Categories
கோரிக்கைகள் மகளிர்

கோரிக்கை: ஒரு சமூகநீதிப் பார்வையில்

பிறந்திருப்பதோ, சமூகநீதி ஆண்டு. தமிழகத்தைப் பேணிக்கொண்டிருப்பதும் சமூகநீதி அரசு.

கூகுல் செய்திகளில் எம்மைப் பின்தொடர இங்கே க்லிக் செய்யவும்

graphic பாலூட்டும் தாய்

அரசுப் பணியிலிருக்கும் பெண்களுக்கான மகப்பேறு விடுப்பை 9 மாதங்களிலிருந்து (270 நாட்கள்) ஒரு ஆண்டாக (365) நாட்கள் என உயர்த்தி கடந்த

23-ஆகஸ்ட்-2021 அன்று ஆணை

வெளியிட்டது தமிழக அரசு. உயர்த்தி வழங்கப்பட்டுள்ள மூன்று மாத காலங்களை ஜூலை 1ஆம் தேதியில் மகப்பேறு விடுப்பிலிருந்த பெண்களும் அனுபவித்துக்கொள்ளும் வகையில்,

புதிய விளக்கக் குறிப்பினையும்

வெளியிட்டுள்ளது அரசு.

அதாவது, கடந்த ஜூலை 1ஆம் தேதிக்கும், அரசாணை வெளியிடப்பட்ட ஆகஸ்ட்23ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில், எவருக்காவது பழைய 270 மகப்பேறு விடுப்பு நாட்கள் முடிந்திருந்தாலும், அவர்களும் எஞ்சிய 95 நாட்களை விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ளலாம் என அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொருத்தவரை, முப்பது ஆண்டுகளுக்கு முன்பு மூன்று மாதங்களாக (90 நாட்கள்) அனுமதிக்கப்பட்ட மகப்பேறு விடுப்பு காலம், பின்பு ஆறு மாதங்களாக (180 நாட்கள்) உயர்த்தப்பட்டு, பிறகு ஒன்பது மாதங்களாக (270 நாட்கள்) என உயர்வு பெற்றது. முழு ஊதியத்துடன் கூடிய இந்த விடுப்பு நாட்கள் குழந்தை வளர்ப்பில் இன்றியமையாதவை. குழந்தைக்குத் தாய்ப்பால் புகட்டும் காலம் முடிந்து இணை உணவுகளைப் பழக்கி,தாய்க்கு மனநிறைவு தரும் வகையில் ஓரளவு வளர்ச்சி பெற்றதாகப் பிறர் கையில் ஒப்படைத்துவிட்டு,குறைவான மன சஞ்சலங்களுடன் தாய் பணிக்குத் திரும்பிட இதுபோன்ற விடுப்புகள் உதவுகின்றன.

ஒரு சாதாரணக் குழந்தை என்றால், இந்தக் கணக்குகள் சரி. அதேவேளை குழந்தை பிறவியிலேயே ஏதேனும் ஒரு சவாலைச் சுமந்தபடி பிறந்திருக்கிறது. உணவோடு நின்றுவிடுவதல்ல அதற்கான பணிவிடைகள் எனும்போது, இந்த ஒரு ஆண்டு மகப்பேறு விடுப்பு ஒரு மாற்றுத்திறனாளிக் குழந்தையைப் பெற்றுப் பராமரிக்கும் தாய்க்குப் போதுமானதுதானா என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

தங்களின் மிகச் சிறிய வயதில் வழங்கப்படும் முறையான சில பயிற்சிகளால் சிறப்புத் தேவையுடைய குழந்தைகள் தங்களின் குறைபாட்டை வென்று மேலெழவோ, அல்லது அதனைத் தன் அன்றாடத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொள்ளவோ வாய்ப்புகள் ஏற்படுக்இன்றன. உதாரணத்திற்கு காக்லியர் இம்ப்லாண்ட் அறுவை சிகிச்சை ஒரு செவித்திறன் குறையுடைய குழந்தைக்கு அதன் ஒன்றரை வயதுக்குள் செய்தாக வேண்டும். அத்தோடு, அறுவை சிகிச்சை செய்யப்பட்ட குழந்தைக்கு சில சிறப்புப் பயிற்சிகளின் வழியே அதன் பேச்சாற்றலை மீட்டுக்கொண்ட்உவர இயலும். இதுபோல வெவ்வேறு சிறப்புத் தேவையுடைய குழந்தைகளுக்கு வெவ்வேறு வகையில் அன்றாடப் பயிற்சிகள் தேவைப்படலாம். அந்தப் பயிற்சிகளில் குழந்தைகளோடு உளப்பூர்வமாகப் பங்கேற்க அதன் தாயாலன்றி வேறு எவரால் இயலக்கூடும்?

இத்தகைய சூழலை அரசு கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். அரசு தனது பார்வையை மாற்றுத்திறனாளிகள் என்ற எல்லையிலிருந்து அவர்களின் பெற்றோர், குடும்பம் என்ற எல்லைக்கு விரித்துச் சென்றதன் விளைவே, மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் பேணும் பெற்றோருக்கு

ஆறுநாள் சிறப்புத் தற்செயல் விடுப்பு,

பணியிட மாறுதலில் முன்னுரிமை போன்ற அரசாணைகள். அத்தோடு, முத்தாய்ப்பாக மாற்றுத்திறனாளிக் குழந்தைகளைப் பேணும் அரசுப்பணியிலுள்ள பெண்களுக்கான மகப்பேறு விடுப்பு காலத்தை மேலும் ஓராண்டு அதிகரிக்கவோ, அல்லது அந்தத் தாய்மார்களின் தேவை அடிப்படையில் அவர்களுக்கான ஊதியத்துடன் கூடிய விடுப்பினைப் பரிசீலிக்கவோ அரசு முன்வர வேண்டும். தனியார்த்துறைகளையும் இதுபோன்ற நடைமுறைகளைப் பின்பற்றுமாறு அரசு நிர்பந்திக்க வேண்டும்.

பிறந்திருப்பதோ, சமூகநீதி ஆண்டு. தமிழகத்தைப் பேணிக்கொண்டிருப்பதும் சமூகநீதி அரசு. நிச்சயம் நமது இந்தக் கோரிக்கையும் சமூகநீதியின் ஒரு அங்கம் என்ற வகையில், பல்வேறு சிறப்புத் தேவையுடைய குழந்தைகளின் பெற்றோர்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சங்கங்கள் உரையாடல்களை நடத்தி, முழுமை பெற்ற கோரிக்கையாக அரசுக்கு முன்வைக்க வேண்டுகிறேன்.

***

தொடர்புக்கு: vaazhgavalluvam@gmail.com


Discover more from தொடுகை

Subscribe to get the latest posts sent to your email.

2 replies on “கோரிக்கை: ஒரு சமூகநீதிப் பார்வையில்”

உங்கள் கருத்தைப் பதிவு செ்யவும்.