
முன்னால் பள்ளித் தோழர்களைச் சந்திக்க வேண்டும் என்கிற ஆர்வம் ஒவ்வொருவருக்குள்ளும் இயல்பாக எழுவது. ஆனால், சந்தித்தபின் எழும் உளவெழுச்சிகளும், ஆற்றாமைகளும் அளவிறந்தவை, நம்மை அயர்வூட்டுபவை. அன்று நம்மிடையே நம்மைக் காட்டிலும் திறமையிலும் பண்பிலும் மிளிர்ந்த பல நண்பர்களின் உடலும் உள்ளமும் காலத்தால் அப்படியே புறட்டிப்போடப்பட்டிருப்பதைக் காணும்போதும், பாடுகள் நிறைந்த அவர்களின் அன்றாடம் பற்றிய கதைகளைக் கேட்கும்போதும் நம் மனச்சமநிலை குலையும். வாழ்க்கை பற்றிய ஒருவித அவநம்பிக்கை நம்மைச் சூழும்.
என் பள்ளிகால நண்பர்களில் சிலரை இன்று காணும்போதெல்லாம் என் மனம் கொந்தளித்து இப்படி முனகிக்கொள்வதுண்டு. “இந்த வாழ்க்கைதான் நாம் ஊகித்தறிய முடியாத பல திருப்பங்கள் கொண்ட வினோதப் பயணமாக இருக்கிறது. அது நெறிபிறழ்ந்து பாதை மாறிய நான் உட்பட எத்தனையோ பேரை ஒரு வசதியான இடத்தில் நிறுத்தி வைக்கவும் செய்கிறது. வியப்பூட்டும் பிறவித் திறமைகள் கொண்ட பலரை அலைக். அலைக்கழித்து, இறுதிவரை அவர்களை சுயநோதலுக்கு உட்படுத்திவிடுகிறது.” இப்படி நான் வெகுநாட்கள் முனகிக்கொள்ள காரணமாய் அமைந்தான் என் பள்ளிகால நண்பன். என் வகுப்புத்தோழன். என்னைவிடவும் நினைவாற்றல், புரிதல் கொண்டவன். தன் தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவனைப் பேண ஆள் இல்லாமல், தன் உயர்கல்வியைக் கைவிட்டு இன்று ஊர் ஊராய் வியாபாரம் செய்கிறான்.
அதேவேளை, குன்றாத நம்பிக்கை,இடைவிடாத முயற்சியால் இன்று தன்னை ஓர் ஆசிரியராய் உயர்த்திக்கொண்டிருக்கும் சரஸ்வதி அக்காவின் கதை இதற்கு நேர் மாறானது. நண்பனைப்போலவே சரஸ்வதி அக்காவும் மிகத் திறமையானவர். நான் படித்த திருப்பத்தூர் பள்ளியில் நான்காம் வகுப்புவரை படித்தார். அந்த வகுப்பிலேயே பிரெயில் சரளமாக வாசிக்கத் தெரிந்தவர் அவர் ஒருவர்தான் என்பதால், மொத்த வகுப்பும் தங்கள் அன்றாடக் கற்றலுக்கு அவரையே சார்ந்திருக்கும். அப்பேர்ப்பட்ட திறமைகள் கொண்ட அவர் திடீரென இடைநின்றுவிட்டார், அதுவும் நான்காம் வகுப்பிலேயே.
நண்பனையும் சரஸ்வதி அக்காவையும் என் மனதால் நான் நெடுநாட்கள் தேடிக்கொண்டிருந்தேன். நண்பனை ஒருநாள் நேரடியாகவே சந்திக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது. ஆனால், சரஸ்வதி அக்காவை நேர் நிறுத்தியது குக்கூவின் குழந்தைகளைத் தேடி என்கிற இந்தக் காணொளிதான்.
காணொளியில் அவர் சிறப்புப்பள்ளிக் கற்றல்முறையில் (special education) தன்னால் ஒன்ற இயலாததால், தான் இடைநின்றுவிட்டதாகவும், பிறகு ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் (integrated education) இணைந்து படித்ததாகவும் சொல்கிறார். அனுபவங்கள் அவரவருக்கே என்றாலும், அன்றைய நிலையில், ஒருபுறம் சிறப்புப்பள்ளிகளும் மறுபுறம் ஒருங்கிணைந்த கல்வித்திட்டமும் கல்வியின் வாயிலாக பார்வையற்றோரை ஆளுமை நிறைந்தவர்களாகப் படைத்துக்கொண்டிருந்தன.
எல்லாம் 2004க்கு முந்தைய வரலாறுகள். இப்போது ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தை ஒழித்துக்கட்டிவிட்டுக் கொண்டுவரப்பட்டிருக்கிற உள்ளடங்கிய கல்வித்திட்டம் (inclusive education) பார்வையற்றோரின் அடிப்படைக் கற்றலில் மிக மோசமான முறையில் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இதன் மோசமான விளைவுகள் தனிநபர் சார்ந்த அகவயமானவை, அவற்றைத் திரட்டி நிரூபணம் செய்கிற புறவயமான ஆய்வுகளும் இதுவரை நிகழவில்லை.
ஒவ்வொரு வகை மாற்றுத்திறனாளியும், தன் உடல்க்குறைபாட்டால், அது கோரும் தேவைகளால் வேறுபடுத்தி அணுகத்தக்கவர் என்ற அடிப்படைப் புரிதலே அற்ற அரச பீடங்களால், மாற்றுத்திறனாளிகளின்பால் தாங்கள் மிகுந்த அக்கறைகொண்டவர்கள் என்று பீற்றிக்கொள்ள உருவாக்கப்பட்ட கல்வித்திட்டமே உள்ளடங்கிய கல்விமுறை. இந்தக் கல்விமுறை கிராமந்தோறும் சாதாரணப் பள்ளிகளில் இணைந்து படிக்கும் ஒரு பார்வையற்ற குழந்தையின் தொடக்கக் கல்வியைத் தொலைதூரக் கல்வியாக மாற்றிவைத்திருக்கிறது. அத்தோடு, சிறப்புப்பள்ளிகள் என்ற சிறப்புக்கல்வி முறைக்கே படிப்படியாக மூடுவிழாவும் நிகழ்த்தவிருக்கிறது.
இதுபற்றியெல்லாம் கல்வியாளர்கள் உரத்துப் பேச முன்வர வேண்டும். சரஸ்வதி அக்காவை சமூகத்துக்கு அடையாளம் காட்டிய குக்கூ கல்வியாளர்கள் அதற்கான தொடக்கப்புள்ளியை இடுவார்கள் என்பது என் நம்பிக்கை.
வாழ்த்துகள் அக்கா! வாழ்த்துகள் குக்கூ!
***
ப. சரவணமணிகண்டன்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
