Categories
சவால்முரசு வெளிச்சம் பாய்ச்சுவோம்

வெளிச்சம் பாய்ச்சுவோம் (2)

பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் குறித்த தெளிவு பிறக்கவேண்டுமானால், பார்வையற்றவர்கள் பற்றியும், பார்வையின்மை என்பது என்ன என்ற கேள்விக்கும் முழுமையாக விடையை அறிதல் அவசியம்.


பிரெயில் கற்பிப்பதற்கு முன்னால், குழந்தைகளுக்குப் புள்ளிக் கட்டங்களை அறிமுகம் செய்யப்பயன்படும் கோலிக்கட்டை
பிரெயில் கற்பிப்பதற்கு முன்னால், குழந்தைகளுக்குப் புள்ளிக் கட்டங்களை அறிமுகம் செய்யப்பயன்படும் கோலிக்கட்டை

அனைவருக்கும் கல்வித் திட்டத்தால் பார்வையற்றோரின் கல்வியில் ஏற்பட்டிருக்கும் எதிர்மறை விளைவுகளைப் பற்றி முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமானால், பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியின் முக்கியத்துவம் பற்றி முதலில் அறிந்துகொள்ள வேண்டும்.

பார்வையற்றோருக்கான சிறப்புக் கல்வியைக் குறித்த தெளிவு பிறக்கவேண்டுமானால், பார்வையற்றவர்கள் பற்றியும், பார்வையின்மை என்பது என்ன என்ற கேள்விக்கும் முழுமையாக விடையை அறிதல் அவசியம். இந்தக் கட்டுரையைப் படித்துக்கொண்டிருக்கும் பார்வையுள்ள தோழர்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள்;

அடுத்த வரியைப் படிப்பதை அப்படியே நிறுத்திவிட்டு, மூன்றே மூன்று நிமிடங்கள் இரு கண்களையும் இறுக மூடிக்கொண்டு உங்கள் வீட்டின் எல்லா அறைகளையும் வலம் வாருங்கள்.

மூன்று நிமிடப் பயணம் முடிந்துவிட்டதா?… புரிதலுக்கான தங்கள் பயணம் இப்போதுதான் ஆரம்பமாகி இருக்கிறது. உங்களுக்குக் கிடைத்த இந்த மூன்று நிமிட அனுபவங்கள்தான், உங்களிடையே வாழும் பல பார்வையற்றவர்களின் வாழ்முறை என்பதை மனதில் இறுத்தியபடியே அடுத்த பத்திக்குச் செல்லுங்கள்.

சிறுவயதில் நான் என் அப்பாவிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறேன். “அப்பா! நான் பிறக்கிறதுக்கு முன்பு நீங்க எங்கேயாவது கண்ணுத் தெரியாதவங்களைப் பார்த்திருக்கீங்களா?” எனது கேள்விக்கு அவர் இப்படி பதில் சொன்னார். “பார்த்திருக்கேன். ஆனா நெருங்கியெல்லாம் பேசுனதில்லை. அவுங்களுக்கு உதவி செய்யனுமுனுகூட நினைச்சதிள்ளை.”

ஆனால், எ.பி.க்குப் பின், அவரிடம் எத்தநையோ மாற்றங்கள். எதிர்கொள்ளும் பார்வையற்றவர்களுக்கான தேவைகளைத் தெரிந்துகொண்டு செயலாற்றுகிறார். அது என்ன எ.பி. என்கிறீர்களா? எனது பிறப்பிற்குப் பின் என்பதைத்தான் சுருக்கிச் சொன்னேன். கி.பி.யோடு இந்த எ.பி.யும் ஒரு ஓரமாக இருந்துவிட்டுப் போகட்டுமே.

கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். உங்கள் சாலையின் ஏதோ ஒரு மருங்கில் அதனைக் கடப்பதற்காக வெண்கோல் பிடித்த ஒருவரை நீங்கள் அவசரம் காரணமாகவோ, அறியாமையின் காரணமாகவோ கண்டும் காணாமல் சென்றிருப்பீர்கள். நீங்கள் படித்த அல்லது படிக்கிற கல்விச் சாலைகளில் உடந் பயிலும் சிலர் உடல் இயக்கத்தில் உங்களைப் போன்றே சகஜமானவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களால் உங்களைப் போல புத்தகம் படிக்க இயலாது. வண்ணங்களைப் பிரித்தறியும் அவர்களால், உங்கள் முகத்தை அத்தனை எலிதாக அடையாளம் காண இயலாது.

இன்னும் சிலர் இளம் வயதிலேயே கண்ணாடி அணிந்திருப்பார்கள். சிலர் உங்களைப் பார்த்துக் கண்ணடித்துக்கொண்டே இருப்பார்கள். சிலர் எங்கோ பார்த்துக்கொண்டிருக்க, அவர்கள் உங்களையே பார்ப்பதாகத் தோந்றும். வேறு சிலர் வண்ணங்களைத் தவறாகச் சொல்லக் கேட்டிருப்பீர்கள்.

மேற்சொன்ன அனைவருமே பார்வைச்சவாலுடையவர்கள்தாந். அவர்களின் பார்வை இழப்பைக் கணக்கிட்டு அவர்கள் மூந்று பிரிவுகளில் வகைப்படுத்தப்படுகிறார்கள். அவை:

  1. முழுப்பார்வையற்றோர் (Totally Blind)
  2. குறைப்பார்வை உடையோர் (Low Vision)
  3. பார்வைக் குறைபாடு உடையோர் (partially Sighted)

இவர்களுள் மூன்றாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பார்வைக் குறைபாடு உடையவர்கள்தான் (Partially Sighted) கிட்டப்பார்வை, (myopia) தொடர்ந்து இமைத்தல், (blinking wink) மாறுகண், நிறக்குருடு (colour blindness) போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள்.   இவர்களின் பார்வை இழப்பு, அல்லது பார்வை தொடர்பான பிரச்சனைகள் கண்ணாடி அணிவதாலும், சில மருத்துவ சிகிச்சையாலும்  சரிசெய்யப்படுகிறது. எனவே, இவ்வகைப் பிரச்சனையுடைய குழந்தைகள், சாதாரண குழந்தைகளோடு இணைந்து அன்றாடக்கல்வியைச் சாதாரணப் பள்ளிகளில் பயில்வதில் பெரிய சிரமங்கள் இருக்காது.

அப்படியானால் யாருக்குத்தான் பிரச்சனை?

தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சுவோம், இருள் ஓட்டுவோம்!

***ப. சரவணமணிகண்டன்

***

கல்வி உரிமைகளைக் காக்க கரம் கொடுங்கள்.

கருத்துகளை வழங்குவதோடு, கட்டாயம் படித்தபின் பகிருங்கள்.

பார்வையற்றோர் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைக்கும்

தமிழக அரசின் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோரின் பரிந்துரைகள்:

அன்புடையீர் வணக்கம்!

தமிழக அரசு உருவாக்கிவரும் மாநில கல்விக் கொள்கையில் பார்வையற்றோர்களுக்கு இருக்கும் கல்வி தொடர்பான எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் தொகுத்து, மாநில அரசுக்குப் பரிந்துரைகளாக வழங்க பார்வையற்றோர்களின் கல்வி உரிமை பாதுகாப்பு இயக்கம் முடிவு செய்துள்ளது. எனவே பார்வையற்றோர்களுக்கான #சிறப்பு, #ஒருங்கிணைந்த #உள்ளடங்கிய கல்வி சார்ந்த கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. பார்வையற்றோர் நலன் சார்ந்து இயங்கும் அமைப்புகளும், பார்வையற்றோரின் கல்வி வளர்ச்சியின்மீது அக்கறை கொண்டவர்களும், கல்வியாளர்களும், ஆசிரியர்களும், பார்வையற்ற குழந்தைகளின் பெற்றோர்களும், பிர பார்வையற்றவர்களும், பொதுமக்களும் மாநிலக் கல்விக்கொள்கை பரிந்துரைக்குத் தங்களுடைய கருத்துகளை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

உங்களின் மேலான ஆலோசனைகள் மற்றும் கருத்துகளை இயன்றவரை எழுத்துவடிவிலோ, அல்லது மிகச் சுருக்கமான குரல்ப்பதிவாகவோ கீழ்க்கண்ட வாட்ஸ் ஆப் எண்கள் அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் ஆகஸ்ட் 6ஆம் தேதி மாலை 6 மணிக்குள் அனுப்பிவைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

வாட்ஸ் ஆப் எண்கள்: 9787871008 அல்லது

     9629021773

மின்னஞ்சல்: helenkellerforpwd@gmail.com

உங்களிடம் இருந்து பெரப்படும் கருத்துகள் அனைத்தும், ஆரோக்கியமான விவாதத்துக்குப் பிறகு தொகுக்கப்பட்டு, மாநில கல்விக்கொள்கை குழுவிடம் வழங்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கிறோம்.

நன்றி.


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.