வேண்டாவரம்: சிறுகதை

ஆக்கம் தொடுகை மின்னிதழ் வெளியிடப்பட்டது
கற்்்்் பார்வையற்ற குழந்தைகள்கும்ம்மஆணிக்கட்டையைப் பயன்படுத்தி பிரெயில் புள்ளிகள் பழகும் பார்வையற்ற குழந்தைகள்

(1)

“பிள்ளைங்களா! எல்லோரும் இங்க கவனிங்க” சுகுனா டீச்சர் ஆரம்பித்தபோதே, ‘சொக்கனுக்கு வாச்ச சுந்தரியே’ அகிலா கையிலிருந்த செல்பேசி இப்படி ஒலித்து டீச்சரை அமைதிபடுத்தியது.

“ஹேய்! பிறந்தநாள் பேபி, எப்ப கிளம்புற? எல்லா ஏற்பாடும் பண்ணிட்டு ஆவலோட அடியேன் காத்திருக்கேன்.” ஏக்கமும் ஆர்வமும் கலந்த குரலில் சொன்னான் வினோத்.

“இதோ முடிஞ்சிருச்சு, பிள்ளைங்களோட சேர்ந்து கேக் வெட்டிட்டு வந்துடுறேன் வினோ. நீ நான் ஃபோன் பண்ணினதுக்கு அப்புறம் கிளம்பினாப் போதும்.” அகிலா முணுமுணுக்க, உடனே துண்டித்துக்கொண்டான் வினோத்.

“டேய்! பிள்ளைங்களா, கண்ணுங்களா, இன்னக்கி என்ன நாள்?” சுகுனா டீச்சர் கேட்க,

“இன்னக்கி ஆகஸ்டு 30, அகிலா டீச்சர் பிறந்தநாள்” மாணவ மாணவிகள் அனைவரும் குழுவாக ஒப்புவிக்க,

“டீச்சர் தன்னோட பிறந்தநாள உங்ககூட இப்போ கேக் வெட்டி கொண்டாடப்போறாங்க, சந்தோஷமா?” சுகுனா டீச்சர் முடிப்பதற்குள்,

“சந்தோஷம் டீச்சர்” என பள்ளிக்கட்டடமே அதிரும் வண்ணம் கத்திச்சொன்னார்கள் மாணவ மாணவிகள்.

‘happy birthday to you’ கைத்தட்டல் சகிதம் ஒலித்த குழந்தைகளின் வாழ்த்துப் பாடலுக்கிடையே அகிலா கேக் வெட்டி முடிக்க, அதை சுகுனா டீச்சரும், விடுதிக்காப்பாளர் மனோகரும் ஒவ்வொரு குழந்தைக்குமாக ஊட்டிக்கொண்டிருந்தார்கள்.

“29 பிறந்தாச்சு, என் பையன்கிட்ட சொல்லிடு,இந்த வருஷம் முடியுறதுக்குள்ள ரெண்டுபேரும் விருந்து வச்சிரணும் சரியா?” அன்புக்கட்டளையிட்டபடியே, சிறிய துண்டை அகிலாவுக்கு ஊட்டிவிட்டார் 55 வயது நிறைந்த அந்தப் பார்வையற்றோர் அரசுப்பள்ளியின் பொறுப்புத் தலைமை ஆசிரியர்/சக ஆசிரியர்/பெற்ற தாயைப்போல பாசம் பாராட்டும் சுகுனா டீச்சர்.

“நானா மாட்டேங்கிறேன், உங்க புள்ளதான் தனக்கு வேலை கிடச்சாதான் கல்யாணமுனு பிடிவாதமா இருக்காரு.” என அகிலா சிறு வெட்கம் காட்ட,

அருகிலிருந்த மனோகர், “பேங்க்ல ஏதோ பரிட்சை எழுதிருக்காருன்னு சொன்னீங்களே டீச்சர்” என கேட்டார்.

“ஆமா சார், சிவி முடிஞ்சிருச்சு, அநேகமா இன்னும் ஒரு மாசத்தில ஆர்டர் வந்துறும்” பூரிப்புடன் சொன்னாள் அகிலா.

நன்றி சொன்னபடியே குழந்தைகள் கேக்கை சுவைத்துக்கொண்டிருக்க,

“கேக் நல்லா இருக்கா?”

“நல்லா இருக்கு டீச்சர்” சுகுனா டீச்சருக்கு மீண்டும் ஒரு அரங்கு அதிரும் பதில்.

“அகிலா டீச்சர் உங்களுக்கெல்லாம், உங்களுக்கா எங்களுக்கும் சேர்த்துதான், நம்ம எல்லோருக்கும் முன்னோடிதானே?” சுகு டீச்சர் முடிப்பதற்குள் “ஆமாங்க டீச்சர்” குழந்தைகளின் நீளமான சத்தம்.

“உங்கள மாதிரியே அவுங்களுக்கும் பார்வை இல்லைனாலும், நல்லா படிச்சு இன்னக்கி ஒரு அரசாங்க டீச்சரா வந்திருக்காங்க இல்லையா? அதுபோல நீங்களும் நல்லாப் படிச்சு முன்னேறி நல்ல ஒரு வேலைல உட்காரனும் சரியா?”

“சரிங்க டீச்சர்” மீண்டும் குழந்தைகள் இழுத்து முடிப்பதற்குள்,

“அதுபோல நம்ம வினோத் சார் இருக்காருல்ல?”

“ஆமாங் சார்”

“வினோத் சார் யாரு?”

“டீச்சரைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவுங்க” மனோகர் கேள்விக்குக் குழந்தைகளின் பதிலில் மீண்டும் நாணினாள் அகிலா.

“நம்ம வினோத் சாரும் உங்கள மாதிரிதான். இன்னக்கி பேங்க் எக்சாம் எழுதி பாஸ் பண்ணிட்டாரு. அவருக்கு சீக்கிரமா வேல கிடச்சு எல்லாம் நல்லபடியா நடக்கணுமுனு ப்ரேயர் பண்ணிக்கங்க சரியா?” “சரிங்க சார்” என உற்சாகமாக பதில் சொன்னார்கள் குழந்தைகள்.

“ரொம்ப நன்றி பசங்களா, நீங்க எல்லோரும் நல்லாப் படிக்கணும், நல்ல பிள்ளைங்கனு பேர் எடுக்கணும், நம்மல மாதிரி பார்வையற்றவுங்களுக்கெல்லாம் வாழ்க்கையில முன்னேற ஒரே வழி எது?” உரத்துக்கேட்ட அகிலாவுக்கு “படிப்பு” என்று பதில் சொன்னார்கள் குழந்தைகள்.

“ஆமாம், கண்ணு தெரிஞ்சவுங்க வாட்டர் பாக்கெட் வித்துகூட பிழைச்சுக்குவாங்க, நாம நல்லா, வசதியா, நம்ம அப்பா அம்மாவ அவுங்களோட கடைசி காலத்தில வச்சுப் பார்த்துக்கிடுறமாதிரி வாழணுமுனா நாம என்ன செய்யணும்?” அகிலா கேட்க, “சம்பாதிக்கனும்” சில குழந்தைகள் சொன்னார்கள்.

“அதுக்கு நல்ல வேலைக்குப் போகனும் இல்லையா?” அகிலா முடிப்பதற்குள், “டீச்சர் நான் பெரியவனானதும் ட்ரைவரா கார் ஓட்டி எங்க அம்மா அப்பாவக் காப்பாத்துவேன்” என உற்சாகமாக எழுந்து பதில் சொன்னான் மூன்றாம் வகுப்புச் சுட்டிப்பையன். அனைவரும் சிரித்தபடி கரவொலி எழுப்ப, “டீச்சர் நான் போலீஸ்” என்றான் இன்னொருவன், “நான் ஜட்ஜ்” என்றாள் ஏழாம் வகுப்பு மாணவி.

கொண்டாட்ட மனநிலையோடே குழந்தைகள் அனைவரும் அவரவர் வகுப்பிற்குக் கலைந்துசென்றார்கள். அகிலா தற்செயல் விடுப்பு சொல்வதற்காக சுகுனா டீச்சரை நெருங்கினாள்.

“டீச்சர் இன்னக்கி நான் சிஎல் போட்டுக்குறேன்” அகிலா கேட்டதுதான் தாமதம்,

“என்னது சிஎல்லா? ஐயோ சாரிடா கண்ணு, நான் உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன். நம்ம ஐஈடி மூர்த்தி சார் நேத்து நைட்டு ஒரு ஒன்பதறை இருக்கும். ஃபோன் பண்ணி டீச்சர் நம்ம ப்லாக்குல ரெண்டு குழந்தைங்க இருக்கு, நாளைக்கு நீங்க அத்திப்பட்டு வந்திருங்கனு சொல்லீட்டாருடா. நானும் வாரேனு சொல்லிட்டேன். ஏன் முக்கியமா போயே ஆகனுமா?” சுகு டீச்சர் கேட்டாள்.

“ஆமா டீச்சர், வினோத் …” அகிலா இலுத்தாள்.

“என் புள்ளதான் கூப்பிட்டிருக்கா, ஃபோன் போடு நான் சொல்றேன் புரிஞ்சுக்குவாப்ல. ஒரு அட்ரஸாவது பார்த்துட்டு மதியம் வந்திடலாம்.” சுகு சொல்லச் சொல்ல அகிலாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது. ஆனாலும் மறுத்து எப்படிப் பேசுவது? பிறகு உன்னை மாதிரி ஒரு பார்வையில்லாத குழந்தை ஸ்கூல் சேரவேணாமா, படிக்க வேணாமானு டீச்சர் ஆரம்பித்துவிடுவார். போவதைத்தவிர வேறு வழியே இல்லை. நிச்சயம் வினோத் கத்துவான். என்ன செய்வது? எப்படியாவது மதியம் சென்றுவிட வேண்டியதுதான்.

“மனோகர் சார் ஸ்கூலைப் பார்த்துக்கோங்க, டைரெக்டரேட்ல இருந்து ஃபோன் வந்தா ஹொம் விசிட்டிங் போயிருக்கோமுனு சொல்லுங்க” சுகு டீச்சர் அகிலாவின் கையைப் பிடித்தபடி சொன்னாள். மனோகர் தலையாட்ட, அகிலாவோ, டைரெக்டரேட்டைக்கூட சமாலிச்சுக்கலாம், ஆனா வினோவை … என மனதிற்குள் நினைத்துக்கொண்டாள்.

***

நிற்க! இதற்கு முந்தைய பத்தியில் ‘ஐஈடி சார்’, ‘ஹோம் விசிட்டிங்’ போன்ற புதிய புரியாத வார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறதல்லவா? எனவே கதைக்கு இடையே கொஞ்சம் தலைகாட்டி, அந்த வார்த்தைகளை விளக்கிவிடுவது கதை ஆசிரியனான என் கடமை என நினைக்கிறேன்.

பொதுவாக நமது நாட்டில் பார்வையற்றோர் உட்பட அனைத்துவகையான மாற்றுத்திறனாளி குழந்தைகளும் இரண்டு முறைகளில் கல்வி கற்கும் நடைமுறை உள்ளது. ஒன்று, சாதாரணப் பள்ளிகளில் சேர்ந்து பயிலும் உள்ளடங்கிய கல்வி. மற்றொன்று, அவர்களுக்கென்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட சிறப்புப் பள்ளிகளில் பெறும் கல்வி. இரண்டில் எது சிறந்தது, பயனுடையது என்பதுதான் இப்போதைய இன்றியமையாத விவாதம்.

அனைவருக்கும் கல்வித்திட்டம் சர்வ ஷிக்ஷா அபியான் (SSA) நமது மாநிலத்தின் பள்ளிக்கல்வித்துறையோடு இணைத்து செயல்படுத்தப்படும் திட்டமாகும்.

இந்தத் திட்டத்தின் கீழ், அனைத்துவகை மாற்றுத்திறனாளி குழந்தைகளையும் சாதாரணப் பள்ளிகளில் சேர்த்துக் கற்பிக்கும் திட்டமே உள்ளடங்கிய கல்வி (Inclusive Education (I.Ed) சுருக்கமாக ஐஈடி. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள் அல்லது வட்டாரங்களிலும் (Unions or Blocks) வட்டார வள மையங்கள் (Block Resource Centre BRC) அமைக்கப்பட்டு, அந்த வட்டாரத்திலுள்ள பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்குக் கற்பிக்க சிறப்பாசிரியர்கள் (Special Teachers) நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

பள்ளிக்கல்வித்துறையில் இப்படியென்றால், தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கட்டுப்பாட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமான விடுதியுடன் கூடிய சிறப்புப் பள்ளிகள் (Special schools with Residential) செயல்பட்டுவருகின்றன. இந்தப் பள்ளிகளின் நோக்கம் பள்ளி வயது மாற்றுத்திறனாளி குழந்தைகளை அடையாளம் காண்பதும், அவர்களை சிறப்புப் பள்ளியில் சேர்த்துக் கற்பிப்பதும் ஆகும். இதற்காக சிறப்புப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள், அந்தக் குழந்தைகளின் பெற்றோரை அவர்களின் வீட்டிற்கே சென்று சந்தித்து, கல்வியின் முக்கியத்துவத்தை எடுத்துச்சொல்லி அக்குழந்தைகளை சிறப்புப் பள்ளியில் சேர்க்க முயலும் நடைமுறைக்கு வழங்கும் பெயர் ஹோம் விசிட்டிங்.

பார்வை மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு சாதாரணப் பள்ளிகளில் இணைந்து கற்கும் உள்ளடங்கிய கல்விமுறையைவிட, சிறப்புப் பள்ளியில் பயிலும் கல்விதான் சிறந்தது என நம்பும் பல சிறப்பாசிரியர்களும் உள்ளடங்கிய கள்வித் திட்டத்தில் பணிபுரிகிறார்கள். அத்தகைய ஒரு சிறப்பாசிரியரின் அழைப்பை ஏற்றே சுகுணா டீச்சரும் அகிலாவும் ஹோம் விசிட்டிங் போகிறார்கள். இனி நீங்களும் அவர்களோடே பயணப்பட்டு அத்திப்பட்டு போகலாம்.

(2)

இருவரும் பேருந்து நிலையம் நடக்கத் தொடங்கியதிலிருந்து ‘சொக்கனுக்கு வாச்ச’ அகிலாவின் தோளில் தொங்கிய ஹேண்ட்பேகிலிருந்து செல்பேசி மீண்டும் மீண்டும் ஒலித்தது. அந்த ரிங் டோன், உடன்வரும் சுகு டீச்சர் மீதான எரிச்சலை அதிகப்படுத்துவதாக இருந்தது. பேருந்தில் கூட்டம் என்பதால் கிடைத்த இருக்கையில் அகிலாவை மட்டும் அமர்த்திவிட்டு சுகு டீச்சர் நின்றுகொண்டாள். டீச்சர் அருகிலேயே நிற்கக்கூடும் என்ற எச்சரிக்கையோடு, முகத்தில் எந்த சலனமும் காட்டிக்கோள்ளாமல், பேருந்தில் செல்லும்போது வினோத்துக்கு ஃபோன் சேய்து நடந்ததை அகிலா கடுகடு குரலில் முணுமுணுத்து முடித்தாள்.

“என்னது ஹோம் விசிட்டிங்கா? ஏன்டி அந்த அம்மாவுக்கு கொஞ்சம்கூட இருக்காதா? இன்னக்கி என்ன நாளு, சரி சின்னஞ்சிறுசுங்க எஞ்சாய் பண்ணட்டுமேனு நினைக்காம புள்ள புடிச்சே ஆகனுமா? நீங்க போய் கூப்பிட்ட உடனே அப்படியே எழுந்திருச்சு வந்திறப்போறானாக்கும்.” வினோத் ஆத்திரத்தில் கத்திக்கோண்டிருக்க, “அதான், ஊ கூம்” என அகிலாவும் தனது வெறுப்பு குரலில் வினோத்தின் கோபத்தை ஆமோதித்துக்கோண்டிருந்தாள்.

“சே என்னென்னவெல்லாம் கற்பனை பண்ணி வச்சிருந்தேன். ஹோட்டல், மால் எல்லாம் அவ்வளவுதானா” மிகுந்த ஆத்திரத்தில் கேட்டான் வினோத்.

“ஹேய் ப்லீஸ் புரிஞ்சுக்கப்பா, கண்டி்ப்பா மத்தியம் வந்துடுறேன்.” அகிலா முடிப்பதற்குள் அழைப்பைத் துண்டித்தான் வினோத். மீண்டும் அழைக்க அகிலா முயற்சிப்பதற்குள், இறங்கும் இடம் வந்துவிட்டதாக அகிலாவின் தோள் தட்டினாள் சுகு டீச்சர்.

(3)

நிறுத்தத்தில் இறங்கியதும் சுகு டீச்சர் மூர்த்திக்கு ஃபோன் செய்து பேசினார். “சாரி டீச்சர், நான் லீவ் போட்டுட்டு கோவிலுக்கு வந்திருக்கோம். இன்னக்கி என் வொய்ஃபுக்கு பிறந்தநாளு. எனக்கே மறந்துபோச்சு. நீங்க ஸ்கூலுக்குப் போங்க, நான் ஹெச்செம்கிட்ட பேசிட்டேன்” அந்த அமைதியான இடத்தில் மூர்த்தியின் குரல் நன்றாகவே வெளியில் கேட்டது. அகிலாவுக்கு இப்போது மூர்த்திமீதும் ஆத்திரமாக வந்தது. “சரிங்க சார், சரி சரி” என ஃபோனை வைத்துவிட்டு, “இங்க கதையக் கேளேன், வீட்டம்மாவுக்குப் பொறந்தநாளாம் லீவ் போட்டுட்டாராம். நம்மல வாங்க வாங்கனுட்டு அவர் வரல பார்த்தியா? ஹூம் அவுங்களுக்கு என்ன, நமக்குத்தான்  நம்ம பிள்ளைங்க முக்கியம், அவுங்க எதிர்காலம் முக்கியம் என்ன நான் சொல்லுறது” அகிலாவைக் கேட்டாள் சுகு டீச்சர். அகிலா எல்லாவற்றிற்கும் வேண்டா வெறுப்பாக ஊம் கொட்டிக்கொண்டாள். இருவரும் பன்னிரண்டு மணி வெயிலில், பள்ளி இருக்குமிடத்தை எதிர்படுவோரிடம் விசாரித்தபடியே, சுமார் முக்கால் கிலோ மீட்டர் நடந்து சென்று அந்த அரசுத் தொடக்கப்பள்ளியை அடைந்தனர்.

அது ஈராசிரியர்ப் பள்ளி. சுமார் 100க்கும் அதிகமான குழந்தைகள். மிகுந்த சத்தமாக இருந்தது. ஐந்தாம் வகுப்பில் அமர்ந்திருந்த பள்ளித் தலைமை ஆசிரியர் காந்திமதி அவர்கள் இருவரையும் அடையாளம் கண்டு வரவேற்றார்.

“வாங்க டீச்சர், இப்போதான் மூர்த்தி சார் பேசினாரு. உட்காருங்க, டேய் மூனாம் வகுப்புல மாதேஸ்வரன் இருப்பான் கூட்டிட்டு வா” என்று ஒரு பையனை அனுப்பினார். அகிலாவைக் காட்டி, யார் என சுகு டீச்சரிடம் சைகையில் கேட்டார் காந்திமதி டீச்சர்.

“இவுங்களும் டீச்சர்தான், எங்க ஸ்கூலில வேலை பார்க்கிறாங்க.” சுகு டீச்சர் முடிப்பதற்குள், அடுத்த கேள்வியும் சைகையில் வந்தது.

“ஆமா, பிறவியில இருந்தே, அகிமா பிறந்ததிலிருந்தேதானடா?” சுகு டீச்சரின் கேள்வி தனது பார்வையின்மை பற்றியது என்பதைப் புரிந்துகொண்ட அகிலா ஆமாம் எனத் தலையாட்டினாள்.

“அப்படியா? நம்மல மாதிரியே செகண்ட் கிரேடா? என்ன படிச்சிருக்காங்க? தன்னைப் பற்றித் தன்னிடம் கேட்காமல் சுகு டீச்சரிடம் தலைமை ஆசிரியர் விசாரித்துக்கொண்டிருப்பதைப் பொறுக்க முடியாத அகிலா, “எம்.ஏ.பி.எட்” என பதில் சொன்னாள். மூவரும் பேசிக்கொண்டிருந்தபோதே மூன்றாம் வகுப்பு மாதேஸ்வரன் அங்கு அழைத்துவரப்பட்டான்.

“மாதேஸ், குட் மார்நிங்”

“குட் மார்னிங் டீச்சர்” தலைமை ஆசிரியரின் குரலுக்குத் தலைகுனிந்தபடியே பதில்சொன்னான் மாதேஸ்.

“உன்னைப் பார்க்க ரெண்டு டீச்சர்ஸ் சென்னையில இருந்து வந்திருக்காங்க, அவுங்களுக்கு வணக்கம் சொல்லு”

“வணக்கம் டீச்சர்” சொன்னவன் தலைநிமிரவே இல்லை. சிறுவனின் கையைப் பிடித்துத் தன் பக்கமாக வரச் செய்த சுகு டீச்சர்,

“மாதேஸ் காலைல என்ன சாப்பிட்ட?” என்று கேட்டபடி, அவன் கையை மொபைலில் மணி பார்த்துக்கொண்டிருந்த அகிலா கைக்குள் நுழைத்தார்.

“மாதேஸ்! நல்லாப் படிப்பியா?”

“படிப்பேன் டீச்சர்”

“எங்கே ஒரு திருக்குறள் சொல்லு பார்ப்போம்.” அகிலா கேட்டு முடிப்பதற்குள், தன் வகுப்பாசிரியர் சொல்லிக்கொடுத்த கடவுள் வாழ்த்து அதிகாரத்தை கடகடவென ஒப்புவித்து முடித்தான். அவன் சொல்லிக்கொண்டிருந்தபோதே, அவன் தலையில் கைவைத்து, அவனது குனிந்த தலையை நிமிர்த்தினாள் அகிலா.

“மனப்பாடம் எல்லாம் சீக்கிரம் பண்ணிடுவான் டீச்சர், பாட்டெல்லாம் அருமையாப் பாடுவான். டீவில போடுர விளம்பரத்த அப்படியே அந்த மியூசிக்கோட சொல்லுவான். எத்தனை மணிக்கு என்ன சீரீயலுனு எல்லாமே அத்துபடி.

ஆனா இவனுக்கு எப்படி எழுதப் படிக்கச் சொல்லித் தாரதுன்னே எங்களுக்குத் தெரியல. பாவம், எல்லாப் பிள்ளைங்களும் எழுதும்போது இவன் சும்மாதான் உட்கார்ந்து இருப்பான். பியார்சில இருந்து இவனுக்கு புள்ளி புள்ளியா இருக்கிற புத்தகம் கொடுத்தாங்க, அதை எப்படி வாசிக்கிறதுன்னு எனக்கும் தெரியல, அதைக் கொண்டுவந்து கொடுத்த அந்த ஸ்பெஷல் டீச்சருக்கும் தெரியல. அந்த பொன்னுகிட்ட கேட்டா, நான் காது கேட்காதவுங்களுக்கான ஸ்பெஷல் ட்ரைனிங்தான் முடிச்சிருக்கேனு சொல்லுது.

மற்ற பிள்ளைங்க பீட்டி விளையாடும்போது இவன் ஒரே இடத்தில உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தா மனசு கஷ்டமா இருக்கு. நாம அதட்டினா அதுங்களும் கொஞ்சநேரம் சேர்த்துக்கிட்டு விளையாடுங்க, அப்புறம் விட்டிடுதுங்க. என்ன செய்யுறது அதுங்களும் குழந்தைங்கதானே?” மிக எதார்த்தமாகவும், உள்ளது உள்ளபடியும்  தன் ஆதங்கத்தைக் கொட்டினார் தலைமை ஆசிரியரான காந்திமதி டீச்சர்.

“டீச்சர் இவனோட அப்பா அம்மாகிட்ட பேசினீங்களா?” அகிலா கேட்க,

“எத்தனையோ தடவை பேசிட்டேன் டீச்சர். இவனுக்குன்னு தனியாப் பள்ளிக்கூடம், எழுத்து முறையெல்லாம் இருக்கு, அங்க கொண்டுபோய் சேருங்க, இங்க இவன் தினமும் சும்மாதான் உட்கார்ந்துட்டு வாரானு சொல்லிட்டேன், அவுங்க கேட்கிறதாவே இல்ல. அவன் அவுங்கள விட்டுப் பிரிஞ்சிருக்க மாட்டானு சொல்லீட்டாங்க. அதிலையும் அவன் பாட்டி இருக்கே, அப்பப்பா பயங்கரம், அதுதான் அவனுக்கு ஓவர் செல்லம் கொடுக்குது” என்று பாட்டி விஷயத்தை மட்டும் மெல்லமாகச் சொன்னார் காந்திமதி டீச்சர்.

“மாதேஸ்! இந்த டீச்சருங்க ஸ்கூலுக்குப் போறியா? அங்க உனக்கு ஏத்த மாதிரி எல்லா வசதியும் இருக்கும்” தலைமை ஆசிரியர் முடிப்பதற்குள், “ஊம் கூம் நான் பொமாட்டேன்” என்று சட்டென பதில் வந்தது மாதேஸிடமிருந்து.

“எங்க ஸ்கூலில பரவால டீச்சர், ஐஈடி குழந்தைங்க ரெண்டுபேருதான் இருக்காங்க, இவனும், ஐந்தாம் வகுப்பில ஒரு கால் முடியாத பொண்ணும். பக்கத்து ஊரு ஹை ஸ்கூல் சாரெல்லாம் புலம்புவாரு. அங்க கிலாசுக்கு ஒரு எம்ஆர் குழந்தை இருக்காம். எப்ப பார்த்தாலும் அடிச்சிட்டான் கடிச்சிட்டானு ஒரே பிரச்சனையாம். இதெல்லாம் இந்த அரசாங்கத்துக்கு தெரியுமா தெரியாதா?”

“மாற்றுத்திறனாளிகளசமுதாயத்தில இருந்து ஒதுக்கிவைக்கக் கூடாதாம்.” தலைமைஆசிரியர் காந்திமதியின் ஆதங்கத்துக்குக் கிண்டலாக பதில் சொன்னாள் அகிலா.

“அதுக்காக அவுங்க எதுவுமே தெரிஞ்சுக்காம இப்படி சும்மாவே உட்கார்ந்துட்டுப் போறதா? இந்த பேரன்சும் ஏன் தான் புரிஞ்சுக்க மாட்றாங்கனே தெரியல. இப்படி கண்ணு தெரியாத பிள்ளைங்கெல்லாம் இங்கேயே இருக்கிறதால ஸ்பெஷல் ஸ்கூலில ஸ்ட்ரெந்து குறைஞ்சுகிட்டே வருது. சரி, ஸ்ட்ரெந்து குறையுதே, என்ன காரணமுனெல்லாம் அரசாங்கம் யோசிக்கிறதே இல்ல. பிள்ளங்க இல்லையா உடனே ஸ்கூல இழுத்து மூடிடனும். ஹூம் எப்படியோ எங்க காலமெல்லாம் ஓடிப்போச்சு. இனிமேலாம் டீச்சர் வேலைங்கிறதே ரொம்பக் கஷ்டம்தான்.” சுகு டீச்சர் தன் பங்கிற்கு ஆதங்கத்தைக் கொட்டினார்.

“டீச்சர்! பேரன்ஸ் அவுங்க பிள்ளைங்கள ஸ்பெஷல் ஸ்கூலிலையே சேர்க்க வேணாம். அவுங்க பக்கத்துலையே வச்சிக்கட்டும். இந்த ஸ்கூலுக்கே அனுப்பட்டும். ஆனா இங்கேயே ஒரு ஸ்பெஷல் டீச்சரை அரசாங்கம் நிரந்தரமா அப்பாயின்ட் பண்ணலாம்ல. அவுங்கலையும் ஊர் ஊரா அலையவிட்டு. இந்தப் பிள்ளைங்களோட தொடக்கக் கல்வியையும் தொலைதூரக் கல்வியா மாத்தினதெல்லாம் என்ன கொள்கையோ, கோட்பாடோ?” அகிலா விரக்தியில் சொல்லிக்கொண்டே மீண்டும் மொபைலில் மணி பார்த்தாள்.

“ஆமா டீச்சர், இந்த ஊருக்கெல்லாம் டயத்துக்குத்தான் பஸ் இருக்கு. வாரத்துக்கு அல்லது ரெண்டு வாரத்தில மூனு தடவைனு பியார்சில இருந்து ஸ்பெஷல் டீச்சர் வருது. ஏதாவது கேம்ப் போட்டா இந்தப் பிள்ளைங்களைக் கூட்டிட்டுப் போவாங்க. அடையாள அட்டை வாங்கிக்கொடுத்திருக்காங்க, போனவாரம்கூட அந்தப்பொன்னு ஏதோ உதவித்தொகை ஃபார்ம் கொண்டுவந்து கொடுத்திருக்கு. இனிமேல்தான் ஃபில் பண்ணனும்.” என்று காந்திமதி டீச்சர் சொல்லிக்கொண்டிருக்கும்போதே,

“மாதேஸ்! கண்ணு குத்தக்கூடாது, கண்ணுல இருந்து கையெடு” என உரத்துச் சொன்னார் சுகு டீச்சர்.

நேரம் அதிகமாகிக்கொண்டே இருப்பது அகிலாவுக்கு கவலையாக இருந்தது. உரையாடலை முடித்துக்கொண்டு கிளம்பும் நோக்கத்தோடு, “சரிங்க டீச்சர், நீங்க இவன் அப்பா நம்பர் கொடுங்க, நாங்க பேசிப்பார்க்கிறோம்” என்றாள்.

“அது அவனுக்கே மனப்பாடமா தெரியுமே, மாதேஸ் அப்பா நம்பர் சொல்லு” தலைமை ஆசிரியர் கேட்டதும் கடகடவென 10 இலக்க எண்ணைச் சொல்லி முடித்தான் மாதேஸ். “கொஞ்சம் மெதுவாச் சொல்லுடா, டீச்சர் எழுதனுமில்ல” என்று சிரித்தார் சுகு டீச்சர்.

“ஆண்டவன் கண்ணை எடுத்துக்கிட்டு மற்ற அறிவையெல்லாம் கூட கூட வச்சிருக்கான் பாருங்க”

தலைமை ஆசிரியர் காந்திமதியின் கூற்றுக்குப் பதில்சொல்லி, இன்னோரு விவாதத்தைக் கிளப்பினால், இன்னும் நேரம் ஆகும் என்பதால் அகிலா அமைதியாக இருந்துவிடலாம் என நினைத்தாள். ஆனாலும், அவள் உள்ளுணர்வு அவளை இருக்கவிடவில்லை.

“அப்படியெல்லாம் இல்லை டீச்சர். நாம எந்தப் புலனையும் பயன்படுத்தப் பயன்படுத்த அது கூர்மையடையும்கிறதுதான் உண்மை”

“ஓஹோ” அந்த ஒற்றைச்சொல்லோடு காந்திமதி டீச்சர் தொடராமல் நிறுத்திக்கொண்டதில் அகிலாவுக்கு கொஞ்சம் நிம்மதி. ஆனால் விடுவாரா சுகு டீச்சர். “இந்தப் பையனோட வீடு பக்கத்தில இருந்தா நாங்க அவன் அப்பா அம்மாவப் பார்த்திட்டே போயிடுவோமே” சுகு டீச்சர் சொன்னது கேட்டு உள்ளுக்குள் கடுகடுத்தாள் அகிலா.

“ரெண்டுபேருமே நூறுநாள் வேலைக்குப் போயிருப்பாங்க, உங்க பாட்டி வீட்டில இருக்காடா?” தலைமை ஆசிரியர் கேட்க,

“டீச்சர் பாட்டி எங்க மாமா ஊருக்குப் போயிருக்கு” பதில் சொன்னான் மாதேஸ்.

“டேய் முருகேசா இங்க வா!” தனது வகுப்புப் பையனை அழைத்தார் தலைமை ஆசிரியர். “இவன் வீட்டிலகூட ஒரு கண்ணு தெரியாத பொன்னு இருக்கு”

“அப்படியா?”

“ஆனா அதுக்கு வயசு 20க்கு மேல இருக்கும்” தலைமை ஆசிரியரின் பதிலில் சுகு டீச்சரின் ஆர்வம் நொடியில் வடிந்தது.

“எங்க சித்தி டீச்சர்” என்றான் முருகேசன். “சரி, மாதேஸை கிலாஸில விட்டுட்டு இவுங்களுக்கு மாதேஸ் வீட்டைக் காட்டிட்டு வா” என்று அவனை அவர்களோடு அனுப்பிவைத்தார் தலைமை ஆசிரியர். இருவரும் விடைபெற்றுக்கொண்டு அந்தப் பையனோடு மாதேஸ் வீடு நோக்கி நடந்தனர்.

(4)

வீடு பூட்டியிருந்தது. அப்பாடா என்றது அகிலாவின் மனம். முருகேசன், “டீச்சர் இதுதான் எங்கவீடு” என்று மாதேஸ் வீட்டிற்கு எதிர்த்த மாதிரியே இருந்த தனது வீட்டு வாசலில் அவர்களை நிறுத்தினான். அது ஒரு பழைய ஓட்டுவீடு. கூரை வேயப்பட்டிருந்த வீட்டின் முன்பகுதித் திண்டில் ஒரு வயதான அம்மா அமர்ந்திருந்தார். உள்ளே இருந்து வந்த முருகேசனின் அம்மா சுகு டீச்சரையே வெறித்துப் பார்த்தார்.

“டீச்சர் நீங்க திருச்சில இருக்கிற கண் தெரியாத ஸ்கூலில வேல பாக்குறீங்கதானே? நான் வேண்டாவரம் அக்கா லட்சுமி.” முருகேசனின் அம்மா முடிக்க, சுகு டீச்சருக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் நினைவுக்கு வந்தது.

“வரிக்கி ரொட்டி வேணுமுனு அடம்பிடிக்குமே, அந்த வேண்டாவரம்தானே?” சுகு டீச்சர் ஆச்சரியத்தில் கேட்க,

“அதேதான். அம்மா! திருச்சில கண்ணுதெரியாத ஸ்கூலில வேல பார்க்கிற டீச்சர்” எனத் திண்டில் அமர்ந்திருந்த தன் அம்மாவுக்குச் சொல்லிவிட்டு,  அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்துச் சென்றாள் லட்சுமி. “நீங்களும் அங்கதான் வேல பார்க்கிறீங்களா டீச்சர்” எனக் கேட்டுக்கொண்டே, அகிலாவைக் கைபிடித்துப் பாயில் அமர்த்தினாள்.

வீட்டின் ஒரு மூலையில் வைக்கப்பட்டிருந்த கலைஞர் டீவிப் பெட்டியில் சீரீயல் ஓடிக்கொண்டிருந்தது. அதன் அருகிலேயே சிக் என்று ஒட்டிக்கொண்டு, தலையை டீவிப் பெட்டிக்குள்ளேயே நுழைத்துவிடுவதுபோல அமர்ந்து கவனித்துக்கொண்டிருந்த வேண்டாவரத்தைப் பெயர்சொல்லி அழைத்தார் சுகு டீச்சர்.

“வேண்டாவரம் நல்லா இருக்கியா?” 20 ஆண்டுகளுக்கு முன்பு கேட்ட குரல் என்றாலும், தனது ஆசிரியர் குரலை மறக்கவில்லை அவள். ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக “டீச்சர்” என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்தாள்.

“போச்சுடா, கதை முடிந்தது, இன்னும் இங்க எவ்வளவு நேரம் ஆக்குமோ இந்த டீச்சர்” என மனதிற்குள் குமுறினாள் அகிலா.

“அகி, இதுதான் வேண்டாவரம், வேண்டாவரம் இவுங்க டீச்சருடா, இவுங்களுக்கும் உன்ன மாதிரியே கண்ணு தெரியாது.” சுகு டீச்சர் சொல்லிக்கொண்டே, வேண்டாவரத்தின் கைகளை அகிலாவின் கைகளோடு கோர்த்தார்.

வேண்டாவினுடையது எலும்பும் தோலுமான, மிகவும் மெலிந்து ஒடுங்கிய தேகம் என்பதை, அவளின் கைகளைப் பிடித்தபோதே அகிலா அறிந்துகொண்டாள்.

“எங்க ஊருக்கு எதுக்கு டீச்சர் வந்திருக்கீங்க?” ஒருமாதிரி நைந்த கீச்சுக்குரலில் வேண்டா கேட்டாள்.

“உங்க வீட்டுக்கு எதிர்த்தாப்பில மாதேஸ்னு ஒரு பையன் இருக்கான்ல, அவனை நம்ம ஸ்கூலில சேர்க்கலாமுனு வந்தோம்.” அகிலா சொன்னாள்.

“டீச்சர் என்னை ஸ்கூலில சேர்த்துக்கிறீங்களா?” வேண்டா கிண்டலாகக் கேட்பதாகவே அகிலா நினைத்தாள்.

“ஸ்கூலில சேர்ந்து படிக்கிற வயசுல படிக்கவே மாட்டேனு அழுது அடம்பிடிச்சு ஓடிவந்துட்ட. அடடா, என்ன கத்து, என்ன ஆர்பாட்டம், போதா குறைக்கு இவுங்க அப்பா தண்ணியப் போட்டுட்டு எங்களையெல்லாம் அடிக்கவந்துட்டாரு அகி. சரி அப்பா நல்லா இருக்காரா?” சுகு டீச்சர் கேட்க,

“அந்தப் பாவி மனுஷன் குடிச்சே செத்துப் போயிட்டான் மா. இந்தப் புள்ளையையும் படிக்கவிடாம, நாளு பொன்னுங்களையும் என் தலைல கட்டிட்டு போய்ச்சேர்ந்துட்டான் மகராசன். இப்பவும் என் கடைசிப் பொண்ணுக்காகத்தான் நான் உசுரக் கையில புடிச்சிட்டிருக்கேன். அவள நினைச்சா என் குளையே நடுங்குது.”” எனத் திண்டில் இருந்தபடியே இவர்களின் பேச்சை கவனித்துக்கொண்டிருந்த வேண்டாவின் அம்மா புலம்பி அழுதாள்.

“எனக்குக் குளிக்க மட்டும் சொல்லிக்கொடுத்து உங்க ஸ்கூலிலேயே வச்சுக்கிறீங்களா டீச்சர்?” வேண்டாவின் கேள்விக்குக் கொஞ்சம் திடுக்கிட்டாள் அகிலா.

“இப்போ எப்படி குளிக்கிறீங்க?”

“எங்க அம்மாதான் எனக்கு குளிக்க ஊத்தும்.”

“சரி உன்க அம்மாவுக்கு அப்புறம்?”

“எங்க அம்மா போகும்போதே எனக்கும் ஏதாவது கொடுத்து என்னையும் கூட்டிட்டுப் போயிடுமாம், அம்மா சொல்லிருக்கு.” வேண்டாவின் பதில் அகிலாவை என்னவோ செய்தது.

“சரி இப்போ உங்களுக்கு என்ன வயசு” அகிலா கேட்டாள்.

“29”

வேண்டாவின் பதிலில் அகிலா சில நிமிடங்கள் உறைந்துவிட்டாள்.  முட்டிக்கொண்டு வந்த கண்ணீரை முயன்று தடுத்தாள். தனக்கும் வேண்டாவுக்குமான இடைவெளி அவளை நிலைகுலையச் செய்தது. வார்த்தைகளால் சொல்ல இயலாத ஒருவிதக் குற்ற உணர்வு அவளை ஆட்கொண்டது. வேண்ண்டாவின் இந்த நிலைக்கு யார் பொறுப்பு? இன்னும் எத்தனை வேண்டாவரங்கள் இந்த சாப வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்? படிக்காமல் போயிருந்தால் நானும் வேண்டாவரமாகியிருப்பேனோ? இதையெல்லாம் எப்படிச் சரிசெய்வது? அவளை அவளே  கேட்டுக்கொள்ளும்படியாக ஆயிரம் கேள்விகள் உள்ளுக்குள் ஒலிக்கத் தொடங்கியதால், இனி வேண்டாவிடம் கேட்பதற்கு ஒன்றுமில்லை என்ற முடிவுக்கு வந்தாள்.

‘சொக்கனுக்கு வாச்ச…’ வெகுநேரத்திற்குப் பிறகு அகிலாவின் செல்பேசி ஒலித்தது. அந்த ஒலியில் இப்போது அவளுக்கு ஆர்வம் இல்லை. உடனே செல்பேசியை சுவிட்ச் ஆஃப் செய்துவிட்டு, சுகு டீச்சரைப் பார்த்துக் கேட்டாள்.

“டீச்சர் கிளம்பலாமா? இன்னோரு அட்ரஸ் பார்க்கனுமில்ல.”

***

ப. சரவணமணிகண்டன்

தொடர்ப்உக்கு: vaazhgavalluvam@gmail.com

பகிர

Be the first to leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *