

இந்தப் புகைப்படத்தில் இருக்கும் நபர்தான் தமிழகப் பார்வையற்றோரைக் கொந்தளிக்கச் செய்யும் காணொளி ஒன்றை badzha thinks https://www.youtube.com/channel/UCXtR6OZNEYdKsiYMbyfaelw
என்ற தனது சேனலில் வெளியிட்டிருக்கிறார்.
அதற்கான சுட்டி:
https://youtube.com/shorts/ySgk0EmA_Wk?feature=share
அந்தக் காணொளியில் அப்படி அவர் என்னதான் சொல்லியிருக்கிறார் என்று காணப் புகுந்தால், அதிர்ச்சியும் அறுவறுப்புமே எஞ்சுகிறது.
ஓராண்டுக்கு முன்பு ரிஷிப்பீடியா என்ற யூடூபர் தனது தளத்தில் ‘பதிலில்லாத கேள்விகள்’ என்ற தலைப்பில் ஒரு காணொளியை வெளியிட்டிருக்கிறார். https://m.youtube.com/watch?v=AVYMHR3czvE&t=1s
அந்தக் காணொளியில் அபத்தமாகவும், துடுக்காகவும், அவ்வப்போது அறிவீனமாகவும் சில வினாக்களை எழுப்புகிறார். எல்லாம் ‘Just for Fun’ ரகம்தான்.
அந்தக் கேள்விகளுள் ஒன்று, “பார்வையற்றோருக்குக் குழந்தை பிறந்தால் அவர்கள் எப்படி வளர்ப்பார்கள்?”
Badzha Thinks அந்தக் கேள்வி வந்துசெல்லும் காணொளியை வெட்டித் தனது காணொளியில் அதை மேற்கோள் காணொளியாக இணைத்துள்ளார். குறிப்பிட்ட அந்தக் கேள்விக்கு அறிவுப்பூர்வமாகப் பதில் சொல்வதாகக் கருதிக்கொண்டு, முற்றிலும் பொறுப்பற்ற முறையில், சக மனிதன் மீது பேண வேண்டிய கண்ணியத்தையும், அன்பையும் மறந்து தனது ஆழ்மன வக்கிரங்களையெல்லாம் கொட்டியிருக்கிறார்.
அவரின் பதிலைக் கண்டு தமிழகத்தின் ஒட்டுமொத்த பார்வையற்றவர்களும் கொந்தளிப்பும் ஆத்திரமும் மன வேதனையும் அடைந்திருக்கிறார்கள். தனது காணொளியால் பிரச்சனைகள் வெடித்திருப்பதை அறிந்ததுமே ஒரு மன்னிப்பு வாசகத்தை ஒப்புக்குப் பகிர்ந்துவிட்டு, குறிப்பிட்ட அந்தக் காணொளியைத் தனிப்பட்டதாக மாற்றிவிட்டார். எனவே, அவர் அந்தக் காணொளியில் சொல்லியிருக்கும் பதிலை அனைவரும் அறிவது அவசியம் என நினைக்கிறேன்.
பார்வையற்றவர்களுக்குக் குழந்தை பிறந்தால் என்ற ரிஷிப்பீடியாவின் கேள்வியே தவறானது என்கிறார் அவர். ஏனென்றால் பார்வையற்றவர்களுக்கு உடலுறவுகொள்ளத் தெரியாதாம். மூன்றாம் நபர்களைக்கொண்டு செய்ய வாய்ப்பில்லை என்பதால், பார்வையற்றவர்களுக்குக் குழந்தை பிறப்பதற்கும் வாய்ப்பில்லையாம். அதேவேளை, டெஸ்டியூப் பேபி சாத்தியம்தானாம்.
இந்த மகோன்னத ஞானத்தை அவர் எங்கிருந்துபெற்றார் என்றுதான் தெரியவில்லை. அவரின் அறுவறுப்பான பதிலைக் கேட்டுச் சிரிப்பதா, அல்லது அதற்கும் லைக் இட்டிருக்கிற 3000 மனிதப் பிண்டங்களை நினைத்து வருந்துவதா புரியவில்லை.
முதுகைத் தட்டியோ, கையைப் பற்றியோ, “சார் எங்க போகணும்? ரோட் கிராஸ் பண்ணணுமா” என தினமும் கேட்கும் யாரோ ஒருவரின் கேள்வியில் உள்ளுறைவது வெறும் உதவும் மனப்பான்மை மட்டுமல்ல, “சார் நாங்க இருக்கோம், வாழ்க்கையை நீங்க ஜமாயிங்க” என்றஆதரவும் நம்பிக்கையும்தான். அப்படிப்பட்ட கோடி கோடி உள்ளங்கள் வாழும் மாண்புடைய இந்தச் சமூகத்தில்தான், தன் சுயநமைச்சலுக்குச் சொரிந்துகொள்ள பிறிதொருவர் முதுகு தேடி அலைகின்றன பல பண்படாத குரங்குக் கூட்டங்கள்.
அவைகளை அடையாளம் கண்டு கண்டிப்பதும், தண்டிப்பதும் மிக அவசியமான ஒன்று. இல்லையென்றால், சமூகத்தின் கைகளிலிருந்து அதன் நற்கனிகளைப் பறித்துக்கொண்டுபோய் உயரமான மரத்தின்மீது அமர்ந்துகொண்டு அவை கெக்களிக்கத் தொடங்கிவிடும்.
எனவே, பார்வையற்ற ஒவ்வொருவரும், உங்கள் அருகாமையிலிருக்கிற காவல் நிலையங்களிலோ அல்லது இணையவழியாக சைஃபர் கிரைமிலோ Badzha Thinks யூட்டூப் சேனல்மீது புகார் கொடுங்கள். இது தொடர்பான செறிவான உள்ளடக்கம் கொண்ட புகார் மனுவினை ஆங்கிலத்தில் முனைவர் முருகானந்தன் தயார்செய்திருக்கிறார். காவல் நிலையங்களுக்கு அதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏனெனில், மாநிலம் முழுக்க ஒரே மாதிரியான புகார்கள் பதிவு செய்யப்படுகையில், அதன் அழுத்தம் பெரிதாக இருக்கும்.
அதேவேளை, சைஃபர் கிரைம் இணைய வழிப் புகார் வசதி 1500 எழுத்துகளை மட்டுமே ஏற்கும் என்பதால், இணைய வழியில் தன் புகாரைப் பதிவுசெய்த கையோடு, முருகானந்தத்தின் புகார் மனுவின் சுருக்க வடிவத்தையும் சித்ராக்கா தந்திருக்கிறார். நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
உங்கள் புகார் பெறுகைச் சீட்டை (receipt) வைத்து, அந்தக் காணொளியைத் தடைசெய்யுமாறும், Badzha Thinks யூட்டூப் சேனலை அகற்றுமாறும் கூகுலிலும் ஒரு புகார் பதிவு செய்யுங்கள்.
அனைத்திற்கும் மேலாக, இந்த விவகாரம் தொடர்பாக இன்று பிற்பகலில் நண்பர் முனைவர் திரு. அரங்கராஜா சென்னை காவல்த்துறையில் ஒரு புகாரைப் பதிவு செய்யவிருக்கிறார். சென்னையில் இருப்பவர்கள் முடிந்தால் அவரின் முயற்சிக்குத் தோள் கொடுங்கள்.
ப்ராங் என்ற பெயரிலோ, Just for Fun என்ற வியாக்கியானத்தாலோ எவரும் சக மனிதரை இழிவாகச் சித்தரிப்பதை நிறுத்த வேண்டும். அதைச் சாத்தியமாக்க, அனைவரும் நம்மால் முடிந்த வழிகளில் போராடுவோம்.
இணையவழியில் சைஃபர் கிரைமில் புகார் செய்ய:
https://cybercrime.gov.in/Webform/Crime_ReportTrack.aspx
கூகுலில் புகாரைப் பதிவு செய்ய:
https://support.google.com/youtube/contact/other_legal?hl=en-GB
முனைவர் கு. முருகானந்தன் தயார் செய்த புகார் மனுவைப் பதிவிறக்க:
அதன் சுருக்கமான வடிவத்தைப் பதிவிறக்க:
***ப. சரவணமணிகண்டன்
வருத்தம் தெரிவியுங்கள்! இல்லையென்றால் வழக்கு தொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை:
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
