Categories
கட்டுரைகள் Uncategorized

உயர்வள்ளுவம் என்பது: திரு. இலங்கை ஜெயராஜ் அவர்களுக்கு ஒரு மறுப்புரைக் கடிதம்

உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது.

வள்ளுவரின் சிலை

இலங்கையைச் சேர்ந்த தமிழறிஞரும், கம்பவாரிதி என்றழைக்கப்படுபவருமான மரியாதைக்குரிய ஐயா ஜெயராஜ் அவர்கள், உயர் வள்ளுவம் என்ற தொடர்ச் சொற்பொழிவை ஆற்றிவருகிறார். அவற்றுள், 239 மற்றும் 240 பகுதிகளில் விளக்க வேண்டிய அதிகாரங்கள் என்னவோ அவை அறிதல் என்றிருக்க, அவர் முன்னுரை என்ற பெயரில் ஊழ் என்ற அதிகாரத்தைப் பற்றி உரைக்கலானார்.

அவர் பேசியதை அப்படியே தட்டச்சு செய்து தருகிறேன், படியுங்கள் படித்தபின் தொடரலாம்.

“விதிக்கொள்கையினைத் தெரிந்துகொள்வதாலே எந்தத் தவறும் இல்லை. அதை ஒரு சபையிலே சொல்வதாலே எந்தத் தவறும் இல்லை. அது அண்மையிலே உங்கள் நாட்டில் ஏற்பட்ட அந்த சர்ச்சையெல்லாம் நினைத்து உருவாக்கப்பட்ட சர்ச்சைகளாகத்தான் எனக்குப் படுகிறது.

ஒரு ஆசிரியர், ஊனமுற்றவர் என்று சொல்வது தன்னைப் பாதிப்பதாக ஒரு சபையிலே சொல்கிறார் என்றால், ஒரு பிரச்சனை உருவாக்க நினைத்து உருவாக்கப்பட்டது.

அப்படியானால் அத்உ தன்னை பாதிக்கிறதென்றால், அவர் ஆசிரியராக இருந்தும் அந்த துன்பத்திலிருந்து அவர் விடுபட முடியாமல் இருக்கிறாரா? அத்தகைய ஒருவர் எப்படி மற்றவர்களுக்குக் கல்வி சொல்லிக்கொடுக்க முடியும்? என்ற கேள்விகளெல்லாம் பிறக்கும்.

இது

k239ஆம்  பகுதியின்

தொடக்கமாய் பேசியது.

240 பகுதியும்

அவை அறிதல் என்றே தலைப்பு கொடுத்திருக்கிறார்கள். அந்தப் பகுதியிலும் ஊழ் பற்றி உரைக்க வந்தவர்,

“நல்ல காலம் திருவள்ளுவர் அந்தகாலத்திலே ஊழ் என்ற அதிகாரத்தை எழுதியதால் தப்பிவிட்டார். இல்லையென்றால் இன்றைக்கு அவரும் சிறையிலே இருக்க வேண்டிய அபாக்கிய நிலையை அடைந்திருப்பார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.” என்கிறார்.

அதை நொடிச் சஇரிப்பில் ஆமோதிக்கிறது ஒரு கனிந்த குரல்.

விதிக்கொள்கையை அவையில், உங்கள் மொழியில் சொல்வதானால் சபையில் பேசலாம்தான்  ஐயா. ஆனால், அவை அறிந்து பேச வேண்டும் என்பது தாங்கள் அறியாத ஒன்றா?

தனக்கு வழங்கப்பட்டிருக்கிற அவையின் எதிரே தன்னுடைய பேச்சைக் கேட்பதற்காக அமர்ந்திருப்பவர்கள் யார் என்கிற தெளிவு வேண்டாமா?

பல்வேறு சமூக மற்றும் பொருளாதாரச் சூழலிலிருந்து கல்வியின் வழியே தங்கள் வாழ்விற்கான நன்னம்பிக்கையைப் பெற வந்திருக்கும் குழந்தைகளிடம், ‘ஊழையும் உட்பக்கம் காண்பர்’ எனச் சொல்லி, ஆள்வினையை அறிவுறுத்த வேண்டுமா அல்லது ஒருவன் கையில்லாமல், கண்ணில்லாமல் பிறந்தால், அது அவன் முன் பிறவியில் இல்லை இல்லை ஜென்மத்தில் செய்த தீவினையின் பாவத்தின் விளைவே என ஊழ்வினை சொல்லி அச்சமூட்ட வேண்டுமா?

இப்படி முன்ஜென்மப் பாவம், பிறவி சாபம் என்று சொல்லிச் சொல்லியே, கண்ணில்லாதவர்களை, உடல்க்குறையுடையவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என யுகம் யுகமாய் ஒதுக்கிவைத்தீர்கள். அவர்களும் மனிதர்களே! அவர்களுக்கும் கல்வி வேண்டும் என அயல்நாட்டுக் கிறித்தவர்கள் சிந்தித்தார்கள். அதனால்தான் நூற்றுக்கணக்காய் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளிகளை நாடெங்கிலும் திறந்தார்கள். சரியாகச் சொன்னால் அந்த வரலாறு பிறந்த ஆண்டு 1887. அதாவது,

பார்வையற்றோருக்கான முதல் பள்ளி

பஞ்சாபில் ஆனிஷார்ப் என்ற அம்மையாரால் தொடங்கப்பட்டது. அதன்பிறகு 1891ல் பாளையங்கோட்டையில்

ஆஸ்க்வித்

என்பவரால் தமிழகத்தில் பார்வையற்றோருக்கான முதல் பள்ளி தொடங்கப்பட்டது.

இவை நிகழ்ந்து இரண்டு நூற்றாண்டுகள் கூட ஆகவில்லை, இன்னும் எம்மவர் எல்லாம் ஏற்றம் பெற்றுவிட்டார்களா என்றால் அதுவும் இல்லை. அதற்குள் உங்களைப் போன்றவர்கள் மீண்டும் அதே பழம்பதாகையைத் தூக்கிக்கொண்டு வந்தால், என்னத்தைச் சொல்ல உயர்வள்ளுவ உபாத்தியரே!

இவையெல்லாம் நினைத்து உருவாக்கப்பட்டது என்று வேறு சொல்கிறீர்கள். எது ஐயா நினைத்து உருவாக்கப்பட்டது? ஆசிரியரின் தன்னெழுச்சியான எதிர்ப்பா? அல்லது அவை அறிதல் என்ற தலைப்பில் ஊழ் வகுப்பு எடுக்கத் தலைப்படுகிறீர்களே இதுவா?

“ஆசிரியர் அந்தத் துன்பத்திலிருந்து விடுபட முடியாமல் இருக்கிறாரா?” எனக் கொஞ்சமும் ஈரமில்லாமல் கேட்கிறீர்களே எப்படி ஐயா? நாங்கள் கல்வி கற்று, அந்தத் துன்பத்திலிருந்து விடுபட்டு, ஆசிரியர்களாக, அரசு ஊழியர்களாக அறிவார்ந்தும், அறம் சார்ந்தும் பணியாற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். அத்தகைய நம்பிக்கைப் பயணத்தில் எம்மோடு பயணிக்கும் தங்களைப் போன்ற சக மனிதர்கள், “உனக்குக் கண்ணில்லாமல் போனதற்கு உன் முன் ஜென்மப் பாவம்தான் காரணம் தெரியுமா?” என இழிவுசெய்வீர்கள், அதுவும் நாங்கள் பணியாற்றும் களத்துக்கே வந்து, எங்கள் சக பணியாளர்களுக்கு நடுவே, நாங்கள் நல்லறிவும் நன்னம்பிக்கையும்  போதிக்கும் குழந்தைகளுக்கஉ முன்னிலையில். அதையும் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டுமென்றால், அதுதான் எமக்கான ஊழ் என்றால், பரந்து கெடுக இவ்வூழ் இயற்றியாரும் அதைத் தன் உளச்சான்றுக்குப் புறம்பாய் உலகுக்கு உரைப்பாரும்.

“அவரெல்லாம் எப்படி மற்றவருக்குக் கல்வி சொல்லிக் கொடுக்க முடியும்” என்று கேட்கிறீர்கள்.

நான் உங்கள் சொற்பொழிவுகள் எதையும் கேட்டதில்லை. இறுதிகட்டப் போர் உச்சத்திலிருந்த காலகட்டங்களில் அவ்வப்போது பிபிசி தமிழில் உங்கள் குரலைக் கேட்டதாக ஒரு நினைவிருக்கிறது. தாங்கள் உயர்வள்ளுவம் வகுப்பில் இப்படிப் பேசியிருக்கிறீர்கள் என்று எங்கள் மூத்தவர் மரியாதைக்குரிய ஐயா

திரு. திருக்குறள் பொன்னுச்சாமி

அவர்களின் மூலமாகக் கேள்விப்பட்டேன். தங்கள் உரைக்கு மறுப்புரைக்க  வேண்டுமே என்று முடிவு செய்தபிறகுதான், உங்களைப் பற்றிய மேலதிக விவரங்களை இணையத்தில் தேடினேன்.

உங்களைக் கம்பவாரிதி என்கிறார்கள். தமிழுக்கும் தமிழ் இலக்கிய உலகுக்கும் தாங்கள் ஆற்றியிருக்கிற அரும்பெரும் பணிகளை நான் தங்களின்

விக்கிப்பீடியா

பக்கத்தைப் பார்த்துத் தெரிந்துகொண்டேன். அத்தோடு உங்களின் வளைதளத்தையும்

பார்வையிட்டேன். மொழிக்கடல் ஆழம் அறிந்த மூதறிஞராகிய தாங்கள், உயர்வள்ளுவம் பேசுகிற அவையில், அதுவும் அவை அறிதல் என்ற பொருண்மையின்கீழ் பேசுகிற தருணத்தில்,

‘அவையறிந்து ஆராய்ந்து சொல்லுக சொல்லின்

தொகையறிந்த தூய்மை யவர்.’ என்ற முதல்க்குறளுக்கே மோசம் செய்வதாய்ப் பேசிய ஒரு மூடனுக்கு இவ்வளவு வக்காலத்து வாங்குகிறீர்கள் என்றால், ஆசிரியர் சங்கரைப் பார்த்துத் தாங்கள் கேட்ட அதே கேள்விகளை நான் உங்களிடமும் கேட்கலாம்தான். ஆனால், ஆயுளுக்கும் தாங்கள் ஆற்றிய  இனி ஆற்றவிருக்கிற தமிழ்ப்பணிக்குத் தலைவணங்குகிறேன்.

இந்தக் காலம் என்றால், வள்ளுவர் சிறையிலிருந்திருப்பாராம். ஐயா சேதி தெரியாதா உங்களுக்கு? இப்போதும் வள்ளுவர் சிறையில்தான் இருக்கிறார். உலகம் முழுமைக்கும் வாழ்வறம் வகுத்துத் தந்தவருக்கு, தமிழின் முதல் தத்துவப் பேரறிஞருக்குக் காவி உடைசாற்ற நினைப்பவர்களிடமிருந்து அவரைக் காக்க வேண்டுமே! அதனால் எங்கள் அகம் என்னும் அறமனச் சிறையில் பாதுகாத்து வருகிறோம். எனவே, வள்ளுவரைப் பற்றிய கவலையை விட்டு, எப்போதும்போலத் தாங்கள் ஊழ்வினையை விதந்தோதி

உயர்வள்ளுவம்                                     

பேசுங்கள், நாங்கள் ஆள்வினையைக் கைக்கொண்டு உயர்வள்ளுவம் பேணுகிறோம். நன்றி.

***சகா


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.