Categories
கட்டுரைகள் Uncategorized

அலசல்: நடத்துநர்களும், நாட்டாமைத்தனங்களும்!

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.

ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த பார்வையற்றவர் மாடசாமி.

ஊர் ஊராய் அலைந்து, சோப்பு உள்ளிட்ட சின்னச்சின்ன பொருட்களை விற்று, அதில் பெறுகிற சொற்ப வருமானத்தில் தன் அன்றாடத்தை நடத்திவரும் அந்த எளிய மனிதரின் நம்பிக்கையைச் சில்லு சில்லாக்கி, அவரைப் பொதுவெளியில் கண்ணீர் வடிக்கச் செய்திருக்கிறார், தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் மாதந்தோறும் பல ஆயிரங்களில் ஊதியம் பெறும் அரசுப் பேருந்து நடத்துனர்.

 பார்வையற்றவரான ஐயா மாடசாமிக்கு அரசு வழங்கியிருக்கிற விலையில்லாப் பயணச் சலுகையை மறுத்ததோடு அல்லாமல், பொதுவெளியில் பலர் முன்னிலையில் “குருட்டுப் பய, ஏன் இப்படி வந்து உயிரெடுக்கிற?” எனத் திட்டியும் இருக்கிறார் அந்த நடத்துனர். ஈரமற்று வந்துவிழுந்த சொற்களை எண்ணியெண்ணி மனமுடைந்த அவர், வயதில் மூத்தவர் என்றாலும், தனக்கு நேர்ந்து விட்ட அவமானம் பொறாமல், பொதுமக்களின் முன்னிலையில் கண்ணீர் சிந்தி அழுதிருக்கிறார்.

http://youtube.com/watch?v=V2cBjG

மாற்றுத்திறனாளிகளுக்காக தமிழக அரசு வழங்கியிருக்கிற பஸ் பாஸ் நிமித்தம், பேருந்து நடத்துனர்களிடம் அவமானப்படாத பார்வையற்றவர்களே தமிழகத்தில் இருக்கமாட்டார்கள் என்று தோன்றுகிறது. அரசு வழங்குகிற ஒரு விலையில்லாத் திட்டத்தை அமல்ப்படுத்துவதில், ஏதோ தங்கள் வீட்டுச் சொத்தையே தாரைவார்ப்பதுபோல் புழுங்குகிறார்கள் பல நடத்துனர்கள்.

சென்னை, மதுரை, திருச்சி என எந்தப் பேருந்து நிலையத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். மோசமான மனச்சங்கடத்தை எதிர்கொள்ளாமல் ஒரு பார்வையற்றவரால் தொலைதூரம் செல்லும் அரசுப் பேருந்தில் ஏறிவிட முடியாது. ஊன்றுகோலோடு ஒரு பார்வையற்றவரைப் பார்த்துவிட்டாலே, பதறிக்கொண்டு, “பஸ் ஃபுல்லாயிடுச்சு, பின்னாடி பஸ்ல வாங்க” எனப் பச்சையாகப் பொய் சொல்வார் அந்தப் பேருந்தின் நடத்துனர். அதே பதிலை சொல்லிவைத்தாற்போல் அடுத்தடுத்த பேருந்துகளின் நடத்துனர்களும் சொல்வார்கள். வேதனை என்னவென்றால், அவற்றில் பல பேருந்துகள் ஆள் இன்றிக் காற்றுவாங்கும். அதைப் பார்வையற்றவர்கள் அறியமாட்டார்கள் என்ற அசாத்திய நம்பிக்கையில் பிறக்கும் கலவானித்தனம்.

இதையும் மீறி பேருந்தில் ஏறிவிட்டால், “இது ஸ்பெஷல் பஸ், இதுல பாஸ் செல்லாது” என அடுத்த ஆயுதத்தைக் கையிலெடுப்பார். “சரி செல்லாதுண்ணு எழுதிக் கொடுங்க நான் ஃபுல் டிக்கெட் வாங்கிக்கிறேன்” என்று ஒரு பார்வையற்றவர் சொன்னாலும் அதை ஒப்புக்கொள்ளாமல், தன் நிலைப்பாட்டிலேயே உறுதியாக இருப்பார்.

அங்கேதான் இருவருக்கும் இடையேயான முறுகல் தொடங்கும். இவை எது பற்றியும் அறிந்திராத பொது மக்களில் பலர், ஏதோ நடத்துனர் உண்மையும் உத்தமமும் கொண்ட ஊழியக்காரன் போலவும், அவரிடம் உரிமைக்காய் போராடும் பார்வையற்றவர் விவரமற்றுப் பேசுகிறார் என்பதாகவும் நினைத்துக்கொண்டு, நடத்துனருக்கு ஆதரவாகப் பஞ்சாயத்தெல்லாம் பேசுவார்கள். அவ்வளவுதான் நடத்துனரின் கிரேடு ஏறிவிடும். சகட்டுமேனிக்கு ஊனத்தைச் சொல்லித் திட்டும் தைரியமெல்லாம் வந்துவிடும். சாதாரண நாட்களிலேயே இதுதான் வழக்கம் என்றால், இப்போது பண்டிகைக் காலம். கேட்கவா வேண்டும்!

தமிழகப் போக்குவரத்து கழகத்தின் பேருந்தில் ஒருவித அச்சமோ, மனக்கலக்கமோ இல்லாமல் ஒரு பார்வையற்றவரால் பயணித்துவிடவே முடியாது என்பதுதான் கள எதார்த்தம். பேருந்தில் ஏறி, பயணச்சீட்டு வாங்கும்வரை, “இன்றைக்கு என்ன நடக்குமோ?” என்ற பீதியிலேயே அமர்ந்திருக்க வேண்டும். அதிலும் பார்வையற்றவர்கள் தங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், தங்கள்மீது அன்பும் நன்மதிப்பும் கொண்ட நலவிரும்பிகளோடு பயணிக்கையில் இந்தக் கலக்கமும் பீதியும் இரட்டிப்பாகிவிடும். அவர்கள் உடனிருக்க பஸ் பாஸ் பஞ்சாயத்தை எதிர்கொள்வதென்பது, கூடுதல் தர்மசங்கடம். காரசாரமான வாதத்தின்போது, நமக்கு பதில் சொல்வதைத் தவிர்த்து, “சார் அவருக்குக் கொஞ்சம் புரியவைங்க” என்ற ரீதியில் நம் உடன் வந்தவரைத் தன் பக்கம் சேர்த்துக்கொண்டிருப்பார் நடத்துனர். அது ஐந்து வயதுக் குழந்தை என்றாலும் சரி, “பாப்பா இது ஸ்பெஷல் பஸ்,” என குழந்தைக்கும் பாடம் எடுப்பார்கள்.

தொலைதூரப் பேருந்துகள்தான் என்றில்லை, உள்ளூர்ப் பேருந்துகள், ஒருமணிநேரப் பயணம் என்றாலும் பெரும்பாலும் இதேநிலைதான். ஒரு குறிப்பிட்ட நிறுத்தத்தைச் சுட்டி, “நிற்குமா” எனக் கேட்டால், கேட்டவர் பார்வையற்றவர் என்றால், “நிற்காது” எனக் கூசாமல் பொய்சொல்லும் பழக்கம் பல நடத்துனர்களிடம் இருக்கிறது. அதையும் மீறிக் கேட்டால், எவ்வித உறுத்தலும் இல்லாமல் பேருந்தைக் கிளப்பிக்கொண்டு சென்றுவிடுவார்கள். இருக்கை இருக்கையாகப் பயணச்சீட்டு வழங்கிவரும் நடத்துனரின் கண்ணில் படும்படி பாஸை நீட்டியபடியே இருப்போம். பலர் கண்டுகொள்ளாமல் கடந்துசென்று, வெகுநேரத்துக்குப் பின் நம்மிடம் வருவார்கள். அதுவரை அதே பீதியுடன் நடத்துனர் வருகிறாரா என உண்ணிப்பாகக் கவனித்தபடியே இருக்க வேண்டும். எல்லோரிடமும் “எங்க போகணும், எங்க போறீங்க” என்று வினவும் நடத்துநர்கள், பார்வையற்றவரைக் கண்டால், இல்லை இல்லை பஸ் பாஸ், அடையாள அட்டை, ஊன்றுகோல் இவற்றைப் பார்த்துவிட்டாலே, “கொடு, எங்க போற” என்றே விசாரிப்பார்கள்.  அந்தக் குரலில், அவர்களே தங்களுக்குள் முயன்று தடுத்தாலும் ஒருவித ஏளனமும் இழிவும் துருத்திக்கொண்டு வெளிப்படும். இந்தத் தருணத்தில், பார்வையற்றவர்களிடம் உள்ளார்ந்த அன்புகொண்டு சக பயணியென முழுப் பயணத்திலும் உடன்வந்த சில நடத்துனர்களின் நினைவுகளும் மனதை நெகிழ்த்துகின்றன. ஆனால், சொற்பங்களுக்கு நடுவே, அற்பர்களே அதிகம்.

குறைத்து மதிப்பிடுவதற்காக இதைச் சொல்லவில்லை. குடும்பம் சகிதம் விலையில்லாச் சலுகையில் பயணிக்கும் இதே நடத்துனர்கள், பார்வையற்றவர்கள் தங்கள் குடும்பத்துடன் 75 விழுக்காடு பயணக்கட்டணச் சலுகையில் பயணித்தால் முனகுவார்கள், முகம் சுழிப்பார்கள். உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். ஒரு குடும்பத்தில் கணவனும் மனைவியும் பார்வையற்றவர்கள், இருவரும் வயதான தங்கள் பெற்றோரை, அதாவது இருவருக்கு இருவர் என்ற ரீதியில் உடன் அழைத்துச் செல்கிறார்கள். அதாவது, ஒரு பேருந்தில் நாள்வருக்கு 75 விழுக்காடு பயணக்கட்டணச் சலுகை தரவேண்டும். இத்தகைய நிலையில், பல நடத்துனர்களின் அங்க அசைவுகளைப் பார்க்க வேண்டுமே!

“ஒரே பஸ்ல இப்படியா ஏறுவீங்க” என்று கடிந்துகொள்வார்கள். அதாவது, ஒரே குடும்பமாக இருந்தாலும், கணவன் ஒரு பேருந்திலும் மனைவி இன்னொரு பேருந்திலும் ஏறிக்கொள்ளக்கூடாதா என்பதுபோல் இருக்கும் அவர்களின் கேள்வி.

இத்தகைய பஞ்சாயத்துகளையும் சங்கடங்களையும் வயதான பெற்றோர் புரிந்துகொள்ளக்கூடும். ஆனால், பார்வையற்ற தம்பதிகள் தங்கள் குழந்தைகளோடு செல்கையில் இதுபோன்ற பஸ் பாஸ் பஞ்சாயத்துகளைப் பல நேரங்களில் எதிர்கொள்கிறார்கள். ஊரே பார்க்க, தன் பெற்றோரை ஒருவர் உரத்துச் சத்தமிடுகிறார், அதுவும் ஊனத்தைச் சுட்டி. அதைப் பலர் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதைக் காட்டிலும், அத்தகைய கழிவிறக்கப் பார்வைகளை ஒரே சமயத்தில் பிஞ்சுகள் தங்கள் கண்களால் எதிர்கொள்ள நேர்கிறதே! அந்தப் பிஞ்சுகளின் மனநிலை எப்படியிருக்கும்? தனக்குப் பார்வையில்லை என்ற குறையே குறுக்கிடாதபடித் தங்கள் குழந்தைகளைப் பேணிவரும் ஒரு பார்வையற்ற தம்பதியின் மனதில் இத்தகைய ஒரே ஒரு நிகழ்வு ஏற்படுத்தும் வடு என்றைக்கும் ஆராதது. இதையெல்லாம் பொதுச்சமூகம் என்றைக்கேனும் கணக்கில் எடுத்துக்கொண்டிருக்கிறதா என்ன?

தமிழகப் போக்குவரத்துக் கழகத்தின் பெயரில், “பயணத்தின்போது மாற்றுத்திறனாளிகளைக் கண்ணியமாக நடத்த வேண்டும்” என அறிக்கைமேல் அறிக்கை அவ்வப்போது வந்தபடிதான் இருக்கிறது. ஆனாலும் நிலைமைகளில் மாற்றமில்லை என்றால், தவறு நடத்துனர்களிடம் மட்டுமில்லை என்பது புரிகிறது. ஒருபுறம் இத்தகைய அறிக்கைகளை, வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைத்து வெளியிடும் அதே உயர் அலுவலர்கள்தான், “ஹேண்டிகப்ட் பாஸ் அதிகமா பஸ்ல ஏத்தி கலக்‌ஷனைக் குறைக்காதீங்க” எனவும் வாய்மொழி ஆணைகளையும் பிறப்பிக்கிறார்கள் எனப் பல நடத்துநர்கள் வெளிப்படையாகவே புலம்புவதையும் கேட்க முடிகிறது.

மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்கப்படும் அந்த 75விழுக்காடு கட்டணச் சலுகையால் போக்குவரத்துத்துறை எதிர்கொள்ளும் இழப்புத்தொகை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறையால் போக்குவரத்துத்துறைக்கு வழங்கப்பட்டுவிடுகிறது. ஆகவே, எந்த ஒரு மாற்றுத்திறனாளியும் போக்குவரத்துத்துறை  ஊழியர்களின் உழைப்பைச் சுரண்டியோ, அவர்களுக்குச் சேரவேண்டிய பணப்பலன்களைப் பிடுங்கிக்கொண்டோ பயணக் கட்டணச் சலுகையில் பயணிக்கவில்லை என்பதைப் பொதுச்சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்.

பார்வையற்றோர் தொடர்பில் நாளுக்குநாள் அதிகரித்துவரும் நடத்துனர்களின் கண்ணியக் குறைவான நடத்தைகளுக்கு உடனடியாக அரசு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். அத்தகைய புகார்களை உடனுக்குடன் அறிந்து களையும் நோக்கில், அரசு உடனடியாக விலையில்லா தொலைபேசி எண்ணை ஏற்படுத்தி, அவை 24 மணிநேரமும் தொய்வின்றிச் செயல்பட ஆவன செய்யவேண்டும்.

இறுதியாக, தீபாவளி போன்ற பண்டிகைக் காலங்களில் எல்லாப் பேருந்து நிலையங்களிலும் சிறப்பினமாக உதவியாளர்களைப் பணியமர்த்திட வேண்டும். நிலையத்தில் நுழையும் பார்வையற்றோர் உள்ளிட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகளையும்  எதிர்கொண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து, அவர்கள் செல்ல வேண்டிய பேருந்துகளில் அவர்களைப் பயணிக்கச் செய்வதே அந்த உதவியாளர்களின் முதன்மைப் பணியாக இருக்க வேண்டும்.

இவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தப் பணிக்கப்படும் அனைத்துநிலை அலுவலர்களுக்கும், இவை அனைத்துமே மாற்றுத்திறனாளிகளிடத்தில் கருணைகொண்டு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அல்ல, அவை அனைத்துமே அவர்களின் உரிமைகள் சார்ந்து ஏற்படுத்தித்தர வேண்டிய வசதிகள் என்பதையும், அதுவே ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் பிரகடனத்தில் கையொப்பம் இட்டுள்ள ஒரு அரசின் கடமை என்கிற புரிதலையும் ஏற்படுத்த வேண்டும்.

அப்போதுதான் நடத்துநர் தொடங்கி, நலத்துறைப் பணியாளர்கள் வரை  மலிந்துகிடக்கின்ற நாட்டாமைத்தனங்கள் குறையும்.

***சாமானியன்


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.