல் தோன்றிற்று. அந்த உணர்ச்சி வேகத்தில் உடல் லேசாக நடுங்கவே கண்கள் பனித்தன. பிறர் பார்த்து விடக்கூடாது என்று அவசரமாய் கண்களை துடைத்துக்கொண்டாள். தூரத்தில் நண்பன் வந்து கொண்டிருப்பதாக சொன்னாள். இருவரும் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டு சராசரி உணர்வு நிலைக்கு வந்தனர்.
மறுநாள் மாலை புறப்பட்டால்தான் கோவை ஜங்ஷனில் நீலகிரி எக்ஸ்பிரசை பிடிக்க முடியும். சுமதியிடமும் அவள் அம்மாவிடமும் சொல்லவே இல்லை. சென்று கடிதம் எழுதினால் அழுவாள். திட்டி கடிதம் எழுதுவாள். வேறு வழியில்லை. தான் அன்பிற்கு ஏங்கியது உண்மையாக இருக்கலாம் ஆனால் அதற்காக இந்த அனுபவங்கள் ஏன் நிகழ வேண்டும். இது நீடிக்கவும் செய்யாது. நிலைக்கவும் செய்யாது. இது தன் வாழ்வில் நீண்ட தாக்கத்தை ஏற்படுத்துமோ என்றெண்ணினான்.
அந்தப் பெண்ணைப்பற்றி யோசித்தபோது, அவனுக்குள் ஒருவகை கலக்கம் தோன்றியது. அவள் பேதைத்தனமாக யோசித்திருக்கலாம். தனக்கு உண்மை தெரியும் இல்லையா. அவளுடைய கற்பனைக்கு இடம் கொடுத்தது தவறில்லையா. அவளைப் பற்றி யோசித்தபோது அவன் கண்கள் கசிந்தன. ஜன்னல் பக்கம் திரும்பி கண்களை துடைத்துக்கொண்ட போது புகை வண்டி திருப்பூர் ஜங்சனில் நின்றது. சாயா காரனிடம் ஒரு சாயா வாங்கி குடித்துவிட்டு ஜன்னல் கண்ணாடி மேல் கையை வைத்து தலையை சாய்த்தான். வண்டி புறப்பட்டது.
***எழுத்தாளரும் கவிஞருமான திரு. வே. சுகுமாரன் அவர்கள், பணிநிறைவு பெற்ற வரலாற்றுத்துறை பேராசிரியர். நெருப்பு நிஜங்கள், காத்திருப்பு கவிதைத் தொகுப்புகள், எங்கிருந்து வந்தாள் குறுநாவல், நியாயங்கள் காயப்படுவதா கட்டுரைத் தொகுப்பு, காட்டுவாத்துகள் மூன்று சீனப்பெண்களின் கதை (மாவோவின் மறுபக்கமும்கூட ) என்ற ஆங்கில நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு முதலான நூல்களை எழுதியுள்ளார்.
குறிப்பு: எங்கிருந்து வந்தாள் குறுநாவல், மதுரையிலு்ள்ள இந்தியப் பார்வையற்றோர் சங்கத்தால் (IAB) பிரெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.
தொடர்புக்கு: sukumaran97@gmail.com
அலைபேசி: 9443112831
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
