
தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளர் திரு. R. லால்வெனா இஆப அவர்களை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில நிர்வாகிகள் தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்துப் பேசினர். புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்ததோடு, மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் சார்ந்து எடுக்கப்படும் அனைத்து ஆக்கபூர்வ நடவடிக்கைகளுக்கும் சங்கம் உறுதுணையாக நிற்கும் எனவும் உறுதியளித்ததாக சங்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், பல்நோக்கு அடையாள சான்று முழுமையாக வழங்குவது, 2016 உரிமைகள் சட்டத்தை முழுமையாக அமல்படுத்துவது, சாலைகளில் சுற்றும் மனநலம் பாதித்தவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது, பல்வேறு துறைகள் சார்ந்த கோரிக்கைகளைத் தீர்க்க துறை வாரியான உயர் அதிகாரிகள், சங்க நிர்வாகிகள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டுவது, மாவட்ட அளவிலான கண்காணிப்பு மற்றும் குறைதீர் கூட்டங்களை நடத்த நடவடிக்கை எடுப்பது, தனியார் துறையிலும் வேலை வாய்ப்பு இட ஒதுக்கீடு உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சட்டபூர்வமாக மேற்கொள்ள வேண்டிய பதினோரு அம்ச முன்னுரிமை பிரச்சனைகளை பட்டியலிட்டு சங்கத்தின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
மனுவை பெற்றுக்கொண்ட அரசு செயலாளர், சங்கத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்து விளக்கமாகக் கேட்டறிந்தார். இச்சந்திப்பிற்கு சுமார் 1.1/2 மணி நேரம் செலவழித்து, எடுக்கப்பட வேண்டிய ஆக்கபூர்வ நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் அடையாள சான்று

மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே அடையாள சான்று வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலைமையை மாற்றி, உரிமை சட்ட விதிகளின்படி ஆரம்ப சுகாதார நிலையங்களிலேயே எளிமையாக அடையாள சான்று வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு செயலாளர் திரு. ஆர். லால்வெனா உறுதி அளித்தார்.
இதன் மூலம் பல்நோக்கு அடையாள சான்று விரையில் முழுமையாக வழங்கி முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த நடவடிக்கைகளுக்கு இயன்ற உதவிகளை சங்கம் செய்ய வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார். சங்கம் அளிக்கும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க, அவ்வப்போது நேரில் சந்தித்து விவாதிக்க வேண்டும் என்றும் அரசு செயலாளர், சங்கத்தின் நிர்வாகிகளிடம் கேட்டுக்கொண்டார்.
அரசு செயலாளருடான இந்த சந்திப்பில் மாநில தலைவர் பா.ஜான்ஸிராணி, பொதுச்செயலாளர் எஸ். நம்புராஜன், மாநில துணைத்தலைவர் பி.எஸ். பாரதி அண்ணா, செயலாளர் பி. ஜீவா ஆகியோர் பங்கேற்றனர் எனவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டாராடாக் சங்கம் செயலருக்கு வழங்கிய மனுவினைப் படிக்க மற்றும் பதிவிறக்க
தொடர்புடைய பதிவுகள்
நவம்பர் 17, டாராடாக் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம்
மாண்புமிகு முதல்வர் அவர்களின் கவனத்திற்கு: டாராடாக் நிறைவேற்றிய முத்தான மூன்று தீர்மானங்கள்
Discover more from தொடுகை
Subscribe to get the latest posts sent to your email.
