Categories
சவால்முரசு மருத்துவம்

“ஒரு பார்வையற்ற மருத்துவரால் மனநல மருத்துவராக பணியாற்ற இயலுமா?” மருத்துவர் சதேந்திரசிங்

இந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர

the wire science logo

நெடுங்காலமாகவே, மருத்துவராகும் ஆர்வம் கொண்ட மாற்றுத்திறனாளி மாணவர்களின் கனவுகளை மருத்துவத்துறை நசுக்கியே வந்திருக்கிறது. மருத்துவப் படிப்பில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 3% இடஒதுக்கீடு இருந்தபோதிலும், அது கால்களில் இயக்கசார் குறைபாடுகளுடைய மாணவர்களுக்காகவே ஒதுக்கப்பட்டது. 1995 ஊனமுற்றோர் சட்டத்தின்படி “குறைப்பார்வை (low-vision)” என்பது ஒரு ஊனம் என்றே வகைப்படுத்தப் பட்டிருந்த போதிலும், ஒரு முதன்மை நிறுவனத்தைச் சேர்ந்த கண் மருத்துவர் ஒருவரின் சுயநினைவற்ற ஒருதலைபட்சமான முடிவின் விளைவாக,, குறைப்பார்வை கொண்டவர்கள் ஊனமுற்றோர் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவம் பயிலத் தகுதியற்றவர்கள் என்றே கருதப்படலாயினர்.

ஊனமுற்றோர் உரிமைகள் சட்டம் 2016ல் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து விழுக்காடு இட ஒதுக்கீட்டினை மருத்துவக் கல்வியில் அமல்படுத்த ஏதுவாக, தேசிய மருத்துவ கழகத்தின் (NMC) புதிய வழிகாட்டல்கள் (guidelines) அதே நிபுணரால் 2018ல் வடிவமைக்கப்பட்டன. அப்போதும் பார்வையற்றவர்கள் மற்றும் குறைப்பார்வை உடையவர்கள் மருத்துவப் படிப்பில் சேர்வதற்கு தகுதியற்றவர்கள் என்றே மீண்டும் அவரால் அறிவிக்கப்பட்டது.

ஊனம் குறித்த நேரடி வாழ்வியல் அனுபவம் ஏதுமற்ற இத்தகைய நிபுணர்களின் குறுகிய பார்வையைச் சரிசெய்யவும், அதைச் சவாலுக்கு உட்படுத்தவும் இந்திய உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட வேண்டியிருந்தது. உச்சநீதிமன்றத்தின் தலையீட்டால், 2018ல் இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு குறைப்பார்வையுடைய நபர், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் மருத்துவப் படிப்பில் சேர்ந்தார். டெல்லி உயர்நீதிமன்றமும், செவித்திறன் குறையுடைய ஒரு விண்ணப்பதாரரை மருத்துவப் படிப்பில் அனுமதிப்பதற்கு உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டது.

அண்மையில் ஒரு பார்வையற்ற மருத்துவர் உச்சநீதி மன்றத்தின் கதவுகளைத் தட்டியிருக்கிறார். காரணம், முதுகலை நீட் தகுதித்தேர்வில் தேர்ச்சிபெற்ற நூறு விழுக்காடு பார்வையற்றவரான அந்த மருத்துவர், மனநல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற விரும்பினார். ஆனால், தேசிய மருத்துவ ஆணையமோ, இதுபோன்றதொரு முக்கியமான விடயத்தில் கொள்கை முடிவுகளை வகுக்கும் பொறுப்பினை குறிப்பிட்ட சில நிபுணர்களிடமே விட்டுவிட்டது. அத்துடன், எம்‌பி‌பி‌எஸ் படிப்பிற்கான வழிகாட்டுதல்களையே (திருத்தப்பட்ட) முதுநிலை மருத்துவக் கல்வி விதிமுறைகள்-2019 என்ற பெயரில் மீண்டும் அறிவிக்கையாக வெளியிட்டது தேசிய மருத்துவ ஆணையம். இந்த ஆணையம் நியமித்த ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் குழு கடந்த 2022 ஜனவரியில் அவரைப் பரிசோதித்த நிலையில், அவர் அந்தப் படிப்பில் சேர தகுதியானவர் இல்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

இந்த நிபுணர்கள் யார்?

இந்த விவகாரம் தேசிய மருத்துவக் கழகத்தின் முதுகலை மருத்துவக் கல்வி வாரியத்தின் முன் இருந்த போதிலும், எம்‌பி‌பி‌எஸ் மருத்துவக் கல்விக்கான  வழிகாட்டுதல்களை உருவாக்கிய குழுவில் உறுப்பினராக இருந்த ஒருவர்தான் இந்த வாரியத்தின் தலைவராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இக்குழுவில் இடம்பெற்றிருந்த மூன்று நிபுணர்கள் ஏற்கனவே மருத்துவக் கல்விக்கான வழிகாட்டுதல்களை வடிவமைத்தவர்கள். தமது முடிவுகளுக்கு முரணானதொரு முறையீட்டை தாமே விசாரித்து, இறுதியில் தாங்கள் வகுத்திருந்த  வழிகாட்டுதல்கள் சரியானவை என்று  அவர்களே அறிவித்துக்கொண்டனர்.

இந்த (NMC) குழுக்களில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் யாரும் அங்கம் வகிக்கவில்லை. ஊனமுற்றோர் அல்லாத நிபுணர்களாகிய இந்தக் கொள்கை வகுப்பாளர்கள், உரிய கட்டமைப்பு வசதிகள் ஏதுமற்ற, அணுகல்த்தன்மை இல்லாத நிலையிலும் கூட, தமது கல்லூரிப் படிப்பை முடித்திருந்த ஊனமுற்ற மருத்துவர்களின் மருத்துவ உயர்கல்விக்கான கதவுகளை மூடி,, மற்றொரு முறை அவர்களைக் கைவிட்டிருக்கிறார்கள்.

பார்வையற்ற மருத்துவர் மனநல மருத்துவர் ஆக முடியுமாஎன்பதே இப்போதைய கேள்வி. பாம்பே மனநல சங்கம் புகழ்பெற்ற கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனையில் மனநல மருத்துவத் துறையின் பேராசிரியராகவும் தலைவராகவும் இருந்த மறைந்த டாக்டர் எல்.பி.ஷாவின் பெயரில் சிறந்த மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைக்கான விருதை வழங்குகிறது. டாக்டர் ஷா பார்வைக்குறைபாடுடையவர், தற்போது உச்ச நீதிமன்ற வழக்கின் மனுதாரர் கொண்டிருக்கும் அதே குறைபாடு கொண்டவர் என்று சான்றழிக்கப்பட்டவர்.

பெங்களுருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் நிறுவனம் மற்றும் சிறப்பு மையம் (NIMHANS) பார்வைக்குறைபாடு உடைய ஒரு மருத்துவருக்கு மனநல மருத்துவத்தில் முதுநிலை மருத்துவர் (MD in Psychiatry) பட்டம் வழங்கியுள்ளது. முன்பு குறிப்பிட்ட இருவரைப் போலவே , இவரும் பார்வைக் குறைபாடு உடையவர் என்று சான்றழிக்கப் பட்டவர் என்பது குறிப்பிடத் தக்கதாகும். அவர் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு எவ்வித  இடையூரையும் ஏற்படுத்தாமல் நான்காண்டுகள் அதே மருத்துவமனையில் முதுநிலை மருத்துவராக (senior residency) பணியாற்றவும் செய்தார்.

நிம்ஹான்சின் முன்னால் இயக்குநராகவும், தேசிய மருத்துவக் கழகத்தின் மருத்துவ அரநெறிகள் வாரியத்தின் தலைவராகவும் பணியாற்றிய ஒருவர் அந்தப் பார்வையற்ற மனநல மருத்துவரின் பெயரை சிறந்த மாற்றுத்திறனாளிப் பணியாளருக்கு வழங்கப்படும் தேசிய விருதுக்கு இரண்டுமுறை பரிந்துரை செய்து அனுப்பினார். ஒரு பெரிய முரண் நகையாக, தற்போது மனுதாரருக்கு எதிராகத் தலையசைத்துள்ள இதே என்எம்சியின் நிபுணர்தான் நின்ஹான்சில் பயின்று உயர்தரத்தில் தேர்ச்சிபெற்ற அந்த மனலந மருத்துவருக்கான புறநிலைத் தேர்வாளராக (external examiner) விளங்கியதோடு, தன் கைய்யாலேயே அந்த மருத்துவருக்கு உயர்தர மதிப்பெண்ணோடு தேர்ச்சியும் வழங்கியிருந்தார்.

டாக்டர் Y.G. பரமேஷ்வரா
இந்தியாவின் முதல் பார்வையற்ற மருத்துவர் Y.G. பரமேஷ்வரா

முழுப் பார்வையற்றவரான மறைந்த டாக்டர் Y.G. பரமேஸ்வரா கர்நாடக பல்கலைக்கழகத்தில் எம்பிபிஎஸ் முடித்திருக்கிறார். அவர் பெங்களூர் மருத்துவக் கல்லூரியில் மருந்தியல்துறை பேராசிரியராகப் பணியாற்றி பின்னர் ஓய்வு பெற்றார். இந்திய மாற்றுத்திறனாளி மருத்துவப் பணியாளர்களுக்கான நாடு தழுவிய அமைப்பில்  பார்வைக்குறைபாடுடைய பல மருத்துவர்கள் அங்கம் வகிக்கிறார்கள். அவர்களுள் சிலர் தற்சமயம் மருத்துவர்களாகப் பணியாற்றிக்கொண்டிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவைப் போல் அல்லாமல், உலக அளவில் மாற்றுத்திறனாளி மருத்துவர்கள் நோயாளிகளின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகக் கருதப்படுவதில்லை. “உங்களுக்கு மருத்துவக் கல்வியை முடிக்கும் திட்டம் உள்ளதா?” எனத் தன் தலைமை அலுவலராலேயே கிண்டலுக்குள்ளாக்கப்பட்ட டாக்டர் ரூட்டா நாநாக்ஸ் (Ruta Nonacs) பார்வைக்குறைபாடு உடைய எம்டி மற்றும் பிஹெச்டி முடித்தவர் மட்டுமல்ல,  தற்போது ஹார்வர்ட் மருத்துவக் கல்லூரியில் மனநல மருத்துவராகவும் உள்ளார். டாக்டர் போனிலின் ஸ்வெனர் என்பவர் பார்வைக் குறைபாட்டுடன் அல்ல, அறிவியலோடு எவ்வாறு வழிநடப்பது என்பதற்கு ஒரு சிறந்த  எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார். அவர் அமெரிக்காவில் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் மாற்றுத்திறனாளிகள் சுகாதார ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளார். தனது இவ்வமைப்பின் வாயிலாக ஊனத்துடன் வாழ்வதல்ல, ஊனத்துடன் செழித்து வாழ்வது என்ற முன்னுதாரணமான திட்டத்தைச் செயல்படுத்திக் காட்டியுள்ளார்.

இங்கிலாந்தில், மருத்துவப் புலத்தில் அனுமதிக்கப்பட்ட முதல் காதுகேளாத பார்வையற்ற மாணவி அலெக்ஸாண்ட்ரா அட்மாஸ் ஆவார். அமெரிக்காவைப் பொறுத்தவரை, பார்வையற்ற மனநல மருத்துவர்களுக்கு சுகாதார வல்லுநர்கள் மற்றும் நோயாளிகள் இடையே வரவேற்பு காணப்படுகிறது. டேவிட் ஹார்ட்மேன், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் செவிலியர்களிடையே நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் தொடர்ந்து 8 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்தார். தங்களின் மீது பார்வையைச் செலுத்தாத உளவியல் நிபுணரிடம் தங்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்வதை நோயாளிகள் மிகவும் வசதியாக உணர்வதால், பார்வையற்ற மனநல மருத்துவர்களுக்கே முன்னுரிமையளிக்கின்றனர்.

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தின் மனநல மருத்துவத்துறையின் முதன்மையர் பார்வையற்ற மருத்துவர் டிம் கோர்டெஸ் பற்றிக் கூறுகையில், தனது தொடு உணர்வை மட்டும் பயன்படுத்தி, மற்றவர்கள் தவறவிட்ட அபாயகரமான இரத்தக் கட்டிகளை அவர் கண்டறிந்துள்ளார் என்கிறார். பார்வை குறைபாடுள்ள மருத்துவர்களுக்கு அதீத அறிவுணர்வெல்லாம் கிடையாது. ஊனமுற்றோர் சட்டத்தின்படி கட்டாயமாக்கப்பட்டுள்ள உகந்த வசதிகள் (reasonable accommodation) மூலம், அவர்கள் மற்றவர்களுடன் சமமாக சிறப்பாகப் பணியாற்றுகிறார்கள். முதல் முறையாக நோயாளியின் மூச்சுக்குழாயில் ஒரு குழாயைச் சரியாகப் பொருத்துவதற்கு  டாக்டர் கோர்டேஸுக்கு இடையீட்டாளர்கள் (Intermediaries) அல்லது “காட்சி விவரிப்பவர்கள்” உதவியதுடன், ஒரு குழந்தைப் பேற்றைப் பார்ப்பதிலும் உடனிருந்து பங்காற்றினர்.

அயோவாவில் உள்ள உடலியக்கப் பயிற்சி நிறுவனம் ஒன்று, “ரேடியோகிராஃப் மதிப்பாய்வு” மேற்கொள்வதற்கு “போதுமான பார்வை” இல்லாததால், ஒரு பார்வையற்றவர் தனது படிப்பைத் தொடர அனுமதிக்கவில்லை. இந்த விவகாரம் 2014 இல் பால்மர் கல்லூரிக்கு எதிரான டேவன்போர்ட்டின் வழக்காக அயோவாவின் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றது. மற்ற மருத்துவக் கல்வி நிறுவனங்கள் வெற்றிகரமாக பார்வையற்ற மாணவர்களை அனுமதித்துள்ளன என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. பார்வையற்ற விண்ணப்பதாரர் படிக்க ஏதுவாக, பார்வையு்ள உதவியாளரை இடையீட்டாளராக நியமிக்கும்படி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

நமது இந்திய தேசிய மருத்துவக் கழகம் (NMC) இப்போதும் 1979இன் காலாவதியான தொழில்நுட்பத் தரநிலைகளையே தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அமெரிக்காகூட, மாணவரின் அவதானிக்கும் திறன் சமரசத்திற்குள்ளாகும்போது, அவர்கள் தங்களின் மாற்றுத்திறன்களைச் செயல்படுத்தி, அறிவை பெறுவதும் செயல்படுத்துவதும் கட்டாயம் எனத் தன் தரநிலைகளை தற்கால நடப்புகளுக்கேற்ப மாற்றியமைத்திருக்கிறது. NMC இப்போது அமல்படுத்தியுள்ள திறன் அடிப்படையிலான பாடத்திட்டமானது, எப்படி திறன்களை வெளிப்படுத்துவது என்பதைக் காட்டிலும், என்னென்ன திறன்களை மாணவர்கள் நிரூபிக்க வேண்டும் என்பதையே  அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.

இந்தியாவில் ஏராளமான மாற்றுத்திறனாளி மருத்துவர்கள், அதிலும் குறிப்பாகச் சில பார்வைக்குறைபாடு உடைய மருத்துவர்கள் உள்ளனர். உண்மையில் அவர்கள்தான் இந்தக் கொள்கை வகுப்பாளர்களை வழிநடத்த வேண்டும். ஊனம் என்பது, உள்ளடங்கிய சமத்துவம், பாகுபாடு இல்லாமை மற்றும் தகுந்த கட்டமைப்பு வசதிகள் (reasonable accommodation) ஆகியவற்றைக் கோருகிற மனித உரிமைகளின் அடிப்படையிலான கருத்தாக்க மாதிரியாகவே தற்போது வரையறுக்கப்படுகிறது. தேசிய மருத்துவக் கழகம் (NMC) இப்போதாவது மருத்துவக் கல்வியில் இந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு செயல்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம். மேலும் ஊனமுற்றோரின் வாழ்க்கை அனுபவங்களை நிபுணத்துவமாகக் கருத்தில் எடுத்துக்கொள்வதற்கும் இதுவே சரியான தருணம்.

***

மருத்துவர் சதேந்திரசிங் உடல் இயக்கசார் குறைபாடுடைய மாற்றுத்திறனாளி. ‘மாற்றுத்திறனாளி மருத்துவர்கள்: இந்தியாவில் மாற்றத்திற்கான முகவர்கள்’ அமைப்பின் நிறுவனர் மற்றும் ஊனமுற்றோருக்கான உள்ளடங்கிய மருத்துவக் கல்வியில் (Disability Inclusion in Medical Education) சர்வதேச கவுன்சிலின் இணைத் தலைவர்.

கட்டுரையில் கூறப்பட்டுள்ளவை கட்டுரையாளரின் சொந்தக் கருத்துக்கள்.

Copyright: science.thewire.in

தமிழில் ப. சரவணமணிகண்டன்

மொழிபெயர்ப்பு உதவி:

முனைவர் கு. முருகானந்தன்

கட்டுரைக்கான ஆங்கில மூலத்தைப் படிக்க:


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.