கண்ணில்லா பக்தனைக் காட்டிக்
கடவுளின் கடைக்கண் பார்வை வேண்டி
பூசாரிகளின் அலிச்சாட்டியம்!
புழுங்குகிறது மனது,
புடைக்கிறது நரம்பு,
சமாதானம் யார் சொல்லுவார்,
இது சாமி சமாச்சாரம்!
சட்டிச்சோறு இலையில் பரவ,
சடுதியில் வாசனை காற்றில் நிறைய,
தொட்டுக்கொள்ள அனுமதிக்கவில்லை பரிவாரம்,
தோன்றப்போகும் கடவுளோ இன்னும் வெகுதூரம்.
வாசனை கடத்திக் கடத்திக்
கூசிப்போனது நாசி,
வாஞ்சையில் பிரவாகித்துப் பின்
வறண்டு போனது எச்சில்.
உள்ளுக்குள் குமுறிக் குமுறி
ஓய்ந்து போனான் பசிதேவன்.
“இன்னும் கொஞ்ச நேரம்தான்,
இலையில் யாரும் கைவைக்க வேண்டாம்”
இரண்டு மணிநேரமாய்,
ஏகமந்திரம் ஒலிக்க,
இலையில் கிடந்ததும்,
எதிரில் இருந்ததும்,
எல்லாம் ஒன்றென உருமாற்றம்,
அங்கே, ஏகாந்த தத்துவத்தின் அரங்கேற்றம்.
அடுத்த சில கணங்களில்,
அரங்கம் நிறைந்தது.
“இதோ கடவுள்! இதோ கடவுள்!”
போர்க்களக் கூச்சல்கள்,
புகைப்படக் கிரீச்சிடல்கள்,
முந்தியடித்துக் கடவுளிடம்
முகம் காட்டும் பாய்ச்சல்கள்.
கடவுளும் கணநேரம்
தன் திருவாய் மலர்ந்திருந்தால்,
காத்திருப்பின் பலாபலன் அது எனக்
கடந்திருப்பான் கண்ணில்லா பக்தன்.
ஆனால், அப்படி எதுவும் நிகழவில்லை,
ஆடுகள் மேய்ப்பனை நெருங்கவே இல்லை.
புலிகள் புடைசூழ,
சிங்கச் சேனையுடன்
மந்தைக்கு வந்தார் மேய்ப்பன்
மட்டன் பிரியாணி பரிமாற.
***ப. ஒலிமயக்கூத்தன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
